நேபாளப் பயணம் 1
விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.
அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப் பயணத்திட்டமிடலிலும் அதன் தயாரிப்பிலும் நவீன் தான் எப்போதும் நினைவூட்டுவது, வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் அனுப்புவது என என்னைத் துரத்தினார். வல்லினம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தான் பயணி சுரேஷ் அறிமுகமானார். உலகெங்கும் இருக்கும் பல முக்கிய இடங்களுக்குத் தனிப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். சீனா தாண்டிய டிரான்ஸ் சைபிரியப் பகுதி வரை ரயில் பயணம் செய்தவர். அவர் சென்றாண்டு முகநூலில் செய்த அன்னப்பூர்னா அடிவாரப் பயண அறிவிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதாய் அமைந்தது. உடனே எழுத்தாளர் நவீன் கேட்கவும் ஒப்புக் கொண்டேன். ஆனால், அதன் பின்னர் மலையேற்றக் கனவுகளாகப் பீதி கண்டது.கொஞ்சமாக ரொட்டியைப் பிட்டு போட்டுக் கொண்டேன்..மற்றவை தின்றால் வயிறு உப்பிப் போனதாய் இருக்கும். நடக்கும் போது எதையோ உந்தித் தள்ளுவதாய் இருக்குமென்பதால் தவிர்த்தேன். என்னுடைய நேபாள அறிமுகம் பற்றிய நினைவுகளை இருநாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். மற்றதைப் போல அதுவும் நாளிதழ் வழித்தான் அறிமுகம். நேபாளில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பதாக மன்னர் குடும்பத்தில் அதிகாரப் போட்டியினால் துப்பாக்கிச் சண்டை நடந்து மன்னர் ஞானேந்திராவின் அண்ணன் குடும்பம் மொத்தமாய் இறந்திருந்தனர். ஜூன் 1 2001 ஆம் ஆண்டு அரச மாளிகையில் இளவரசர் டிபேண்திரா தன்னுடைய பெற்றோர்களான மன்னர பிரேந்திராவையும் அரசி ஐஸ்வர்யாவும் உட்பட ஒன்பது பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தன்னையும் தலையில் சுட்டுக் கொண்டார். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய நேபாள அரசு அமைத்த ஆணைய அறிக்கையின் படி, டிபேந்திரா இந்தியாவைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்வதை அரசக் குடும்பம் தடை விதித்ததாலே இம்முடிவு எடுக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது. ஆனால், அந்தச் சம்பவத்தில் டிபேந்திராவின் சிற்றப்பாவான ஞானேந்திரா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கொல்லப்படவில்லை என்பதால் அவரும் அவர் குடும்பத்தின் திட்டமாக இச்சம்பவம் இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அதையொட்டிப் பல உறுதிபடுத்தப்படாத தகவல்கள் உலாவுகின்றன. எஞ்சியிருந்த ஞானேந்திரா மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.அவர்தான் உலகின் கடைசி இந்து மன்னர். அவரும் முடியாட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மன்னருக்கான சலுகைகளிழந்து சாதாரணராக ஆகிறார் என அறிவிக்கும் செய்திக் குறிப்பில் நேப்பாள மக்களின் பாரம்பரிய குல்லாவும் கோட்டும் சட்டையுமாக எதையோ எண்ணியவாறு இருக்கும் படம்தான் நேப்பாளத்தைப் பற்றிய முதல் அறிமுகமாக இருந்தது.
மன்னர் ஞானேந்திரா
அடுத்த புகைப்படம் ஞாயிறு நண்பனில் ஒரு கோவிலின் வெறித்த இருளறையின் சன்னலை நோக்கிய சுவரில் முகத்தில் குங்குமத்தையும் அச்சமூட்டச் செய்யும் கண்மையைத் தீற்றிக் கொண்டு ஏக்கமும் ஆவலுமாக அமர்ந்திருக்கும் குமாரிக் கோவில் பெண்ணின் கருப்பு வெள்ளைப் படம்.
அதன் பிறகு நேப்பாளத்தில் தொடர்ந்து நீடித்து வந்த பதவிப் போராட்டங்கள். இப்படித்தான் நேப்பாளம் பதிந்திருந்தது.நெடுநேரமாக விமானம் நேராகவே பயணித்தது. அல்லது தூக்கக் களைப்பால் அப்படி தோன்றியது. விமானத்தின் பக்கத்தில் இருக்கும் இரண்டு இறக்கைகளும் நீள்வாக்கில் இருந்தாலும் அதை பறவை போல அசைத்து விமானம் பறப்பதில்லை. காட்மாண்டுவுக்கு அருகில் வந்தவுடன் காற்றின் திசைக்கேற்ப இறக்கைகளை தாழ்த்தியும் உயர்த்தியும் விமானம் பயணிக்கத் தொடங்கியது. தோ பனிமலைகள் என நவீன் காட்டியப் போது கொஞ்சம் நேரம் ஆனது தேடிக் கண்டுபிடிக்க. பட்டென மண்ணிலிருந்து எழுந்து விண்ணைத் தொடுபவனாகத் தெரிந்தன மலைகள். வெள்ளிடை மலைகள்..அதை நோக்கியப் பயணம் நாளைத்தான் ஆரம்பம்.மேலிருந்து பார்க்க மலைத்தொடர்களும் அங்காங்கே நரம்புகளைப் போல மண் பாதைகளும் தென்பட்டன. தூரத்தில் வானத்தைத் தொட்டு பனிச்சிகரங்கள் வரிசையாக இருந்ததைப் பார்த்ததும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காட்மாண்டு அனைத்துலக விமான நிலையம் செங்கற்களைப்போன்ற கட்டுமானத்தால் ஆன எளிய கட்டிடமாக இருந்தது. புத்தர் பிறந்த மண் வரவேற்கிறது என முகப்பில் புத்தர் சிலை இருந்தது.
எங்கெங்கும் மஞ்சள் முகங்கள்...விமான நிலையப் பணியாளர்கள் நமஸ்த்தே எனச் சொல்லிக் கொண்டு ஆங்கிலம் அதிகமறியாமல் உள்ளூர் மொழியிலே பேசினார்கள். செவ்வந்தி பூக்களால் ஆன மாலையுடன் பயண ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து கொஞ்சம் தூரமே இருக்கும் பரபரப்பு மிகுந்த தாமல் பகுதியில் விடுதியொன்றில் தான் இரு நாள் தங்கல். விடுதியில் பயண ஏற்பாட்டு நிறுவனமான பிரிஸ்டைனின் தலைமை அதிகாரி சின் தாப்பா மகர் பயணம் குறித்து நீண்ட விளக்கமளித்தார். மலை மக்களாக இருந்தாலும், மலை ஏறுவது எங்களுக்குமே சிரமம் என்றார்.
மலையேற்றப் பயணம் பற்றிய பீதியும் கிளர்ச்சியுமே ஒரு சேரக் கிளப்புவதாக இருந்தது. தாமல் பகுதியிலிருந்து இருபது நிமிட நடைத் தொலைவில் இருக்கும் சப்பாத்தி கடைக்கு அழைத்துச் சென்றார். வழிநெடுகிலும் புழுதி படிந்த கடை முகப்புகளாகவும் சாலைகளாகவும் இருந்தன. காட்மாண்டுவில் விமானம் தரையிறங்கும் முன் நகர் முழுதும் மாடிக் கட்டிடங்களே தெரிந்தன. சிறு குறுகலான சாலையில் மோட்டார் சைக்கிள்கள் புழுதியைக் கிளப்பியப்படி பறந்து கொண்டிருந்தன. கைகளை எடுத்து நிறுத்தினாலோ எதிரில் மோட்டர் ஹாரன் அழுத்தினாலோ நிற்பதில்லை. முட்டும் தொலைவுக்கு வந்துவிட்டப் பின்னரே மோட்டார்கள் நிற்கின்றன. புழுதிப் படிந்த தெரு என்பதே கடைகளுக்கு பழைமை சாயலைக் கொடுத்து விடுகின்றன.
வழி நெடுகிலும் பெயர்ந்து கிடக்கும் சாலைகளின் புழுதி ஒரு முழு நாள் படிந்தால் மனிதர்கள் கூட சாம்பல் நிறம் மாறமாவதைப் போலவே காற்றில் புழுதி இருந்தது. சாப்பாத்தி கடைக்கருகில் இருந்த சமோசா கடை நடத்தும் பெண்ணைப் படம் பிடிக்க முயன்றேன். முறைத்தவாறே..கொதிக்கும் எண்ணெய் சட்டியிலிருந்து கரண்டியை எடுத்து வேண்டாமெனச் சொன்னார்.அப்போதும் ஒன்றைப் பிடித்து விட்டேன்.
அந்தக் கடை வாசலில் போடப்பட்டிருக்கும் வாங்கில் அமர்ந்து சொந்த வீட்டைப் போல நெகிழி கோப்பையை வாயில் கவிழ்த்துக் கொண்டு தட்டில் பலகாரங்களை அடுக்கி டீயில் நனைத்தவாறே முதியவர் சாப்பிட்டார். தெருவில் ஓயாமல் மோட்டார் நெரிசல் மனித நடமாட்டம் ஆகியவற்றைத் தாண்டி புழுதியில் உறைந்து மெதுவாக உண்டு கொண்டிருந்தார். காட்மாண்டு அப்படியாகத் தான் உள்ளூர பழைமையைத் தக்க வைக்க முயன்று தோற்று மனித நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தெரிந்தது.
சப்பாத்தி கடையில் குழுவில் வந்திருந்த 18 பேர் சென்றமர இடம் கொள்ளாததால் நின்றவாறே இரண்டு சப்பாத்திகளும் தொட்டுக் கொள்ள பல வகை தானியங்கள் போட்டு செய்த ராஜ்மா கூட்டும் தக்காளிச் சாறு, மிளகாய் போட்டு செய்யப்பட்ட சட்டினியும் சாப்பிட்டோம். அதை உண்டு அந்தத் தெருவில் நடக்கத் தொடங்கினோம். கடையில் சாப்பிட்ட பெரியவர் அதற்குள் இரு தெருக்கள் சந்திக்கும் சந்தியில் இருந்த கோவிலில் அமர்ந்திருந்தார். சாலையில் ஏறக்குறைய மோட்டார்கள் சாகசம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் கன்னத்தில் கைவைத்துப் பார்த்திருப்பவரை ஒரு படம் பிடிக்க முயன்றேன்.
சற்றே கவனம் பெற்றவராகக் கையைப் பிடித்து பணம் கேட்டார். மாற்றிய பணம் கையில் இல்லாததாதல் நெஞ்சில் கை வைத்து வணக்கம் வைத்தேன்.உடனே, கவனம் களைந்து வெறிக்கத் தொடங்கினார். விடுதிக்குச் சென்றதும், அன்று மாலையே பசுபதிநாத் கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக