முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 11

பெளத்தநாத் ஸ்தூபி அமைந்திருக்கும் பகுதியிலே இருந்த சீனபாணி கடையொன்றில் வாத்துகறி சாப்பிட்டோம். நாளைக்குச் சென்று பார்க்கவிருக்கும் குமாரி கோவிலின் தலேஜு தெய்வத்தின் இஷ்டதேவதையான பத்ரகாளியம்மன் ஆலயமும் நபராஜைச் சந்திக்கவிருக்கும் பீர்குடி பகுதியில்தான் இருப்பதாகத் தெரிந்தது. அங்குச் செல்வதற்கு உள்ளூரில் பிரபலமாக இருந்த பாத்தோவ் எனப்படும் வாடகைக்காரை எடுக்கக் கைப்பேசியில் செயலியைப் பதிவிறக்கம் செய்தேன். உள்ளூர் எண்ணிருந்தால் தான் அதைப் பதியமுடியும் எனக் கடையில் வேலை செய்யும் பணியாளர் குறிப்பிட்டார். நாங்கள் தமிழர்கள் என்பதும் தமிழ் மொழியில் பேசுகிறோம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. கடை முதலாளி என்னை அனுமதித்தான், முச்சந்தி வரையில் வந்து உங்களைக் காரிலேற்றிவிட்டு வந்திருப்பேன்….ஆனால், கடையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்றார். ஆனாலும், என் கைப்பேசியை வாங்கி செல்ல வேண்டிய இடத்தைப் பதிவு செய்து ஓட்டுநருக்கும் அழைத்துச் சொல்லி எங்களை முச்சந்தியில் நிற்கச் சொன்னார். மிக நன்றாக ஆங்கிலம் பேசியவரிடம் நன்றியைக் குறிப்பிட்டு விடைபெற்று முச்சந்திக்கு ஓடினோம்.


                                        காட்மாண்டு புறநகர் பயணம்

நேபாளின் கார் எண்கள் நீளமாகவும் ஓரே மாதிரியாகவும் இருந்ததால் காரைக் கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. காரிலேறியப் பின் சந்துகளில் கார் சென்று கொண்டிருந்தது. ஒட்டுநரும் விடாமல் யாரிடமோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். சொன்ன இடத்துக்குத்தான் செல்கிறாரா எனச் சந்தேகமாக இருந்தது. நகரின் மையத்தைத் தாண்டி சாலையோரத்தில் இறக்கிவிட்டு 480 ரூபாய் பயணத்துக்கு 510 ரூபாய் வாங்கி கொண்டு வலப்புறம் கைகாட்டிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன இடத்தில் கோவிலொன்று இருந்தது. அந்தக் கோவில்தான் பிர்குடி பத்ரகாளி கோவில். கோவில் கருவறை சென்று பக்தர்களே பூசை செய்யும் வழக்கத்தை நேபாளின் பல கோவில்களிலும் காணமுடிகின்றது. இங்கேயும் குங்குமம் சகிதமாகவே காளிதேவி வீற்றிருந்தாள்.  கோவிலின் பழமைக்கு அடையாளமாய் பெரிய மணியொன்று கோவில் இருந்தது.



நேபாளில் இருக்கும் சக்திபீடங்களில் பீரிகுடி பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. அந்தக் கோவிலின் பின்னால், திருமணச் சடங்கொன்று நடந்து கொண்டிருந்தது. மணமகன் மணமகளைத் தூக்க முயன்று கொண்டிருந்தார். மணமகள் கையளிப்புச் சடங்கென நினைத்தேன். அதனைப் படமெடுக்க முயன்றேன். அங்கிருந்தவர்களில் வேண்டாமென்பதைப் போல கையசைத்தார். தலையசைத்து பின்னாலில் திரும்பி கொண்டேன். நபராஜ் கோவிலுக்குப் பின்புறமிருந்து வந்தார். இப்பொழுது ஓரளவு மலாயை நன்றாக்ப் பேசினார். எங்களைப் பார்த்ததிலிருந்து மலேசியாவுக்கு திரும்ப வேண்டுமென்ற என்ற எண்ணம் வேரூன்றியிருக்க வேண்டும். எனக்கு மலேசியா வேண்டும் என மலாயில் சொல்லிக் கொண்டிருந்தார். புத்தர், தாரா சிலைகளை விலை மலிவாக வாங்க எதாவது இடம் அருகிலிருக்கிறதா என நவீன் கேட்டார். சிலையென்பதை மலாயிலும் ஆங்கிலத்திலும் எவ்வளவு சொல்லியும் நபராஜுக்குப் புரியவில்லை. அவர் கடை வைத்திருக்கும் பீரிகுடி சந்தைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஆரஞ்சு நிற தார்பாலின் கூரையிடப்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் இருந்தன. வெய்யிலில் இருந்து இறங்கி நீலநிற மேற்கூரை அமைந்திருந்த கடைப்பகுதிக்குச் சென்றோம். சேலைகள், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் விலை மலிவான காலணிகள், சட்டைகள் நிறையவே காணப்பட்டன. அம்மாதிரியான கடையொன்றைத்தான் நபராஜ் நடத்திக் கொண்டிருந்தார். உடல் மொழி காட்டியும் நபராஜால் புரிந்து கொள்ள முடியாததால் இணையத்தில் சிலையைக் காட்டிக் கேட்டோம். அவரின் மனைவி, தம்பி ஆகியோரிடம் பேசி இன்னொரு பகுதியைக் குறிப்பிட்டார். அங்கும் இருக்கும் என்பது உறுதியில்லை என்றவுடன் அவரின் மீது சந்தேகமெழுந்தது. நாங்கள் தங்கியிருக்கும் தாமேல் பகுதியில் இருக்கும் கடையில் சிலைகளை விலை குறைத்து வாங்கி தர உதவ முடியுமா எனக் கேட்டேன். ஆமாம் என்றதும் எங்களுடனே காரில் வந்தார். அவருடைய அண்ணன், தம்பி எனக் குடும்பமே அங்கு கடை வைத்திருந்தது தெரிந்தது.



அங்கிருந்து செல்வதற்கு முன்னர் நேற்று கொடுத்ததைப் போல இன்னொரு தலையணை கிடைக்குமா எனக் கேட்டார். அவருடைய மகளுக்கும் மகனுக்கும் அதனால் சண்டை வருகிறதென்றார். விளையாட்டுப் பொருட்களுக்காக பிடிவாதமிருந்து ஆர்வமாக வாங்கி பிறகு இன்னொரு பொருளைத் தேடிப் போகும் இயல்பு சிறுவர்களிடம் இருப்பதை நினைவு கூர்ந்தேன். நபராஜ் பேச்சில் வியாபாரியின் நுணுக்கமோ வாடிக்கையாளரின் சாமர்த்தியமோ தெரியவில்லை. அதைப் போலவே கடைகளுக்குச் சென்றதும், நாங்கள் பேரம் பேசியத் தொகையிலிருந்து கூடுதலாகவே நபராஜ் சொல்கிற வியாபாரிகள் தந்தனர். அவரை அங்கிருந்து அனுப்ப வேண்டி எதையாவது பொய் சொல்ல தயங்கி கொண்டிருந்தோம். அவரும் மலேசியா வேண்டும் என மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அத்துடன், அன்றிரவு அல்லது மறுநாள் காலையில் எதாவது மது விருந்துக்குச் செல்ல நவீனைப் பலமுறை அழைத்துக் கொண்டிருந்தார். நானே, ஒவ்வொரு கடையிலும் விலையைக் குறைத்துப் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். கடைக்காரர்கள் சொல்கிற விலையிலிருந்து குறைந்த விலையைக் குறிப்பிட்டு எனக்கு தெரிந்த ஒரே ஆங்கிலச் சொல் அதுமட்டும்தான் என்பதைப் போல அதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பொருட்களை வாங்கினேன்.  நவீன், வேடிக்கையாக நபராஜிடம் நீ மலேசியாவுக்கு வந்துவிடு அரவின் இங்கேயே நேபாளப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும் என்றார். எப்படியோ ஒருவழியாக நபராஜை அனுப்பி வைத்தோம். நபராஜ் மலேசியாவுக்குச் செல்லும் ஆவலில் எங்களைத் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தார்.  அவர் சென்றதை உறுதி செய்த பின்னர் மற்ற கடைகளுக்குச் சென்று மீதியிருந்த பணத்தில் ஒரு நாள் தேவைக்கு மட்டும் மிச்சம் வைத்து மற்றதைக் கொண்டு பொருட்கள் வாங்கினோம்.



அன்றிரவு எங்களுக்கான பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியிலிருந்து பத்து நிமிடத் தொலைவில் விருந்து நடைபெறும் விடுதிக்கு நடந்தே சென்றோம். போக்கராவில் வாங்கிய கூர்க்கா பாணி ஆடைகளை அணிந்து சென்றோம். அங்கு சென்றமர்ந்தவுடன் அனைவரின் மேசை மீது சிறிய அகல்விளக்கு போன்ற குவளையை வைத்திருந்தார்கள். அதில் நீண்ட கெண்டியை மேலேற்றி மேசையில் சிறிதும் சிந்தாமல் ராக்சி எனப்படும் உள்ளூர் சாராய வகையை ஊற்றிச் சென்றாள் பெண்ணொருத்தி. அதை வேண்டாமென மறுக்கக்கூடாதென நவீன் சொன்னார். ராக்சி என்பது நேபாளில் கிடைக்கும் குதிரைவாலி அரிசி, சோளம், அரிசி போன்ற தானிய வகைகளை நொதிக்கவைத்துச் செய்யப்படும் சாராய வகை என சுரேஷ் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களே சோளச்சாராயத்தைக் காய்ச்சுகின்றனர் என  குறிப்பிட்டார். கடும் நெடி வீசிய சாராயம் தொண்டையில் இறங்கியதும் எரிச்சலான ஏப்பம் எழுந்தது.  பின்னர், டால் பாட்டின் ஒவ்வொரு வகையும் ஒன்றொன்றாக எடுத்து வரப்பட்டுப் பரிமாறப்பட்டது. டால்பாட் எனத் தெரிந்ததும் எல்லாரின் முகத்திலும் ஏமாற்றத்துடன் கேலியான குரலெழுந்தது. நாங்கள் ஆவலாக எதிர்பார்த்த உள்ளூர் நடன வகைகள் ஆரம்பமாக இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...