முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 14

குமாரி கோவிலில் இருந்து வெளியேறி நடந்து செல்லும் போதே அடுத்தப் பயணத்திட்டத்துக்குத் தயாரானோம். குமாரியாக இருப்பவர்கள் பூப்பெய்தியவுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றனர். தலேஜு தேவி, அவர்களிலே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறாள். அவ்வாறு, குமாரியாக இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சனிரா பஜராச்சாரியாவைச் சந்திக்கும் வாய்ப்பையும் கோகிலாத்தான் சாத்தியப்படுத்தியிருந்தார்.



சனிராவைப் பார்க்கும் திட்டத்தை நவீன் குறிப்பிட்டதும் உடனே மலையேற்றத்துடன் முடியவிருந்த பயணத்தை உடனே மூன்று நாட்கள் நீடிக்க சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு, கோகிலா சனிராவை பி.பி.சி வானொலிக்காகக் கண்டிருந்த நேர்காணல், அவரைப் பற்றிய கட்டுரைகளையும் புலனக்குழுவில் பகிர்ந்திருந்தார். பொதுவாக, குமாரி பண்பாட்டைப் பற்றி சொல்லப்படும் கடுமையான சோதனைகள், கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கை ஆகியவற்றில் உண்மையில்லை என நேர்காணல்களில் சனிரா தெரிவித்தார். அத்துடன் தொலைகாட்சி பார்ப்பதற்கும் நண்பர்களுடன் இருப்பதற்குமான வாய்ப்பும் தனக்கிருந்ததாகத் தெரிவித்தார். குமாரி பண்பாட்டின் இறுக்கமான வாழ்க்கைமுறை பெருமளவு தளர்ந்திருப்பதை அவரது நேர்காணலில் அறிய முடிந்தது.  சனிரா தற்போது வங்கியொன்றில் கணக்கராகப் பணிபுரிகிறார். அவரை 2.30 மணியளவில் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பேருந்து பயணத்திலே அவரைச் சந்திப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நவீன் விளக்கினார். அத்துடன், அவருடனான உரையாடலை கோகிலா வழிநடத்துவார். நண்பர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் முன்னரே சொல்லலாம். அதைக் கோகிலா குறிப்பெடுத்து கேட்பார் எனத் தெரிவித்தார். நம்முடைய அறிவையும் சாதுரியத்தையும் காட்டுவதாக உரையாடலை அமைக்கக்கூடாது. எதிரிலிருப்பவர்களைத் தடையின்றி பேச வைக்கவே நேர்காணல் அவசியமென்பதை நவீனுடன் இணைந்து முன்னர் ஆளுமைகளை நேர்காணல் செய்ததிலிருந்து அறிய முடிந்திருந்தது.

https://en.wikipedia.org/wiki/Chanira_Bajracharya


சனிராவுடன் நான்

கேள்விகளைத் தொகுக்க நானும் கோகிலாவுக்கு உதவி செய்தேன். எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்னரே சனிராவைச் சந்திக்க சென்றிருந்தோம். அவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அருகிலிருந்த பதான்பூர் குமாரி கோவிலுக்குச் சென்றோம். அங்கிருந்த குமாரியைத் தொட்டு வணங்கவும் நேரில் பேசவும் முடியுமென கோகிலா சொன்னார். குமாரிக்கான சந்திப்பு நேரம் மதிய இடைவேளை முடிந்து 2.30 மணிக்குத்தான் தொடங்கும் எனச் சொன்னார்கள். காட்மாண்டிலிருந்த ரோயல் குமாரியைப் போல இக்கோவில் பெரிதாக இல்லையென்றாலும் கூட பழைமைக்கான அடையாளத்துடன் இருந்தது. குமாரியின் அறை கோவிலின் முதற்தளத்தில் இருந்தது. அதற்குக் கீழிருந்த தளம் முழுமையாகப் பலகைத்தடுப்புகளால ஆனதாக இருந்தது. மிகக்குறுகிய இடத்துக்குப் பக்கத்திலே மாடியும் இருந்தது.

சனிராவைப் பார்ப்பதற்கான நேரம் திட்டமிடப்பட்டதற்குச் சற்று முன்னரே கிடைத்தது. அங்கிருந்து பத்து நிமிடத்தொலைவில் சனிராவின் வீடிருந்தது. சனிரா சற்றே உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் தயக்கம் கொண்டவராகவும் இருப்பார் என எண்ணியிருந்தேன். நான் எதிர்பார்த்தற்கு மாறாக, சனிரா தன்னுடைய குமாரி வாழ்க்கையைப் பற்றிய விவரிப்பை நிறைய ஊடகங்களுக்கு அளித்தளித்துச் சரளமாக அதைப் பற்றிப் பேசக்கூடியவராக இருந்தார். சரளமான மொழியும் தேர்ந்த பதில்களும் ஒருவகையில் நம் மனதில் இருக்கும் மர்மத்தையும் புதிர்களையும் கலைத்துவிடுகின்றதோ எனச் சிந்தித்துச் சிரித்துக் கொண்டேன். ஒரு கேள்வியைக் கேட்டவுடன் உடனே ஒக்கே என்று அதற்குப் பதில் சொல்லத் தொடங்கினார். முன்னரே பிபிசியில் சொன்னதைப் போல குமாரி வாழ்க்கை அந்தளவு இறுக்கமாக இருக்கவில்லை என்பதைச் சொன்னார். குமாரியாக இருந்தது தன் வாழ்வின் மகிழ்ச்சிக்கரமான தருணமென்றார். குமாரி வாழ்விலிருந்து வெலியேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியப் பின்னர் வகுப்பறையில் எல்லாருடனும் இணைந்து இயல்பாகக் கற்க மூன்று நான்கு மாதங்கள் பிடித்தன என்றார். எல்லா நாளுமே குமாரி வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென்கிற ஏக்கம் தனக்கு வருமென்றார். முதலில், பள்ளி நண்பர்கள் தன்னுடைய குமாரி வாழ்க்கையை அறிந்திருந்ததால் தன்னிடம் நன்முறையில் பழகத்தொடங்கினார்கள். அலுவலகங்களில் தன்னுடைய குமாரி வாழ்க்கையை அறிந்தவர்கள் வேறுமாதிரியாக நடந்து கொள்ளத் தொடங்குவார்கள் என்றார். தான் தவறுகள் செய்யத் தொடங்கும் போது தன் தாயார் டயரிக்குறிப்பில் எழுதி அவரிடம் காட்டுவார் என்றும் அதிலிருந்தே தன்னைக் கண்டிப்பார் என வேடிக்கையாகச் சொன்னார். உங்களுக்கு, பால்யக்காலம் தொலைந்துவிட்டதன் ஏக்கம், மற்ற சிறுவர்களைப் போல இல்லாமல் வேறுமாதிரியாக வளர்ந்ததன் ஏக்கம் இருந்ததாகக் கேட்கப்பட்டது. அதற்கு, அப்படியில்லை எனச் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். நான் அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்புறமிருந்த ஆளுயர அலமாரி முழுதும் நிறைக்கப்பட்டிருந்த பொம்மைகளைப் பார்த்துக் கொண்டேன். அத்துடன், 2001 ஆம் ஆண்டு மன்னர் பிரேந்திரா குடும்பப்படுகொலையின் போது சனிரா ஐந்து வயது குழந்தையாகக் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தருணமென்பதால் சனிராவின் குமாரிக்காலம் வரலாற்று ரிதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. படுகொலைக்கு முன்பதாக எவ்வித காரணமுமின்றி மூன்று நாட்கள் சனிரா அழுதிருக்கிறார். அதை தீய நிமித்தத்தை முன் உணர்ந்த தருணமாக சனிரா நேர்காணலில் குறிப்பிடவில்லை. மாறாக, அது தற்செயல் என்பதைப் போலவே குறிப்பிட்டார். இந்நேர்காணலை முழுமையாக  கோகிலா வல்லினம் இதழில் எழுதுவார்.


பதான்பூர் கோவில்

அவருடைய வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் சனிராவின் அத்தை தன குமாரி பஜ்ராச்சார்யாவை பார்க்கத் திட்டமிட்டோம். அவரும் சனிராவுடன் தான் தங்கியிருக்கியார். 1970 களில் குமாரியாக இருந்தவர். நேபாளில் அதிகக்காலம் குமாரியாக இருந்தவர். பருவமடையாததால் நீண்ட காலம் குமாரியாக இருந்தார். பின்னர் இளவரசர் டிபேந்திராவின் வேண்டுகோளுக்கிணங்கி மற்றவர்களுக்கு வழிவிட்டார். இருப்பினும் கூட, குமாரியாகவே வாழ முடிவு செய்தார். குமாரிக்குரிய அலங்காரத்துடன் ஒரறையில் அமர்ந்திருந்தார். முகத்தில் எவ்வித உணர்ச்சி மாற்றமும் இன்றி வணங்குபவர்களுக்கு குங்குமம் கலந்த அரிசியை நெற்றியில் திலகமிட்டு வாழைப்பழம் தந்தார். 2015 ஆம் ஆண்டு நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டப்போதுதான் சாதாரணர்களைப் போல தெருவில் தனகுமாரி நடந்தார். மற்ற எல்லா நாட்களிலும் குமாரியைப் போலவே வாழ்கிறார் என்றார்கள். அறைக்கு வெளியே தனகுமாரி குமாரியாக இருந்த போது எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப்படத்தைப் பார்த்தேன். வயதினால் முகத்தசை விரிவடைந்து தளர்ந்ததைத் தவிர பெருமளவு பழையத்தோற்றத்துடன் ஒத்திருப்பதாகவே இருந்தது.

https://en.wikipedia.org/wiki/Dhana_Kumari_Bajracharya

சனிரா
 

நேபாள மக்களுக்கே குமாரியைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. அதைச் சாத்தியப்படுத்திய கோகிலாவுக்கு கணேஷ் நன்றி தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறி பதான் கோவிலில் இருக்கும் குமாரியைச் சந்திக்கச் சென்றோம். மூக்கில் சளி ஒழுகிக் கொண்டு முகத்தில் தூக்கக்கலக்கத்துடனும் ஒவ்வொருடைய நெற்றியிலும் எரிச்சலுடன் குமாரி திலகமிட்டார். வேடிக்கையாகவும் அதே சமயத்தில் அவளுக்காக இரக்கமாகவும் இருந்தது. அங்கிருந்து வெளியேறி, நடக்கும் போது எங்களுடன் வந்த தேவஜிதாவும் சிவலெட்சுமியும் கோமளாவும் குமாரியுடனான சந்திப்பில் இணையாமல் தனியே பொருட்களை வாங்க சென்றது நினைவுக்கு வந்தது. அவர்களிடம் கைப்பேசியில் இணையவசதியும் இல்லை. அவர்களை எங்கிருந்து தேடி வருவது என எல்லாரும் பதற்றமாக இருந்தோம். தேவஜிதாவின் அம்மா ஆனந்தி மூவரையும் காணாததால் மிகுந்த கலக்கமாக இருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...