முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 13

பேருந்திலிருந்து இறங்கி நடக்கும் போது நவீன் வழக்கம் போல வேடிக்கையாக எதையோ சொல்லிச் சிரித்தார். குமாரி கோவிலுக்குச் சென்று குமாரியைப் பார்ப்பதென்பது நேபாளப்பயணத்திட்டத்தின் முதன்மைத் திட்டமாக மாறியது கோகிலாவால்தான். அவர்தான், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து சுரேஷிடம் சொல்லிப் பயணத்திட்டத்தில் இணைத்தார். குமாரி கோவில் அமைந்திருக்கும் தர்பாரி சதுக்கப்பகுதியில் மேட்டில் ஏறினோம். எங்களைச் சுற்றிலும் மரக்கட்டுமானத்தால் ஆன பழைமையான கோவில்களும் கடைகளும் அமைந்திருந்தன.  முன்னர் அரச மாளிகையாகவும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதியாகவும் அப்பகுதி இருந்திருக்க வேண்டும். இப்போது, புழுதியும் தூசும் படிந்து காலத்துள் மெல்ல மக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. நவீன் வேகமாக நடந்து மேடேறினார். நாங்கள் பின்னாலே நடந்து சென்றோம். குமாரியின் வருகையைத் தவற விட்டுவிடக்கூடாது என எண்ணியிருக்க வேண்டும். கட்டிடங்களின் பழைமைத் தோற்றம் நடக்கையில் இன்னொரு காலத்துள் பிரயாணம் செய்வதைப் போல தோன்றச் செய்தது.


                                                        குமரிகர் கட்டிடம்

14 ஆம் நூற்றாண்டில் காட்மாண்டு, பாக்தாபூர், பதான் ஆகிய மூன்று மாகாணங்களையும் ஆண்டு வந்த நேவாரி இனக்குழுவைச் சேர்ந்த மல்லா வம்சத்து மன்னர் ஜெயஸ்ரீதிதி மல்லா கர்நாடகத்தைச் சேர்ந்த அரசக்குடும்பத்து இளவரசியை மணம் புரிந்தார். இளவரசி வழிபட்ட தலேஜு பவானி எனும் தேவதையை அரசரும் குலத்தெய்வமாக ஏற்றுக் கொண்டார். அவ்வாறுத்தான் தலேஜு பவானி மல்லா அரசக்குலத்து தெய்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  56 குறுநாடுகளாகப் பிரிந்திருந்த நேபாளத்தை கூர்க்கா அரசரான பிரித்வி நாராயணன் ஷா ஒன்றிணைக்கிறார். அதே காலக்கட்டத்தில் காந்திப்பூர் எனும் தற்போதைய காட்மாண்டு பகுதியை ஆண்டு கொண்டிருந்த மல்லா குலத்து இறுதி அரசரான ஜெய பிரகாஷ் மல்லாவின் வாழ்வில் நடந்த சம்பவமே வாழும் தெய்வக் கலாச்சாரம் உருவாகக் காரணமாக இருந்தது என நம்பப்படுகிறது. தலேஜு தேவியை உபாசித்து வந்த மல்லா அரசர்களுக்கு தேவி தரிசனம் தந்து வந்தாள். அவளுடன் அரசர் மறைவாகப் பகடையாட்டம் ஆடுவார். அவ்வாறான பகடையாட்டத்தை அரசியும் ஒளிந்திருந்து பார்த்துவிட்டதை அறிந்த தேவி சினமுற்று அரசரை இனிக் காணப்போவதில்லை என மறைந்துவிடுகிறாள். தேவி முன்னரே ராஜ்ஜியம் பிறர் கைகளில் விழுவதையும் கணித்திருந்தாள். இந்தச் செவிவழிக் கதைக்கு நம்பகமாக அதே காலக்கட்டத்தில் காந்திபூரும் ஒருங்கிணைந்த நேபாளத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது என்ற வரலாற்றைக் காண முடியும். அரசரின்  கனவில் தோன்றிய தேவி நிவார் குழுவைச் சேர்ந்த பெளத்தச் சமயத்தைத் தழுவிய உயர்சாதி சாக்கியச் சாதியில் 32 பொருத்தங்களும் பொருந்திய இளஞ்சிறுமியில் தான் பிரசன்னமாவேன் என வாக்களித்து மறைந்தாள். அதிலிருந்து வரையறுக்கப்பட்டிருக்கும் பொருத்தங்கள் பொருந்திய சாக்கியக் குலத்தைச் சேர்ந்த சிறுமிகளில் ஒருவர் குமாரியாக இக்கோவிலில் தேவியின் சொரூபமாக வீற்றிருக்கிறார்கள். இவ்வாறு குமாரிகள் அமைந்த கோவில்கள் நேபாளத்தில் நூற்றுக்கணக்கில் இருந்தாலும், பண்டைய மல்லா ராஜ்ஜியத்துக்குட்பட்ட பக்தாபூர், காட்மாண்டு, பதான்பூர் ஆகிய இடங்களில் இருக்கும் குமாரிகளே முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதிலும், நேபாளத்தின் தேசிய குமாரியாக தர்பார் சதுக்க தலேஜு கோவில் குமாரியே கருதப்படுகிறார்.


கோவிலில் காத்திருக்கும் பயணிகள்

அவ்வாறு குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிறுமிகள் கடும் சோதனைகளுக்குப் பின் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என நாளிதழில் வாசித்து அறிந்திருக்கிறேன். இருட்டு அறையில், வெட்டப்பட்ட மாட்டுத்தலைகள் நிரம்பிய அறையில் அடைக்கப்பட்டிருப்பதும் அதில் உள்ளடங்கும். அத்துடன், முழுமையாகத் தேவிக்கு அர்பணிக்கப்படும் சிறுமிகளின் வாழ்க்கை முழுவதும் கோவிலிலே முடங்கிவிடும். அவர்களின் பாதத்தைக் கூட மண்ணில் படாதவாறு ஏந்திகொள்ளும் சேவகர்கள் கோவிலில் இருக்கின்றனர். முடியாட்சி இல்லாமல் போனப்பின்னரும் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதமரும் குமாரியைச் சந்தித்து வணங்கி செல்லும் சடங்கு நேபாளில் நீடிக்கின்றது. குமாரியின் முகத்தில் எழும் முகபாவங்கள், கண்ணசைவுகள் அனைத்துக்கும் ஒவ்வொரு குறியிருப்பாதல் அவற்றை வெளிக்காட்டாமல் உணர்ச்சியில்லாமலே தரிசனமளிக்க குமாரியைப் பழக்கியிருக்கின்றனர். இந்தச் செய்திகள் குமாரியைச் சந்திக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம்தான் குமாரி பொதுமக்களுக்குக் காட்சி தருவார். இன்று அதைத் தவறவிட்டால் பார்க்க முடியாமல் போகலாம் என்பதால்தான் நவீன் பதற்றமாக இருந்தார். கோவில் வளாகத்தின் உள் நுழைய 1000 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. கோவில் உள்ளே நுழைந்தோம். இப்பொழுதுதான் கட்டிடத்துக்கான வர்ணப்பூச்சு வேலைகள் நடந்திருக்க வேண்டும். கரும் பழுப்பு நிறத்திலான அழகிய மரவேலைபாடுகளுடனும் செங்கற் கட்டுமானத்துடனும் கோவில் அமைந்திருந்தது. நடுவில் இருந்த முற்றத்தில் கூடியிருந்த சுற்றுப்பயணிகள் படமெடுத்துக் கொண்டிருந்தனர். நல்லவேளையாக குமாரி இன்னும் காட்சியளிக்கவில்லை என கணேஷ் குறிப்பிட்டார். இரண்டாம் மாடியின் மையத்திலிருந்த  சன்னலிலிருந்துதான் தேவி காட்சியளிப்பாள் என கணேஷ் குறிப்பிட்டார். கணேஸைப் போலவே வெளிநாட்டுப் பயணிகளை அழைத்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த உள்நாட்டு வழிகாட்டி ஒருவர் என்னருகில் வந்து நான் குமாரியின் வரலாற்றை முழுமையாகச் சொல்கிறேன். எனக்கு ஐந்நூறு ரூபாய் தந்தால் போதுமென்றார். நான் கணேஷைக் காட்டி இவர் நாங்கள் அமர்த்திக் கொண்ட வழிகாட்டி; இவர் விளக்குவார் என்றேன். பிரதர், இவருக்கு இங்குள்ள வழக்கம் எதுவும் தெரியாது…நீ இங்கு மகிழ்ச்சியாக இதைப் பார்க்கப் போவதில்லை…..இப்படி பார்க்க நீ இங்கே வந்திருக்கவே வேண்டாம் எனச் சொன்னான். ஏற்கனெவே குமாரியைப் பார்க்க முடியுமா என்ற பதைப்பிலிருந்து பார்க்கலாம் என்ற செய்தியினால் சற்றே ஆசுவாசமடைந்த எனக்கு அவனின் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தியது. 


காட்மாண்டு பக்தாபூரில் அமைந்திருக்கும் தலேஜு தேவி சிலை

கணேஷ் அவனிடம் நேபாளியில் எதையோ பேசினார். அவன் பதிலுக்கு மிகவும் காட்டமாகப் பதிலளித்தான். நவீன் குமாரி காட்சியளிக்கும் இடத்திலிருந்து இடப்புறமர்ந்து கைப்பேசியில் படம் எடுக்க முயன்றார்.  இந்தக் களேபரத்தில் சன்னலில் இருந்த நடுத்தர வயது ஆடவர், குமாரியின் சேவகராக இருக்க வேண்டும், குமாரி காட்சியளிக்கப் போகின்றார். எல்லாரும் எழுந்து நில்லுங்கள்,,,பேசக்கூடாது…படங்கள் எடுக்கவே கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பரபரப்பு அடங்கி அனைவரும் அமைதியாகச் சன்னலை வெறித்துப் பார்த்தோம். நவீனும் கைப்பேசியை அவசரமாக எடுத்து உள்ளே வைத்து மேலே பார்த்தார். படம் எடுக்க முடியாமற் போனது. சன்னலுக்குக் கீழிருந்த நாற்காலியின் மீதேறி சிறுமி குமாரி காட்சியளித்தாள். மைகள் தீட்டப்பட்ட கண்கள். அஞ்சனை பூசப்பட்டிருந்த நெற்றி, முகத்தில் சிறிதும் உணர்ச்சியில்லாமல் ஒரிடத்தில் நிலைகொள்ளாத பார்வையும் உடலசைவும் சேர 15 நொடிகள் காட்சியளித்தாள். சிலர் கையெடுத்துக் கும்பிட்டனர். நான் வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்தில் குமாரியின் காட்சியளிப்பு முடிந்து சன்னல் மூடப்பட்டுக் கோவிலுக்கு வெளியே வந்தோம்.



முதலில் நடந்த சம்பவத்தால் கணேஷ்  கொஞ்சம் கலக்கமாக இருந்ததைப் போலிருந்தது. அவருக்கு நண்பர்கள், நீங்கள் இந்தமாதிரியான வழிகாட்டிகளின் பேச்சால் வருத்தம் ஆகாதீர்கள்.. நீங்கள் எங்களுக்கு முழுமையாக விளக்கம் தந்தீர்கள் என்றார்கள். ஆனால், எனக்குத்தான் எதுவும் தெரியாதே எனச் சொல்லி கணேஷ் சிரித்தார். ஒரு பகுதிக்குரிய மக்கள் வழிபடும் தெய்வம் ஒருவகையில் மக்களின் கூட்டு ஆழ்மனத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். அவர்கள் முன்வைக்க விரும்பும் விழுமியங்கள், உளவியல் போன்றவற்றைக் கொண்டே தெய்வங்கள் உருவாகின்றன. தலேஜு தெய்வம் தான் எழுந்தருளும் குமாரி வழியாக ஓவ்வொரு நாளும் மக்களின் ஆழுள்ளத்தை நெருங்கி நின்று அறிகின்றாள். கூடியிருந்த மக்கள் திரளை நோக்கி அவள் அறிவது அவர்கள் அகமாக இருக்கலாம். ஆனால், இந்த மொத்தச் சூழலும் வணிகம் எனும் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் இருப்பதைக் காண முடிந்தது, அவ்வாறு நிகழ்ந்தால், தலேஜுவும் அதற்கேற்ப உருமாறி நிற்பாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...