முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 15

இணைய வசதி இல்லாமல் தெரியாத இடத்தில் சென்று வர தனித்துணிச்சல் வேண்டும். எப்படி யோசித்தாலும் விடுதியின் பெயரைக் கொண்டு திரும்பி வந்துவிடுவார்களென நினைத்துக் கொண்டேன். எங்களின் விமானம் இரவு மணி 8.40 என்பதால் 4.30 க்கெல்லாம் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. கணேஷ் அவர்களைக் கொண்டு வரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எல்லாம் முதலில் தங்கும் விடுதிக்குச் செல்லுங்கள். நான் ஆனந்தியுடன் அவர்கள் மூவரையும் அழைத்து வருகிறேன் என்றார் என மிக நிதானமாகச் சொன்னார். அவருடன் கந்தா எனப்படும் கந்தசாமியும் களத்தில் இறங்கி தேடத்தொடங்கினார். நாங்கள் பேருந்திலேறி உட்கார்ந்து சில நிமிடங்களிலே கந்தசாமி மூவரையும் பேருந்துக்கு அழைத்து வந்தார். அந்தப் பதற்றமான சூழலில் மிக வேடிக்கையாகப் பேசி கொஞ்ச நேரத்தில் சூழலை இலகுவாக்கிவிட்டார். அங்கிருந்து செல்வதற்கு முன்னர் விடுதிக்குச் சென்று சாப்பிடவேண்டிய மதிய உணவுக்கான ஆர்டரைக் கொடுத்தோம். மறுநாள் வேலைக்குச் சென்றுவிட வேண்டுமென நினைத்திருந்ததால் பயன நேரம், தயார் செய்யும் நேரம் என என நேரக்கணக்கில் மூழ்கியிருந்தேன். பட்டென்று மயூரி ஒரு நற்செய்தி நம்முடைய விமானம் பதினொரு மணி எனக் குண்டைத் தூக்கிப் போட்டார். இன்னுமொரு கணக்கை மனதுக்குள் ஒட்டிப் பார்த்தேன். எப்படியும் சேர்ந்துவிடலாமென்ற குருட்டு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். விடுதியைச் சேர்ந்ததும் ஆர்டர் செய்திருந்த பிரியாணிக்குக் காத்திருந்தோம். முக்கால் மணி நேரம் ஆகியும் பிரியாணி வருவதற்கு தாமதமாகியிருந்தது. பிரியாணி சாப்பிட்டு குளியல் போட்டு பொருட்களை எல்லாம் ஒருமுறை சரிபார்த்துவிட்டு வந்தேன். மதியம் 5 மணியளவில், பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் அளிப்பு நடந்தது. அதைப் பெற்றுக் கொண்டு இருந்த கொஞ்சப்பணத்தையும் கரைத்துவிட வேண்டி நானும் கோகிலாவும் இறுதி நேர ஷாப்பிங்குக்குச் சென்றோம். நேப்பாளத்தில் பல இடங்களில் உபயோகிக்கப்பட்ட தேத்தூள் வகையான தோக்லாவையும் சில நினைவுச்சின்னங்களையும் வாங்கி கொண்டேன். விடுதியிலிருந்து விமான நிலையத்துக்குச் சென்றோம். அந்தி கவிந்த காட்மாண்டைப் பார்த்தேன். மலேசிய தயாரிப்புக் கார்களும் சாலைகளில் காண முடிந்தது. எவ்விதப் பரபரப்புமின்றி மக்கள் தூசு அடங்கி இருள் கவிந்த சாலைகளில் நடந்து கொண்டிருந்தனர். விமான நிலையத்தில் எல்லா சோதனைகளும் முடிந்து காத்திருப்பு அறைக்குச் சென்றதும் கடும் பசியாக இருந்தது. நானும் கோகிலாவும் சேர்ந்து அருகிலிருந்த ஒவ்வொருவரிடம் எஞ்சியிருந்த பணத்தை எல்லாம் திரட்டி நூடுல்ஸ், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றை எல்லாம் வாங்கினோம். அதை ஒரு விளையாட்டைப் போல செய்தோம். இறுதிப் பணமும் முடிந்தும் காத்திருப்பு நேரம் ஓயாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.



பயண நேர அறிவிப்புகள் எல்லாமே நேபாள மொழியிலே செய்யப்பட்டு வந்ததால் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை. விமான…காட்மாண்டு…கோலாலம்பூர் என நேபாள மொழியில் அறிவிப்பு கேட்டு அருகில் சென்று பார்த்தப் போது ஒரு வரிசை உருவாகியிருந்ததைக் காண முடிந்தது. நாங்களும் அதில் போய் நின்று கொண்டோம். அந்த வரிசை காத்திருப்புக் கதவுகளைத் தாண்டி வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. வழியில் இருந்த பணியாளர்கள் எல்லாம் எப்பொழுது விமானம் என்ற கேள்விக்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துச் சிரித்துவிட்டு மேலதிகாரிகளின் ஆணையை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். 



                                   நான், ஜெகதீசன், கோகிலாவாணி, சிவலெட்சுமி

எனக்கு உள்ளூர கலக்கமாக இருந்தது. வேலைக்குச் செல்ல முடியாது என்பது ஒருபுறமிருக்க எங்களின் பதினைந்து நாள் விசாவும் மறுநாளுடன் முடியப்போகிறது. எங்களுக்கு முன்னால் பயணம் போன யோகாம்பிகையும் சுப்ரமணியமும் காத்திருப்பு நேரம் மணி நேரத்திலிருந்து நீண்டு ஒரு நாளானப் பின்னரே திரும்பினர் என்பது கூடுதல் கலக்கத்தை உண்டு பண்ணியது. எங்களுக்கு அங்கே அதே டால் பட் உணவு தரப்பட்டது. உணவளித்த பணியாளரிடம் சண்முகநாதன் எப்போது விமானம்…ஏன் எங்களை அலைகழிக்கிறீரிகள் எனக் காட்டத்துடன் கேட்டார். அதற்கு மிகச் சாமர்த்தியமாகப் பதிலளிப்பதாக எண்ணிக் கொண்டு ‘ எப்போது நீங்கள் உண்டு முடிக்கிறீர்களோ…அப்போது விமானம் வருமெனச் சொல்லிவிட்டுச் சட்டென உள்ளே சென்றார். இந்தப் பதிலைக் கேட்டவுடன் இருந்த கோபம் கூட கொஞ்சம் இளகி வறட்சியாகச் சிரித்துக் கொண்டோம். கொஞ்ச கொஞ்சமாய் எங்களின் கோபம், கலக்கம் எல்லாம் மாறி வேடிக்கைப் பேச்சுகள் ஒலிக்கத் தொடங்கின. எங்களுடன் வந்திருந்த ஜெகதீசன் தான் ஜப்பானில் பணி புரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பயண அனுபவங்களையும் உள்ளூர் பண்பாட்டையும் தன்னுடைய இயல்பான வேடிக்கைப் பேச்சிலிருந்து விலகி ஜப்பான் பண்பாட்டின் மீதான வியப்புடன் பகிர்ந்து கொண்டார். எல்லாரும் நாற்காலியிலே தலை சாய்த்துத் தூங்கி கொண்டிருந்தனர். நானும் தலைசாய்க்கும் போது, கோலாலம்பூர் அந்தராஸ்டிரியா என்ற ஒலி கேட்டதும் உடனே வரிசை பிடித்து நின்று கொண்டோம். என் முன்னால் விடுமுறை முடிந்து மலேசியா திரும்பிக் கொண்டிருந்த மலாய் பேச முடிந்த நேபாளியிடம் சுரேஷ் உங்கள் நாட்டுப் பயண நிறுவனம் மிகவும் மோசம் என்றார். அதற்கு அவர் மலாயிலே, ஆமாம். தெரியும். அதற்கு என்ன செய்வது எனச் சிரித்துக் கொண்டார். நாங்கள் நேபாளத்தில் தங்கியிருந்த நாட்களில்தான் வெளிநாட்டில் பணிபுரியும் நேபாள மக்கள் இரட்டைக் குடியுரிமை கொள்ளும் வகையிலான சட்டத்திருத்தம் நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆண்டொன்றில் கோடிக்கணக்கான உள்ளூர் வருவாய் தேடித் தரும் மக்களை ஒற்றைக் குடியுரிமைச் சட்டம் கட்டுப்படுத்துவதால் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. ஒருவகையில் உள்ளூரின் கதவுகளை அகலத் திறந்துவிடுவதற்குச் சமம். எங்களுக்கான விமானக்கதவுகளும் திறந்துவிடப்பட்டு இருக்கையில் அமர்ந்தோம். இந்தக் களேபரமும் தூக்கக்கலக்கமும் சேர்ந்து உடலைச் சோர்வாக்கியிருந்தன. விமானத்தில் அமர்ந்து சில நிமிடங்களிலே தூக்கம் வருடத் தொடங்கியது. இடையிடையே, அருகிலிருந்த நண்பர்கள் பேசியது கூட தூக்கத்திலிருப்பதைப் போலவே இருந்தது. விமானத்தில் தரப்பட்ட உணவையும் வாங்கி வைத்து சாப்பிடாமலே திரும்பத் தந்தேன். விமானம் மலேசியாவை வந்தடைந்த போது மணி 7.45 ஐத் தொட்டிருந்தது. இறங்கும் போது நேபாளின் கொடிகள் பொறித்த விமான சிறகுகளைப் பார்த்தேன். கொடியின் இரு முக்கோணமும் குமாரியின் மை பூசிய இரு கண்களை நினைவுப்படுத்தி நேபாளக் குமாரி எங்களை வழியனுப்புவதாய்த் தெரிந்தது. விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குக் கிளம்பும் போது எல்லாரிடம் ஆரத்தழுவிக் கொண்டு விடைபெற்றோம். எங்களுக்கு எதிர்திசையில் உலகின் பல முனைகளுக்குச் செல்வதற்கு மக்கள் குழப்பம், உற்சாகம், பதற்றம் எனப் பல உணர்வு கலவைகளில் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். சட்டென நேபாளப்பயணம் ஒரு கனவைப் போலத் தோன்றியது. ஒவ்வொன்றையும் நினைவு மீட்டிப் பார்த்துக் கொண்டேன். நினைவில் இருந்து எழுத்துக்குக் கொண்டுவரவேண்டுமென்றே எண்ணமே வீடு சென்றடையும் வரும் வரையில் இருந்தது. பயணத்தை எழுதியும் பார்த்துக் கொள்கிறேன். அனைத்துக்கும் நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...