முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்



 நேபாளப் பயணம் 2

அன்னப்பூர்னா பயணத்துக்குப் பின் குறைவான நாட்களே இருப்பதால் இப்போதே பார்த்தால் முழுமையாக பார்க்க முடியுமென்பதால் நவீன் தான் இப்படியான திட்டத்தைச் சொன்னார். விடுதி தாண்டிப் பள்ளத்தில் நால் முனையிலிருந்தும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. எங்களை ஏற்றிச் சென்ற வேன் வலதிலிருந்து இறங்கி எதிரில் வரும் கார்களை நிறுத்தச் செய்து சட்டெனக் குரங்கு தாவலில் திரும்பியது. காட்மாண்டில் வாகனம் ஓட்டுவது மிகச் சவாலானதாகத் தெரிந்தாலும் ஒரு வகையில் எல்லாமே இயல்பாக இருப்பது போலத்தான் தெரிந்தது.


பசுபதிநாத் கோவில் நுழைவாயிலுக்கு வலப்புறமே முருகா...முருகா எனத் தமிழில்  பெயர்ப்பலகை இருந்தது. உள்ளே நுழையும் முன்னரே காலணியுடன் உள்ளே நுழைய கூடாதென முகப்பில் இருந்த பெண் காவலர் தடுத்தார். காலணியை எடுத்து முருகா...முருகா எனப் போட்டிருந்த கடையில் வைத்துவிட்டு அங்குக் கொடுக்கப்பட்ட செருப்பை மாட்டிக் கொண்டு சென்றோம். காசுக்குத்தான் இப்படி செய்வார்கள் எனக் கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். ஆனால், பணம் கேட்காமலே செருப்பு கொடுக்கப்பட்டது.ஒருவேளை கோவிலில் இருந்து வெளிவரும் போது கேட்கலாம் என நினைத்தேன். 


பசுபதிநாத் கோவில் முகப்பு

பல கோவில்கள் கொண்ட கோவில் தொகுதியாகப் பசுபதிநாத் கோவில் இருந்தது. அங்கிருந்த அகோரி சாமி குங்குமம் பூசிக் கொண்டு தண்டேந்தி அமர்ந்திருந்தார். அவரைப் படமெடுக்க முயன்ற போது தண்டை ஓங்கி எஹூம் எனக் கத்தினார். அந்தக் குரல் கேட்டு பயந்து ஓடினேன்.அடுத்ததாக யாருமறியாமல் படமெடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். ஒங்களத்தான் ஒங்களத்தான் துரத்தி வர்ரார் என நவீன் பயமூட்டினார். நேபாளக் கோவில்கள் யாவும் சதுரமாகவும் மேல் கூம்பு பகுதியில் சீனக் கோவில்களான பகோடாக்களைப் போல் நான்கு பக்கமும் விரிந்த விளிம்புகளைக் கொண்டதாய் இருக்கிறது. 


பசுபதி நாத் கோவில் நேபாளத்தின் புனித நதியாகக் கருதப்படும் பாக்மதி ஆற்றின்கரையில் அமைந்திருக்கிறது. மையக் கோவிலின் நான்கு வாசல்களிலும் நான்கு முகமும் உச்சியை நோக்கி ஐந்தாவது முகம் என ஐந்து முகம் காட்டி சிவ லிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.நாங்கள் சென்ற நேரத்தில், பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. முன் வாசலில் சிறிது நேரம் நின்று பார்க்கும் போது கருவறையில் விளக்கேற்றப்படாமையால் இருண்ட அறையில் வெள்ளித் தகட்டுப் பதிக்கப்பட்டு மாலைகள் சார்த்தப்பட்ட லிங்கச்சிலை இருந்த்து தெரிந்தது. அடுத்து நடைபெறும் மாலை பூசையின் விளக்கேற்றலின் போது கோவில் உள் சென்று வழிபட பக்தர் கூட்டம் நெருக்கியடித்து நின்றதால் எதையும் முழுமையாகக் காண முடியாமல் இருந்தது. கோவிலின் மேல் விளிம்பைச் சுற்றிலும் புலி,எருமை என யாளிச் சிலைகள் மரத்தால் செதுக்கப்பட்டிருந்தன. மண்டையோட்டு மாலையும் அசுரனை மிதிக்கும் கோர முகம் கொண்ட காளியின் சிலையும் தெரிந்தது. கோவிலைச் சுற்றிலும் வெள்ளித்தகட்டுப் பதிக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் வெண்கல மூலாம் பூசப்பட்ட பெரிய நந்தி சிலையொன்று திமில் சரிய அமைக்கப்பட்டிருந்தது. சிலைகள் யாவற்றிலும் பூசப்பட்ட குங்குமம் வழிந்து தேனீக்கள் மொய்க்கும் மலர்மாலைகளால் நிறைந்து கிடந்தன. குங்குமம் படிந்த சிலைகள் பார்ப்பதற்கு மோசமாகத் தெரிந்தன.கோவிலின் பின்னிருக்கும் பாக்மதி ஆற்றங்கரைக்குச் சென்றோம். பாதம் மறையும் அளவே ஒடிக்கொண்டிருந்த ஆற்றில் மணல் திட்டுகள் தோன்ற ஆற்றொழுக்கு தடைபட்டிருந்தது. அங்கு ஆற்றுக்கான ஆராத்திச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆற்றுப் படித்துறையில் அமர்ந்து நானும் நவீனும் கோகிலாவும் ஆராத்திச் சடங்கைப் பார்த்தோம். பஜனைப் பாடல்கள், துதிகள், ஒற்றை முகம், ஐந்து முக விளக்குகளால் ஆற்றுக்குப் பூசகர்கள் ஆராட்டு எடுத்தனர். ஆற்றைத் தெய்வமாக எண்ணியப் பழங்குடிப் பண்பாட்டின் எச்சமாக இந்தச் சடங்கு நிகழ்வதாய் எண்ணிக் கொண்டேன். நாங்கள் அமர்ந்திருந்த படித்துறைக்கு வந்த கோவில் பணியாளர் தர்ப்பைப் புல்லை ஆற்றில் ஊறவைத்து எடுத்துப் படியில் வீசினார். அங்கிருந்தவர்களை அகலச் சொல்லி தாமதமாக நகர்ந்ததற்குத்தான் இப்படி வீசினார். அதன் பிறகு விறகுக்கட்டைகள் ஒன்றொன்றாக வீசப்பட்டுக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் படித்துறைக்குப் பக்கத்திலே சிதை மேடை இருப்பதைப் பார்த்தேன்.


                                                              ஆராத்திச் சடங்கு

அதில் பிணத்தை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நிகழ்கின்றன எனத் தெரிந்தது. ஒரு பிணம் எப்படி எரிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. இடப்புறத்தில் ஏற்கெனவே எரிந்து கொண்டிருந்த சிதைகளைப் பார்த்தோம்.  முதல் சிதை முற்றிலும் எரிந்து விட்டிருந்தது. அடுத்த சிதையில் ரப்பர் போன்று உருகிவிட்ட பிணத்தைத் திருப்பிப் போட்டுக் கொண்டிந்தார் பணியாளர். மூன்றாவதில், குங்குமம் பூசப்பட்ட வெண் துணியில் போர்த்தப்பட்டிருந்த பிணம் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கருகிலே, இறந்தவரின் மகன்கள் தலைமயிர் மழிக்கபட்டு எதையோ சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து பார்த்துவிட்டு வேனுக்கு வந்துவிட்டோம். கோவிலில் இருந்து வெளியே வரும் போது செருப்பு கொடுத்து காலணி போட்டுக் கொண்டோம். எவ்வளவு என்று கேட்டதற்கு பிரி...பிரி என்று சொன்னார். அவரைப் பற்றிய தப்புக்கணக்குக்கு உள்ளூர குற்றவுணர்வாக இருந்தது.


பாக்மதி ஆறும் தர்ப்பைப்புல்லும்

இரவு தங்கும் விடுதிக்கு வந்ததும் மறுநாளுக்கான பயணப்பைகளைத் தயார் செய்தோம். மறுநாள் ஆறு மணியளவில் எழுந்து பசியாறி விட்டு அன்னப்பூர்னா மலை அடிவாரத்துக்குப் போகும் முன் தங்கப் போகும் போக்கரா பகுதிக்குச் செல்லப் பேருந்தில் ஏறினோம். 200 கிலோமீட்டர் பயணம் எழு முதல் எட்டு மணி நேரம் எடுக்குமென சுரேஷ் முன்னரே சொல்லியிருந்தார். 


                                                                  சுரேஷ் 

முதல் நூறு கிலோ மீட்டர் சீரான பயணத்துக்குப் பின் உடைந்து சிதிலமடைந்த சாலையில் செல்லப் பல மணி நேரம் எடுக்குமெனச் சொன்னார்கள். ஆனால், ஆரம்பம் தொடங்கியே சிதிலமான சாலைகளில் பேருந்து தாவியும் இறங்கியும் சென்று கொண்டிருந்தது. காட்மாண்டில் இருந்து போக்கராவுக்குச் செல்ல சீன அரசின் ஆதரவுடன் நீண்ட சுரங்கம் கட்டப்படுகிறது. அந்தச் சுரங்கக் கட்டுமானத்துக்குப் பின் பயண நேரம் 4 மணி நேரமாக ஆகிவிடும் என சுரேஷ் சொன்னார்.சாலை முழுதும் உடைந்து போய்ப் புழுதி பறந்து ஒரு சில மீட்டர் கூட சீர் பயணம் இல்லை.பேருந்து பயணத்தில் கோகிலவாணி சுரேஷின் பயண அனுபவங்களைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார். சீரற்றச் சாலையின் பயணத்தை முழுமையாக மறக்கடிக்கச் செய்தது சுரேஷின் பயணக் கதை.  ஒவ்வொரு கதையிலும் மனிதர்களைப் பற்றித்தான் சொன்னார். அந்த மனித இயல்பு எப்படி தன் பயணத்தை மாற்றியது என்பதை மிகவும் சுவாரசியமாகவே சொன்னார். கூடியவிரைவில் பயண அனுபவங்களை முழுமையாகத் தொகுத்து நூலாக வெளியீடுவார் என எதிர்பார்க்கலாம். அங்காங்கே தேநீர் இடைவேளை, மதிய இடைவேளை எனப் பேருந்து நின்று சென்றது. மதிய உணவு இடைவேளையின் போது ஒரு உணவகத்தில் தக்காளி செட் எனப்படும் சோறு, மசித்த கீரைக்கூட்டு, தானியக் கூட்டு, சட்டினி, தயிர், மெல்லியதாக வெட்டப்பட்ட முள்ளங்கி கிழங்கு ஆகியன தரப்பட்டன. உணவகத்தின் பின் மிக அழகான மலைத்தொடர்களும் நீண்ட பள்ளத்தாக்கும் இருந்தன. அந்தச் சூழலில் உணவை ரசித்துச் சாப்பிட்டேன். 

அங்கிருந்து பேருந்து கிளம்பத் தொடங்கி சில மணி நேரத்தில் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது எனக் கேட்டதற்கு உடன்வந்த நேப்பாள வழிகாட்டி இரு மணி நேரம் என்றார். சுரேஷ் ஒரக்கண்ணால் சிரித்து 40 நிமிடம்தான் என்றார். அந்தப் பயணம் ஒன்றரை மணி நேரம் நீண்டது. இந்தப் பயணத்தில் எந்தவகையிலும் சூழல் ஒட்டிச் சிந்தித்து உடலைப் பலவீனப்படுத்தும் எந்த நெருக்கடிகளும் அண்டாமல் சுரேஷ் பார்த்துக் கொண்டார். போக்கராவுக்குச் சென்றடைந்த பின்னர் படிகட்டுப் பால்கனியில் அந்திச் சாயும் முன் மெல்லிய மஞ்சள் நிறம் போர்த்தி வெள்ளி மலைகள் தெரிந்தன. குளித்து முடித்து இரவுணவு உண்ண விடுதிக்கு வெளியே இருக்கும் கடைகளில் அலைந்தோம். ஒரு கடையில் அலங்கார விளக்குகளும் ஆடம்பரமானச் சூழலையும் கண்டு உள்ளமர்ந்து உணவுப் பட்டியலைப் பார்த்து சொன்னோம். எல்லா உணவுக்கும் இல்லையென நை...நேய்..எனச் சொன்னதும் கடையை விட்டு வெளியேறினோம். அடுத்தக் கடையில் நான் ரொட்டியும் தொட்டுக் கொள்ள பன்னீர் பாலாக் எனப்படும் பாலாடை கட்டிகளையும் சொன்னேன். அவை நன்றாக இருக்கவே தனியாகவே எடுத்துச் சுவைத்து உண்டேன். எங்கள் குழுவில் இணைதிருந்த வசந்தி கொடுத்த காளான் கஞ்சியும் உண்டேன். பொதுவாகவே, வெளியில் உண்ணும் போது உணவு அழற்சி ஏற்பட்ட முன்னனுபவங்களால் மிகவும் பழகிப் போன ஒரே மாதிரியான உணவுகளை உண்பேன். இம்முறை ஏதோ விருப்பத்தில் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாய் உண்டேன். விடுதிக்குச் சென்றதும் மறுநாளுக்கான பயணப்பைகளை ஒருக்கிவிட்டுப் படுத்தேன். காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பமொன்று முந்திக் கொண்டு வந்தது. அந்த மணம் நன்கு பழகிய மணம். கொஞ்ச நேரத்தில், பயமெடுக்கத் தொடங்கியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...