முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேபாளப்பயணம் 5 

ஆனந்தி அம்மா சோர்வுடன் படுத்திருப்பதைப் பார்த்து தேவஜிதாவும் மயூரியும் கலக்கமாக இருந்தனர். மயூரி மலாக்காவில் இருக்கும் அலோர்காஜா தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர்தான் தேவஜிதாவையும் அவரது அம்மாவையும் இந்தப் பயணத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அதனால்தான் கூடுதலாக வருத்தமாக இருந்தார். ஆனந்தி அம்மா எழுந்தமர்ந்தவுடன் முதலில்  இருவரையும் பார்த்து 'சாப்பிட்டாச்சா' எனக் கேட்டார். எல்லா தாயும் பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் போது பிள்ளைகள் பசியுடன் சாப்பிடாமல் இருப்பார்கள் என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். அன்றிரவு, நானும் முனியாண்டி, சுப்ரமணியம், சுரேஷ் நால்வரும் ஒரே அறையில் படுத்தோம். யாருக்கும் குளிரை எதிர்த்து குளியல் போட மனம் வரவில்லை.  ஈர திசுக்களைக் கொண்டு கழுத்து, முகம், நெஞ்சுப்பகுதிகளை மட்டும் வழித்தெடுத்து நான்கடுக்கு ஆடை பாதுகாப்புடன் படுத்தேன். முனியாண்டி சார் தீபரசம் தைலத்தைத் தந்தார். அதைக் கால்களில் தேய்த்துப்படுத்தேன்.  அந்தக் குளிரின் வாட்டத்துக்கு தீபரசத்தின் நெடியும் எரிச்சலும் உணக்கமாய்த் தெரிந்தது. காலையிலெழுந்ததும் யார் தண்ணீரில் கைவைப்பதெனக் காத்திருந்தேன். காலையில் வெளியில் நின்று பார்க்கும் போது மலைகளில் பாளம் பாளமாகக் கரும்பாறைகளில் பனி படிந்து பனிமூட்டமாய் இருந்தது.

 விடுதியறையின் முன்னால் நின்று கொண்டிருந்த போது ஹெலிக்ஸைப் பார்த்தேன். திருச்சூர்க்காரர்.திருச்சூரிலிருந்து ரயில் வழியாகவே நேபாள எல்லைக்கு வந்து அங்கிருந்து பேருந்து எடுத்து இங்கு வந்து சேர்ந்திருந்தார். மொத்தச் செலவே 20000 ரூபாய்தான். வியப்பாக இருந்தது. இங்கும் சட்டை, அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தார். இன்றைக்கு இன்ஸ்டாகிராம், முகநூலில் வரும் குறுங்காணொளிகளில் அடிக்கடி தென்படும் வாசகம் நெருக்கடிகளிலிருந்து விடுபட உடனே பயணத்துக்குக் கிளம்புங்கள். பையைத் தூக்கிக் கொண்டு பயணம் செய்யும் பேக்பேக்கரஸ் வகைப் பயணங்களை ஊக்குவிக்கும் காணொளிகளை ஒருவகை ஐயத்துடன் தானே பார்ப்பேன்.  பயணங்கள் மீதான பித்தைக் குறுங்காணொளிகள் வளர்க்கின்றன.  இம்மாதிரியாக மோஸ்தரைப் பின்பற்றி எடுக்கப்படும் காணொளிகள், படங்கள் குறிவைப்பது கவனக்குவிப்பைத்தான் என்றும் நம்புவேன்.  இந்தப் பயணம் எனக்கு ஏற்படுத்திய முதன்மையான கேள்வியென்பதே ஏன் தனிப்பயணங்களை மேற்கொள்ளக் கூடாது? என்பதுதான்.  குழுப்பயணம், தனிப்பயணம் ஆகிய இரண்டுமே அடிப்படையில் இரு வேறு மனநிலைகளை ஒட்டிச் செய்யப்படுவது. அனைவருக்கும் காத்திருந்து உடனிருப்போர் மீது கவனம் செலுத்திச் செய்யப்படுவது குழுப்பயணம். ஒருவரின் சிறு தாமதம், அலட்சியம் முழுவதுமாகக் குழுப்பயணத்தை வீணடித்து விடும். தனிப்பயணம் என்பது தனிப்பட்ட மனநிலையைப் பொறுத்து அமைத்துக் கொள்ளக் கூடியது. வாய்ப்பிருந்தால் பின்னர் தனிப்பயணம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன். 

ஹெலிக்ஸ்

ஹெலிக்ஸ்  விசுவல் கம்யுனிக்கேஷன் இளங்கலை பயில்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எம் டி வாசுதேவன் நாயர் ஆகியோரின் படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டோம். மலையாளத்தின் கல்ட் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்ற விதேயன், மதிலுகள், எலிப் பத்தாயம் படங்களை நானும் பார்த்திருந்ததால் அது குறித்து உரையாடினோம். மலையாளக் குடும்பங்களில் மருமக்கள் தாயம் இருந்தமையால் தன் தங்கைகள் முதிர்கன்னிகளாக வீட்டில் வைத்திருக்கும் அண்ணனைப் பற்றியக் கதை எலிப்பத்தாயம். நிலபிரபுத்துவ வாழ்க்கை முறை வீழ்ச்சியடைந்த சித்திரத்தையும் புதிய வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படாததைக் குறியீடாகக் காட்டும் முறையில் படம் முழுதும் பொறி வைத்து எலி பிடித்துச் சாகடிக்கும் காட்சிகள் இருக்கும். படமும் மெதுவாக நகரும்.  அந்தக் காட்சிகளைப் பற்றிப் பேசினோம். மறுபடியும் சந்திப்போம் எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு பயணத்துக்குத் தயாரானோம். 

அடுத்த குழு ஹிமாலாயாவிலிருந்து கிளம்பியது என்று தெரிந்ததும் நாங்கள் கிளம்ப அபிநாஷ் சொன்னார். அங்கிருந்து கிளம்பி, மச்சாப்புச்சாரே மலை அடிவாரத்துக்குச் சென்றோம். மச்சாபுச்சாரே என்றால் நேபாள மொழியில் மீன் வால் எனப் பொருள்படும் எனச் சொல்லியிருந்தார்கள். நடைப்பயணத்தின் போது அதனைப் பல இடங்களில் வழிகாட்டிகள் குறிப்பிட்டார்கள். அதன் உச்சி முனை மட்டும் இரண்டு மூன்று பிளவுகளாகப் பனி போர்த்திக் கிடந்தது. மீன்களைக் கையில் பிடித்தால், தன் வாலை ஆன மட்டும் வளைத்து நெளிந்து கொண்டிருக்கும் காட்சியைக் கற்பனை செய்து அதில் மின்னல் பொழுதில் அதன் வால் அலைநெளிவுகளாகத் தெரிவதைப் போல மலை முகடும் நெளிவுகளாகத் தெரிவதால் அப்பெயர் நிலைபெற்றிருக்கும் என நினைத்தேன்.

மச்சாபுச்சாரே மலை அடிவாரத்தைச் சென்றடைய நீண்டப் படிகட்டுகள் தெரிந்தன. ஒவ்வொரு இடத்தை அடைவதற்கு மேற்கொள்ளும் நீண்டப்பயணங்களைக் காட்டிலும் தங்கும் விடுதியைச் சேரும் படிக்கட்டுகளும், சிறிய குன்றுகளும் அதிகமாகவே சோதனை செய்யும். அந்தப் படிகட்டுகளை ஏறிக் கொண்டிருக்கும் போது பொந்தில் அணிலளவு உள்ள எலியொன்று ஒடி உள்நுழைவதைப் பார்த்தேன். இந்தப் பயணத்தில் காட்டில் நாங்கள் பார்த்த ஒரே காட்டுயிர் என்றால் அந்த எலியைத்தான் சொல்ல வேண்டும். பழுப்பு நிறத்தில் ரோமம் அடர்ந்திருந்த எலி, எல்லா எலிகளைப் போலவே மனிதர்களைக் கண்டதும் அச்சம் கொண்டு பட்டென பொந்தில் நுழைந்து கொண்டது. அந்த விலங்கையும் ஒரு சில நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஹெலிக்ஸிடம் பேசிய எலிப்பத்தாயம் காட்சிகள் நினைவுக்கு வந்தன. மேலேறியதும் மச்சாபுச்சாரே மலை பின்புலத்தில் தெரிய நேபாளத்தின் இரு முக்கோணம் கொண்ட கொடி பறந்து கொண்டிருந்தது. அதற்கு நேர்புறத்தில் மலை அடிவாரங்களில் பனிப்படலம் உருகி வழியும் போது நிலமும் சேர்ந்து சரிவதைத் தடுப்பதற்காகச் செங்குத்தாக மூங்கில்கள் நட்டிருப்பதை சுப்ரா சுட்டிக் காட்டினார். தமிழ் அறவாரியத்தின் உதவித்தலைவரான சுப்ரமணியம் கட்டுமான நிறுவனமொன்றில் ஆலோசகராகப் பணிபுரிகிறார். பழகுவதற்கு மிகவும் எளியவர். சிரியாவில் பணிபுரிந்திருக்கிறார். பயணத்தின் போது வெளிநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து வந்தார். அங்கிருந்து பார்க்கும் போது கீழே பறந்து கொண்டிருந்த வானூர்தியைப் பார்க்க காக்கைகள் பறப்பதைப் போல தெரிந்தன. மச்சாபுச்சாரேவில் காக்கைகளும் பறந்து கொண்டிருந்தமையால் மலை அடிவார உச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டும் இறக்கியும் வந்த வானூர்திகளும் பறவைகள் போலவே தெரிந்தன. எதாவதொரு வகையில் மலையேறிகளின் வருகை மலையின் பரப்பையும் சூழலையும் மாற்றிக் கொண்டு வருவதை உணர முடிந்தது.

 

சுப்ரமணியம்

மச்சாபுச்சாரேவில் குளிராக இருந்தாலும் வெய்யிலின் உணக்கத்தைத் தரையில் உணர முடிந்தது. அந்த உணக்கத்துக்கு அப்படியே தரையில் படுத்துக் கொண்டோம். அங்கு மதிய உணவுண்டு விட்டு, அன்னப்பூர்னா அடிவாரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். வழிவழியே கொஞ்சம் ஒரிரண்டு நிமிடங்கள் நின்று இளைப்பாறிவிட்டு நடந்தோம். அங்காங்கே தெரிந்த கம்பங்கள், முகாம்களை அமைப்பதற்கான கற்களிலும் கட்டைகளிலும் இருந்த கட்டுமானங்களை இளைப்பாறல் இடங்களாகக் கண்டு கொண்டு நடந்தோம். வழியில் அன்னப்பூர்னா அடிவாரத்தில் அமைந்திருக்கும் இடைத்தங்கல் முகாம் இன்னும் எங்கோ எட்ட முடியாதத் தொலைவிலிருப்பதாகத் தெரிந்தது. மேலிருக்கும் பனிப்படலம் உருகி ஆறொன்று இடப்புறத்தில் ஒடிக் கொண்டிருந்தது. அங்கும் வரிசையாக, மலையிலிருந்து அறுத்துக் கொண்டு வந்து ஆற்றொழுக்கால் தேய்ந்து மென்மையடைந்த தட்டைக்கற்களை அடுக்கி வைத்திருந்தனர். நான் அங்கும் தட்டைக் கற்களை அடுக்கி வைத்தேன். அதற்கு எவ்விதமான வேண்டுதல்களையும் வைக்கவில்லை. ஒவ்வொரு கல்லையும் காற்றில் தவழவிடுவதைப் போல சமநிலையுடன் அடுக்கி வைத்துப் படமெடுத்துக் கொண்டேன். 


மலையிலிருந்து அடுத்த பனிப்படலமும் உருகி வழியும் போது இந்தக் கல்லடுக்கும் சரிந்து விழும். பனியொழுக்கும் ஆற்றின் நீரோட்டம், காற்றோட்டம் சேர்ந்து அன்னபூர்னா ஒவ்வொராண்டும் கொஞ்சம் கொஞ்சமாய் மாறித்தான் கொண்டிருக்கிறாள். நாங்கள் ஏறும் வேளையில் பனிகளைந்து பேரொழுக்குடன் சிரித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

 


அன்னாபூர்னா மலை அடிவார உச்சியை அடைவதற்கு முன்னர் உடன் வந்த சுமைத்தூக்கிகள்,எப்பொழுதும் சொல்வதைப் போல இன்னும் 20 நிமிடம் என்று சொன்னார்கள். பாதை சீராகச் செல்வதால் இன்னும் 1 மணி நேரமாவது இருக்குமென நினைத்தேன். கொஞ்ச தூரத்தில் நமாஸ்த்தே அன்னாபூர்னா மலை அடிவாரம் என வண்ண எழுத்துகளால் எழுதப்பட்டப் பலகையைப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் இவ்வளவுதானா என எண்ணம் வந்தது. நாங்கள் வந்தடைந்த நேரத்தில் பலகையின் கீழ் பழுப்பு தீட்டுகளுடன் வெண்ணிறத்தில் நாயொன்று உடலை மண்ணில் பரப்பி அரைக்கண் உறக்கத்திலிருந்தது. 

நாங்கள் ஆவலுடன் நமாஸ்த்தே பலகை முன்னால் நின்று படமெடுக்கும் போது நாய் அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் படுத்திருந்தது. உலகின் உயரமான மலைகளில் ஒன்று: நேபாளத்தில் எட்டாவது பெரிய மலை.  அதன் முன்னால்  பனிமூட்டத்தால் முழுமையாய் உணர முடியாத வெய்யிலின் உணக்கத்துக்குக் குழி பறித்து உறங்குகிறது. அதை நினைத்தவுடன் எதோ பரவசமாக இருந்தது. அதைப் படமெடுக்க பெயர் பலகை பின்னால் சென்றேன். அதைப் படமெடுக்கும் போது முன்னிருந்து மேன்...தேட் சைட் பிளிஸ்...என்ற இந்தியாவைச் சேர்ந்த மலையேறிகளின் குரல் கேட்டு ஒதுங்கினேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற