முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப் பயணம் 7

 காலையிலெழுந்து பசியாறல் உண்டோம். அருகில் இருந்த முகாம் இன்னொருவருடையது என்று அப்போதுதான் தெரிந்தது. என்னுடன் வந்த மற்றவர்கள் அறை போதாததால் அங்குத்தான் தங்கியிருந்தனர். காலையிலே இரண்டு முட்டை, இரு சாப்பாத்திகள், சூப் எனப் பலமான பசியாறல் நடந்தது. அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். ஜெகதீசன் சார், ''அரவின் தான் எங்களுக்கு கேப்டன், அவர் சொல்படித்தான் கேப்போம்'' வகுப்பறையிலிருக்கும் சூட்டிகையான மாணவனைப் போல முன்னுக்கு நடக்கச் சொன்னார். அதற்குள் குழுவில் யாரும் பட்டயம் கட்டாமலே நானே தலைமையேற்று நடக்கத் தொடங்கியிருந்தேன். மலையேறுவதை விட இறங்குவது சிரமமாக இருந்தது. கால்களைப் பார்த்துப் பார்த்துக் கீழே அடிமேல் அடியாக எடுத்து வைத்து நடந்தேன். 


இந்தப் பாதையிலா நடந்து வந்தோம் என்று வியப்பாக இருந்தது. இந்த சமயத்தில் பிகாஷ் என்னுடன் நடக்கத் தொடங்கியிருந்தான். இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த பிரிஷ்டின் நிறுவனத்தின் தோற்றுநரான கணேஷின் மகன்தான் பிகாஷ் மகர். 19 வயதுதான் ஆகிறது. காட்மாண்டில் ஒரு கல்லூரியில் இளங்கலை பயில்கிறான். அவனுடன் பேசிக் கொண்டு நடந்தேன். தமிழில் வெளிவந்த எல்லா வணிக வெற்றிப் படங்களையும் பார்த்திருந்தான். சில மலையாளப்படங்களைக் குறிப்பிட்டுப் பார்க்கச் சொன்னேன். அப்படி பார்த்தால், முன்னர் நீ சொன்ன படங்களில் இருந்து உன் பட ரசனை வெகுவாக மாறிவிடுமென்றேன். கண்டிப்பாகப் பார்ப்பதாகச் சொன்னான்.  இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பான்மையோர் மகர் இனத்தைச் சேர்ந்தவர்கள். நேபாளத்தில் சாதி மாறி திருமணம் புரிந்தால் சில சடங்குகளிலிருந்து கூட விலக்கம் செய்யப்படுவார்கள். நேபாளத்தில் சாதி ஒழிய என் தாத்தா தலைமுறை மறையவேண்டுமெனச் சொல்லிச் சிரித்தான். மலேசியாவிலும் சாதியின் தாக்கம் இருப்பதைச் சொன்னதைக் கேட்டதும் கொஞ்ச நேரம் நடையை நிறுத்தி வியந்தான். நேபாளத்தில் கொலை செய்யப்பட்ட அரசக்குடும்பத்தினர் மீது பொதுவாகவே அனுதாபம் இருப்பதை லாரிகளில் ஒட்டப்பட்டிருக்கும் அரசக்குடும்ப ஸ்டிக்கர்களிலிருந்து ஊகிக்க முடிந்தது. பிகாஷும் நேபாளம் தன்னுடைய பொற்காலம் என ஒன்றை மன்னராட்சி காலத்திலே கண்டடைந்தது என்றான். இப்போது மன்னராட்சி திரும்ப வேண்டுமா என்றால் என்னால் உறுதியாகப் பதிலளிக்க முடியவில்லை என்றான். தற்போதைய நிலையில் இந்தியா சீனா இரு வல்லரசுகள் இருபக்கமும் நெருக்கி உள்நாட்டில் ஊழல் மலிந்திருப்பதாகக் குறைபட்டுக் கொண்டான். 

பிகாஷ்

அன்றைய நாள், கீழ் சோம்ரோங்கில் நான்கு மணிக்கே எங்களுடையப் பயணத்தை நிறைவு செய்தோம். சோம்ரோங்கில் நாங்கள் தங்கிய முகாமின் உரிமையாளர்தான் நேற்றைக்கிரவு மிக சுவையான சப்பாத்தியைச் சுட்டு கொடுத்தவர் என்பதை அங்குச் சென்றப்போதுதான் தெரிந்து கொண்டோம்.  இறங்கி வந்த களைப்புடன் இருந்தவர்கள் உடனே சென்று குளித்தோம். அன்றைக்குத்தான் நாங்கள் அன்னப்பூர்னா மலைப்பகுதியில் தங்கப்போகும் இறுதி இரவு. எதுவோ அற்புதம் நிகழ்ந்திருக்க வேண்டும். நாங்களனைவரும் கோழிக்கறி வேண்டுமென்றோம். உடனடியாகக் கோழியொன்று வெட்டப்பட்டு கறிக்குத் தயார் செய்யப்பட்டது. பூண்டு உரிப்பது, காய்கறிகள் நறுக்குவது, உருளைக்கிழங்கு சீவுவது என மொத்த சமையலறையையும் எங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. 



ராஜ்மா எனப்படும் தானியக்குழம்பை நானும் சண்முகநாதன் சாரும் வைத்தோம். உப்பு மிகுந்த போது கிழங்கையும் தக்காளியையும் போட்டு நேர்செய்யலாம் என்று சொன்னேன். உடனே, கிழங்கும் தக்காளியும் போட்டு குழம்பைத் தயார் செய்தோம். இரவுணவு சிறப்பாக இருந்தது. உணவு தயாராகும் இடைவேளையில் உள்ளூர் மது வகையான ராக்சியைச் சுமைத்தூக்கிகள் அனைவரும் அருந்தினர். எங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கப்பட்டது. எனக்கு மது அருந்தும் பழக்கமில்லை. இரண்டு கரண்டிக்கும் குறைவாக வற்புறுத்தலுக்காக அருந்தினேன். தொண்டையில் எரிச்சலுடன் இறங்கியது. அதன் பிறகு, உணவு, களியாட்டம், நகைச்சுவைகள் என அந்த இடம் வேறொன்றாக மாறியது. காலையில் எழுந்ததும் பசியாறிவிட்டு விடுதி உரிமையாளர்களான தம்பதிகளிடம் விடைபெற்றுக் கொண்டோம். நேப்பாள பாணியிலான பாடலொன்றுக்கு கைகளை வளைத்து நெளித்து வட்டமாக நடனமாடி பிரியாவிடை பெற்றுக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். 



முதலில் இறங்கிய சோம்ரோங் படிகளில் இப்பொழுது ஏறினோம். வழியில் கோவேறு கழுதைகளின் சாணம் படி முழுதும் மெழுகி வைத்ததைப் போல நிறைந்திருந்தது. சில பத்து படிகளுக்கு ஒரு முறையாவது படிகளில் வளர்ந்திருக்கும் புல்லைச் செதுக்குபவர்கள், கழுவுவர்களைப் பார்த்தோம். பராமரிப்புப் பணிகளுக்கான ஆட்கள் நியமிக்கப்பட்டு முறையாகப் பணி நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. கீழிறங்கிச் செல்வதற்கு முன்னர், அன்னப்பூர்னா மலைப் பராமரிப்பு அலுவலகத்தில் இறங்கி பெர்மிட்களைச் சரிபார்க்கும் போது உடன் நடந்து வந்த சுரேஷ் பேசினார். மலையேற்ற அனுபவமும் உடல் வலுவும் உள்ள அவரால் என்னை எளிதில் முந்தி சென்றிருக்க முடியும். ஆனால், குழுப்பயணம் என்பதால் அவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் தவிர்த்தேன் என்றார். இந்தப் பயணத்தில் முன் நடந்து செல்லும் போது நானே பல முறை உணர்ந்ததுதான் அது. அதைப் பெருந்தன்மை என்பதை விட தன் வலுவை நன்குணர்ந்த ஒருவரால்தான் அத்தகைய பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள முடியும் எனத் தோன்றியது. எஞ்சியிருந்த படிகளில் ஏறி இறங்கும் போதெல்லாம், மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுதுதான் எல்லாமே முதலில் இருந்து தொடங்குவதைப் போன்றிருந்தது. அதே சமயத்தில் எல்லாமே புதியதாகவும் தெரிந்தது. ஒவ்வொரு கணமும் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன். இது என் நினைவில் எஞ்சப்போகிற தருணங்களில் ஒன்று என.


போக்கராவுக்கு மறுபடியும் பேருந்தில் பயணம். செல்லும் வழியில் இன்னுமொரு கோழிச்சோறு. சாலையில் புழுதி அலையலையாகக் காற்றில் பறந்து கொண்டிருந்தது. நேபாளத்தில் மிகவும் பிரபலமான மோமொஸை அங்குத்தான் முதலில் சாப்பிட்டேன். சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட கோழிகளையும் கீரைகளையும் மாவுக்குள் வைத்து அவித்த பண்டம். கடையின் முன்புறத்தில் புழுதி பறந்து கொண்டிருந்ததால் கொஞ்சம் பயந்துதான் சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள மிளகாய் சாறு கொடுத்திருந்தனர். நன்றாகவே இருந்தது. போக்கராவில் இறங்கி தங்கும் விடுதிக்குச் சென்றதும் நவீன் வரவேற்றார். அவரிடம் என்னுடைய பயண அனுபவத்தைச் சொன்னேன். அன்றிரவு குளித்து முடித்த பின்னர் எங்களுடன் வந்த சுமைத்தூக்கிகளுக்கும் வழிகாட்டிகளுக்குமான பிரியாவிடை விருந்து நடைபெற்றது. ஆண்டொன்றில் மூன்று அல்லது மிஞ்சி போனால் நான்கு முறை மட்டுமே மலையேற்றப் பணி. மற்ற நாட்களில் தம் சொந்த கிராமங்களில் ஏதாவது வேலை பார்க்கப் போகிறவர்கள். பயணத்தின் போது, நாங்கள் ஆர்வக்கோளாறாகச் செய்கின்ற சிலவற்றைப் பார்த்து அவர்களில் பலர் ஓரப்புன்னகையில் சிரித்ததைப் பார்த்தேன். அதை வெளிப்படையாக எங்களிடம் சொல்லக்கூட மொழியைத்தாண்டிய தயக்கம் அவர்களிடம் இருந்தது. அவர்களுக்கான நன்றியறிவிப்பை உடன் வந்த அனைவரும் வெவ்வேறு முறையில் சொன்னார்கள். நான் நேப்பாளி மொழியில் நன்றி எனப் பொருள்படும் தான்யாபாட் என்றும் எல்லாம் நலமே எனப் பொருள்படும் டிக்சா என்றும் சொல்லியமர்ந்தேன். உள்ளூர அவர்களுக்கு நன்றியைச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அவர்களனைவரையும் தனித்தனியே பார்த்து தழுவிக் கொண்டு விடைபெற்றோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற