முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 8

மறுநாள் காலையெழுந்து தெருவில் நடக்கும் போதுதான் கால்கள் கடுப்பதே தெரிந்தன. சிறிய படிகளில் கால்களை எடுத்து வைத்து நடப்பதற்கே சிரமமாக இருந்தது. தங்கும் விடுதியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிலே இருந்த ஃபெவா ஏரிக்குச் சென்றோம். விளம்பரங்களில் நீலநிற நீருடன் அழகாகக் காட்சியளித்த ஏரி அருகில் காணும் போது பச்சை நிறத்தில் தெரிந்தது. நானும் நவீனும் கோகிலாவும் வசந்தியும் படகிலேறினோம். பதினைந்து நிமிடத்தில் ஏரியின் நடுவிலிருந்த தீவொன்றுக்குச் சென்றோம். தீவு என்பதை விட மண் திட்டு என்பதே சரியாக இருக்கும். அங்கு பராஹி கோவில் இருந்தது. 


                                                                   ஃபெவா ஏரி

பராஹி என்பது வராகி அம்மனைக் குறிக்கிறது என நவீன் சொன்னார். நேபாளப் பாணியில் சிவப்பு வண்ணத்தில் அமைந்திருந்த மையக் கோவிலும் அதற்கருகில் சிறிய கோவிலொன்றும் இருந்தன. அந்தக் கோவிலின் உள்ளே கல்வெட்டு ஒன்றும் உருவம் மழுங்கிய அம்மன் சிலையொன்றும் தரையில் வைக்கப்பட்டிருந்தது. சிலையில் குங்குமம் வழிந்து அதன் முன் பழங்களும் பூக்களும் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோவிலின் உள்ளும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.  கோவிலின் வலப்புறத்தில் அமர்ந்திருந்த காவி நிறச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்த சாமியார், நெற்றியில் குங்குமத்தைத் தீற்றினார். கோவிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான புறாக்கள் இரைந்து கிடந்த தீனியைத் தின்று கொண்டிருந்தன. அதன் முன்னால் சுற்றுப்பயணிகள் படமெடுத்துக் கொண்டிருந்தனர்.


பராஹி கோவில்
வெளியிலிருந்த கடையில் இருந்த சிறிய புத்தர், தாரா சிலைகளை வாங்கலாம் என்று விலை விசாரித்தோம். 300 ரூபாய் என்றான். எல்லாவற்றையும் உடனே மலேசிய ரிங்கிட்டுக்கு மாற்றிப் பார்த்துக் கொஞ்சம் விலை குறைக்க பேரம் பேசினோம். கடைக்காகக் கோவிலில் வாடகை செலுத்த வேண்டுமென்பதால், 25 ரூபாய் மட்டுமே குறைக்க முடியுமெனக் கறாராகவே பேசினான். அந்தக் கடையிலே 5 தாரா சிலைகளையும் புத்தர் சிலைகளையும் வாங்கினோம். தாரா சிலைகள் அழகாக இருப்பதால், ஐந்து சிலைகளைக் கைபற்றுவதில் மூவருக்கும் கொஞ்சம் போட்டியிருந்தது. 

விடுதிக்கு வந்து காலைப் பசியாறல் உண்டு லும்பினி பயணத்துக்குத் தயாரானோம். எங்களுடன் வந்திருந்த ஆசிரியர் குழவைச் சேர்ந்த எண்மரும் போக்கராவில் இருநாட்கள் தங்கி இங்கிருக்கும் முக்கியமான இடங்களைப் பார்ப்பதாகத் திட்டம். நாங்கள் பத்து பேர் மட்டுமே லும்பினிக்குப் பயணமாகிறோம்.  லும்பினிக்கான பயணம்  பத்து மணி நேரமென்றது  கொஞ்சம் கலக்கமாக இருந்தது. ஆசிரியர் குழுவைச் சேர்ந்த எண்மர் தவிர மீதம் இருந்த பத்து பேரும் வேனில் ஏறி லும்பினிக்குப் பயணமானோம். எங்களுடன் பிரிஸ்டின் நிறுவனத் தோற்றுனர் கனேஷும் உடன் வந்தார். பிகாஷின் அப்பா, கண்ணாடி அணிந்து மிகவும் நிதானமாக ஆங்கிலத்தைச் சொல் சொல்லாக தெளிவாகப் பேசினார். கொஞ்சம் கவனமின்றி கேட்டால் நேபாள மொழியில் பேசுவதைப் போல இருக்கும். 

முதலில் பொக்கராவின் முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு லும்பினிக்குப் பயணப்படலாம் என்பது திட்டம்.  முதலில் தேவிஸ் அருவிக்கு (DAVIS FALLS)  சென்றோம். நிலத்துக்கடியில் பாறைகளைப் பிளந்து நீர் கொட்டும் அருவி. பிளந்த பாறையில் அலையலையாக பச்சை நிறப் பிளவுகள் தெரிந்தன. ஃபெவா அருவியிலிருந்து வெளிவரும் நீரை அணைக்கட்டி வெளியேற்றும் போது உருவான அருவியென கணேஷ் சொன்னார். 1961 ஆம் ஆண்டு 31 ஜூலையில் சுவிட்சலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் என்ற பெண் இந்த அருவியில் நீந்தும் போது நீர்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டுப் பல நாட்களுக்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டார். அவருடைய நினைவாக டேவிட் அருவி எனப் பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் வரைப்படப் பணியின் போது தேவிஸ் என நேபாளி மொழிச் சாயலுடன் பெயரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.  எவெரெஸ்ட் மலைக்குக் கூட உள்ளூர் மக்கள் சாகர்மாதா என்றே பெயரிட்டு இருக்கின்றனர். வெள்ளைக்காரகள் தங்கள் வசதிக்கேற்ப உள்ளூர் இடங்களுக்குத் தங்கள் பெயர்களைப் பெயரிட்டு இருக்கின்றனர். இந்த இடத்துக்கான பெயர் நேபாளி மொழியும் ஆங்கிலமும் கலந்த ஒன்றாக மாறி நிலைத்திருக்கிறது.


                                                             தேவிஸ் அருவி

அப்பகுதியில் நேபாளில் இருக்கும் இனக்குழுக்களின் உடையலங்காரங்களுடன் கூடிய கழுத்தில்லாத பொம்மைகளில் உடற்கட்டுடன் இருந்த பொம்மையில் நின்று படமெடுத்துக் கொண்டேன். அங்கிருந்த கடையில் கூர்க்கா பாணி ஆடையொன்றை நவீன் வாங்கி பரிசளித்தார்.

 அங்கிருந்து பூம்டிகோட் சிவன் கோவிலுக்குச் சென்றோம். உயரமான மலையொன்றில் பெரிய நீலநிற சிவன் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் மலையேறி கோவிலுக்குள் சென்றோம். நேபாளில் எதுவுமே சமதளத்தில் இருக்காதா எனக் கோகிலாவிடம் கேட்டேன். இரண்டடுக்குக் கோவிலின் மேற்புறத்தில் சிவன் சிலையும் கீழ்தளத்தில் 108 சிவலிங்கங்களும் இருந்தன. கோவிலின் வலப்புறத்தில் இருந்த சிறுகோவில் தான் அருகர் சிலையொன்றும் கல்வெட்டொன்றும் இருந்தன. அதுதான் அந்தக் மூலக்கோவிலாக இருக்க வேண்டும். நவீனும் கோகிலாவும் ஒருநாளுக்கு முன்னதாகவே கோவிலுக்கு வந்திருந்தனர். 

                                                    பூம்டிகோட் சிவன் கோவில்

சுட்டெரிக்கும் வெய்யிலும் மலையேற்றமும் உடலைச் சோர்வாக்கியிருந்தது. அங்கிருந்து, நீண்ட நேரமாக வேன் வளைவுகளில் இறங்கி கொண்டிருந்ததைப் போலிருந்தது. அங்கிருந்து லும்பினிக்குச் செல்லும் பயணம் தொடங்கியது. ஒரு மணி நேரம் வேன் வளைவுகளில் ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருந்தது. தலைச்சுற்றலெடுத்து வாந்தி வருவதைப் போலிருந்தது. கொஞ்ச நேரத்தில் கட்டுப்படுத்த முடியாத வாந்தி வந்தது. வேனை நிறுத்தச் சொல்லி நிலத்தில் முட்டியைப் பதித்து வாந்தியெடுத்தேன். நிலத்தில் மொத்தமாக விழுந்துவிடும் எண்ணத்தில் தான் கீழே விழுந்தேன். முழுமையாக வாந்தியெடுத்து வயிறு காலியானதும்தான் பயணத்தைத் தொடர முடிந்தது. முன் இருக்கையைச் சாய்த்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து கொண்டேன். வேனில் மற்றவர்கள் பேசும் சத்தம் எங்கோ கனவுக்குள் நிகழ்வதாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

லும்பினியை அடைந்ததும் அனல்காற்று வீசுவது தெரிந்தது. கண்களைத் திறந்து பார்க்கும் போது மணல் வெளியைப் போல நிறம் மங்கி லும்பினி தெரிந்தது. தங்கும் விடுதிக்குச் சென்று நானும் நவீனும் ஒரறையில் தங்கினோம். அறையில் குளிரூட்டி பழுதுபட்டிருந்ததால், அடுத்ததடுத்து இரண்டு மூன்றறைகள் மாறி மாறி சென்று கொண்டிருந்தோம். இரவில் சாப்பிடப் போகும் போது, மயான அமைதியில் ஊர் ஆழ்ந்திருந்தது. செம்பட்டை நிறத்தில் பஞ்சாய்க் காணப்பட்ட தலையுடன் தொடை வரை சட்டையை இழுத்துப் போட்டிருந்த சிறுவன் உணவகத்தைச் சுற்றி சுற்றி வந்து பிச்சை கேட்டான். அந்த உணவகத்தின் நேர் எதிர்புறம்தான் புத்தர் பிறந்த மாயாதேவி கோவில் இருந்தது.

                                                    பஞ்சசீலக் கொள்கை

 

காலையிலெழுந்து பசியாறிவிட்டு தங்கும் விடுதியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிலிருந்த லும்பினி புத்த மடாலயங்களும் மாயா தேவி கோவிலும் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். வாயிலிலே அழுக்கடைந்த சேலையைக் கட்டியிருந்த பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள். நாங்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்தப் பின், தன் மகனை எங்களை நோக்கி அனுப்பி வைத்தாள். ஒட்டிய வயிறும் செம்பட்டை முடியுமாக இருந்தவன், நேராக ஒடிவந்து சுரேஷின் ஜின்ஸைத் தொற்றிக் கொண்டான். காற்சட்டைப் பையிலிருந்து, நேபாள பணத்தை எடுத்துத் தந்தார். அடுத்ததாக, என்னை நோக்கி ஒடிவந்து. கையிலிருந்த தண்ணீர் புட்டியைக் கேட்டான். அதைக் கொடுத்ததும், அம்மாவிடமே ஒடிக்கொண்டான். அதற்கு சில அடிகள் தள்ளித்தான் புத்தர் பிறந்த மாயாதேவி கோவில் அமைந்திருந்தது. யுனெஸ்கோ அமைப்பால் புராதான இடமாக அறிவிக்கப்பட்டிருக்கும் லும்பினி புத்த ஆலயங்கள் பகுதி புத்தச் சமயத்தினரின் புனிதப்பகுதியாகவும் கருதப்படுகிறது. கோவிலுக்கு முன்பாகப் புத்தச்சமயத்தின் ஐந்து கடமைகளான பஞ்சசீலக் கொள்கை எழுதப்பட்டிருந்த பலகையைப் பார்த்து இன்னுமொன்று மட்டுமே உங்களுக்குப் பாக்கி அதையும் செஞ்சிட்டா நீங்க துறவியாயிறலாம் என வேடிக்கையாக என்னிடம் சொன்னார்.


                                                              அசோகத்தூண்

புத்தரின் தாயாரான மாயாதேவி இங்கிருந்த தோட்டத்தில் குங்கிலிய மரத்துக்குக் கீழ்தான் சித்தார்த்தரைப் பெற்றெடுத்தார் என நம்பப்படுகிறது. அப்பகுதியைச் சுற்றிலும் கோட்டை போன்ற அமைப்பில் கட்டிடம் எழுப்பி அதன் மையத்தில் மாயாதேவி பிரசவித்த இடத்தில் மணற்கற்களால் அடையாளப்படுத்தி வைத்திருக்கின்றனர். அப்பகுதியில்  படமெடுக்கவோ காணொளி எடுக்கவோ அனுமதி தரப்படவில்லை. முதலில் இருந்த மரத்தாலான கட்டிடப் பாணியை ஒட்டி கிமு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு மன்னர்கள் எழுப்பிய சிதிலமடைந்த செங்கற் கட்டுமானம் இருக்கிறது.  புத்தர் பிறந்த பகுதி கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. அதை மறைக்கும் விதமாய்ப் பணத்தாள்களும் சில்லறைகளும் வீசப்பட்டிருந்தன. 


                                                       இளம் புத்தப்பிக்குகள்

அதற்கருகிலிருந்த செங்கற் சுவரில்  வாழைப்பழம் செருகப்பட்டுக் கிடந்தது. அந்தச் சுவரில் மரத்துக்குக் கீழ் குழந்தையை ஏந்தி கொண்டிருக்கும் முனைகள் மழுங்கிய சிற்பமும் இருந்தது. அங்கிருந்து வெளியேறி பின்புறம் சித்தார்த்தர் பிறப்பதற்கு முன்னர் மாயாதேவி நீராடிய குளத்தைப் பார்த்தோம். அதற்கருகில் இருந்த அரச மரத்துக்கருகில் வரிசையாகப் பிக்குகள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கும் பணத்தைப் போட்டு மக்கள் நகர்ந்து கொண்டிருந்தனர். அதற்கருகில், இரண்டு இளஞ்சிறுவர்கள் முடி மழிக்கப்பட்டு பத்து நாள் முடியுடன் காவி உடுத்தி கையில் வாழைப்பழத்தைத் தின்று கொண்டு சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நான்கடுக்குப் பாதுகாப்புடன் இருக்கும் இப்பகுதியைப் புத்தரும் இப்போது அப்படி வேடிக்கைத்தான் பார்க்கக்கூடுமென நினைத்துக் கொண்டேன். அரசமரத்திலிருந்து நானும் நவீனும் கொஞ்சமாய் மண்ணை எடுத்துக் கொண்டோம். மலேசிய சென்றவுடன் புத்தர் பிறந்த மண்ணை வைத்தே கோவில் கட்டிவிடலாமென்பது திட்டம். புத்தர் பிறந்த இடம் என்பதை உறுதி செய்யும் முதன்மையடையாளமாக, கிமு 3 ஆம் நூற்றாண்டில் இங்கு நிறுவியிருக்கும் அசோகத்தூண் கருதப்படுகிறது. அங்கும் பணமும் உணவுப்பொருட்களும் கொட்டப்பட்டுக் கிடந்தது.  அசோகத்தூணுக்கு முன்னும் உண்டியல் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆசைககளே துன்பத்துக்கான காரணம் எனச் சொன்ன புத்தரின் பிறப்பிடம் மணல்வெளியாகச் செழிப்பின்றி கிடந்ததும் பணத்தாள்களால் சில்லறைகளால் மக்கள் அதை மூழ்கடித்தும் வைத்திருப்பதும் முரணாகத் தெரிந்தது.  புத்தன் எல்லாவற்றையும் கண்கள் மூடி மோன நிலையுடன் அமர்ந்து பார்க்கக்கூடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...