முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 நேபாளப்பயணம் 9

அங்கிருந்து வெளியேறி நடக்கும் போதே வெப்பக்காற்றால் உடல் வியர்த்துக் கொண்டிருந்தது. லும்பினி 41 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலே உடலில் வியர்த்தது. இந்த வளாகத்தைத் தாண்டி சில நூறு மீட்டர் தொலைவில் பல்வேறு நாடுகளில் புத்தம் உள்வாங்கப்பட்டதன் அடையாளமாய் ஒவ்வொரு நாட்டினரும் மடாலாயங்கள் எழுப்பியிருந்தனர். மடாலயங்கள் தொடங்கும் பகுதியில் ஆள்காட்டி விரலை நீட்டிய பால்யக்காலச் சித்தார்த்தரின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்புறம் நீண்ட நீர்தேக்கம் இருந்தது. 

                                                                 சித்தார்த்தர்

புத்த சமயம் தேரவாதம், மஹாயானம், வஜ்ராயானம் என மூன்று முக்கியமான சிந்தனைப்பள்ளிகளைக் கொண்டது. சீனா,தைவான், கொரியா, ஜப்பான் நாடுகளில் மகாயானமும் திபெத், நேப்பாள நாடுகளில் வஜ்ராயானமும் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மார் நாடுகளில் தேரவாதமும் பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு டுக் டுக் எனப்படும் ஆட்டோ ரிக்ஷாவை அமர்த்திக் கொண்டோம். நேபாளத்தில் இங்குத்தான் முதலில் ஆட்டோவைப் பார்க்கிறேன். முதலில் இந்தியா மடாலாயத்துக்குச் சென்றோம். வட்டமான கட்டிடத்தில் புத்தர் ஜாதகக்கதைக் காட்சிகளைச் சிறுத்தும் பெருத்தும் இருந்த புத்த ஓவியங்களைக் கொண்டு வேடிக்கையாக வரைந்திருந்தனர். வெய்யிலின் தாக்கத்துக்குக் கொஞ்ச நேரம் தலைசாய்த்தமர்ந்து ஜெர்மன் மடலாயத்துக்குச் சென்றோம். 

                                                    ஜெர்மன் மடாலயம்

ஜெர்மன் மடாலயத்தில் திபெத்தில் இருக்கும் வஜ்ராயன புத்தத்தத்துவத்தை ஒட்டியே ஒவியங்களும் மடலாயத்தையும் அமைத்திருந்தனர். ஜெர்மன் நாட்டில் மற்ற மேற்கு நாடுகளைக் காட்டிலும் முன்னரே புத்தச் சமயத்தின் தாக்கம் பரவியிருக்கிறது. தத்துவத்துறையில் ஆழமான பாதிப்பைச் செலுத்திய ஷோப்பனோவர் ஜெர்மனில் புத்தக்கருத்துகளைப் பரவக் காரணமாக அமைந்தார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் மண்மூடியிருந்த லும்பினியை அகழ்வாய்வுப்பணியின் மூலம் உலகறியச் செய்தவர் Alois Anton Fuhrer எனும் ஜெர்மானியரே. அஸ்திரியா, அஸ்திரேலியா, பிரான்சு போன்ற நாடுகளின் மடாலயங்களும் லும்பினியில் இருக்கின்றன. ஒருவகையில் பண்பாடு, வாழ்க்கை முறை என வேறுபட்டுக் கிடக்கின்ற மேற்கையும் கிழக்கையும் புத்தம் போன்ற மெய்யியல் கருத்துகளே ஒன்றிணைக்கின்றன.



மடாலயத்தின் வெளிப்புறச் சுவரில் புத்தத்தத்துவங்களை விளக்கும் மண்டலா ஒவியங்களும் தங்கா ஒவியங்களுமென வண்ணங்களால் நிறைந்திருந்தது. பன்றி, எலி, பாம்பு என ஆணவம், அறியாமை, கோபம் ஆகியவற்றின் அடையாளங்களாக மூன்று விலங்குகளை மையத்தில் வரைந்து மேல் விட்டத்தில் சொர்கத்தின் அடையாளங்களான இன்பங்களும் கீழ் வட்டத்தில் நரகத்தின் அடையாளங்களான துன்பங்களும் வரையப்பட்டிருந்தன. அதற்கு வெளிப்புற வட்டத்தில் உலகியல் வாழ்க்கையின் ஆசைகளும் துயர்களும் வரையப்பட்டிருந்தன.  தாரா தேவியின் பல ரூபங்களைக் காட்டும் இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆலயத்தின் உள்ளே வட்டக்கூரைப் பகுதியில் முழுமையாக ஓவியங்கள் நிறைந்து கலைக்கூடமொன்றில் இருப்பதைப் போலிருந்தது. 



எங்களுடன் வந்த கணேஷ் திபெத்தில் புத்தம் பரவக் காரணமாக இருந்த அரசர் சோங்ச்டேன் காம்போ Songsten Gampo பற்றி வரையப்பட்டிருந்த ஓவியங்களைப் பற்றிச் சொன்னார். அங்கிருந்து வெளியேறும் முன் கால்களைத் தரையில் பதிக்க முடியாதளவு வெப்பம் தகித்துக் கொண்டிருந்தது. ஆலயத்திலிருந்து இறங்கி வேகமாகப் பாய்ச்சல் வைத்து வாயிலுக்குச் சென்றோம். உடன் வந்தவர்கள் முழுமையாகச் சோர்ந்திருந்தனர்.  தனிப்பட்ட முறையில் லும்பினிக்கான பயணத்திட்டத்தை முன்மொழிந்ததே கோகிலா என்பதாலே கூடுதல் சுறுசுறுப்புடன் இருந்தார். மதிய உணவுக்கு முன்னர் இன்னுமொரு ஆலயத்தைப் பார்க்க வேண்டுமென நேபாளப்பாணி மடாலயத்துக்குச் சென்றோம். மரத்தால் ஆன கட்டிடத்த்தில் அழகான செதுக்கு வேலைகள் செய்யப்பட்டிருந்தன. இப்பொழுதுதான் கட்டப்பட்டு வருவதால் முழுமையடைந்திருக்கவில்லை. கொடி மரமும் கருவறை போன்ற தோற்றமும் என இந்து கோவில் கட்டுமானத்தை ஒட்டியிருந்தது. 

அங்கிருந்து வெளியேறி, சோர்ந்து போய் கடைக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம். இங்கு நவீனும் கோகிலாவும் குடித்து நன்றாக இருப்பதாகச் சொன்ன நிம்புப்பாணி எனப்படும் எலுமிச்சைப்பானத்தை வாங்கி குடித்தேன். நன்றாக இருந்தது. மறுபடியும் அதே டால் பட் உணவு சாப்பிட்டேன். மதிய உணவுக்குப் பின்னர், எலுமிச்சை, புதினா, கரும்பு கலந்த பானம் குடித்தோம். உடல் புத்துணர்வு பெற்றதைப் போலிருந்தது. மறுபடியும் கிளம்பி மியான்மார், இலங்கை ஆலயங்களைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். இரண்டும் மூடியிருந்தன. 

ஜப்பான் ஆலயத்தின் பிரார்த்தனை மண்டபத்துக்குச் சென்றோம். காந்தியின் படத்தையும் பிரார்த்தனை மண்டபத்தில் வைத்திருந்தார்கள். அங்கிருந்து வெய்யிலுக்குத் தாவித் தாவி கம்போடிய மடாலயத்துக்குச் சென்றோம். பழுப்பு நிறத்தில் அங்கோர் வாட்டை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. புத்தர் ஜாதகக் கதைகளின் பின்னணி முற்றிலும் கம்போடியாவுக்கு மாற்றப்பட்டுப் பாத்திரங்கள் யாவருக்கும் கம்போடிய பாரம்பரிய தொப்பி அணிவிக்கப்பட்டு வரையப்பட்டிருந்தது. வெய்யிலில் உலாவி நீலம் பூத்திருந்த கண்களுக்குப் பழுப்பு மேற்கூரையில் வரையப்பட்டிருந்த அப்சரா நடனமணிகளின் ஓவியத்தைப் படுத்திருந்து பார்க்கும் போது நடனமாடுவதாக தெரிந்தது.  பார்த்த மடாலயங்களிலே அழகானதாக கம்போடிய மடாலயமே தெரிந்தது.




 அங்கிருந்து வெளியேறி, விடுதி அறைக்குச் சென்றோம். சாயந்திரம், லும்பினி நகரத்தையும் பார்த்துவிடவேண்டுமென திட்டமிட்டோம். மதியமெழுந்து விடுதி பணியாளரிடம், நகரம் செல்ல எவ்வளவு தூரம் எனக் கேட்டோம். 2000 ரூபாய் கட்டி டேக்சி எடுக்கலாமென்றார். அதற்கு அருகில் இருக்கும் நகரத்தைப் பார்க்கலாம் என்று நினைத்து அருகில் இருக்கும் நகரத்தைக் கேட்டோம். சிரித்துக் கொண்டே பக்கத்து தெருவில் இருக்கிறது. கொஞ்சம் சிறிய நகரம்தான் என்றார். 6.30 மணிக்கு வெய்யில் கொஞ்சம் அடங்கியிருந்தாலும் வீசும் காற்றில் வெக்கை இருக்கத்தான் செய்தது. இரு பக்கமும் வரிசையாக உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தையற் கடைகள் எனக் கடைகள் இருந்தும் எந்தப் பரபரப்புமின்றி தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவைப் பார்த்து மனிதர்கள் நாற்காலிகளைப் போட்டமர்ந்து பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டமர்ந்திருந்தனர். நாய்கள் கூட சீண்டுவாரின்றி புழுதியில் கிடந்தது. எதோ புராதான காலத்து நகரத்தில் நடப்பதைப் போன்ற உணர்வு அனைவருக்குமெழுந்தது. இந்தப் பயணத்தில் என்னுடன் நெருக்கமானவர்களில் வசந்தியும் ஒருவர். சிகையலங்காரக் கடையை நடத்தும் வசந்தி இம்மாதிரி மலைத்தலங்களில் இருக்கும் நிறைய கோவில்களுக்கு ஆன்மீகப்பயணம் மேற்கொண்ட அனுபவமிக்கவர். 50 ஐ தாண்டினாலும் விடாப்பிடியாக மலையை ஏற வேண்டுமெனப் பிடிப்புடன் இருந்தார். அவருடன் பேசிக் கொண்டு நடந்தேன். மலை இறங்கி நடந்து வர்ரப்ப பின்னால திரும்பி அன்னப்பூர்னாவ பாக்குறப்ப….கண்ணுல அழுகையா ஊத்துது எனக்கு….மறுபடியும் பழய மாரி அன்னாட வாழ்க்கைக்குள்ள வந்துருணும்ல அதான்…அது நல்ல அனுபவம்’ என்றார்.  அதே மாதிரியான உணர்வு எனக்குமெழுந்ததால் ஆமோதித்துக் கொண்டேன். மறுநாள், லும்பினியிலிருந்து காட்மாண்டுக்குச் செல்லும் 10 மணி நேரப்பயணத்தை நினைக்கக் கூடாதென்ற முடிவிலிருந்தேன். நவீன் அதை நினைவுப்படுத்திக் கலக்கமூட்டிக் கொண்டிருந்தார்.



 உள்ளூரிலே ஒடும் சொகுசு பேருந்தில்தான் காட்மாண்டுக்குப் பயணமானோம். காலை ஐந்து மணிக்கே பேருந்தில் ஏறிக் கொண்டோம். பதின்மூன்று மணி நேரம் சீரற்றச் சாலையில் பயணம் சென்றது. பேருந்து மேடு பள்ளத்தில் ஏறி ஏறிச் செல்வது படங்களில் பார்க்கும் மாட்டுவண்டிப் பயணத்தைப் போன்றிருந்தது. பக்கத்திலமர்ந்திருந்த நவீன் எந்தத் தடை வந்தாலும் சரியென நேபாளப் பயண அனுபவங்களை குமரிக்கோட்டம் என்றப் பெயரில் நாளுக்கொன்றாக ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தார். இந்த பதின்மூன்று மணி நேரத்தில் இரண்டு அத்தியாயங்களை எழுதினார். எனக்கு இந்த மாதிரிப் பயணங்களில் வாசிப்பது, கைப்பேசியைப் பார்ப்பதே தலைவலியைக் கொண்டு வந்துவிடுமென்பதால் சன்னலோரம் அமர்ந்து சாலையை வெறித்துக் கொண்டிருந்தேன். பெரிய ஆறுகள் வழிதோறும் இடம் வலமென மாறி மாறி வந்து கொண்டிருந்தன. மலைத்தொடர்களும் நீண்டு கொண்டே இருந்தது. பேருந்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆர்யாவின் காப்டன் எனும் பாடாவதி படம் ஓடிக் கொண்டிருந்தது. காட்மாண்டில் இறங்குவதற்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னதாக, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நேபாளி, நவீன் கையில் வைத்திருக்கும் தலையணை என்னவென்று கேட்டார். பயணங்களின் போது கழுத்திலணிந்து கொண்டு படுக்கும் கழுத்துத்தலையணை என்றார். அதனைத் தன் பெண் குழந்தை கேட்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரம் போட்டுவிட்டு தந்துவிடுவாள் என்றார். முதலில் எங்களிடம் ஆங்கிலமும் இந்தியிலும் பேசியவர், மலேசியர்கள் என்றவுடன் மலாய் மொழியிலே பேசத் தொடங்கினார். மலேசியாவில் ஐந்தாண்டுகள் வேலை பார்த்த அனுபவமிருப்பதாகச் சொன்னார். அப்பொழுதுதான் அவரது இரு குழந்தைகளையும் பார்த்தேன். மூத்தவள் கழுத்தில் தலையணையை அணிந்து தன் தம்பியிடம் காட்டிக் கொண்டிருந்தாள். நவீன் அதனை அவரது மகளுக்கே கொடுத்துவிட்டார். நபராஜ் எனும் அவர் நவீனின் கைப்பேசி எண்ணையும் முகநூல் பெயரையும் வாங்கி கொண்டார். நாளை மறுபடியும் சந்திப்பதாகத் திட்டம். அன்றைய இரவு தங்கும் விடுதிக்குச் சென்றோம். உடற்சோர்வு மிகுந்திருந்த்தால், தங்கும் விடுதியிலே உண்டோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...