முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

நேபாளப் பயணம் 3

கொஞ்ச நேரத்தில் இரண்டு மூன்று முறை வயிற்றுப் போக்கு கண்டது. நவீன் எல்லா வகை மருந்துகளையும் கொண்டு வந்திருந்தார் என்பது கொஞ்சமாய் ஆறுதலாக இருந்தது. பயண ஏற்பாடுகளின் போது முன்னரே அழற்சிக்கான தடுப்பூசிகள் இரண்டை மருத்துவர் சண்முகசிவாவிடம் எடுத்திருந்தார். எனக்கு ஏதோ குருட்டுத் துணிச்சலால் ஊசியை எடுப்பதை ஒத்திப் போட்டு எடுக்காமலே தவிர்த்தேன். அதன் பாதிப்பை இப்பொழுது உணர்வது கலக்கமாக இருந்தது. நவீன் தன் பையைத் திறந்து ஒரு பையைத் தந்து இரண்டு மாத்திரைகள் சாப்பிடுங்க..என்றார்.  இமோடியம் எனும் மருந்தை எடுத்த பிறகு கொஞ்சநேரத்தில் வயிற்றுக் கலக்கம் நின்றது.


                                   தூரத்திலிருந்து தெரியும் அன்னப்பூர்னா மலை

அந்த மருந்தை எடுத்தவுடன் பெருங்குடலுக்குச் செல்லும் குழாயில் நகர்ச்சியை நிறுத்திவிடுகிறது. அதனாலே, வயிற்றுப் போக்கு நின்றுவிடுகிறதென சுரேஷ் சொன்னார். முதலில் வயிற்றுப்போக்கை நிறுத்தும் மாத்திரைகளை எடுக்காமல் வயிற்றில் இருக்கும் பாக்டிரியாக்கள் வெளியேற்ற வேண்டுமென்றார். ஆனால், மிகுந்த மோசமான சூழலில் வயிற்றுப் போக்கை நிறுத்த வேண்டியதாகிறது. வயிற்றுப் போக்கு நின்றவுடன் வயிற்றில் நோயெதிர்ப்பு ஆற்றல் கூடுகிறதென்றார். அப்புறமென்ன அண்டிபாடி வந்தவுடன் வேகமா நடக்கலாம் என்றார் கோகிலவாணி. கோகிலவாணி வல்லினத்தில் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். எளிமையான மொழியில் நடனம், யோகா, மண்டலா ஒவியங்கள், பாடல் எனத் தன் கலை அனுபவங்களை மிக் அழகாகச் சொல்லிவிடுவார். கலையை ரசிப்பதற்கான ரசனைப் பயிற்சியாக இந்தக் கட்டுரைகள் இருக்கும். இரண்டு நாளும் உணவு பரிந்துரை, பயண ஏற்பாடு என கோகிலாவாணி மிகுந்த உதவியாக இருந்தார். போக்கராவிலிருந்து 1 மணி நேரப் பேருந்து பயணத்துக்குப் பின் காண்டுர்க் சென்றடைந்தோம். வளைந்து வளைந்து செல்லும்  மலைப்பாங்கான பகுதியில் நேப்பாள நாட்டுப்புறப் பாடலொன்றை ஒலிக்க விட்டனர். ஒரு பத்தி முடிந்த அதன் கடைசி வரிகளைக் கொண்டு அடுத்த வரிகள் தொடங்குகின்றன. பெண்ணொருத்தி ஆணைக் கிண்டல் செய்வதும் ஆண் அதற்குப் பதில் சொல்வதாகவும் பாடல் ஒலித்தது.

                                                பாடல் காணொளி இணைப்பு

                                         https://www.youtube.com/watch?v=t1tS1Lgm7Ds

சாலை மோசமாக இருந்ததால் பேருந்திலிருந்து இறங்கி 30 நிமிடம் நடக்க வேண்டியதாக இருந்தது. ஒரு பத்து நிமிட நடையிலே மூச்சிளைக்கத் தொடங்கி அடிவயிற்றில் கலக்கமெடுத்து நெஞ்சில் அடைப்பதைப் போல மூச்சை நிறுத்தி மஞ்சள் நிறப் பித்தவாந்தி வந்தது. இன்னும் முழுமையான பயணமே தொடங்காத வேளையில் இப்படி நடந்ததும் நான் தொடர்ந்து செய்துவந்த ஒட்ட,நடைப்பயிற்சிகள் இதற்கு முன் ஒன்றுமில்லையென இன்னும் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.அதன் பிறகு, அங்கிருந்து ஜீப்பில் சோம்ரோங்குக்குப் பயணம் தொடங்கியது. மூச்சிளைப்பிலிருந்து கொஞ்சமாக ஓய்வு கிடைத்தற்கு ஆசுவாசமாக இருந்தது. அங்கிருந்து நடைப்பயணம் தொடங்கியது. அடிவயிறு காலியாக இருப்பதாகத் தோன்றியது.கொஞ்சம் விரைவாக நடக்க முடிந்தது. ஆயிரக்கணக்கான படிகளைத் தாண்டி சோம்ரோங் கிராமங்களைப் பார்த்துச் சென்றோம். வழிதோறும் நாய்கள் வரவேற்றன. நாள்தோறும் பயணிகள் செல்வதால் பயமின்றி இருந்தன. 



ஜினுவில் தென்பட்ட முதல் நாய்

அவற்றின் பிடறிகளில் மயிர் அடர்ந்து குளிர் தாங்கும் வகையில் அமைந்திருந்தது. பிடறியைத் தடவிக் கொடுத்தாலும் மென் குளிருக்கு வெயிலின் உணக்கத்தில் எங்களைப் பாராமல் அமர்ந்திருந்தன. பயணிகள் தங்குவதற்கும் உண்பதற்கும் ஒவ்வொரு ஒன்றரை மணி நேர இடைவெளிக்கும் ஒன்றாக பயணிகள் இடைத்தங்கல் முகாம்கள்  (Tea House) அமைக்கப்பட்டிருக்கின்றன.


சமையலறை

ஜீனு முகாமில் முதல் டால் பட் உண்டோம். மலையேறியக் களைப்புக்கு அமிர்தமாக இருந்தது. உடம் வந்த நவீனும் கோகிலவாணியும் கொஞ்சம் மெதுவாக நடந்தனர். நான் எங்களுடன் இன்னொரு குழுவாக வந்த ஆசிரியர் குழுவுடன் இணைந்து கொண்டேன். அதிலிருவர் பொறியிலாளராகவும் , கட்டுமான நிறுவன ஆலோசகராகவும் இருந்தனர். அந்தக் குழுவில்  வந்திருந்த ஆசிரியர்களில் மூவர் ஒய்வு பெற்றவர்கள்.மற்ற ஐவர் ஐம்பதைத் தாண்டியவர்கள். எட்டுப் பேரும் உடல் நலத்தின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்குள்ளாகவே இளைஞர்களை போல ஒருவரையொருவர் கிண்டலடித்தும் நக்கல் செய்தும் வந்தனர். நான் குழுவில் இணைந்தவுடன் என்னையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கிண்டலில் சேர்த்துக் கொண்டனர். ஜீனுவைத் தாண்டி நடக்கத் தொடங்கினோம். ஆசிரியர் குழுவில் முதலாவதாக நடந்த சுரேஷுடன் நடக்கத் தொடங்கினேன். தஞ்சோங்மாலிமில் உள்ள பெஹ்ராங் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர். சென்ற மாதம்தான் கோலாலம்பூர் கோபுரத்தின் 2058 படிகளை எட்டரைநிமிடங்களில் ஒடிக் கடந்திருக்கிறார். 10 கிலோமீட்டர் ஓட்டத்துக்காக மலேசியா முழுவதும் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார். அவருடன் நடப்பது உற்சாகமாக இருந்தது. 


ஆசிரியர் சுரேஷ்

அப்படியே ஆசிரியர் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் அறிமுகமாகி வந்தார்கள். அந்த நாளின் பயணம் கொஞ்சமாய்க் கடுமையாக இருப்பதாகத் தோன்றியது. இந்தப் பயணத்தில் இரவு வேளையும் நடக்க வேண்டிவருமென்பதால் இரவில் தலையில் கட்டிக் கொள்ளும் விளக்கையும் வாங்கி வைத்திருந்தோம். அந்தி சாய அந்த விளக்கு தேவைப்படக்கூடுமென நினைத்தேன். ஆனால், நினைத்தற்கு மாறாக ஜினுவில் தங்கலாம் என சுரேஷ் சொன்னார். முதற்நாளில் திட்டமிடப்பட்டப் பயண நிரலில் இருந்து இரண்டு மணி நேரம் பிந்திப் பயணம் முடிந்தது. மறுநாள் இதை எட்டிப் பிடிக்க வேண்டியதோடு மறுநாளின் பயணத்தையும் நிறைவு செய்ய வேண்டுமெனும் போது பயமாக இருந்தது. 2600 மீட்டரில் இருக்கும் கீழ் டோபனில்  இருக்கும் கல்பனா கெஸ்ட் ஹவுசில் இருவர் ஒர் அறையில் எனத் தங்கினோம். ஏறக்குறைய ஏழு மணியாகியிருந்தது. சட்டையில் வியர்வைக் காயத் தொடங்கியதும் குளிரெடுக்கத் தொடங்கியது. இரண்டு குளியல் அறைகளே இருந்தன. அதில் குளித்தவர்கள் சுடுநீருடன் குளிர் நீரும் மாறி மாறி வருவதாகச் சொன்னார்கள். ஆசிரியரும் எழுத்தாளருமான முனியாண்டி ராஜ் குளிர் தாங்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு ஒடினார். அதற்கடுத்து நான் சென்று தண்ணீரில் கொஞ்சமாய்க் கையை விட்டுப் பதம் பார்த்துக் கொண்டே உடலை நனைத்துக் கொண்டேன்.  அறைக்குத் திரும்பியதும் வெடவெடவென குளிரில் உடல் தாளம் போட்டது. அன்றிரவு உணவறையில் அனைவரும் கூடி உண்டோம். அங்கேயே அமர்ந்து முனியாண்டியும் மற்ற ஆசிரியர்களும் சீட்டாட்டம் விளையாடினர். அதைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு அறைக்குத் திரும்பினேன். மறுநாளுக்கான காலை உணவு ஆர்டரையும் கொடுத்துவிட்டோம். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தால் காலையில் வந்த வயிற்றுப் போக்கு நினைவு அச்சமூட்டுவதாய் எழுந்து கொண்டது. அந்த அச்சத்திலே அன்றைய நாள் தூக்கம் சில மணி நேரம் மட்டுமே நீடித்தது.

மறுநாள் காலையில்  பசியாறலுக்கு குருங் ரொட்டி சாப்பிட்டேன். இந்த வட்டாரத்தில் பரவியிருக்கும் இனக்குழுவின் பெயர்தான் குருங். அந்த மக்களின் பாரம்பரிய உணவாக குருங் ரொட்டி இருக்க வேண்டும். இதனை திபெட் ரொட்டி என்றும் சொல்கின்றனர். அந்த ரொட்டியில் பழ ஜாம்மைத் தடவி சாப்பிடுகின்றனர்.  இந்த இடம்தான்  உலகம் முழுமையும் பல நாடுகளுக்கு ராணுவ வீரர்களாகவும், பாதுகாவலர்களாகவும் சென்ற கூர்க்கா வீரர்களின் தாயகம். வழியில் ஜீனுவில் பார்த்த நீண்ட தொங்கு பாலத்தின் தொடக்கத்தில் பிரிட்டன் கூர்க்கா படைகளில் இணைந்து போரிட்ட கூர்க்கா வீரர்களில் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது என எழுதப்பட்டிருந்தது நினைவில் எழுந்தது. பிரிட்டன் அரச ராணுவப் படையில் கூர்க்கா பிரிவு இன்றளவும் ஒரு பிரிவாக நீடிக்கிறது. கூர்க்கா படைகளில் இணைந்து பயிற்சி பெறுவதற்குக் கடுமையான சோதனைகள் நடத்தப்படுகின்றன. காட்மாண்டில் அதன் கல்லூரியும் பயிற்சி மையமும் இருப்பதைப் பயணத்தின் போது பார்த்தேன். கூர்க்கா படையில் சேர்வதற்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் நேபாள இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதில் இணைவதன் மூலமாக இங்கிலாந்துக்குச் சென்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியுமென நம்புகின்றனர். ஏறக்குறைய 20 லட்சம் நேபாள மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகப் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர். வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்வது நேபாளத்தில் வெகு இயல்பு.

இதே மாதிரியாக, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடற்றவர்களாக உலகின் பல பகுதிகளுக்கு யூதர்கள் பெயர்ந்தனர். அவ்வாறு பஈராக்கின் பாக்தாட் பகுதியில் வாழ்ந்து வந்த யூதர்களில் சிலர் பம்பாய்க்குப் புலம்பெயர்ந்தனர்.  அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் கடூரியும் என்பவரும் ஒருவர். பின்னர், அங்கிருந்து ஷங்காய்க்குப் புலம்பெயர்ந்து தங்கும்விடுதி, மின்சார உற்பத்தி ஆகிய வணிக வாய்ப்புகளில் ஈடுபட்டு பெரும் செல்வந்தரானார். 1942 ஆம் ஆண்டு ஜப்பானியப் படைகளின் படையெடுப்பின் போது சிறை பிடிக்கப்பட்டு பிப்ரவரி 8 1944 அன்று சிறையிலே உயிரிழந்தார். அவருடைய நினைவாக 1951 இல் கடூரி விவசாய உதவிக் கழகம் (Kadoorie Agriculture Association ) தொடங்கப்பட்டது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்டு வாய்ப்பு தேடி ஷங்காய், ஹங்காங் ஆகியப் பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்த யூதர்களுக்கு விவசாயம் செய்து வாழ்க்கை அமைத்துக் கொள்ள இக்கழகம் உதவி செய்தது. 


சர் எல்லி கடூரி

நேபாளம் பிரிட்டன் ஆட்சியில் நேரடியாக இல்லையென்றாலும் நேபாளத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான வீரம் மிகுந்த கூர்க்கா படையினரைத் தங்கள் நாட்டு அரசுப் படைகளில் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றனர். பிரிட்டன் படைகளில் இருந்த கூர்க்கா படையினர் ஹாங் காங்கில் தங்கியிருக்கும் போது கடூரிக்கழகத்தின் விவசாயப் பட்டறைகளில் பங்குபெற்றனர். படைகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நேபாளத்தில் விவசாயம் செய்து தங்கள் வாழ்வைத் தொடர்வதற்காக இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியே பின்னர் விரிவுபெற்று, நேபாளம் முழுதும் பிரிட்டன் படைகளில் பங்குபெற்ற கூர்க்கா வீரர்களின் நினைவாக கடூரி விவசாயக் கழகத்தால் தொங்கு பாலங்கள், ஓய்விடங்கள் அமைப்பதற்குக் காரணமாக இருந்தன. நெருக்குதலாலும் தங்கள் நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டும் புலம்பெயரும் மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஆதுரமான தொடர்புவலைகளாக இந்தப் பாலங்களும் ஓய்விடங்களும் காட்சியளிக்கின்றன.


தொங்கு பாலத்தில் கோகிலவாணி



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற