முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

நேபாளப் பயணம் 4

அதன் பிறகு, அன்றைய நாளுக்கான பயணம் தொடர்ந்தது. ஆசிரியர் குழுவில் முன்னிருந்த அறுவரும் என்னை முன்னால் வந்து நிற்குமாறு சொன்னார்கள். அறிவிக்கப்படாத குழுத்தலைவனாகப் பதவியேற்றுக் கொண்டேன். இரவில் போதுமான தூக்கமில்லாததால் பதற்றமாக இருந்தது. ஆனால், உயரமான பகுதிகளில் தூக்கமின்மை என்பது இயல்பானதே என சுரேஷ் சொல்லியிருந்தார். ஜீனுவிலிருந்து இன்னும் சில நூறு படிகளை ஏறினோம். வழியில் மலேசியக் குழுவிலிருந்து மலையேறி இறங்கிய பதினெட்டு சபா மாநிலத்தவர்களைப் பார்த்தோம். மலேசியா போலே என ஒருசேர கூவினோம். முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த சுமைதூக்கிகளுடன் விரைவாக நடக்கத்தொடங்கினேன். மலையேற்றத்தின் போது உடன் வந்த வழிகாட்டிகள், சுமைத்தூக்கிகளைக் கவனித்துக் கொண்டே அவர்களுடன் பேச்சு கொடுத்துக் கொண்டு நடந்து வந்தேன். சுமைத்தூக்கிகள் ஏறக்குறைய இருபது கிலோ எடை மிகுந்த எங்களின் பொருட்கள் கொண்ட பைகளைத் தலையில் மாட்டி முதுகில் சுமந்த வாறே நடந்தனர். நேபாள மொழிப் பாடல்களைக் கைபேசியில் ஒலிக்கவிட்டு முணுமுணுத்தவாறே காதோரம் இருந்த பையின் பிடியில் செருகிக் கொண்டு நடந்து வந்தார்கள். என்னைவிட சில ஆண்டுகளாவது இளையவர்களாக இருக்கக் கூடும். பலருக்கு ஒரிரு ஆங்கிலச் சொற்களைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.ஆசிரியர்கள் அறுவரும் கொஞ்சம் பிந்தி நடந்து வந்தனர். அவர்களுக்காகக் காத்திருக்கும் போது சுமைத்தூக்கிகளில் ஒருவரான சந்தோஷ் ஆய்ஷாலு எனப்படும் சிறிய ஆரஞ்சு நிறத்திலான மலைபெர்ரி பழங்களைப் பறித்து இலையில் தந்தார். ஆய்ஷாலு பழங்கள் மிக தித்திப்பாக இருந்தன. உடலெல்லாம் கோடுகளாக சிறிய புழுவொன்று நெளிவதாக இருந்தது. 


ஆய்சாலு பழங்கள் (ainselu fruits)

காலையிலிருந்த தூக்கமின்மையின் களைப்பு கொஞ்சமாகக் களைந்ததாக இருந்தது. வயிற்றுப் போக்கு நினைவு வந்ததும் பழங்களை மற்றவர்களுக்குக் கொடுத்தேன்.  பனிமலைகள் அங்காங்கே திட்டுத் திட்டாகத் தெரியத்தொடங்கியது. அதனை ஆர்வத்துடன் படமெடுத்தோம். தலைமை வழிகாட்டி அபிநாஷ் உடன் நடக்கத் தொடங்கினேன். உடன் வந்த ஆங்கிலம் தெரிந்த தலைமை வழிகாட்டியான அபிநாஷிடம் பேசினேன். இப்பொழுதுதான் பாலர்பள்ளிக்கு அவர் பெண் குழந்தை செல்ல தொடங்கியிருக்கிறது. தனியார் பள்ளிக்கு அனுப்புவதால் மலேசியத்தொகைக்கு 250வெள்ளி மாதம் கட்ட வேண்டியதாகியிருக்கிறது. வழிப்பயணத்தின் போது இடையிடையே குழந்தைக்கு அழைத்து வந்துவிடுவேன்..வந்துவிடுவேன்...என்று சொல்லி கொண்டிருந்தார். முடியில் நீலமும் பழுப்பும் கலந்த சாயம் பூசிக் கொண்டு வந்த சோபன் காட்டிடையில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது கொடி போல படர்ந்திருந்த செடியிலிருந்து இலையைப் பறித்து வாயில் வைத்தான். மேலிலையை உள் மடித்து மேலுதட்டில் வைத்து ஊதி மெட்டொன்றை இசைத்தான். இந்த மண்ணின் இசைத்தானது. நானும் ஆர்வத்தால் இலையைப் பறித்து உதட்டில் வைத்து ஊதினேன்.அபசுவரமாய் இசை ஒலித்தது. இந்த மண்ணின் இசை கூடாமல் போனது வருத்தமாக இருந்தது. சோபனும் இலைகளைப் பறித்து விடாமல் கற்றுக் கொடுத்தான். மீண்டும் மீண்டும் வாயில் வெப்பக் காற்று வந்து இலை கிழிந்து போகவே...இலைத் தண்டொன்றைப் பறித்துப் பையில் வைத்து நடக்கையில் பழகலாம் என்று நினைத்தேன்.  அடுத்த இளைப்பாறுதலில் பையில் கை வைத்து பார்த்தேன். தண்டு எங்கோ விழுந்திருக்க வேண்டும். தொடர் நடையில் அந்த இசை மட்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.


மூங்கில் காடுகளின் சிலிர்ப்பில் சுற்றிலும் மலையிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீரோடைகளின் சலசலப்பு சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பாடல் கேட்கலாம் என்று காதில் ஒலிப்பான்களைப் போடலாமா என்று கேட்டேன். எதிரில் பாறைகள் உருண்டு வந்தால், சத்தம் கேட்காமல் போய்விடும் அதனால் வேண்டாமென்று அபிநாஷ் சொன்னார். நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்துவதற்காகப் பல்லாண்டுகளாக கம்யூனிஸ்டு படைகள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியை மேற்கொண்டனர். அதனால் இங்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா எனக் கேட்டேன்.  என்னை ஒரு மாதிரியாக உற்று பார்த்தவர், இங்கு சில போராளிகள் பதுங்கியிருந்தனர். தங்கும் விடுதிகளின் பணியாளர்களாக, முதலாளிகளாகப் பெயர்களை மாற்றிக் கொண்டு பதுங்கியிருந்தனர். பொக்கரா பகுதியில் சில குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இங்கு இப்போது எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர் என்றார். பச்சைப் போர்த்தியப்பாறைகளின் பின்னால் யாரும் இன்னும் பதுங்கியிருப்பார்களா என்று எட்டிப் பார்த்துக் கொண்டேன்.


அந்த நாள் பேம்புவில் மதிய உணவு உண்டோம்.சோற்றுடன் அதிகம் நீர் கலந்த பருப்புக் குழம்பு, கீரைக்கூட்டு, கிழங்கு கூட்டு, ஊறுகாய் ஆகியவையுடன் கூடிய அதே தக்காளி செட் அல்லது டால் பட் எனப்படும் உணவு. அதனுடன் மிளகு சேர்க்கப்பட்ட அப்பளம், ஊறுகாய் வழங்கப்பட்டது. மலைக்காடுகளில் வளரும் இலை வகைகளைப் பறித்து வெயிலில் உலரச் செய்து ஊறுகாயாக அளிக்கின்றனர். அவைக் கொஞ்சமாகப் புளிப்புச் சுவையுடன் இருந்தது. பேம்பு இடைத்தங்கல் முகாமில் இலைகளைப் பரப்பிக் காய வைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பரப்பிக் கொண்டிருந்த பெருத்த உடல் கொண்ட நேபாளப் பெண்மணியிடம் படம் பிடிக்க அனுமதி கேட்டேன். எடுத்துக்கோ என்பதைப் போல சைகை செய்து நேபாளியில் எதோ சொன்னார். நேபாள மொழி இந்தி மொழியின் தாக்கத்தைக் கொண்டதால் இந்திப் படங்களில் கேட்டு நினைவிலிருந்த சில சொற்களைக் கொண்டு அவற்றின் பொருளை ஊகிக்க முடிந்தது. 

இலைகளிளொன்றை எடுத்துக் கொடுத்தார். ரப்பரை மெல்லுவதைப் போல இருந்தது. புளிப்புச் சுவை எச்சிலில் கலந்து தொண்டையில் மெல்ல இறங்கியது. நன்றி என நேபாளில் சொன்னேன். நாங்கள் உண்ணத் தொடங்கியதும் உணவுத்தட்டை ஒன்றொன்றாக வந்துதந்தார். ஒரு முகாம்க்கும் இன்னொரு இடைத்தங்கல் முகாமுக்கான தூரம் குறைந்தது இரண்டு மணி நேரம் என்பதோடு நடையின் வேகத்தைப்  பொருத்தும் மாறுபடுகிறது.ஆகவே, அங்கு வருவதற்கு முன்னரே உணவு சமைக்கப்பட்டால் குளிர்ந்து போய்விடுமென்பதால் முகாம் சேர்வதற்கு அரை மணிநேரம் முன்னரே உணவுக்கான ஆர்டர் எடுக்கப்படுகிறது. அப்போதுதான் உணவு சமைக்கப்படுகிறது. டோபனுக்கும் பேம்பு (Bamboo) இடைப்பட்ட பகுதியில் அதிகளவு காணப்பட்ட சிறு வகை மூங்கில் மரங்களை உள்ளூர் மக்கள் நிகாலோ மரங்கள் என்றழைக்கின்றனர். அதன் இளங்குருத்தைப் பிரட்டித் தருகின்றனர். சினுவாவில் முதல் நாள் உண்ட கீரை மூங்கில் குருத்து என வழியில் அபிநாஷ் சொன்னப்போதுதான் தெரிந்தது. ஒவ்வொரு இடைத்தங்கல் முகாம்களிலும் அளிக்கப்படும் உணவும் பெரிய அளவில் உப்பு, காரம் எனச் சுவைக்கூட்டிகள் இல்லாமல் சமைக்கப்படுகிறது. அங்கு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்கியதும் மழைத்தூறல் கொஞ்சமாய் இருந்தது. மழையாடை அணிந்து கொண்டு நடக்கத் தொடங்கினோம். மழையாடை தலை வரை மூடுவதால் கண்கள் எதிரிலிருக்கும் தூரத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. லாபிசிலில் ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர் சண்முகநாதன் இணைந்து கொண்டார். ஐம்பதைத் தாண்டியிருந்தாலும் அதற்கான சுவடே தெரியாதளவு உற்சாகமாகத் தன் வெளிநாட்டுப் பயண அனுபவங்களைப் பேசிக் கொண்டு வந்தார். இமாலாயாவுக்குச் செல்லும் பயணத்தின் இடையில் ஒரு பராஹா கோயிலைக் கண்டோம். மச்சாபூச்சசாரே பனிமலையில் உருகி வரும் மோடி ஆற்றில் பல நூறு சிறு அருவிகள் கலந்து வருகின்றன. அதில் ஏழு பேரருவிகள் ஆற்றில் கலந்து வரும் பகுதியில் கோவில் அமைந்திருந்தது. நேபாளப் பாணி கோவிலில் உள்ளே எந்தத் திருவுருவும் இல்லாது இருந்தது. இப்போதுதான் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. வழியில் பார்த்த கடைக்காரர் ஒருவர், இன்னும் இருபது நாட்களில் அங்கு பலிச்சடங்கு நடக்குமென்றார். மலைக்கிராம மக்கள் சேர்ந்து ஆடுகளைப் பலியிடுவார்கள் என்றார். அந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மராத்தோன் ஒட்டப்போட்டியும் நடைபெறும் என்றார்கள். வியப்பாக இருந்தது. கீழிருந்து ஏறி வரும் போது, சோம்ரோக் கிராமங்களில் நேபாள மொழி கொண்ட நுழைவாயில்கள் இந்தத் திருவிழாவை வரவேற்கவே அமைக்கப்பட்டிருக்க வேண்டுமெனப் பேசிக்கொண்டோம். உள்ளூர் மதுபான வகைகளான அர்னா மதுபான விளம்பரங்கள் நுழைவாயில்களில் இருந்தன. கோயிலைச் சுற்றிலும் தட்டையான கற்களை அடுக்கி வைத்திருந்தனர். நானும் கற்களை விழா வண்ணம் ஐந்தடுக்காக அடுக்கி மலையேற்றம் நன்முறையில் அமைந்திட வேண்டி கொண்டேன். அதற்கடுத்த பயணம் இன்னும் சவாலானதாக இருந்தது. இதுவரையில் வசதியாக வெட்டி அடுக்கப்பட்ட கற்களில் படியைப் போல ஏறி வந்தோம். இந்தப் பகுதியில் வேர்களின் தடுக்குகளிலும் மண்ணில் புதைந்திருந்த பாறைகளிலும் கால்களை வைத்து நடந்தோம். கொஞ்சம் தப்பினாலும் மழையீரத்துக்கு வழுக்கி விழுந்து விடும் அபாயம் கொண்டவை. ஒருவழியாக இமாலாயாவுக்கு வந்து சேர்ந்தபோது குளிர் நடுக்கமெடுக்கத் தொடங்கியது. 

தட்டையான கற்கள்

பராஹா கோவில்

அங்கு கொஞ்ச நேரம் இளைப்பாறியப் போது பிந்தியிருந்த குழுவில் நடந்து வந்த சிவலெட்சுமிக்குக் காய்ச்சல் கண்டிருந்ததும் கோமளாவுக்கு உடற்சோர்வும் நவீனுக்கு முன்னரே இருந்த முதுகு வலியும் மிகத் தொடங்கியதும் தெரிந்தது. அப்பொழுதே மணி ஏழைக் கடந்திருந்தது. இன்னும் ஒரு முகாம்க்குச் சென்றால்தான் இன்றையநாளின் திட்டமிடப்பட்ட இலக்கை அடையமுடியும். சுரேஷ் மற்றவர்கள் இரவில் பயணிக்க தயாரா எனக் கேட்டார். நாளை இன்னும் கூடுதல் தொலைவு நடக்க சிரமமென்பதால் வாங்கி வந்திருந்த தலைவிளக்குக்கு வேலை வந்துவிட்டதென நான் தயாராகவே இருந்தேன். உடல் நலம் சரியில்லாத கோகிலா, நவீன், கோமளா, சிவலெட்சுமி நால்வரையும் நாளை காலை தான் அழைத்துவருவதாக சுரேஷ் சொன்னார். மற்றவர்கள் தலையில் விளக்கைக் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். எதிரில் இருக்கும் பாறைகள் மட்டும்தான் பத்தடித் தூரத்துக்குத் தெரிந்தன. அந்தக் காலத்துல விளக்க தலையில் கட்டிக்கிட்டு விடியற்காலையிலே மரம் வெட்டபோவோம் என வீட்டில் சொன்ன கதையை அனுபவத்தில் கண்டேன். நடக்கையில் தூரத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரிந்த இடத்தைக் காட்டிக் காட்டிச்  செல்ல வேண்டிய இடமெனச் சொன்னார்கள். ஒரு பெரும்பாறையை ஏறிக் கடக்கும் போது ஒளி எங்கோ தொலைவில் மறைந்துவிடுகிறது. அருகில் கேட்கும் அருவியின் ஓசையைக் கூர்ந்து கேட்டு நடந்தால் நழுவி நழுவி எங்கோ ஒரிடத்தில் கொட்டிக் கொண்டிருக்கிறது. காடு மாயம் காட்டி நிற்பதாகத் தோன்றியது. எங்களுக்கு மேலே வளர்பிறை நிலவு மேகங்களில் மறைந்து வெளிச்சம் வீசிக் கொண்டிருந்தது. இரவில் என் முன்னால் நடந்த சோபன், தலையில் எந்த விளக்கையும் அணிந்திருக்கவில்லை. என் தலையிலிருந்த விளக்கிலிருந்து எழுந்த வெளிச்சத்தில்தான் இரண்டடி முன்னால் நடந்து சென்றார். அவரைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். டிக்சா...டிக்சா என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கேட்டு வந்தார். டிக்சா என்பதற்கு சரியா..நலமா எனப் பொருள் கொள்ளலாம். என்னிடம் கொஞ்சம் முனகலுடன் டிக்சா என மறுமொழி எழுந்தால் உடனே கொஞ்ச நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். 

பயணத்தின் போது ஹிங்கு குகையில் கொஞ்ச நேரம் இளைப்பாறினோம். ஆட்டிடையர்கள் ஆடு மேய்த்து ஒதுங்கும் இடம். மேட்டில் இருந்த பெரும்பாறையின் கீழ் நிழல் விழும் இடம்தான் ஹிங்கு குகை.  அதற்கு முன்பு கல்லில் நீள் இருக்கைக்கள் அமைந்திருக்கின்றன. அங்குக் கொஞ்ச நேரம் அமர்ந்தோம். மறுபடியும் நடக்கத் தொடங்கினோம்.  ஒரு வழியாக முகாமை வந்தடைந்தோம். கால்கள் உண்மையிலே கடுப்பது தெரிந்தது. குளிரும் மிகுந்து உதறலெடுக்கத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் பரபரப்புடன் உடன் வந்த தேவஜிதாவின் தாயார் ஆனந்தியை அணைத்தவாறே மெல்ல நடக்கவைத்து வழிகாட்டிகள் அழைத்துவந்தனர். அவரை உணவறையிலே படுக்க வைத்தனர். தேவஜிதாவின் தாயார் உடற்களைப்புக்காக மருந்து சாப்பிட்டதால் கடும் தூக்க மயக்கத்தால் சரியாக நடக்க முடியாமல் போய்விட்டது. அவர் தூங்கி எழுவது வரையில் அறையில் ஒரே பதற்றமாக இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற