முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

அன்னப்பூர்னா மலை அடிவார உச்சிக்குச் சென்றதும் ஹெலிக்ஸை மீண்டும் சந்தித்தேன். எங்களுக்கு முன்னரே உச்சியை அடைந்து விட்டிருந்தான். ஸ்விஸ்ட்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறியிடம் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் பதிலுக்குத் தலையசைத்து உரையாடலில் மூழ்கிப் போனான். நான், ஜெகதீசன், சண்முகநாதன் ஆகிய மூவரும் ஓரறையில் தங்கி கொண்டோம். கடுங்குளிருக்கு எதையும் செய்ய முடியவில்லை. அப்படியே நான்கடுக்கு ஆடை பாதுகாப்புடன் கனத்த கம்பளியைப் போர்த்திக் கொண்டேன். கண்களை மூடிக்கொண்டால் அலையலையாக வெள்ளிக்கம்பிகளைப் போல அருவிகள் ஆர்பரித்து இறங்குவது தெரிகிறது. அருவிகளின் சத்தமும் காதை நிறைப்பதைப் போலிருந்தது. தூக்கம் வரமால் திரும்பி திரும்பி படுத்தேன். கொஞ்ச நேரத்தில் மற்ற அறைகளில் பரபரப்பான பேச்சொலி எழுவதைக் கேட்டு வெளியே சென்றேன். 


குளிரில் நடுங்கியவாறே வெளியே பேசிக் கொண்டிருந்த கோவிந்தன், லெட்சுமணன், ஆனந்தி ஆகியோரின் உரையாடலைக் கேட்டேன். எங்களுடன் வந்த வசந்தி மேல் வந்ததும் இரு முறை வாந்தியெடுத்திருக்கிறார். உயிர்வளியின் அளவும் ஆபத்தான அளவான 70 ஐத் தொட்டிருப்பதால் அவரை உடனடியாகக் கீழே அழைத்துச் செல்வதைப் பற்றி தலைமை வழிகாட்டி அபிநாஷ் பேசிக் கொண்டிருந்தார். அதில் ஒரு தேர்வாக, அனைவரும் கீழே இறங்கலாம் என்றார். அதற்கு, லெட்சுமணன் உடனடியாக மறுப்பு சொன்னார். நடந்து வந்த களைப்பால் பலரும் உறங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அவர்களை எழுப்புவது சரியாக இருக்காது. சிக்கல் உள்ளவர்களை மட்டும் எழுப்பி அல்லது தூக்கிக் கொண்டு கீழிருக்கும் மச்சபுச்சாரே முகாமுக்கு அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு அபிநாஷ் வந்தார். ஆனால், வசந்தி அங்கிருந்து இறங்கமாட்டேன் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார். இங்கு இவ்வளவு தூரம் நடந்து வந்தது இந்த மலையைக் காணத்தான். இதைவிட்டு நான் கீழிறங்கமாட்டேன் என காய்ச்சலில் முனகிக் கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்று, நாளைக்கு இன்னொரு குரூப் மேலேறி வருவாங்க…நீங்க இன்னிக்கு இவங்க கூட இறங்கிட்டு நாளைக்கு மறுபடியும் ஏறி வந்துருங்க,…உடம்பு சரியானதும் என இரண்டு மூன்று முறை சொன்னேன். என்னால மறுபடியும் ஏற முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திரும்ப திரும்ப சிறுவர்களை ஆறுதல் படுத்துவதைப் போல நான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னேன். ஒரு கட்டம் அவரைக் கைதாங்கலாகப் படுக்கையிலிருந்து எழுப்பி அமர வைத்தேன். அபிநாஷிடம் இவரைத் தூக்கிச் சென்று விடுங்கள் என்று சொன்னதும் பழைய கம்பளியைக் கிழித்து அவருடைய இரு அண்டையிலும் கட்டி அவரின் கைகளை அதில் நுழைத்து  உப்புமூட்டை தூக்குவதைப் போல தூக்கிக் கொண்டு சரசரவென நடக்கத் தொடங்கினார். மழையிருள் சூழ்ந்ததைப் போல வெறித்திருந்த மேகத்தில் பனிப்போர்த்திய மலைகள் மட்டும் ஏகாந்தமாகத் தெரிந்தன. தூக்கம் கெட்ட இரவுடன் அன்றையப் பொழுது கழிந்தது.


வசந்தி
மறுநாள் காலையில் நவீன், கோகிலவாணி, யோகாம்பிகை, சிவலெட்சுமி என நால்வர் கொண்ட  இன்னொரு குழு சுரேஷுடன் வந்திருந்தனர். நான் அங்கு நன்கு ஆங்கிலம் தெரிந்த வழிகாட்டியான இந்திராவுடன் நேற்றே பேசத் தொடங்கியிருந்தேன். நேபாள இலக்கியத்தில் இளங்கலை பயின்றிருந்த இந்திராவின் அண்ணன்தான் இந்த நிறுவனத்தின் இணைத்தோற்றுநரான சின் தாப்பா. திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகச் சொன்னார். வேலை இல்லாத நேரங்களில் காட்மாண்டிலிருக்கும் தன்னுடைய உருளைக்கிழங்கு தோட்டத்தில் பணிபுரிவதாகச் சொன்னார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன்னுடைய குழந்தையை ஒரு நடுத்தரமான தனியார் பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து பத்து நிமிடத் தொலைவில் முழுமையாகப் பனி கரையாமல் இருக்கும் மேட்டுப்பகுதியில் படம் பிடிக்க அழைத்துச் சென்றேன். அங்கமர்ந்து ஆசைதீர பனிமனிதனை பனியில் உருட்டி உருட்டி விளையாடினேன். பனிப்பாறையிலமர்ந்து மனம் விரும்பியதைப் போல படங்களை எடுக்கச் செய்தேன். இங்கு நெடுநேரம் இருக்கமாட்டோம் என்பதால் பனியின் வெண்மை கண்களில் நெருடக் கூடாது என அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியைக் கழற்றி ஆசைதீர கண்களில் பனியை நிறைத்துக் கொண்டேன். கண்களில் நீர்த்துளி கோத்துக் கொள்ளத் தொடங்கியதும் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு நானும் இந்திராவும் மலையிலிருந்து கீழிறங்கி முகாமுக்குச் சென்றோம். 


அங்குச் சென்ற பின்னர்தான் தலையில் அணிந்திருந்த குல்லாவைப் பாறையின் கீழ் கழற்றி வைத்தது நினைவுக்கு வந்தது. மறுபடியும் அந்த இடத்திற்குச் சென்று இருமுறை தேடியும் குல்லா கிடைக்கவில்லை. அதை அன்னபூர்னா என்னிடமிருந்து எடுத்துக் கொண்டாள் என நினைத்துச் சமாதானம் செய்து கொண்டேன். நவீன் நான் முதலில் மேலேறி வந்ததை அறிந்ததும் மிக மகிழ்ச்சியடைந்தார். கோகிலா முன்னரே முதலில் ஏறிவிடுவீர்கள்தானே என ஒவ்வொரு சந்திப்பிலும் கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருந்தது. நவீன் எடுத்து வந்திருந்த வல்லினம் கொடியுடன் மலையுச்சியில் இரு படங்களை எடுத்துக் கொண்டோம். அந்த மலையுச்சிக்குப் பின்னால் புழுதி போல சேர்ந்திருப்பது நூறடிக்கும் மேலான தடிமனான பனிப்புழுதி, அதில் விழுந்தால் உள்ளே புதைந்து போவது நிச்சயம் என வழிகாட்டிகள் முன்னரே எச்சரித்திருந்தனர். கால்களில் கொஞ்சமாய் நடுக்கமிருந்தும் படமெடுக்கும் ஆர்வத்தில் கொஞ்சம் மறந்திருந்தோம். அதே பகுதியில், அன்னபூர்னா மலைப்பகுதியில் ஏறச் சென்று இறந்து போனவர்களின் நினைவாக எழுப்பப்பட்டிருந்த நினைவுத்தூணைப் பார்த்தேன். வெவ்வேறு நாட்டினர். இளவயதினர். ஏறச் சென்று மறைந்தவர்கள்; இறந்தவர்களின் படங்கள் பிறந்த ஆண்டுடன் குறிக்கப்பட்டு இருந்தது. எதிரில் உயர்ந்திருந்த பனிச்சிகரங்களையும் பின்புறத்தில் வால் சுழற்றி நின்றிருந்த மச்சபுச்சாரே மலையையும் பார்த்துக் கொண்டேன். மாயம் காட்டி நிற்கும் இயற்கையழகும் அதனழகில் தொலைந்து போனவர்களும் ஒருசேர நினைவிலெழுந்தனர். 




மலையேறிகளுக்கான நினைவுத்தூண்

அங்கே கொஞ்ச நேரமர்ந்து கதிரெழுகையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சூரிய உதயம் உண்மையில் சரியாகத் தெரியவில்லை. எல்லா நேரமும் வெளிச்சம் கொண்டிருப்பதைப் போலவே பனிச்சிகரங்கள் அமைந்திருந்தன. கொஞ்சம் உற்று கவனிக்கத் தொடங்கியதும் பனிச்சிகரங்களில் அலையலையாக சூரிய ஒளி படிவதைப் பார்க்க முடிந்தது. அதற்கருகில் மெல்லியப் புகைப்படலமாகத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் பனிப்பொறுக்குகள் கீழிறங்கி பனிப்புயலாக மாறுவதைப் பார்த்தேன். அதற்கருகில் இருப்பவர்களை அப்படியே பனியில் இழுத்துச் சென்று பள்ளத்தில் புதைத்து விடும் பேராற்றல் கொண்ட புயல் அழகாகத் தெரிந்தது. அன்னாப்பூர்னாவின் அழகு மாயம் நிறைந்ததுதான். மலையேறச் சென்று இறந்தவர்கள் உடல் பலவீனப்பட்டதால் மட்டும் இறந்திருக்க நியாயமில்லை. இயற்கையின் மாயத்தில் தங்களை மறைத்துக் கொண்டவர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடும் என நினைக்கிறேன். குழுவினர் கீழிறங்கத் தயாரானார்கள். சுரேஷ் எடுத்த காணொளியில் என்னுடைய அனுபவத்தை ஒட்டிப் பேசினேன். உடலும் மனமும் உரையாடுவதாக மலையேற்ற அனுபவம் அமைந்திருப்பதையும் சுமைத்தூக்கிகளின் அயராப்பணியையும் பற்றியும் சுருக்கமாகப் பேசிக் கீழிறங்கினேன். வழியெல்லாம், மறுபடியும் பனிமலைகளை ஆசைத்தீர பார்த்துக் கொண்டே நடந்தேன். வழியில் தென்பட்ட ஆற்றங்கரையில் நான் அடுக்கி வைத்திருந்த தட்டைக் கற்களில் மேலிரண்டு கற்கள் காற்றுக்குச் சரிந்திருந்தன. அதனைக் களைத்து விடலாம் என எண்ணமெழுந்தது. அதனையும் அன்னப்பூர்னாவே சரித்துக்கொள்வாள் எனத் தோன்றியது பயணத்தைத் தொடர்ந்தோம்.


சூரிய உதயம்

மச்சாபுச்சாரே முகாமில் நவீன் கடுமையான முதுகு வலியாக இருப்பதாகச் சொன்னார். முன்னரே முதுகு வலிக்காகச் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குச் சென்றிருந்தார். நான்காண்டுகளுக்குப் பின்னர், அதைப் போல கடும் வலியால் இறங்க சிரமப்பட்டார். இன்னும் டியுராலி முகாமிலிருந்தே வானூர்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், வேறு வழியின்றி இன்னும் சிரமப்பட்டு இறங்கினார். நாங்கள் அங்கிருந்து இன்னும் கொஞ்ச தூரம் இறங்கி மேல் டோபனில் அன்றைய நாள் பயணத்தை நிறைவு செய்தோம். அன்றைய முகாமில் தங்கியப் போதுதான் இரண்டரை நாட்களுக்குப் பின்னர் இணைய வசதி கிடைத்தது. ஈரச்சட்டையைக் கழற்றாமல் வீட்டில் உள்ளவர்களுக்குக் காணொளி அழைப்பு செய்து நலமாக இருப்பதையும் மலையை ஏறி இறங்கி கொண்டிருப்பதையும் சொன்னேன். அப்பொழுதுதான், மலையேறிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். 

அன்றைய நாள்தான், சுடுநீரில் குளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு கலன்களைக் கொண்டே நீரைச் சூடாக்கித் தருகிறார்கள். நானும் சுரேஷும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டோம். மேலே உங்களுக்கு ஏதாவது விசித்திரமான கனவு வந்ததா எனக் கேட்டார். நான் கண்களை மூடினால் அருவிகள் கொட்டுவதைச் சொன்னேன். உயரமான பகுதிகளில் தங்கும் போது விசித்திரமான கனவுகள் வருவது இயல்பு எனத் தன்னுடைய கனவைச் சொன்னார். எனக்கு அவ்வாறான கனவு இயல்பாகவே வந்திருக்கிறது. அன்றிரவு மேகி மீ அவித்து சூப் சாப்பிட்டேன். அந்த முகாம்க்கு அருகில் இருந்த சிறிய கொட்டகையில் சுமைத்தூக்கிகள் ஒன்றாக அமர்ந்து விறகுகளை எரித்துக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். சுமைத்தூக்கிகள் உள்ளூர் மக்கள் காய்ச்சும் ராக்சி எனப்படும் நொதிக்க வைக்கப்பட்ட சோளத்திலிருந்து காய்ச்சப்படும் சாராயத்தைப் பருகிக் கொண்டிருந்தனர். என்னிடமும் நீட்டினர். நான் மறுத்து விட்டேன். இந்திராவும் அங்கு அமர்ந்திருந்தார். நவீன் தான் அவரை இலக்கிய வாசகர் என அன்னப்பூர்னாவில் அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் ஹருகி முரகாமி போன்ற எழுத்தாளர்களை வாசித்திருக்கிறார். அவருடைய கதைகளில் பூனைகள் அதிகம் இடம்பெறும் காரணத்தைப் பேசிக் கொண்டோம். தனிமையின் அடையாளமாய் அவைக் கருதப்படுவதால் இருக்கலாம் என்றேன். வெளிநாட்டில் பணி புரியும் நேப்பாளிகளின் வாழ்க்கையை யாராவது எழுதியிருக்கிறார்களா எனக் கேட்டேன். தனக்கு தெரிந்து யாரும் அவ்வாறு எழுதவில்லை என்றார். அவரே ஐந்தாண்டுகள் தென் கொரியாவிலிருந்த பண்ணையில் பணியாற்றியிருக்கிறார். தென் கொரியாவில் அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் எந்த வேலையும் இயல்பாக நடைபெறாது என்றார். நீங்கள் ஏன் அதை எழுதக்கூடாது என்றேன். மெல்லிய புன்னகையுடன் இப்பொழுதுதான் வாசிக்கின்றேன். பிறகு எழுதலாம் என்றார். நேபாள மொழியில் எழுதும் சில எழுத்தாளர்களின் பெயர்களையும் முக்கியமான இலக்கிய ஆக்கங்களையும் என் கைப்பேசியில் தட்டச்சிட்டு காட்மாண்டில் தேடினால் புத்தகங்கள் கிடைக்குமென்றார். காலையில் விரைவில் எழுந்து கொண்டதால் உறங்கவேண்டுமென்றார். நானும் உறங்கச் சென்றேன். மறுபடியும் வெள்ளியலையாக அருவிகள் ஆர்பரித்துக் கொட்டுகின்றன. நடுவில் மச்சாபுச்சாரேவின் வால் முனை மிளிர்ந்து கொண்டிருந்தது. அதனைச் சுற்றிப் பார்க்கும் தொலைவே தூக்கம் நீண்டது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...

வயலும் வாழ்க்கையும்

  வயலும் வாழ்க்கையும் ஷானோன் அகமாட்டின் detik detik diri di daerah daif (உட்புற மாவட்டமொன்றிலிருந்த தருணங்கள்) எனும் தன்வரலாற்று நூலைத்தான் முதலில் வாசித்தேன். செய்திகள், தேர்வு வாசிப்புக்காகவும் இல்லாமல் நான் முதன்முதலாக வாசித்த மலாய் புனைவு நூலும் அதுதான். கெடா மாநிலத்தின் உட்புறப்பகுதியான சிக் பகுதியில் கழிந்த தன் பால்யத்தையும் மேற்கல்வி வரையிலான வாழ்வைப் புனைவு கலந்து சொல்லியிருப்பார். மலாய் மக்களின் கிராமப்புற வாழ்வின் சிரமங்கள், நெல் வயல் வேலைகள் எனச் சுவாரசியமாக இருந்ததாக நினைவிருக்கிறது. அதிலும் குறிப்பாக, தன் தந்தையுடன் சேர்ந்து மணிப்புறாவைப் பிடித்து அதைத் துள்ளத்துடிக்கக் கொல்லும் சித்திரமொன்று நன்கு நினைவில் இருக்கிறது. அதற்கடுத்து tivi எனும் குறுநாவலை வாசித்தேன். நெல் விவசாயம் செய்யும் மலாய் மக்களின் வாழ்வுக்குள் நவீனத் தொழிற்நுட்பத்தின் வருகையை ஒரு விவசாயக் குடும்பத்துக்குள் தொலைக்காட்சி முதலில் அறிமுகமாகி அதன் வழியாக விவசாயப் பணிகளுக்குச் செல்லச் சோம்பல் ஏற்பட்டு மெல்லக் குடும்பம் சீரழிவதைச் சொல்லும் படைப்பு திவி. கலை என்பதை விட சமூக விமர்சனத்தை முன்னிலைப்படுத்தும்...