முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.



இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிறந்த நான்கு மகன்களும் கழுதையும் யானையும் சேர்ந்து கட்டுமானப் பணியை நிறைவு செய்தன என்ற செவிவழி கதையே இத்தூபியின் வரலாற்றை விட பிரபலமாக விளங்குகிறது. தூபியின் கண்கள் புத்தரின் கண்களாக இருக்குமா என்ற ஐயம் கதையைக் கேட்டதும் எழுந்தது. ஜைசிமாவின் கண்களாகக் கூட இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.


அந்த உயரமான தூணைச் சுற்ற் மையத்தில் தூபியும் அதனைச் சுற்றிலும் பழங்காலப் பலகைக் கட்டுமானங்களாய் கடைகள் அமைந்திருந்தன. ஸ்தூபியின் மேற்புறத்தில் தாமரை மகுடமும் இரு ஜோடி கண்களும் அமைந்திருந்தன. அந்த அமைப்பே பழங்கால நகரமொன்றில் நடப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது. ஜெயமோகன் எழுதிய மகாபாரத மீளாக்கமான வெண்முரசில் இவ்வாறு கோட்டையில் நுழைந்தப்பின் பல வகை மக்கள் கூடும் கடைகள், கோவில், சந்தை ஆகியவை அமைந்திருப்பதான சித்திரிப்புகள் வரும். அதைப் போல, கோட்டைக்குள் நுழைந்தவுடன் நினைவுச்சின்னங்கள், மண்டலா ஓவியங்கள், தங்கா ஒவியங்கள் எனப் பலப்பொருட்களை விற்கும் கடைகள் இருந்தன. இடையிடையே சிறிய கோவில்களையும் காண முடிந்தது. மையமாய் அமைந்திருக்கும் தூபிக்குள் நுழைந்தோம். சுற்றுச்சுவர்களுக்குப் புதிதாகப் பூசப்பட்டிருந்த வெள்ளைச் சாயத் தூளிகள் சிதறிக் கிடந்தன. புத்த ஆலயங்களில் வைக்கப்பட்டிருக்கும் புனித வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட பெரிய உருளை ஒன்று மையமாய் இருந்தது. அதைச் சுற்றிலும் சிறிய உருளைகள் வரிசையாக இருந்தன. கோவிலுக்கு வருபவர்கள், எண்ணெய் விளக்கேற்றி செவ்வந்தி பூக்களை நீர்கிண்ணத்தில் வைத்து வழிபட்டனர். பெரிய உருளை அமைந்திருக்கும் அறைக்குச் செல்ல கோகிலா அழைத்தார். இருட்டான அறைக்குள் பிரமாண்டமான உருளை மணி அமைந்திருந்தது. அதற்கு நேர் எதிர்புறத்தில் புத்தர் சிலையொன்று இருந்தது. நின்ற நிலையிலிருந்த சிலையில் மூக்கும் வாயும் வேடிக்கையாக இருந்தன. பெரும்பான்மையான புத்தர் சிலைகளில் மூக்கு, வாய், கண் ஆகியவற்றில் இருக்கும் சிறு பிசிறு சிலையை வேடிக்கையாகக் காட்டிவிடும். அந்தச் சிலையைக் கண்ணாடிப்பெட்டியில் அடைத்து வைத்திருந்தனர். அங்கிருந்து வெளியேறி எண்ணெய் பிசுக்குகள் மிகுந்திருந்த தரையில் நடந்து கோவிலை வலம் வந்தோம். சுற்றிலும் புத்தப் பிக்குகள் அமர்ந்திருந்து புனித நூலிலிருந்து வாக்கியங்களை ஒன்றாக ஓதிக் கொண்டிருந்தனர். புத்தச் சம்ய ஓதுதலைக் கேட்கும் போது வெண்கல நாதம் மெல்லிய ரீங்காரமாய் எழுவதாகத் தோன்றும். பெரிய தூபிக்குக் கண்கள் வரையப்பட்டு எல்லா பக்கமும் திபெத்திய மொழியிலான ஐந்து வண்ணக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் வண்ணம் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் கட்டப்படும் திபெத் பிரார்த்தனை கொடிகளை நேபாளின் பல இடங்களில் பார்த்தேன். அன்னப்பூர்னா மலை அடிவார உச்சியில் கூட கொத்துகளாக இந்தக் கொடிகளே பறக்கவிடப்பட்டிருந்தன. அங்கிருந்து வெளியேறி, எதிரில் இருக்கும் கடைகளைச் சுற்றினோம். பயண ஏற்பாட்டின் போதே, கோகிலவாணி தங்கா கலைக்கூடத்துக்குச் செல்லும் பயணமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். தங்கா கலை என்பது `புத்தக் கருத்துகள், போதிசத்துவர்கள், மண்டலா பாணி ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டவையாகும். 




திபெத்திய வஜ்ராயன புத்தத் தத்துவத்தை ஒட்டிச் செய்யப்படும் தங்கா கலையை குருங், தமங் ஆகிய இரு இனக்குழுவினர் மட்டுமே வரைகின்றனர். இந்தக் கலையை வரைவதில் தேர்ந்தவரான பில்னோட் என்பவரை யுடியுப்பில் அடையாளம் கண்டு அவரிடம் சந்திப்பதற்கான அனுமதியை மிகச் சிரமப்பட்டு கோகிலா பெற்றிருந்தார். நானும் நவீனும் கோகிலா மட்டுமே தங்கா கலைக்கூடத்துக்குச் சென்றோம். கலைக்கூடம் என்பதை விட கலைப்பள்ளி என்று குறிப்பிடுவதே பொருத்தம்.  நாங்கள் சென்றிருந்த நேரம் பில்நோட்டின் கைகளில் ஏற்பட்டிருந்த காயத்துக்காய்ச் சிகிச்சை செய்து கொண்டிருந்தமையால் அவரது தம்பியான டிக்‌ஷன் கலைப்பள்ளியைச் சுற்றிக் காட்டி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். மூன்று மாடி கட்டிடம் முழுமையும் பல அழகான நுட்பமான ஓவிய வேலைப்பாடுகள் மிகுந்த தங்கா, மண்டலா ஓவியங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் பயில் முறை ஓவியர், இடை நிலை ஓவியர், தேர்ந்த ஓவியர் என மூன்று வகையான ஓவியர்களால் வரையப்படுகின்றன. ஓவியரின் தரத்துக்கேற்ப ஓவியத்தின் விலையும் வேறுபடுகிறது. தேர்ந்த ஓவியர் மட்டுமே ஓவியத்தில் கையொப்பமிட அனுமதிக்கப்படுகிறார். இரண்டாவது மாடியில் பயில்முறை மாணவர்கள் சிலர் வரைந்து கொண்டிருந்தனர். டிக்ஷன் அவர்களைக் காட்டி எங்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கூட கண்டுகொள்ளாமல் தங்கள் ஓவியங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அருகில் முடிக்கப்படாத புத்தரின் ஓவியத்தில் அதன் அந்திப் பொழுது பின்னணியை மட்டும் இரண்டு நாட்களாக வரைந்து முடித்தேன் என்று சொன்னதும் வியப்பாக இருந்தது.



நாற்பதாண்டுகளாக ஓவியங்கள் வரையும் டிக்ஷனின் தந்தையான பாபுலால் லாமாவின் கையொப்பமே நிறைய ஓவியங்களில் இருந்தது. மூன்றாவது மாடியில் மொட்டைக்கழுத்து சட்டையுடன் சம்மணமிட்டு ஓவியம் வரைந்து கொண்டிருந்தவர்தான் பாபுலால் என்றார் டிக்ஷன். எங்களைத் தலை நிமிர்த்திப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வரையத் தொடங்கினார் பாபுலால். அவரின் தலைக்குமேல் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ‘ இந்த மாதிரி வரையவறங்க பெரும்பாலும் கண் பார்வை பாதிக்கப்பட்டுத்தான் இறந்து போவாங்க எனக் கோகிலா காதில் கிசுகிசுத்தார். நவீனுக்கும் கோகிலாவுக்கும் தாரா தேவி ஓவியங்களை ரசிப்பதில் தீராக்காதல் இருந்ததை இந்தப் பயணத்தில் பல இடங்களில் பார்த்தேன்.



இந்த ஓவியங்கள் வரைவதில் ஓவியர்களுக்குத் தங்கள் தனித்தன்மையைக் காட்ட முடியுமா என்ற கேள்விக்கு டிக்ஷன் மிகக் கண்டிப்பாக இல்லையெனச் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். ஒவ்வொரு ஓவியமும் புத்தச் சமயக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. இதற்காகப் பத்தாண்டுகள் தத்துவம் பயில்கிறோம் என்றார். இதே மாதிரியாக இருக்கும் பள்ளிகளுக்கிடையிலான வேறுபாட்டை எவ்வாறு உணர்வது என்ற கேள்விக்கு பெருமளவில் வேறுபாடுகள் இருக்காது என்றார். ஓவியங்களின் பின்னணி நிறத்தில் ஏதாவது வித்தியாசத்தைப் பார்க்கலாமா என்ற கேள்விக்கும் இல்லையெனப் பதிலளிக்க வந்தவர் முடிவை மாற்றி ஆமாம் என்றார். சமயத்துடன் தொடர்புடையதால் இதனுடைய தனித்தன்மையென ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லத் தயங்குகிறார் என நினைத்தேன். அடுத்ததாகக் காலச்சக்கரா ஓவியங்களைக் காட்டினார். தத்துவார்த்தமாக ஆக்கப்பட்ட ஓவியங்களுக்கான நல்ல எடுத்துக்காட்டு காலச்சக்கரா ஓவியங்கள் (Wheel of Life). திபெத்திய புத்தச் சமயத் தலைவராகக் கருதப்படும் தலாய் லாமா முன்வைக்கும் கருத்துகளுக்கேற்ப வரையப்படும் ஓவியமே காலச்சக்கரம். ஒவ்வொரு தலாய் லாமாக்களும் தங்கள் பதவியேற்பின் போது ஒரு புதிய தங்கா கலை முறையொட்டியக் காலச்சக்கரத்தை வரைந்து அதற்கான தத்துவத்தை முன்வைப்பார்கள். தத்துவமும் கலையும் எது முதலில் உருவானது என அறிய முடியாத கலை வெளிப்பாடாக தங்கா ஒவியங்கள் தெரிந்தன.


அந்த ஓவியங்களின் நுட்பங்களை டிக்ஷன் விளக்கிக் கொண்டிருந்தார். ஆறு வட்டங்களிலான சக்கரத்தின் உள்ளிருக்கும் வட்டத்தின் சிந்தனை, பேச்சு, உணர்ச்சி என மூன்று விட்டங்களும் வெளி  வட்டத்தில் நான்கு விட்டங்களாகப் பிரித்து அதில் காலை, பகல், அந்தி, இரவு என நான்கு பொழுதுகளும் காட்டப்படுகின்றன. அதற்கு வெளியே பஞ்சபூதங்கள், வெளிவட்டத்தில் பிரபஞ்சம் என மனிதன் உள்ளிருந்து மலர்வதைப் போலவும் வெளியிருந்து இதழ்கள் மூடிக் கொள்ளும் மலரைப் போலவும் ஒரே சமயத்தில் ஓவியங்கள் தெரிந்தன. அருகில் இருந்த பூதக்கண்ணாடியைக் கொண்டு ஓவியத்தைப் பார்க்கும் போது வெவ்வேறு வண்ண இணைவுகள் உருவாக்கியிருக்கும் நுட்பத்தை அருகிலிருந்து பார்ப்பது அழகாக இருந்தது.  கோகிலா பயில்முறை மாணவர் வரைந்த ஓவியமொன்றை வாங்கினார். கறுப்பு நிறப் பின்னணியில் தங்கக் கலவைச் சேர்ந்த வண்ணத்தால் வரையப்பட்ட காலச்சக்கரம். அழகாக இருந்தது.


மற்றவர்கள் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டும் பொருட்களை வாங்கி கொண்டும் இருந்தனர். அதை முடித்து, அவர்கள் பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றார்கள். நாங்கள் பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றிருந்ததால், நபராஜைச் சந்திக்கும் முடிவெடுத்திருந்தோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப