முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

அதற்கடுத்து இரு நேபாளப் பெண்கள் மேடையிலேறி நேபாளின் நான்கு முதன்மை இனக்குழுக்களின் நடனங்களை ஆடத்தொடங்கினர். முதலில் நேவார் ,ஷெர்பா, டிமால் என மூன்று இனக்குழு நடனமும் ஒரு நாட்டுப்புற நடனமும் ஆடப்பட்டது.  நேவார் நடனத்தின் போது இரு பெண்களும் கெண்டியிலிருந்து நீரை ஊற்றுவதான பாவனைகள் அதிகம் இருந்தன. விருந்தினர்களை வரவேற்கும் பாணியிலான நடனமாக இருக்கலாம் என்று நினைத்தேன். அடுத்ததாக, ஷெர்பா நடனம் ஆடப்பட்டது. கூர்க்கா இனக்குழுவைப் போலவே உலகம் முழுவதும் ஷெர்பாவும் அறியப்பட்ட இனக்குழு. எவரெஸ்ட் மலையேற்றத்துக்குப் பெரிதும் துணையாக இருப்பவர்கள் ஷெர்ப்பாக்களே. நீண்டகாலமாக மலைப்பகுதியில் வாழ்வதால், மரபணுவாகவே உயிர்வளி குறைந்த உயரமான பகுதிகளிலும் நன்கு சுவாசிக்கும் ஆற்றலை ஷெர்பா மக்கள் பெற்றிருக்கின்றனர். கைகளை அசைத்தும் உடலைத் தாழ்த்தியும் ஷெர்பா மக்களின் நடனம் அமைந்திருந்தது, அதற்கடுத்து டிமல் நடனம் ஆடப்பட்டது, மூன்று நடனங்களிலும் பிரதானமாக கையசைவுகளும் உடலசைவுகளுமே இருந்தன. காற்றோட்டம் மிகுந்த பகுதியென்பதால், அதற்கேற்பவே நடனங்களும் காற்றுக்கு வளைந்து கொடுத்தாடுவதாகவே இருந்தன. அந்தந்தப் பகுதிகளின் தட்பவெப்பம், நில அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கேற்பவே நடனமும் அமைகிறதென கோகிலா குறிப்பிட்டிருந்தார். அதனால் தான் வெப்பநிலப்பகுதியில் வாழ்ந்த நமக்கு சற்றே இறுகி இளகிப் போகும் பரத நாட்டிய முத்திரைகளும் அரைமண்டி நிலையும் அதிகமாக இருக்கின்றன போலும். இறுதியாக நடந்த நாட்டுப்புற நடனத்தில் நண்பர்களும் பங்கேற்றனர். என்னையும் நடனத்தில் இணைத்துக் கொள்ள முன்னரே நடந்த முயற்சியைப் போல இதுவும் தோல்வி கண்டது.

ஷெர்பா நடனம்


                                                         நேவார் நடனம்

நாட்டுப்புற நடனம்
ஒவ்வொரு நடனம் முடிந்ததும் அவர்கள் ஆடிய இசை மேட்டை நன்கு நினைவில் வைத்து அதற்கு வரிகளை இட்டு நிரப்பி எங்களுடன் வந்திருந்த கந்தசாமி பாடலும் நடனமும் ஆடிக் காட்டினார். ஆறாம் படிவ ஆசிரியரான கந்தசாமி சென்றாண்டு ஓய்வு பெற்றார். யாத்ரா எனப்படும் கூட்டுறவுக்கழகத்தின் துணைத்தலைவராக இருக்கின்றார். இந்தியாவில் இருக்கும் இந்துக்களின் புனிதத்தலங்களுக்கு அழைத்துச் செல்லும் பயணத்தைக் கூட்டுறவு முறையில் பணம் செலுத்தி யாத்ரா கூட்டுறவுக்கழகம் மூலம் செய்கின்றனர். பார்ப்பதற்குக் கண்டிப்பானவராகத் தெரிந்தாலும் வேடிக்கைப்பேச்சும் கடைசி வரை நின்று உதவி செய்யும் குணம் கொண்டவராகவும் இருந்தார்.

அங்கிருந்து தங்கும் விடுதிக்குச் சென்று பொருட்களைப் பிரித்துப் பைகளில் அடுக்கத் தொடங்கினோம். காலையிலெழுந்ததும் தங்கும் விடுதியிலே பசியாறல் முடித்துவிட்டு பேருந்தில் ஏறினோம். எங்களுடன் பயண வழிகாட்டியாக கணேஷும் இணைந்து கொண்டார். பேருந்து நால்முனை சந்தில் இன்னொரு குரங்குதாவலைச் செய்து பயணத்தைத் தொடர்ந்தது. வழியில் இருக்கும் பல பகுதிகளைச் சுட்டிக்காட்டி எங்களின் கேள்விகளுக்கும் கணேஷ் பதிலளித்து வந்தார். நேபாள் முடியாட்சியிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பி சில ஆண்டுகளே ஆகியிருப்பதால் உள்ளூர மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் போராட்டம், தேர்தலரசியல் போன்றவற்றிலிருந்து பெறுவது குறித்து இன்னுமே தெளிவில்லாமல் இருந்தது. காலையில் தங்கும் விடுதியிலிருந்த ஆங்கில நாளிதழில் நேபாளப் பிரதமரின் இந்தியப் பயணம் தோல்வி என எதிர்கட்சிகளும் ஆய்வாளர்களும் எழுதியிருந்த செய்திக்குறிப்பைப் படித்திருந்தேன். அதைக் குறித்து, பயண வழிகாட்டிகளில் ஒருவரான அபிநாஷிடம் கேட்டேன். இந்தியா நேபாளின் சில பகுதிகள் மீதான உரிமைக் கோரலை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்து வருகிறது. அகண்ட் பாரத் என்ற பெயரில் வெளியீடப்பட்ட வரைபடத்தில் நேபாளின் கோரபாணி போன்ற பகுதிகல் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், நேபாளின் பிறபகுதிகளில் அமைந்திருக்கும் அனைத்துலக விமான நிலையங்களுக்குச் செல்வதற்கான வான்வழிப்பாதைகள் இந்தியாவை நோக்கியே அமைந்திருக்கின்றன. அந்த வான்வழிப் பாதையை விமானங்கள் பயன்படுத்துவதற்கு இந்தியா இன்றளவும் அனுமதிக்காமல் இருக்கிறது. உள்நாட்டில் சீன நாட்டு நிறுவனங்களின் முதலீட்டுடன் தொடங்கப்பட்டிருக்கும் மின் ஆலைகளிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கும் இந்தியா முனைப்பு காட்டவில்லை. அதனால், இங்குள்ளவர்களுக்கு இந்தியா மீது சற்றே வெறுப்பு இருக்கிறதெனக் குறிப்பிட்டார். அதையேதான் கணேஷும் சொன்னார். அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அரசமாளிகை, ராணுவத்தளம், அதிபர் மாளிகை ஆகியவற்றைப் பயணத்தின் போது காட்டி வந்தார்.


அரைமணிநேரப் பயணத்துக்குப் பின் புதனில்காந்தா திருமால் கோவிலுக்குச் சென்றோம். புதனில்காந்தா என்பது நீல நிறத் தொண்டை எனும் பொருள் தரும் நேபாளச் சொல். பாற்கடலில் வெளிப்பட்ட நஞ்சைத் தன் தொண்டையில் அடக்கியதால் சிவன் நீலகண்டன் என்றும் அறியப்படுகின்றார் என்பது பலரும் அறிந்த புராணக்கதை. அதை அருந்தி முடித்த பின்னர் அதன் நச்சுத்தாக்கத்தை தீர்க்க சிவன் புதனில்காந்தா கோவில் அமைந்திருக்கும் பகுதியில் ஈட்டி எறிந்து ஏரியை உருவாக்கி நீரருந்தினார் என்று கோவில் புராணம் சொல்கிறது. அந்த ஏரி நீர்தான் இப்போது தெப்பக்குளமாக மாறி அதில் முழு சயன நிலையில் திருமால் ஆதிசேடன் மேல் நீரில் மிதப்பதைப் போன்ற தோற்றத்துடன் இருக்கிறார் என சொல்லப்படுகிறது. எரிமலையிலிருக்கும் பாறையிலிருந்து திருமால் சிலை செய்யப்பட்டிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. கன்னங்கரிய நிறத்தில் சிலை இருந்தது. சிலையின் மேல் மஞ்சள் நிறத்துணிகள் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. குளத்தருகே இருந்த அரசமரத்திலிருந்து மஞ்சள் துணி மீது பாய்ந்து குரங்குகள் தாவிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு தாவலுக்கும் துணி அதிர்ந்து திருமாலைத் தொட்டு விடுவதைப் போல கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. சிலை அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றிலும் வேலியிடப்பட்டிருந்தது. சிலைக்கருகில் செல்வதற்கு வரிசையில் நின்று நடந்தோம். நவீன் காலையிலே வயிற்று உப்புசம் காரணமாய் வரிசையில் நிற்காமல் சிலையை வேலியிலிருந்தே பார்த்து வந்தார். சிலைக்கருகில் நின்று படமெடுக்க அனுமதி தரப்படவில்லை. சிலைக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பாதங்களைத் தொட்டுப் பணிந்து சென்றோம். சிலையைச் சுற்றிலும் புறாக்கள் வீசப்பட்டிருந்த மலர்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொத்தித் தின்றுக் கொண்டிருந்தன. மேலே குரங்குகள் திருமாலைத் தொட்டு விட எண்ணத் தாவியும் சிலை மீதமர்ந்து புறாக்கள் அலகுகளால் சிலையை ஓயாமல் கொத்தியும் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வந்தோம்.  திருமாலைச் சுற்றிலும் ஓயாத உயிரிக்கம் ஒன்று நடந்து வருவதாக நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து வந்தவுடன் கோவிலைச் சுற்றிப் பார்த்தேன்.. சுற்றிலும் செங்கற்கட்டுமானத்தால் ஆன கோவில்கள் சூழ இருந்தது. கோவிலுக்கு வலப்புறம் வேதபாடசாலை ஒன்றிருந்தது. அங்கிருந்த இளம் மாணவர்கள் முன் முடி முழுமையாக மழிக்கப்பட்டு குடுமி மட்டும் வைத்திருந்தனர். காவியுடை உடுத்திக் கொண்டு அருகிலிருந்த வேதம் ஓதும் கொட்டகையில் அமர்ந்து வேள்விகுண்டத்தின் முன்னமர்ந்து வேதம் ஓதினர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் நல்வாழ்வை வேண்டி விடாமல் நடத்தப்படும் வேள்வியில் காலையிலிருந்து பலமுறை சொன்ன மந்திரங்களையே மாணவர்கள் உச்சரித்து வருகின்றனர். அவர்களில் முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களே மந்திரங்களை உரத்து உச்சரித்தனர். பின் வரிசை மாணவர்கள் தூக்கத்தின் அடையாளமாய்  கொட்டாவி எழுப்பி வெறுமனே எங்களைப் பார்த்துக் கொண்டு ஒரிரு சொற்களை உச்சரித்தனர். அந்தக் கொட்டகைக்கு ஆள் பிடித்து வரும் பொறுப்பை ஏற்றிருந்த பிராமணர் மலேசியாவில் பணியாற்றியவர் என்பதால் மலாய் மொழியில் எங்களை அழைத்து உள்ளே அமர வைத்தார். ஒரே வரிகளை இசைமையுடன் பலர் ஓதுதலைக் கேட்கும் போது அந்தச் சூழலில் இனம் புரியாத பரவசம் மனதில் தொற்றியிருந்தது. அங்கிருந்து வெளியேறும் போது, மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் பணத்துக்காக சிறுதொகையைக் கொடுத்துவிட்டு வந்தோம்.  எங்களுக்கு முன்னர் கொட்டகையிலிருந்து வெளியேறிய சடைமுடியும் காவுயுடையும் ருத்திராட்ச மாலைகள், தண்டும் சகிதமாய் இருந்தவர் மலேசியாவில் இருந்து வந்த சாமியார் என பிராமணர் குறிப்பிட்டார். அவரைச் சந்தித்து கூட்டத்திலிருந்தவர்கள் ஆசிபெற்றனர்.




லக்கமரியும் ஆதிசேடனில் சயன நிலையிலிருக்கும் திருமாலும்

காவடி எடுத்தல், விரதம் ஆகியவை இங்கில்லை. இங்கிருப்பது வேறு வகையான வழிபாடு. அதுதான் சரியென்பதைப் போன்ற தொனியுடன் சாமி பேசினார். கடும் நோன்புகள், நேர்த்திக்கடன்கள் ஆகியவற்றை விட்டு வழிபாடு மேற்கொள்வதென்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்பதால் சாமி அதிலிருந்து மனதளவிலும் இதற்காக நீண்டப் பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டேன். கோவில் வளாகத்தில் இருந்த இருந்த கடையொன்றில் Lakhamri எனப்படும் நேபாளப் பலகாரம் ஒன்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். திருமால் படுத்திருந்த சேடன் முறுகி இருந்ததோ அதைப் போன்ற முறுகலுடன் இருந்த பலகாரத்தின் மீது சீனி பாகு தூவப்பட்டிருக்க வேண்டும். மறுநாள் எப்படியும் மலேசியாவுக்குச் சென்றுவிடலாம் என்பதால் துணிச்சலாக லக்காமரியையும் நேபாள டீயையும் வாங்கி சாப்பிடத் தொடங்கினோம். லாக்கமரியை அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிட்டு உண்டனர். எதிரில் மலேசியாவிலிருந்த பிராமணர் புதியவர்களை வேதப்பாடசாலைக்கு அழைத்துச் செல்ல ஆர்வத்துடன் ஆள் பிடித்துக் கொண்டிருந்தார்.


அந்தக் கோவிலில் இருந்து வெளியேறி முச்சந்தியில் பேருந்துக்குக் காத்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். இதற்கடுத்து, குமாரி கோவிலுக்குச் செல்வதுதான் எங்களது திட்டம். இதற்கான திட்டத்தையும் கோகிலாதான் ஒருங்கிணைத்திருந்தார். நேற்றையிலிருந்து கோகிலாவிடம் நவீன் பலமுறை திட்டம் குறித்து நினைவூட்டியும் கேட்டும் வந்தார். காலையில் கூட தாமதமானால் தனியே சென்றுவிட்டு வரலாம் என்றார். எனக்கும் அந்தக் கோவிலின் முக்கியத்துவம் புரிந்திருந்ததால் அதனைத் தவறவிடக்கூடாதென்று நினைத்தேன். பேருந்துக்கான காத்திருப்பு நேரம் அதிகமாகவே நவீன் பதற்றத்துடன் இருந்தார். நண்பர்கள் அருகிலிருக்கும் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கச் சென்றார்கள். காத்திருப்பு நேரம் அதிகமாகக் கடைகளில் கூட்டம் அதிகமாகியது. நவீனும் இன்னும் பதற்றத்தை அடைந்து தனியே செல்ல முடியுமா எனச் சிந்தித்துக் கொண்டிருந்தார். எங்களை அழைத்து வந்த கணேஷ் இன்னும் சில நிமிடங்களில் பேருந்து விடும். நாம் தவறாமல் குமாரி கோவிலுக்குச் சென்று குமாரி தேவியின் சில நொடி தோன்றலைப் பார்த்து விடுவோம் என்று சொன்னார். பேருந்தில் ஏறி பின்னிருக்கையில் நானும் நவீனும் அமர்ந்தோம். நேரத்தைப் பார்த்துக் கொண்டு எதையோ ஆழமாக யோசித்தவாறிருந்த நவீன் கொஞ்ச நேரத்தில் இளக தொடங்கினார். குமாரி கோவிலைச் சென்றடைந்திருந்த போது முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...