முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளந்தமிழன் சிறுகதைகள்- கற்பிதங்களின் பிரதிபலிப்பு

 எழுத்தாளர் இளந்தமிழனின் 45 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை வாசித்தேன். 1978 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட 45 கதைகள் கொண்ட தொகுப்பு முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றிருக்கிறது.

சிறுகதைகளின் பின்னணி

இளந்தமிழனின் முதல் சிறுகதை 1978 ஆம் ஆண்டு வானம்பாடி இதழில் வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 1980 களின் இறுதி வரையிலும் தொடர்ந்தாற்போல வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் ஓசை என மலேசியாவின் முன்னணி வார,மாத இதழ்களில் இளந்தமிழனின் கதைகள் வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய கதைகளுக்கான உடனடி எதிர்வினைகள் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை கதைகளின் தொடக்கத்தில் அளிக்கும் குறிப்புகளின் வாயிலாக அறிய முடிகிறது. தொடக்கக்காலச் சிறுகதைகளில் கலகக்கார எழுத்தாளராகச் சமூக விமர்சனத்தை முன்வைக்கும் கதைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளை வாசித்து வாசகர்கள் காதல் கதைகளை எழுதத்தெரியாதா எனக் கேட்க அதனையும் எழுதுகிறார். வானம்பாடி இதழில் சாதியின் கார்ணமாய்த் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகச்சூழலை நேரடியாகக் கண்டிக்கும் தொனியில் எழுதப்பட்ட புனிதங்கள் புரையோடுவதில்லை என்ற கதை  5000 க்கும் மேற்பட்ட வாசகர்களால் சிறந்த கதையெனத் தெரிவு செய்யப்பட்ட விபரத்தையும் கதையின் பின்னணியில் இணைக்கிறார். இப்படியாகக் கதைகள் பெறுகின்ற உடனடி வாசக எதிர்வினைகள் அவருடைய படைப்புலகை நேரடியாகவே தாக்கம் செலுத்த அனுமதித்திருக்கிறார் என்றே கதைகளை வாசித்தப் பின்னர் சொல்ல முடிகிறது.

பிறகு, சமூகச்சூழல், சாதி, மதுவுக்கு அடிமையாதல், சிவப்பு அடையாள அட்டைச் சிக்கல், காதல் தோல்வி, அரசியல் சூழ்ச்சி, தமிழ்ப்பள்ளியின் அவலச் சூழல் என அவர் கைகொண்ட கருக்கள் எல்லாமே அன்றைய சமூக அரசியல், இலக்கியத்தளத்தில் பரபரப்பான பேசுபொருள்கள். இம்மாதிரியான சமூகப்பேசுபொருட்களின் மீது கதையை உருவாக்குவது உடனடியாக ஒருவித வாசகக்கவனத்தை ஏற்படுத்தும். அத்துடன் வணிக இலக்கியத்துக்கு இம்மாதிரியான பரபரப்பு பயன்பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. 

சிறுகதை வடிவம்

இளந்தமிழனின்  கதைகள் உரையாடல், சம்பவச்சித்தரிப்பு, அனுபவங்கள் ஆகிய வடிவங்களிலே அமைந்திருக்கின்றன.  கதையாசிரியரே பாத்திரமாக மாறி அல்லது வேறொரு பாத்திரம் தன்னைச் சுற்றிலும் நடக்கும் அனுபவங்களையும் சம்பவங்களையும் சொல்வதாகவே கதைகள்  அமைந்திருக்கின்றன. அவை சம்பவங்கள், அனுபவங்கள்,அல்லது மரபான முறையில் சொல்லப்படுவதால் கதை எனும் வடிவத்தைச் சேர்ந்தவை. 

 மனிதச்சுவடுகள் எனும் சிறுகதையில் மன நிலை பிறழ்ந்த குட்டாறு என்ற இளைஞன் கோவிலில் அடைக்கலமாகியிருக்கிறான். கோவிலில் பக்தி என்ற பெயரில் நடக்கும் போலித்தனங்களையும் மூடநம்பிக்கைகளையும் பகடி கலந்த தொனியில் விமர்சிக்கப்படுகிறது. ஒரு நாள் கோவில் உண்டியலைக் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களால் குட்டாறு தாக்கப்படுகிறான். மூர்ச்சையாகிக் கிடப்பவனின் புரியாத மொழியைக் கொண்டு கோவிலில் வீற்றிருக்கும் சாமித்தான் அவனை அடித்திருக்கிறது எனப் பக்தர்கள் தவறாக எண்ணுகின்றனர். கண்ணை மறைக்கும் பக்தி அறியாமையில் ஆழ்த்தும் என்ற கருத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு கதையைக் கட்டமைத்திருக்கிறார். கதைக்குள் இருக்கும் ஆசிரியரின் உரத்த குரல் பாத்திரங்களிலோ சம்பவங்களிலோ உயிர்ப்பை உருவாக்காமல் போய்விடுகிறது. 

இளந்தமிழனின் கதைகளின் திருப்பம் வாசகனைச் சோர்வுக்குட்படுத்தவையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, சில்மிஷம் எனும் கதை ரயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவன் தன்னுடைய காதலைக் காதலியிடம் சொல்கிறான். கவிதை, காதல் அனுபவம் எனச் செல்லும் கதையின் இறுதியில் முன்னரே திருமணமானவன் அவன் என்பதை அவளும் அறிந்தே இருப்பதால் அதனைப் பொருட்படுத்தாமல் போய்விடுகிறாள். திருப்பமும் முடிவும் ஒன்றாகவே அமைந்த கதைகளில் எளிய திடுக்கிடல் தருணங்களுடன் கதைகள் மூடிக்கொள்கிறது. காதல் குற்றவாளிகள் எனும் கதை காதலித்து ஏமாற்றப்படுகின்ற திருநங்கை ஏமாற்றியவனைக் கொன்று சிங்கப்பூருக்குச் செல்வதாக அமைந்திருக்கிறது. திருநங்கையின் புலம்பல், குற்றம் ஆகியவைச் சொல்லப்பட்டதும் கதைசொல்லியே காவல் துறை அதிகாரியாக அறிமுகப்படுத்தப்பட்டுக் குற்றவாளியைக் கைது செய்கிறார். திரைப்படங்களில் இறுதிக்காட்சியில் சுபம் போட்டு முடிக்க வில்லன் முன் துப்பாக்கியை நீட்டும் காவல்துறை அதிகாரிகளின் வருகை காட்சியை ஒத்ததாகவே கதையின் முடிவு அமைந்திருந்தது. தான் செய்த கொலையை முன்பின் அறிந்திராத நபரிடம் சொல்லிப் பிடிபடுவதென்பது வணிகச்சினிமாவில் கூட சில நம்பகமான ஏற்புகள், அதிரடியான காட்சிகளால் சொல்லப்படும். திருநங்கை உடல், உள ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு ஏமாற்றப்படுவதைக் கதைக்குள் ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்ற சுவாரசியத்துடன் கதை வாசிக்க இறுதியில் திருப்பம் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

அழகியல்

இளந்தமிழனின் தொடக்கக்கால கதைகளில் இருக்கும் பலமாக  மொழியையும் சித்தரிப்புகளும் ஒரு சில கதைகளில் நன்றாகக் கூடி வந்திருப்பதைக் குறிப்பிடலாம். அதில் குறிப்பாக, நாவும் மனதும் என்ற கதையில் எப்பொழுதும் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியைச் சந்தேகப்பட்டு பேசுகிறான். அவர்கள் இருவருக்கிடையிலான உரையாடல் மெல்ல சமரசம் கொள்வதும் அடுத்த சண்டை தொடங்குவதுமாய் சுவாரசியமாக அமைந்திருக்கிறது. அவளை அடிக்கடி நோட்டம் விடுவதாகக் கணவன் சந்தேகப்படுகிற கிராணியைக் குறிப்பிட்டு கேட்க மனைவி குள்ளி //ரொம்ப நல்லதா போச்சு நாளைக்கே வீட்டுக்கு வரச் சொல்லட்டுமா// என்கிறாள். மனைவியின் குரல் ஓங்குகின்ற போது கணவன் சற்றே குரலைத் தாழ்த்துவதுமாய் உரையாடலில் இருக்கும் மன ஊடாட்டம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

நம்பிக்கை சிறுகதையில் தோட்டத்தில் வீடு வீடாய்ச் சென்று பிச்சையெடுக்கும் கிழவியைப் பற்றிய சித்திரிப்பும் சிறப்பாகவே இருந்தது. தோட்டங்களில் இருக்கும் எலுமிச்சை போன்றவற்றைப் பறித்து அதை வீடுகளில் விற்றும் வாங்கிய அரிசிப்பிச்சையை கடையில் மறுபடியும் விற்றும் பிழைப்பு நடத்துகிறாள். அதற்காகத் தான் படுகிற பாடுகளை வீடுகளில் பரிதாபமாய் சொல்லிப் பணம் வாங்குகிறாள். அப்படி வாங்கிய பணத்தை எடுத்துச் சென்று கள் கடையில் கொடுத்து கள் அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்கிறாள். இந்தக் கதைகளில் பாத்திரங்களின் வார்ப்பில் உரையாடலும் சித்திரிப்பும் நம்பகத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், கதையாக அவற்றை மதிப்பீடு செய்கின்ற போது அதனை வேறு வகையிலே பார்க்க வேண்டியிருக்கிறது. குடிகார கணவன் மனைவியின் நடத்தை மீது நம்பிக்கை உள்ளவந்தான் என்பதை அவளிடம் தவறாக நடக்க முயன்ற விருந்தினரை வெளியே விரட்டியடிக்கும் காட்சியைக் கதையின் இறுதியில் அமைத்திருக்கிறார். அதைப் போல குடிகாரக்கிழவி  அடைக்கலம் கேட்டு வரும் இன்னொரு பிச்சைக்கார கிழவனைத் திருத்துவதில் முடிவு அமைக்கின்றார். இரண்டுமே பாத்திரங்களை நல்லவர்களாகக் காட்ட வேண்டுமென்ற முனைப்புடன் துருத்தலான நற்செயல்களுடன் போதனைக் கதைகளாக மாறிவிடுகின்றன.

பொதுப்புத்தி/ சமூகச்சூழலின் பிரதிநிதி

போலே ஜாடி மோட்டோ மெக்கானிக்கலா என்ற கதையில் இடைநிலைப்பள்ளியில் புதிதாக வேலைக்குச் சேரும் இளம் ஆசிரியர் வகுப்பு வேளைகளில் தமிழ் மாணவர்களிடம் உரையாடுகிறார். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் கடைநிலைப்பணிகளுக்குச் சேர்வதற்கான ஆசையை வெளிப்படுத்துகின்றனர்; சிலர் எந்த ஆசையுமற்று இருக்கின்றனர்.  சீன மாணவர்களில் ஒருவன் மோட்டார் பழுதுபார்க்கும் வேலைக்குச் செல்வேன் என உறுதியுடன் இருப்பதாகக் கதை முடிகிறது. இந்தக் கதை ஆசிரியரின் நேரடியான ஆசிரியப் பணி அனுபவம் அல்லது கேட்க நேர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.  தமிழ் மாணவர்கள் தொழிற்கல்வியில் நாட்டமில்லாமல் கடைநிலைப்பணிக்குச் செல்வதும் சீன மாணவர்கள் குடும்பத் தொழிலைக் கற்றுக்கொண்டு வியாபாரம் செய்வதுமான சராசரியான சமூகச்சூழலை கருத்தில் கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. 

தமிழ் மாணவன் ஏன் கடைநிலைப்பணிகளில் ஆர்வம் காட்டுகிறான். சீன மாணவனுக்கு ஏன் குடும்பத் தொழில் முக்கியமானதாகிறது என்ற கேள்விக்குக் கதையில் பதில் சொல்லப்படவில்லை. அவர்களின் இயல்புகள் சமூகச்சூழலுக்கு மாறாக இருக்கக்கூடாதா என்ற கேள்வியும் கதையில் எழுகிறது. 

பெயர், இயல்புகள் என்று எதுவுமே சொல்லப்படாத இரு மாணவர்கள் சராசரியான சமூகச்சூழலுக்கான பிரதிநிதிகளாகப் படைக்கப்படுகின்றனர். இப்படியாகப் பொதுபுத்தியில் உறைந்திருக்கும் சமூகச்சூழலை அப்படியே கதைக்குள் எவ்வித மேலதிக விசாரங்களும் இன்றியே ஆசிரியர் படைக்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்த திருப்பங்கள்

வெளிச்சம் எனும் கதையில் சிவப்பு அடையாள அட்டை கொண்டிருப்பதால் தோட்டத்தில் பணியாற்ற தண்டலின் வற்புறுத்தலுக்கிணங்கி அவருடன் உறவு கொண்டு இரவில் வீடு திரும்புகிறாள். அங்கே அவளது மகளும் இன்னொருவருடன் உறவு கொண்டு விட்டு வீடு திரும்புகிறாள் எனக் கதை முடிகிறது. கதையின் திருப்பத்தில் நிகழும் இந்த முரண்பாடென்பது கதையின் இறுதியுடன் மட்டுமே தொடர்புடையது. கதைக்குள் அவளது மகள் என்னவாக இருந்தாள் என்பதோ, வறுமை, உள்ள உணர்வு, மகளின் நிலை எதுவுமின்றி கதை நேராக வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்ற வகையில் அவளுடைய பாலியல் பிறழ்வை மட்டுமே முன்வைத்துப் பேசுகிறது.

சிந்தனை/ தருக்க அபத்தம்

இரண்டும் இரண்டும் ஏழு என்ற கதையைக் குறிப்பிட வேண்டும். அந்தக் கதையில் தன் கல்லூரித் தோழியை அழகற்ற இளைஞன் காதலிக்கிறான். தன்னுடைய காதலை அவள் மறுத்துவிடுவாள் என எண்ணுகிறான். அவளைக் காதலிக்க சரியான வழியாக குளோரபாம் மருந்து தெளிக்கப்பட்ட கைகுட்டையால் அவளை மயக்கமுறச் செய்து கற்பழிக்கிறான். பின்னர் நண்பர்கள் நையப்புடைத்தப்பின் உண்மையைச் சொல்கிறான். நாயகியும் அவனிடம் காதல் தெரிவிக்க எண்ணம் கொண்டிருந்தாள் என்று கதை முடிகிறது. காதலியைக் கற்பழிக்கும் அளவு துணிவு கொண்டவனால் அதே துணிவுடன் காதலைச் சொல்ல முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தமாகக் கதையில் இருக்கிறது. சிந்தனை அடிப்படையில் மிகுந்த ஒவ்வாமையைத் தரக்கூடிய கதையாக இவற்றைக் காண முடிகிறது. இந்த மாதிரியான கதைகளில் பெண்களின் கற்பை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகள் பலவும் சிந்தனை அபத்தம் கொண்டவை. கற்பும் கன்னிமையும் கதையில் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஆணாசிரியர் சக பெண்ணாசிரியரைக் காதலிக்கிறான். அவள் அவனைக் காதலிக்காமல் மறுக்கிறாள். தன் கையை நெருப்பால் சுட்டுக்கொண்டு காதல் மறுப்புக்கான காரணத்தைக் குறிப்பிடுகிறான். அப்படியான மறுப்புக்குக் காரணமாக தன்னுடைய கல்லூரி வாழ்வில் கற்பிழந்ததைக் குறிப்பிடுகிறாள். அதனைப் பெரிதுபடுத்தாமல் நாயகன் அவளை மணம்புரிய ஒப்புகிறான். காதலை ஏற்றுக்கொள்ளச் செய்யும் அவன் செய்யும் செயல்களின் வன்முறை ஒருபுறம் இந்தக் கதையின் வெளிப்படுத்தும் சிந்தனை மேல் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது, இன்னொரு புறத்தில், கற்பு தவறியதைக் குற்றவுணர்வு எண்ணுபவளை ஆண் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை என்பது ஒவ்வாத சிந்தனை.  உண்மை சுடும் கதையில் தன் மீது கணவனுக்குக் காதல் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க தனக்கு தானே வேறொருவர் பெயரில் காதல் கடிதம் எழுதிக் கொள்கிறாள் மனைவி. காதல் கடிதம் கண்டு கணவன் சந்தேகப்படும் போது உண்மையைச் சொல்கிறாள் மனைவி. இதுவுமே அபத்தமான பரிசோதனை வாயிலாகக் காதலை நிருபிப்பது அதனால் கணவனுக்கு ஏற்படும் மன உளைச்சல் என அபத்தத்தைச் சொல்லக்கூடியது.

தொகுப்பில் இருக்கும் காலத்தால் பிந்தைய சிறுகதையான இருவேறு சிறுகதையை மிக எளிமையாக இறப்புகளை நகர நவீனச்சூழலும் தோட்டப்புறச்சூழலும் அணுகிய விதத்தின் முரணைக் காட்டும் கதையாகச் சொல்லலாம். அந்த முரண்பாட்டின் மூலம், தோட்டப்புறச்சூழலில் இன்னும் சமூக இணக்கம் இருந்ததைக் காட்டுவதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. அதற்காக அந்தச் சூழலில் தோட்டப்புற மனிதர்கள் பேசும் சொற்கள், உடனடியாகக் கூடி வேலைகளைச் செய்வது நகரத்தில் யாரின் துணையின்றி சடங்காகச் செய்வது என இரண்டு சூழல் முரண்பாடுகளை மட்டுமே காட்டுகிறார். இந்த முரண்பாடுகள் முன்வைக்கும் சூழல் சரியானவைதானா…தோட்டமென்பது மேன்மையான மனித எண்ணங்கள் கொண்டவர்களால் மட்டுமே ஆனதா,,,நகரச்சூழல் சுயநலமும் சலிப்பும் மட்டுமே ஆனவர்களால் ஆனதா என்பது தருக்கப்பூர்வமான கேள்வி. இறப்பு ஏன் மற்றவர்கள் கூடுவதற்கான ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. நவீன மனம் ஏன் எளிய சடங்குகளை ஏற்கிறது. இப்படியான எந்தக் கேள்வியுமின்றி தன்னுடைய எண்ணமான தோட்டப்புறச்சூழலில் நிகழும் இறப்பு நிகழ்ச்சிகள் மனிதர்களின் நல்லிணக்கம், உண்மையான உணர்வுக்கு எடுத்துக்காட்டு என்பதைச் சொல்வதற்கான ஊடகமாகவே கதையை பயன்படுத்துகிறார், அதனையும் வாசகப்பங்கேற்பு நிகழாதப்படி முழுமையாகக் கற்பனை செய்வதற்கும் கண்டறிவதற்கான இடமோ இல்லாமல் ஒட்டுமொத்தமாகச் சொல்லிச் செல்கிறார்.

இளந்தமிழனின் சிறுகதைகளில் சமூகச்சூழலைப் பற்றிய அவரது முன்முடிவுகளும் கற்பிதங்களும்  மனவுணர்வுகளுமே வியாபித்திருக்கிறது.  கதைக்குள் பாத்திரங்களிலும் நிகழ்வுகளிலும் ஆசிரியரின் தன்னிலையே பிளவுபட்டுப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. அதிர்ச்சியான திருப்பங்கள், சமூக விமர்சனத்தின் உள்ளீடின்மை  ஆகியவற்றால் கலைத்தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் எழுதப்பட்டவையாகவே இளந்தமிழனின் கதையுலகை மதிப்பீட முடிகிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...