முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்தரங்கப்பாவனைகளின் அவிழ்ப்பு- சம்ஸ்காரா நாவல்

 

யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய கன்னட நாவலான சம்ஸ்காரா நாவலை வாசித்தேன். தமிழ்நாட்டுக்குப் பயணம் சென்றிருந்தப்போது தஞ்சையில் துருவம் இலக்கிய அமைப்பினர் நினைவுப்பரிசாக இந்நாவலைத் தந்திருந்தனர். நவீனத்துவக் காலக்கட்ட நாவல்களுக்கே உரிய மனித மனத்தை ஊடுருவிப் பார்க்கும் விமர்சனப்பார்வையைத்தான் இந்நாவல் கொண்டிருந்தது.



சமூக, சமய ஆச்சாரங்களையும் தவத்தைப் போலவே கடைப்பிடிக்கும் பிராணேஸாச்சாரியாருக்கும் அவற்றை மீறி இன்ப நுகர்வே ஆன வாழ்வில் திளைக்கும் நாரணப்பனுக்குமான முரணை முன்வைத்தே நாவல் மனித இயல்பை விசாரம் செய்கிறது.

மாத்வ பிராமணர்கள் செறிந்து வாழும் துர்வாசப்புரம் அக்கிரக்காரப் பகுதியில் பெரும் வேதவிற்பன்னராக பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். அந்தச் சமூகத்தின் அன்றாடத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் ஆச்சாரவாதக் கேள்விகளுக்கு வேதங்களிலிருந்தும் மனு தருமத்திலிருந்தும் விடைகளைக் கண்டு தருவதில் பெரும்புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். வேதங்களை முழுமையாகக் கற்று தேர்ந்து அதனைக் கொண்டு வாதம் புரிவதிலும் அவரிடமிருக்கும் திறன் அக்கிரக்காரத்தில் உள்ளவர்களால் மெச்சப்படுகிறது. உலக இன்பங்களில் கவனம் செல்லாமல் பிராமண நெறிகளைத் தவறாமல் ஒழுகி வேதங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காய்ப் பிறவி நோயாளியான பாகீரதியைத் திருமணம் செய்து பணிவிடைகளையும் செய்கிறார். அவரின் மொத்த தன்னிலையையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் சிக்கலொன்று அக்கிரகாரத்தில் எழுகிறது.

பிராமணீயத்தின் கட்டுப்பாடுகளுக்கு மாறாகத் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சந்திரி என்னும் பெண்ணுடன் வாழ்க்கை நடத்திய நாரணப்பா காய்ச்சலால் இறந்து போகிறான். முஸ்லிம்களுடன் சேர்ந்து இறைச்சி உண்டது, குளத்தில் மீன் பிடித்தது, மதுவருந்தியது, கடவுள் இருப்பைக் கேள்விக்குட்படுத்தியது என மொத்தமாகவே பிராமணீயத்தை நிராகரித்துப் புலனின்பத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டவன் நாரணப்பன். அவனது உடலைப் பிராமண நெறிகளின்படி தகனம் செய்வதா என்ற கேள்வி எழுகிறது. அதற்குச் சாத்திரத்தில் இடமிருக்கிறதா என வேதநூல்களைப் புரட்டுகிறார். ஒவ்வொரு வாதமாய் அவருள் தோன்றி அக்கிரகாரத்தாரின் குரலுடன் சேர்ந்து கொண்டு அவரைக் குழப்புகிறது. சந்திரி கொடுக்கும் நகைகளுக்காக அவனை அடக்கம் செய்ய முன்வருகின்றவர்களின் அருவருப்பு ஒருபக்கம் மனத்தை நெருடுகிறது. இன்னொருபக்கம், அவனைப் பிராமணீயத்திலிருந்து விலக்கப்பட்டவனாய் அறிவித்தால் அவனுடனான சவாலில் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்வதாய் ஆகும் என்ற அகங்காரச் சீண்டலுக்கு ஆளாக நேரிடும்.

நாரணப்பாவை முன்னரொருமுறை கண்டிக்கச் சென்றிருந்த போது புலனின்பத்தை விலக்கி வாழும் அவரையும் அக்கிரக்காரத்தார் செய்யும் போலித்தனங்களையும் உள்ளவாறே சொல்லி எள்ளியவனின் சவால் தன்னிலையை அசைத்துப் பார்ப்பதாய் வளர்ந்து நிற்பதை ஆச்சாரியார் உணர்கிறார். அந்தச் சிக்கலின் போது, சந்திரியின் மீது மோகம் ஏற்பட்டு அவளுடன் கூடுகிறார். நோயாளி மனைவிக்கு மருந்தும் உணவும் புகட்டும் போது அருவருப்புணர்வு தோன்றுவதை உணர்கிறார். பிறவி நோயாளியைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் காமவிழைவை விலக்கி ஆன்மீகத்தில் தோய்ந்து முத்தி பெறலாம் என்ற எண்ணம் தடைபடுகிறது.

 அதைப் போல, சந்திரி, பெள்ளி என மனம் தேக்கி வைத்திருந்த பெண்ணாசை விழைவு சுழல் போல வருவதையும் உணர்கிறார்.

காவியங்களில் இருக்கும் உயர் கவித்துவத்துடன் வருணிக்கப்படும் காமத்தை சொல்லும் பாடல்களை நயம் பாராட்டி பிராணேஸாச்சாரியார் அக்கிரக்காரத்தில் உள்ளவர்களுக்குச் சொல்கிறார். அப்படி அவரில் உறைந்திருந்த விழைவு பெரிதாக வளர்கிறது. சொல்கிறார். தன்னை அஞ்சித் தன்னிலிருந்து விலகி ஓடியவரின் அகங்காரத்தை நாரணப்பனின் சாவு அவர் முன் கொஞ்சம் கொஞ்சமாய்க் காட்டுகிறது. சாத்வீகப் பிராமணனாகும் முயற்சியில் சேர்த்து வைத்திருந்த தன்னிலை மொத்தமே கலைந்து போகிறது.

அக்கிரகாரத்தில் பிளேக் நோய் பரவி கொத்துக் கொத்தாய் எலிகள் சாகின்றன. எலிகளைத் தின்ன கழுகுகள் படையெடுக்கின்றன. அதனை நாரணப்பாவின் சவம் கொண்டுவரும் துர்சகுணமென அக்கிரகாரத்தார் கருதுகின்றனர். பிராணேஸாச்சாரியார் நாரணப்பாவின் சவத்தகனத்துக்கான பதிலளிக்காமல் கைவிரித்துவிடவே அக்கிரக்காரத்தார் மடங்களுக்குச் செல்கின்றனர். வழியில் ஒவ்வொருவராய் பிளேக் நோய் தொற்றால் காய்ச்சலுற்றுச் சாகின்றனர்.

ஆச்சாரியாரின் மனைவியும் பிளேக் நோய்க்குப் பலியாகிறாள். அவள் உடலையும் தகனம் செய்துவிட்டு துறவியாகும் எண்ணத்துடன் ஊரைவிட்டே செல்கிறார். செல்லும் வழியில் பூக்கட்டிப் பண்டாரமான புட்டாவைச் சந்திக்கிறார். எல்லாவற்றையும் துறந்துவிட்டுச் செல்ல சித்தமானவரின் மனத்திலே இன்னுமே தன்னிலை குறித்த ஊசலாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. புட்டாவுடனான வழிப்பயணத்தின் போதே எதனையும் உதற முடியாதவராய் உள்ளுக்குள் வளர்ந்து நிற்கும் அகங்காரத்துடன் வாதங்களைக் கொண்டு மோதிப்பார்க்கிறார். அந்த முடிவில்லா ஊசலாட்டத்தில் தான் தொகுத்து வைத்திருந்த தன்னிலையிலே தனக்கான விடுதலையைத் தேடிக்கொள்வதெனத் தஞ்சம் புகுகிறார்.

பிராணேஸாச்சாரியாரின் மன ஊசலாட்டத்தைக் காட்டுகின்ற வகையில் அமைந்திருக்கின்ற அகவோட்டமே இந்த நாவலின் மையமாய் அமைந்திருக்கிறது. தன்னிலைக்கும் அதன் அழிதலுக்கமான மனப்போராட்டத்தையே ஆச்சாரியார் பாத்திரம் நிகழ்த்திப் பார்க்கிறது. சமய்ச்சூழலின் காரணமாய்த் தன்னை நியாயவனாய்க் காட்டிக் கொள்வதற்கு விதித்துக் கொள்கின்ற கட்டுப்பாடுகள் எல்லாமே தகர்ந்து போகிறது. அந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் இருப்பது வெறும் அகங்காரமே என்பதையே நாவல் காட்டுகிறது. அகங்காரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மாத்வர்களுக்கு வழிகாட்டுவது, சூழலின் மீது காரணம் காட்டுவதென எல்லா விதமான பாவனைகளையும் வாதங்களாக மனம் முன்வைக்கிறது. எல்லாவற்றையும் துறந்துவிட எண்ணியவனின் மனம் எந்த அடையாளத்தையும் இழக்காமல் பொய்களால் தன்னைக் காத்துக் கொள்கிறது.

சம்ஸ்காரா நாவல் சமூகக்கற்பிதங்களினால் மனம் போட்டுக்கொள்ளும் கட்டுப்பாடுகள், பாவனைகள் அத்தனைக்கும் அடியில் அது என்னவாக இருக்கிறதென்பதைத்தான் காட்டிச் செல்கிறது.  சவத்தகனம் வரையிலும் உண்ணாமல் இருக்கும் தாசாச்சார்யன் பசி தாளாமல் மஞ்சய்யா வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் செல்கிறான்.. மஞ்சய்யா ஸ்மார்த்த பிராமண நெறியைச் சேர்ந்தவன் என்பதோ நாரணப்பன் ஒழுக்கம் மீறியவன் என்பதெல்லாமே பசியின் முன்னால் ஒன்றுமில்லாததாகிவிடுகிறது. அவன் வீட்டில் அவல் உப்புமாவை உண்கிறான்.

 தன் மகனை ராணுவத்துக்கு அனுப்பிவிட்ட காரணத்தாலும் கருடச்சார்யா தன் மருமகன் ஸ்ரீபதியைக் குடி,நாடகம் எனக் கெடுத்து விட்டானென்ற என்பதாலும் நாரணப்பாவின் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால், நாரணப்பாவின் சவத்தகனத்துக்கு ஆகும் செலவுகளுக்காய் தன் நகைகளைக் சந்திரி கொடுத்தபின்னர் இருவரும் இறுதிக்காரியங்களைச் செய்ய முன்வருகின்றனர். சமூகம் விதித்த கட்டுப்பாடுகளை எல்லாம் தாண்டி வாழ்ந்த நாரணப்பனே சாவு நெருங்கும் போது முற்றிலுமாய் நாராயணனின் நாமத்தை உச்சரித்தே இறக்கிறான்.

ஒருவகையில் நாரணப்பாவும் ஆச்சாரியாரும் ஒருவரையொருவர் நிகர் செய்து கொள்கின்றனர். இறப்பு வாயிலில் நாரணப்பா நாராயணைத் துதிப்பதும் சூழ்நிலை வாய்த்தப்போது தன்னில் உறைந்திருந்த காம, குரோதங்களை ஆச்சாரியர் கண்டுகொள்ளும் போதும் தங்கள் பாவனைகளைக் கலைகின்றனர். மனித அகத்துக்குள் இருக்கும் அந்தரங்கமான பாவனைகள் ஒன்றுமில்லாது போகும் தருணங்களை சம்ஸ்காரா நாவல் பேசுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற