முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பலவீனமான லட்சிய உருவகம்

எழுத்தாளர் கோ.முனியாண்டியின் ராமனின் நிறங்கள் (2010) நாவலை வாசித்தேன். எழுத்தாளர் கோ.முனியாண்டி மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில் புதுக்கவிதை மாநாடுகள் நடத்திய முன்னோடிகளில் ஒருவர். மேலும் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 


மலேசியாவில் 1950களிலே ரப்பருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட செம்பனைப்பயிர் 1980களில் தான் ரப்பருக்கு மாற்றாக அதிகளவில் பயிர் செய்யப்பட்டது. இதற்கிடையிலான காலக்கட்டத்தில், செம்பனைப்பயிர்கள் நல்ல விளைச்சலைத் தராததால் தோட்ட முதலாளிகள் செம்பனைப்பயிரை நடுவதில் தயக்கம் காட்டினர். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் தோட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Leslie Davidson என்பவர், மலேசியாவை ஒத்த தட்பவெப்ப நிலை கொண்ட கெமரூன் நாட்டில் செம்பனைப்பயிர் ஊட்டத்துடன் வளர்வதற்கான காரணத்தைக் கண்டறிய அந்நாட்டுக்குப் பயணப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இறுதியில், செம்பனைப்பயிரின் பூக்களில் கேமரூண் வீவல்ஸ் (Elaeidobius kamerunicus weevils) எனும் பூச்சியினம் நடத்தும் மகரந்தச்சேர்கையினாலே அதிக மகசூல் சாத்தியமாகிறதென்பதை அறிந்து அதனை மலேசியாவுக்கும் கொண்டு வருகிறார். இந்த ஆய்வுப்  பின்னணியை ரகுநாதன் என்ற லட்சிய மனிதனின் கனவாக மாற்றி அவனுடைய தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.2000க்கு மேல் மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியிலும் முக்கியமான பண்டமாக மாறியிருக்கும் செம்பனை எண்ணெயின் வளர்ச்சிக்குப் பின்னணியில் இருக்கும் இந்தக் கதை சுவாரசியமானதுதான்.


கேமரூன் வீவல் பூச்சி

 பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் பயிலும் ரகுநாதனின் நண்பன் ஹரி பெரிய கரும்பு தோட்ட நிர்வாகியான சஞ்சிவியின் மகன். தன்னுடன் பயிலும் தவமணியைக் காதலித்துக் குடும்ப எதிர்ப்பையும் மீறி திருமணம் பரிந்து கொள்கிறான் ரகுநாதன். தவமணி இறந்துவிடவே மகளை அழைத்துக் கொண்டு ஹரியின் தோட்டத்தில் பணியாற்ற செல்கிறான். அங்கு, ஹரியின் அக்காவான அழகு நிரம்பிய அனுசயா ரகுவைப் பார்த்தவுடன் காதலிக்கிறாள். ரகுநாதனின் மகளை அனுசயா தன் மகளாக வளர்க்கிறாள். தன் தோட்டத்தில் நடப்படும் செம்பனைப்பயிரின் மகசூலைக் கூட்ட கெமரூன் நாட்டுக்கு ரகுவை அனுப்பி வைக்கிறார். அங்கு ஆய்வு செய்த பின்னர், கெமரூன் வீவல்ஸ் பூச்சியின் மகரந்தச் சேர்க்கையைக் கண்டறிந்து அதனை மலேசியாவுக்கு எடுத்து வருகிறான். அனுசயாவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் சஞ்சீவி ஈடுபடுகிறார். தந்தையின் முயற்சியை முறியடித்து இவர்களின் லட்சியக்காதலை ஹரி சேர்த்து வைக்கிறான்.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ரகுநாதனை லட்சியப்புருசனாகக் காட்ட ஆசிரியர் முயல்கிறார். ஆனால், அந்தச் சித்திரிப்புகள் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றன. . நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற நாவலாசிரியர்கள் படைத்த லட்சிய கதைநாயகன்களின் சாயலில் குறைவுபட்ட அச்சாகவே ரகுநாதன் படைக்கப்பட்டிருக்கிறான் அழகும், அறிவும் நிரம்பிய ரகுநாதனை லட்சிய நாயகனாகக் காட்டுகிறார். இலட்சியம் என்பதைத் தான் நம்பிய இலக்கொன்றுக்காகச் சோராமல் உழைத்தல். அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தல் ஆகிய பொருள்களில் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். ரகசியக் காதலியான தவமணி வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமண ஏற்பாட்டை எதிர்த்து நஞ்சருந்துகிறாள். அவளின் காதலைப் புரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக வேதனைப்பட்டு அவளைத் திருமணம் செய்கிறான் ரகுநாதன். நண்பனின் வேண்டுகோளினால், அவன் தந்தையின் தோட்டத்தில் கடும் விசுவாசியைப் போல வேலை செய்கிறான். அவனைத் தொழிலாளியாக மட்டுமே நடத்தும் சஞ்சீவியை எதிர்க்காமல், அவருக்கு விசுவாசம் செலுத்துகிறான். இங்கும் தன் அழகுக்காகவும் அறிவுக்காகவும் மெச்சும் அனுசயாவின் காதல் தொந்திரவுகளால் காதல் வயப்பட்டுக் காதலிக்கிறான். இன்னொரு பக்கம், ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக நாவலாசிரியர் காட்டும் அவன் பெரும்பகுதி நேரம் தன் சொந்த வாழ்க்கைத் துயர்களிலும் குழப்பங்களும் மூழ்கியவனாகவே இருக்கிறான். இந்தப் பின்னணியில் இருக்கும் பலவீனமான இலட்சிய நாயகனைச் சராசரியான மனிதனாகவே எண்ண முடிகிறது.

அத்துடன், ஆய்வுகளில் ஈடுபடுவதாகச் சொல்லி காட்டப்படும் ரகுநாதன் ஈடுபடும் ஆய்வு நடைமுறைகளைக் காட்டுவதற்கான தகவல்களையும் நுட்பத்தையும் ஆசிரியர் தவறவிட்டிருக்கிறார் என்றே எண்ண முடிகிறது. ஆய்வு தொடர்பான சித்திரிப்புகளில், அது சார்ந்த சுருக்கங்களை மட்டுமே செய்திகளைப் போல சொல்லிச் செல்கிறார். செம்பனை நடவு சிக்கல்கள், அதன் பின்னணியில் நடக்கும் முயற்சிகள், ஆய்வுகள் என அனைத்திலும் செய்தித்தாளின் நடையில் சொல்லப்படும் சுருக்கங்களையே வாசிக்க முடிகிறது. கேமரூன் வீவல் எனும் பூச்சியினம்தான் செம்பனைப் பழங்கள் மிகுந்த சாரத்துடன் வளர்வதற்கான மகரந்தச் சேர்க்கை நடத்தியிருக்கிறது. அந்தப் பூச்சி எப்படி இருந்தது என்ற சித்திரிப்புகூட நாவலில் விரிவாக இல்லை. செம்பனைத்தோட்டம், கரும்பு தோட்டம் என நாவலில் வருகின்ற முக்கியமான களங்கள் கூட அந்தளவே மிகத்தட்டையாக விவரிக்கப்படுகிறது. கேமரூன் நாட்டுச் செம்பனைத் தோட்டத்தில் இருளில் தான் சிறுவயதில் படத்தில் கண்டே பயந்த செளகாட் சிறுத்தையை வேட்டையாடப்பட்டுச் செத்துக்கிடப்பதை ரகுநாதன் காண்கிறான். தன் கால்கள் அதன் மீது உரச உள்ளுக்குள் அதனைப் பற்றிய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறான். அதிலுமே, நினைவில் வைத்திருக்கும் தகவல்களையே நினைத்துப் பார்க்கிறான். அறியா நிலத்தில் இருளில் செத்துக்கிடக்கும் சிறுத்தையைத் தொட்டுப்பார்ப்பதென்பது பயமும் பரவசமும் அளிக்கும் நிகழ்வு. அதிலும் புனைவாசிரியன் தவறவிடக்கூடாத சித்திரிப்புடைய இடம். அதனைத் தகவல்களால் நிரப்பி எளிதில் ஆசிரியர் கடக்கிறார். இப்படியாக எந்த நுண்விவரணையிலும் கவனம் செலுத்தாமல் இந்நாவல் உருவாகியிருக்கிறது.

இந்த நாவலில் இருக்கும் இன்னொரு மிகப்பெரும் பலவீனமாய் கதையோட்டம் பயணப்படும் மிகையுணர்ச்சி இடங்களைச் சொல்லலாம். எல்லா பாத்திரங்களும் காதல், தியாகம், அன்பு, பிரிவு எல்லா இடங்களிலும் அழுகின்றனர். ரகுநாதனின் அழகுக்கும் அறிவுக்கும் தன்னையே கொடுக்கும் அபத்தமான முடிவை எடுக்கும் அனுசயா, தவமணி போன்ற பாத்திர வார்ப்பு அபத்தமாக இருக்கிறது. ரகுநாதனை லட்சிய மனிதனாகக் காட்டுவதை நியாயப்படுத்த அவனிடம் இல்லாத நற்குணங்களைக் கூட பெண்பாத்திரங்கள் மனதுக்குள் மறுகுவதும் விதந்தோதுவதும் சலிப்பூட்டுகின்றன. தங்களால் கூட கண்டுபிடிக்க முடியாத ஆய்வுண்மையை ரகுநாதன் கண்டறிந்ததாகத் துறைசார்ந்த வல்லுனர்கள்  விதந்தோதுவது, சாதாரணப் பொருளையே தரும் பேச்சுக்காக பாராட்டுமழை பொழியும் சித்திரிப்புகளை மிகையுணர்ச்சியின் வெளிப்பாடாகவே கடக்க முடிகிறது.

ரகுநாதனின் லட்சிய வார்ப்பில் பங்கெடுக்க வரும் துணைகளாகவே மற்ற பாத்திரங்களும் உணர்ச்சிகள், கருத்துகளின் பிரதிநிதிகளாகச் சாரமற்று படைக்கப்பட்டிருக்கின்றனர். மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர் தண்டாயுதம், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கு,பத்மாநாதன் என உண்மை பாத்திரங்கள் ரகுநாதனுக்கு ஆதரவும் அறிவுரையும் நல்கும் மனிதர்களாக நாவலுக்குள் வந்து செல்கின்றனர்.

இறுதியாக ராமனின் நிறங்கள் பேசுகின்ற பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய லட்சிய மனித உருவகம் என்பது ஒற்றைப்பார்வையில் ஒரு நிகழ்வை அணுகிப்பார்த்தலின் அபத்தமாகவே காணமுடிகிறது. செம்பனை மரம் மலேசியப்பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கையாற்றியிருக்கிறது. ஆனால்,ரப்பர் மரங்கள் அகற்றப்பட்டு அதிக தொழிலாளர்கள் தேவைபடாத செம்பனைப்பயிர்கள் நடப்பட்டதால் பல தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதன் பின்னணியில், அந்நிய நாட்டவர்கள் குறைந்த கூலிக்காக வேலைக்காக அமர்த்தப்பட்டனர். சமூக அடிப்படையில் மிகப்பெரும் மாறுதல்களைச் செம்பனைப்பயிரின் ஊடுருவல் நிகழ்த்தியது. கூடுதலாக, மலேசியா நெடுக தென்படும் செம்பனைத் தோட்டங்கள் ஒருவகையில் பசுமைப்பாலைவனங்களாக மாறி நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சி காட்டூயிர்களின் வாழ்விடம் பறிக்கப்பட்ட அழிவையும் நிகழ்த்தியிருக்கிறது. செம்பனையின் பெருக்கத்துக்குக் காரணமான ஆய்வுடன் தொடர்புடைய நாவலில் இந்தப் பின்னணியும் சொல்லப்படுவது அவசியமாகிறது. பொருளாதார வளத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடும் ரகுநாதனை லட்சிய மனிதனாகக் காட்டும் முனைப்பில்  இவையனைத்தையும் நாவலாசிரியர் தவறவிட்டிருக்கிறார் என்பதையே வாசித்ததும் உணரமுடிந்தது.



தான் நம்புகின்ற வழியில் இலக்கொன்றுக்காக உழைப்பவன் எதிர்கொள்ளும் தனிமனித, சமூகச்சிக்கல்களை சாதனையாளர்களின் வாழ்வில் படித்திருப்போம். அவற்றைக் கடந்து சென்று அவர்கள் அடையும் உயரமென்பது வெற்றியாகக்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பும் அவர்கள் பெற்றுக் கொண்ட தீராத நம்பிக்கையுமே அவர்களைச் சாதனையாளர்களாக காட்டுகிறது. அதனை ஒரு பாத்திரத்தின் சித்திரிப்பில் கொண்டுவர எல்லா சிக்கல்களையும் கடந்து நிற்கின்ற ஆற்றலை அவனுக்கு அளிக்க வேண்டியிருக்கிறயது.

லட்சிய மனிதன் என்பதை மற்ற பாத்திரங்களின் உரையாடல் வாயிலாகவும் நேரடிச்சித்திரிப்புகள் வாயிலாகவும் மட்டுமே நிறுவுகின்ற முயற்சியில் பலவீனமான படைப்பாகவே ராமனின் நிறங்கள் நாவல் வெளிவந்திருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற