பிரிவு நிரந்தரமல்ல நாவல்
நாவலில் சொல்லப்படும் உணர்ச்சிகள், கதைகள் எல்லாமே வாசக அனுபவமாக ஆவதில்தான் அதன் ஏற்பு அமைந்திருக்கிறது. வாசகனுபவமாக ஆகாதவை நுண்மையான கதைச்சட்டகத்தைக் கொண்டிருந்தாலும் தேர்ந்த இலக்கியப்படைப்பாக மாறுவதில்லை. பிரிவு நிரந்தரமல்ல நாவல் வாசகனுபவமாக புனைவை மாற்றாமல் எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும் நாவலாகவே பார்க்க முடிகிறது.
2008
ஆம் ஆண்டு மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்தில் நாவல் போட்டியில் இரண்டாம் பரிசினைப்
பெற்ற நாவல் கி.சுப்ரமணியம் எழுதிய பிரிவு நிரந்தரமல்ல என்னும் நாவல். 1940களின் பிற்பகுதி
தொடங்கி 1960கள் வரையில் மலேசியாவில் தலைமறைவு இயக்கமாய்ச் செயற்பட்டுவந்த கம்யுனிஸ்டு
இயக்கத்தில் தீவிரமாய்ப் பங்கேற்கின்ற இளைஞனொருவனின் அனுபவங்களையே மையமிட்டே நாவல்
அமைக்கப்படுகிறது. 1940 களின் இறுதியில் பகாவ் பகுதியில் இருக்கும் தோட்டமொன்றில் பணியாற்றும்
பெருமாள் என்னும் இளைஞன் தோட்டத்தில் ஒடுக்குமுறை நிலவும் பணிச்சூழல், குறைந்த சம்பளம்,
அடக்குமுறைகள் காரணமாய்க் கம்யுனிஸ்டு இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறான். தன்னுடன் பிறந்த
எழுவரில் மூத்தவளுக்குத் திருமணம் செய்விக்கின்ற வரையில் காத்திருந்து பின்னர் நேரடியாக
காட்டுக்குள் பதுங்கி கம்யூனிஸ்டு போராளியாகிறான். அவனுக்கு ஆதர்சமாய் இருக்கும் அப்பளசாமி
என்னும் கம்யூனிஸ போராளியின் வழிகாட்டுதலினால் காடுகளில் பதுங்கி வெள்ளைக்கார ராணுவத்தையும் ஆதிக்கவர்க்கத்தினரான
தோட்ட முதலாளிகள், துரைகளையும் தாக்குகின்றனர்.
தலைமறைவு
வாழ்க்கையின் போது எதிர்கொள்ளும் துன்பங்களில் எல்லாம் தோட்டத்து வாழ்க்கையின் ஏக்கம்,
குடும்பத்தின் மீதான பாசம் ஆகிய உணர்வுகளால் தவிக்கிறான். அவனுடைய தவிப்பை ஈடு செய்யும்
வண்ணம் தங்கையைச் சந்தித்து ஆறுதல் கூறி மற்றொரு தங்கை திருமணத்துக்கான பணத்தைத் தருகிறான்.
கம்யுனிஸ்டு இயக்கத்துக்குள்ளே சீனர், இந்தியர் என இனங்களுக்குள் செயல்படும் பிரிவு
அரசியல், வன்முறை தாக்குதல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளினால் மனம் நொந்து போகிறான்.
இறுதியாக, காவ்ல்துறையால் பிடிக்கப்பட்டு ஆறாண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று திரும்பி
வருகின்றவனின் நினைவோட்டமாகவே அவனுடைய கடந்தகால வாழ்வு சொல்லப்படுகிறது.
தோட்டத்துக்குத்
திரும்பியவன் இனி எந்த சூழலிலும் அங்கிருந்து அகன்று போகக்கூடாத எண்ணத்துடன் குடும்பத்துடன்
ஒன்றிணைவதாகக் கதை முடிகிறது.
பிரிவுகள் நிரந்தரமல்ல நாவலின் முதன்மையான பலமாக அதன் சரளமான கதையோட்டத்தையும் மொழியையும் குறிப்பிடவேண்டும். எங்குமே தடங்கலின்றி அடுத்தடுத்து நகரும் சம்பவங்களால் ஆன சித்திரிப்பென்பது நாவல் வாசிப்பை இடரின்றி கடக்க உதவுகிறது.கம்யூனிஸ்டுகள் காட்டில் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கையைப் பற்றிய சித்திரிப்புகளில் நுண்விவரணைகள் இல்லையென்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைமுறை, உணவு, தோற்றம், சூழல் ஆகியவற்றைப் பற்றிய பொதுவான சித்திரத்தையும் நாவலாசிரியர் தருகிறார்.
பத்துப்
பிள்ளைகளுக்குத் தாயான பெருமாளின் தாய், பிள்ளைகளை அணைக்கும் போது அருகிருக்கும் போதும்
லஜ்ஜையின்றி மார்பு குலுங்க அணைத்துக் கொள்கிறாள் என்பதை நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்.
மகன் வீட்டை விட்டு ஓடி கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தபின்னர் விசாரணை என்ற பெயரில்
தோட்ட நிர்வாகமும் காவல்துறையும் கொடுக்கும் நெருக்குதலால் அவமானப்பட்டுக் கணவன் தற்கொலை
புரிந்து கொள்கிறான். எஞ்சிய ஆறு குழந்தைகளையும் யாருடைய துணையுமின்றி தனியே உழைத்துக்
காப்பாற்றுகிறாள். சிறையிலிருந்து விடுதலை பெற்று அம்மாவைப் பார்க்க வரும் மகனிடம்
உடல் மீதான கட்டுப்பாடுடன் அம்மா நடந்து கொள்கிறாள். கைலியை இறுக்கக் கட்டி சட்டை பொத்தான்களைப்
போட்டுக்கொண்டு மகனைத் திட்டி தாக்குகிறாள் என அதனைச் சித்திரிக்கிறார். இப்படியாக
பாத்திரங்களுக்குள் ஏற்படும் அகவுணர்வு மாற்றங்களை வெளிப்படுத்தும் இடங்களைப் புனைவில்
கொண்டு வந்திருக்கிறார்.
எல்லாவற்றையும்
சித்திரிப்பிலே சொல்லிவிட்டுக் கதையை நகர்த்திவிடுவது இந்த நாவலைப் புனைவாகப் பலவீனப்படுத்துகிறது.
கம்யூனிஸ்டு இயக்கம் நடத்தும் வன்முறைகள், இனப்பாகுபாடு, சீனர்களின் இயல்பு என எல்லாவற்றையும்
பட்டவர்த்தனமாகக் கதைசொல்லியே குறிப்பிடுகிறான். அதனை வாசக அனுபவமாக மாற்றி அளிக்கும்
சம்பவங்கள், உரையாடல்கள், சூழல் சித்திரிப்புகள் எதுவுமே இல்லாமல் நாவல் நகர்கிறது.
அப்படிச் சொல்லப்படும் இடங்களில் கூட பாத்திரங்களைக் கொண்டு ஆசிரியர் தம் கருத்தை வெளிப்படுத்தும்
இடங்களாகவே காண முடிகிறது. நாவல் வடிவம் தாம் காட்டும் வாழ்க்கையின் ஆழ அகலங்களுக்குள்
விவாதம் செய்து ஒரு சாரத்தை வாசகன் முன்வைப்பது. அதற்கு ஒவ்வொரு பாத்திரமாகவும் ஒவ்வொரு
சூழலுக்குள்ளும் பயணிக்கும் கற்பனையின் விரிவு ஆசிரியனுக்கு அவசியமாகிறது., கம்யூனிஸ்டு
சித்தாந்தம் தலைமறைவு ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுக்கும் போது அதனால் கவர்ந்திழுக்கப்பட்டு
வருபவர்கள் நாளடைவில் தங்களுக்குள் ஏற்படும் மனமாற்றத்தால் அடையும் துயரை நாவல் பேசுகிறது
ஆனால்,
அந்தத் துயர் எங்குமே அழுத்தமாய்க் கடத்தப்படவில்லை. கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஊடுருவலை
மட்டுப்படுத்த கடுமையான உணவு பங்கீட்டு முறை செயற்படுத்தப்படுகிறது. மக்கள் உணவு வினியோகப்
பங்கீட்டு முறையால் போதிய உணவின்றி வாடுகின்றனர் என்பதை கதைசொல்லி உணவுப்பொருட்களின்
அளவு குறைப்பாட்டைக் கொண்டு நேரடியாய் விளக்க முற்படுகிறான். இப்படியாக அவர்களின் விடுதலைக்கு
உதவுவதாய்ச் சொல்லப்படும் இயக்கத்தினால் பல இடர்களை அனுபவிக்கின்றனர்.
அதே
மக்கள் கம்யூனிஸ்டு காலத்துக்கு வெகுமுன்னரே வெள்ளைய முதலாளிகளாளும் கறுப்புத்துரைகள் என்றழைக்கப்படும்
கிராணிகளும் கங்காணிகளாளும் சுரண்டவும் அடிமைப்படுத்தவும் செய்யப்படுகின்றனர். அவர்களை
எதிர்க்கும் கம்யூனிஸ்டு இயக்கம் அளிக்கும் வசீகரத்தாலே பெருமாள் அதில் இணைகிறான்.
அங்கும் வன்முறையும் பாரப்பட்சமும் இருப்பதால் அங்கிருப்பதிலும் அவனுக்குச் சலிப்பேற்படுகிறது.
இயக்கத்திலிருந்த போது கைது செய்யப்பட்டுக் கடுங்காவல் தண்டனை பெற்று தனிமைச்சிறை,
கொடுந்தண்டனைகளை அனுபவிக்கிறான். அந்தத் தண்டனைகள் எல்லாம் முடிந்து குடும்பமே சிறந்த
அமைப்பு என்ற முடிவுக்கு வருகிறான். அந்த முடிவை நாவல் தரிசனமாய் முன்வைப்பது குறுகிய
மனநிலையின் வெளிப்பாடாகவே காணமுடிகிறது.
ஒப்புநோக்க
கம்யூனிஸ்டு இயக்கத்துடனான வாழ்வில் இன்னும் கூடுதலான பணத்தையும் தனியான சிந்தனை புரியும்
சுதந்திரம் அவனுக்குக் கூடுதலாக இருக்கிறது. பெருமாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தோட்டத்துக்கு வரும் போது சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அந்தச் சூழலில் கம்யூனிஸ்டுகளுக்கு உணவுப்பொருட்கள் சேரக்கூடாதென்பதால் தோட்ட நிர்வாகம்
முன்னரைக் காட்டிலும் கூடுதல் கெடுபிடியுடன் சோற்றைத் தானே ஆக்கிப் போடும் சூழலில்தான்
தோட்டத்துக்கு அவன் வந்து சேர்கிறான். அவனது வருகையை முதலில் அம்மா எதிர்க்கிறாள்.
பின்னர், அம்மா ஏற்றுக்கொண்டாலும், அவனது தம்பி கண்ணையா அவனை மூன்றாமவனாகவே கருதி எதிர்க்கிறான்.
இந்தச் சூழலில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவர்களுடனே வாழ விரும்புவனின் அகம்
மிக நொய்மையானதாக இருந்திருக்கும். அந்த நொய்மையை ஆசிரியர் சரியாக உருவாக்கவில்லை.
அம்மாதிரியான குடும்பத்துடனான வாழ்வு தனிமனிதனுக்கான மீட்பு என்பதைப் போன்ற தொனியில்
நாவல் அதனை முன்வைப்பதும் அபத்தமாய் இருக்கிறது.
எந்தச் சித்தாந்த தெளிவுமில்லாத சூழலில் முதலாளிகள் எதிர்ப்பு என்ற வசிகரத்தால் கம்யூனிஸ்டு இயக்கத்தில் இணைந்து இளமையையும் வாழ்வையும் தொலைத்துவிட்டவனின் கதையை ஆழமின்றி நாவல் அணுகுவதாகவே நாவல் வாசிப்பனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள முடிகிறது. இந்தக் குறைபாடுகளுடன் பார்க்கின்ற போது, கூறுமுறையில் தெளிவும் கம்யூனிஸ்டு வாழ்வின் மேலோட்டமான சித்திரத்தை முன்வைத்தவகையிலும் பிரிவு நிரந்தரமல்ல நாவல் முக்கியமானதாகவே படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக