முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறைபட்ட கலை

 

விஷ்ணுபுரம் விருது விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனைச் சந்தித்தோம். விஷ்ணுபுரம் அமைப்பினர் வழங்கும் அறிவுசார் பங்களிப்பாற்றிய ஆய்வாளர்களுக்கான தூரன் விருதை 2023 ஆம் ஆண்டு பெற்றிருந்தார். தமிழறிஞர்கள் பலரையும் நேரில் சந்தித்தும் அவர்களின் குடும்பத்தினர், ஊரார், நண்பர்கள் எனப் பலரைச் சந்தித்தும் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்த அரிய பணியை அவர் செய்திருக்கிறார். மலேசியாவுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு இங்குள்ள தமிழறிஞர்களின் வாழ்வையும் தொகுத்திருக்கிறார். 

https://muelangovan.blogspot.com/ பேராசிரியர் இளங்கோவனின் வலைப்பக்கம்

நானும் நவீனும் செல்ல விரும்பிய தஞ்சைப் பயணத்துக்குச் சில உதவிகளைச் செய்தார். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் காண எங்களை அழைத்துச் சென்றார். சிறுவயதில் அவர் பார்த்த கங்கை கொண்ட சோழபுரக் கோவிலுக்கருகில் இருந்த புதர்காடுகள் பின்னர் சீரமைக்கப்பட்டதாகச் சொன்னார்.  அந்தி சாயும் நேரத்தில் சென்றிருந்ததால், இருள் கவிவதற்குள் மொத்த கோவிலையும் விரைவாகப் பார்த்துவிடவேண்டுமென விரைவாகவே சுற்றிவந்தோம். கோவிலுக்கு வெளியே இடப்புறத்தில் இருந்த வீடுகள்தான் கோவில் தேவதாசிகள், ஓதுவார்களின் குடியிருப்பாக இருந்தது. இப்பொழுது அவர்களின் வழித்தோன்றல்கள் வாழ்கின்றனர். ஆண்டுக்கொரு முறை ஒன்றுகூடி கோவிலில் பந்தலமைத்து விழா நடத்துவார்கள் என்றார். 

                                                    கங்கை கொண்ட சோழபுரம்


தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் என்பவர்களைப் பற்றி கல்லூரிக் காலத்தில் விரிவுரைஞர் தமிழ்மாறன் சொல்லித்தான் தெரியவந்தது. தேவரடியார் என்பது எப்படி வசவு சொல்லாக மாறியது என்பதைக் கோபமும் ஆற்றாமையும் பொங்க தமிழ்மாறன் சொன்னது நன்கு நினைவில் இருக்கிறது. அந்த வசவுச்சொல்லைப் பின்னாளில் கேட்கும் போதெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பின்னணியில் இருக்கும் வரலாற்றை நினைத்துக் கொள்வேன். கோவையிலிருந்து தஞ்சைக்கு வரும் பயணம் மிக நீண்டதாக இருந்தது. வழியில் இருந்த ஊர்ப்பெயர்கள், கோவில்கள் ஒட்டி எதாவது ஒரு செய்தியை ஜி.எஸ்.எஸ்.வி நவீன் சொல்ல ம.நவீனும் நானும் கேட்டு வந்தோம். எதோ ஒர் ஊரினைக் கடக்கும் இரவு பொழுதில் , ஜி.எஸ்.எஸ்.வி நவீன், தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதால் அவர்கள் பேணி வந்த கலைகள் எப்படி தடம் தெரியாமல் அழிந்தன என்பதைப் பற்றிச் சொன்னார். தேவரடியார் முறைக்குப் பின்னால் இருந்த சுரண்டல், சமூகப்பார்வை ஆகியவற்றுக்கு அப்பால் அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் கோவிலுக்கும் உரித்தானதாக இருந்த சில கலைகளின் பேணுநர்களாக இருந்தனர். தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் பொதுச்சமூகத்தின் அங்கமான போது கலைகள் பேணுநரின்றி அழிந்து போனது. பொதுச்சமூகத்துடன் இணைய முடியாமல் பொருளாதார அடிப்படையில் சீரழிந்தனர். தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த அவிநாசி லிங்கம் செட்டியார், தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் வசமிருக்கும் கலைச்செல்வங்கள் பாதுகாக்கப்படுவதையும் பொதுச்சமூகத்துடன் அவர்கள் இணைவதற்கான சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு சொன்னார் என்றும் ஜி.எஸ்.எஸ் வி நவீன் சொன்னார். ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தி அல்லது சுரண்டலுக்கு ஆளாக்கித்தான் கலைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை; காலமே எவை தங்கும் என்பதை முடிவு செய்யும் என எழுத்தாளர் ம.நவீன் சொன்னார்.  எனக்கும் அந்தக் கருத்து உடன்பாடாகவே இருந்தது.

தஞ்சைக்குச் சென்றிருந்த போது தஞ்சை பெரிய கோவிலைச் சென்று கண்டோம்.  கோவிலுக்கு வெளியே இருந்த வெளிச்சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த அறைகளில்தான் தேவதாசிக்கள் வாழ்ந்தார்கள் எனத் தான் வாசித்திருந்ததாக நவீன் சொன்னார்.  வெளியே மழை பெய்து கொண்டிருந்ததால், அறைகளுக்கு வெளியே இருந்த நடைபாதைத் தூண்களில் அமர்ந்து கொண்டோம். அங்கிருந்து பார்க்கையில், செந்நிறத்தில் பிரம்மாண்டமாய் கோவில் காட்சியளித்தது. அந்த அறைகளில் இப்பொழுது வைக்கப்பட்டிருக்கும் சந்நிதிகளிலிருந்து எலிகள் இங்குமங்குமாய் ஒடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் மராட்டியர் காலத்து ஓவியங்கள் இருந்தன. அதற்கு வெளியே சிறைக்கதவுகள் போல இரும்புக்கதவுகள் இருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தேன். மன்னராட்சிக் காலத்தில் அரசு மானியங்களுடன் பீடுற வாழ்ந்தனர் என்றே வாசித்திருக்கிறேன். அத்தகைய காலத்தில் எழுப்பப்பட்ட அறைகளில் வாழ்ந்தவர்கள் பின்னாளில் காலனித்துவத்தின் வருகையால் ஜமீந்தாரிகள், நில உடைமையாளர்களை நத்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு கோவிலின் வரலாறு, பண்பாட்டுப் பின்னணியுடன் தொடர்புடைய தனித்த கலைகளைப் பேணி இறைச்சேவை புரிந்து கொண்டிருந்தவர்கள் கால மாற்றத்தால் அதற்குள் சிறை போன வரலாற்றை நினைவுறுத்துவதாகவே அந்த இரும்புக்கதவுகளைப் பார்த்து வந்தேன். அந்த இரும்புக்கதவுகளுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கிறது.

                           சுற்றுச்சுவர் அறைகளிலிருந்து தஞ்சைக்கோவில்

பி.குறிப்பு ;- நீலி இதழில் எழுத்தாளர் சுசித்ராவின் ஒரு தலைமுறையின் விதி என்னும் கட்டுரை  தேவதாசிகளின் வாழ்வை கலை, கலைஞர்கள், வாழ்வு, கால மாற்றம் எனும் விரிவான பின்னணியில் ஆராய்கிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...