முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

நினைவுச்சின்னம் நாவல் வாசிப்பனுபவம்

அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவலை வாசித்தேன். மலாயாவில் நிகழ்ந்த ஜப்பானியப் படையெடுப்பின் போது பர்மாவுக்கும் சயாம் (தாய்லாந்து) இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 1942 இல் தொடங்கிய பணிகள் 1944 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய பதினான்கு மாதங்கள் நீண்டன. முறையான உணவு, இட, சுகாதார வசதியின்றி ரயில் பாதை அமைக்க அழைத்துச் செல்லப்பட்ட மலாயாத் தமிழர்கள், ஆங்கிலேயப் போர்க்கைதிகள் உட்பட நூறாயிரத்துக்கும் அதிகமானோர் நோய்களாலும் ஜப்பானியரின் அடக்குமுறையான பணிச்சூழலாலும் இறந்து போயினர். இந்தக் கொடும் வரலாற்றை மையப்படுத்தியே ரெங்கசாமி நினைவுச்சின்னம் நாவலை எழுதியிருக்கிறார்.

சிலாங்கூரில் இருக்கும் புரூக்லேன்ஸ் தோட்டத்தில் இருந்து ரயில் கட்டுமானப்பணிக்கு அழைத்துச் செல்லப்படும் 30 தொழிலாளர்கள் கொண்ட குழுவொன்றே நாவலில் முதன்மையாக இடம்பெறுகிறது. அந்தக் குழுவில் உடல் வலிமையும் துணிவும் மிக்க இளைஞனான இடும்பனே நாவலின் நாயகன். அந்த 30 தொழிலாளர்களும் கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் திறந்த வெளி சரக்கு ரயில் வண்டிகளில் சியாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 15 பேர் மட்டுமே அமர முடிந்த ரயில் வண்டியில் 30 தொழிலாளர்கள் நெருக்கியடித்துப் பயணம் செய்கின்றனர். தோட்டத்து கங்காணியான காடப்பன், காவல்காரர் கந்தன், வெத்தியப்பன், வெள்ளையம்மாள், பரட்டையன், பாஞ்சாலை, தொப்ளான், கூளையன், சொக்கன் இப்படியாக 30 பேர் அந்த பயணத்தில் இணைந்திருக்கின்றனர். ரயில் பயணத்தின் போதே நோய்களால் ஒவ்வொருவராக இறக்கத் தொடங்குகின்றனர். சயாமுக்குச் சென்று சேர்ந்த பின்னால், காட்டுப் பகுதியில் தண்டவாள இரும்புகளைத் தூக்கிக் கொண்டு போம் போங் எனும் இடத்திற்கு நடந்து செல்கின்றனர். மூங்கில் கட்டுமானத்தால் ஆன திறந்தவெளிக் குடியிருப்புகள் (பூத்தாய்கள்) மோசமான உணவுகள், அடிப்படை வசதிகள் இன்மை, அடக்குமுறையான பணிச்சூழலில் ஒவ்வொருவராக இறக்கின்றனர். நாவலின் பெரும்பகுதியென்பதே அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தொழிலாளர்களின் உயிரை எவ்வாறு காவு வாங்கிறதென்பதன் சித்திரமே. அடுத்தடுத்து மரணங்களும் இழப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் கொடும் சூழலுக்குப் பழகிப் போன தொழிலாளர்கள் போர் முடிந்து ஜப்பானியர்கள் சரணடைந்தபின் மலாயாவுக்குத் திரும்புகின்றனர்.



ரெங்கசாமியின் நாவல்களின் அடிப்படையான பலமென்பதே அவரின் விரிவான தேடலிலும் முயற்சியாலும் திரட்டிய தகவல்களும் நேரடி அனுபவப்பதிவுகளும்தான். அறிந்த வரலாற்றைச் சட்டகமாக்கி அதற்குள் தான் பெற்ற கேட்ட பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் சம்பவங்களாகக் கோர்த்துச் சொல்லும் நுட்பம் ரெங்கசாமிக்கு வாய்த்திருக்கிறது. ஜப்பானிய படை கைபற்றிய மலாயாவின் அடிப்படைக் கட்டமைப்புகளான சாலை வசதி, நீர், தொடர்பு வசதிகள் ஆகியவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் தகர்த்தெறியப்பட்டிருந்தது. தோட்டங்களிலும் பணிகள் முடங்கியிருந்த சூழலில்தான் ஜப்பானியர்கள் ரயில் பாதை அமைப்புக்காக நாடு முழுவதும் தமிழர்களைக் கட்டாயப்படுத்தியும் நாள் கூலியைச் சொல்லியும் திரட்டுகிறார்கள். அவ்வாறாகத் திரட்டப்பட்ட தமிழர்கள் ரயிலேறி சியாமுக்குச் சென்றது தொடங்கி திரும்பி வருவது வரையிலான காலக்கோட்டில் இடங்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் கொண்டு தன்னுடைய தகவல்களையும் அனுபவங்களையும் ரெங்கசாமி மிகச் சரளமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். உதாரணத்துக்கு, சயாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தங்கவைக்கப்பட்ட மூங்கில்களால் கட்டப்பட்ட பூத்தாய்கள் எனப்படும் குடியிருப்புகளை ரெங்கசாமி விவரிக்கின்ற இடம் அதனைக் கற்பனையால் நிகழ்த்திக் காட்டுகிறது. முப்புறமும் திறந்த வெளி மூங்கில் கொட்டகைகளில் தாழ்வாக கூரைகள் கொண்ட குடியிருப்புகள் என அதனை வாசிப்பில் காட்சியாகக் கற்பனை செய்ய முடிகிறது. அரிசி மூட்டைகளை உயர அடுக்கி யானைகள் தூக்கி வரும் மரக்கட்டைகளைச் சீராக அடுக்கி இரும்பு கொக்கிகளால் இணைக்கப்படும் குவாய் பாலக் கட்டுமானத்தையும் சொல்லலாம். அப்படியே, பாலக் கட்டுமானம், உணவுகள், நோய்கள் என எல்லாவற்றின் பின்னும் சீரான தகவல்கள் தொகுப்பு தெரிகிறது. இந்த நாவலை வாசிக்கும் போதே, தமிழர்களின் துயரைப் பதிவு செய்யவே நாவல் எழுதப்பட்டிருக்கிறதென்பதை நாவலில் நேரடியாக வெளிப்படுகின்ற ஆசிரியர் குரல் தொடங்கி அவர் காட்டும் சித்திரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதனைத் தெளிவான கால, இட, வரலாற்றுத் தருணங்களின் வரையறைகளோடு ரங்கசாமியில் தர முடிந்திருக்கிறது.

ஆனால், நாவலில் வரலாற்றுத் தருணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற அளவு வரலாற்றுணர்வு வெளிப்படவில்லை எனலாம். ரெங்கசாமி காட்டும் உலகமென்பது கொடூரமான தண்டனைகள், அடக்குமுறைகள் மூலம் தமிழர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கும் ஜப்பானியர்கள், அவர்களின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து வேலை செய்யும் அப்பாவித் தமிழர்கள், தமிழர்களைக் காட்டிலும் சற்றே மேம்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் ஆங்கிலேயர்களால் ஆனதாகவே இருக்கின்றது. முற்றிலும் புதிய, கொடும் வேலைச்சூழலைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சூழலின் சித்திரிப்பென்பதும் உயிர்பற்றிருப்பதாகவே தோன்றுகிறது. எல்லா இழப்புகளையும் நோய்களையும் உடனுக்குடன் மறக்கவும் பழகிக்கொள்ளவும் செய்கின்றனர். அதே சமயம், தமிழர்களின் பேச்சு மொழியாகக் காட்டப்படுவதிலும் பெரும்பகுதி புலம்பல்களாகவும் அச்சமும் குழப்பமும் மிகுந்த சொற்களாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதில் இருப்பது ஒரு பார்வையாளர் கோணமெனச் சொல்லலாம். நாவலின் நெடுகே கொடுந்தருணங்களை எதிர்கொள்கின்ற தமிழ் பாத்திரங்களைச் சித்திரிக்கும் போது ஊடே பழந்தமிழர் பெருமையும் அதனால் உசுப்பப்பட்டு அவர்கள் எதிர்தாக்குதல் புரிவதையும் காட்சிப்படுத்துகிறார். அந்தத் தாக்குதல்கள் யாவும் நடக்கச் சாத்தியமானவையாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இருந்தப்போதும், வீரம் செறிந்த தமிழர்கள் ஜப்பானியர்களின் கொடுங்கரங்களுக்குள் கிடந்து அல்லாடுகின்றனர் என்ற பின்னணி அதற்குள் இருக்கும் மனிதர்களின் தனித்தன்மையைச் சுருக்கியளிப்பதாக இருக்கின்றது. இதனாலே நாவல் தமிழர்களின் வாழ்வு படும் இன்னல்கள் எனும் சுருங்கிய வரலாற்றுக் கோணத்தையே அளிப்பதாக மாறுகிறது.

அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவலை வரலாற்றுத் தருணங்களைக் கொண்டு நாவல் வடிவத்துக்குள் கொண்டு வரப்பட்ட முன்னோடி முயற்சி என்ற வகையில் முக்கியமானது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...