2023
ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு விருந்தினராகச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பின்
ஊடே இன்னொரு முக்கியமான பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. அவ்வாண்டு விஷ்ணுபுரம்
விருதுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மலாய் மொழி எழுத்தாளர் எஸ்.எம்ஷாக்கிரின் அவைக்கு மட்டுறுத்துணராகப் பொறுப்பேற்று நடத்துவது. முன்னரே ஷாக்கிரை ஒரு
முறை சந்தித்து அவருடைய படைப்புலக அறிமுகத்தைக் குறித்து உரையாடியதைத் தவிர பெரிய முன்
தயாரிப்புகள் இல்லாமல்தான் அந்த அவையை வழிநடத்தினேன். அந்த அவையில் முன்வைக்கப்பட்ட
கேள்விகள் வழியேதான் மலேசியாவில் இருக்கும் பன்மொழி இலக்கியச் சூழல் எவ்வித உரையாடல்களும்
இன்றி தத்தம் தனித்தனித் தீவாந்திரங்களாகச் செயற்படுகிறதென்ற உணர்வு உறுதிபட்டுக் கொண்டே
வந்தது. அதற்கடுத்த என்னுடைய அவையிலும் கூட மலாய் மொழி இலக்கியத்தை வாசிக்கிறீர்களா…
அதன் செல்திசை குறித்துச் சொல்லுங்கள் போன்ற கேள்விகளுக்குத் தெரியாதென்ற பதிலை அளிக்க
மிகுந்த குற்றவுணர்வாக இருந்தது. நேரடி அனுபவங்களிலிருந்தும் செய்திகளிலிருந்தும் பெறும்
தகவல்களைக் கொண்டு மற்ற மொழி இலக்கியங்களை அணுகுவதும் அபத்தமாக இருந்தது.
ஷாக்கிரின் அவையில் கேட்கப்பட்ட பல கேள்விகள் மலேசிய அரசியலில் பெருகிவரும் மதவாதப் போக்கு இலக்கியத்துக்குத் தடையாக இருக்கிறதா என்ற கேள்வியுடன் தொடர்புடையதாக இருந்தது. அந்தக் கேள்விக்கு மலாய் இலக்கியப் போக்கின் தொடக்கக் கால நாவல்கள் எவ்வாறு மதம், இனம் என அரசியல் குறுக்கிச் செல்லும் பாதையிலிருந்து விலகியிருந்தது என்பதைக் குறிப்பிட்டார். அவருடைய தந்தையான எஸ்.ஒத்மான் கிளாந்தான் எழுதிய ஜுவாரா (Juara) நாவல் எனும் நாவலைப் பற்றியும் குறிப்பிட்டார். தென் தாய்லாந்துக்கும் கிளாந்தானுக்கும் பொதுவாக இருந்த காளைச் சண்டையின் தடத்தை அந்நாவல் பேசுவதைக் குறிப்பிட்டார். அதன் சுவாரசியமான கதையோட்டம் பலவகையிலும் சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை நினைவுப்படுத்துவதாய் இருந்தது. அவர் சொன்னதுமே அந்த நாவலை என்றாவது வாசிக்க வேண்டுமென நினைவில் வைத்துக் கொண்டேன்.
ஷாக்கிரின் தந்தையான சைட் ஒத்மான் சைட் ஒமார் (Syed Othman syed omar) 13 நவம்பர் 1939 இல் கிளாந்தான் மாநிலத்தில் பிறந்தவர். மலாய் படைப்புலகத்தில் தான் பிறந்த மாநிலமான கிளாந்தான் மாநிலத்தின் பின்னொட்டுடன் ஒத்மான் கிளாந்தான் என்றே பரவலாக அறியப்படுகிறார். 183 சிறுகதைகள், 15 நாவல்கள், 366 கட்டுரைகளும் விமர்சனங்கள் என மலாய் புனைவிலக்கியச் சூழலில் விரிவாக இயங்கியவர். 2003 ஆம் ஆண்டு மலேசிய அரசு தேசிய இலக்கியவாதி எனும் இலக்கியத்துக்கான உயரிய விருதை ஒத்மான் கிளாந்தானுக்கு வழங்கி சிறப்பித்தது. அவருடைய புகழ்பெற்ற நாவலான ஜுவாரா நாவல் 1976 ஆம் ஆண்டு வெளியானது.
தாய்லாந்து நாட்டுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கின்ற கிளாந்தான் மாநிலத்தின் பண்பாடு கலை போன்றவற்றில் தாய்லாந்தின் தாக்கம் பலவகையிலும் அழுத்தமாக இருந்து வந்திருக்கின்றது. குறிப்பாக மலாய்க்காரர்கள் வாழும் தென் தாய்லாந்து பகுதி மொழி, பண்பாடு, கலை, சமயம் எனப் பலவகையிலும் கிளாந்தான் மாநிலத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இன்றைக்கு இஸ்லாமிய அரசியல் மேலோங்கிய பகுதியாகக் கிளாந்தான் அறியப்படுகிறது. ஜுவாரா நாவல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலக்கட்டத்தில் கிளாந்தான் பகுதிக்கும் தென் தாய்லாந்து பகுதிக்கும் பொதுவாக இருந்து வந்த காளைச் சண்டையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. தென் தாய்லாந்து பகுதியில் காளைகளை மோதவிட்டு நடக்கும் போட்டி சூதாட்டமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சண்டைகளுக்கான மாடுகளை வளர்த்து களத்தில் நின்று பொருதவிடுபவர்களை ஜுவாரா அல்லது ஜூகோ (கிளாந்தான் மாநில வட்டார வழக்கில் திரிபடைந்த மலாய்) என்கின்றனர். பின்னாளில், விலங்குகள் துன்புறுத்தல், இஸ்லாமிய மதக் கட்டுப்பாடுகள் காரணமாக காளைச் சண்டைகள் கிளாந்தானில் மெல்ல வழக்கொழிந்து போனது.
அவ்வாறாக,
கிளாந்தானில் இருந்து தென் தாய்லாந்துக்குக் குடியேறிய ஜூகோவான மாமாட்டையே ஜுவாரா நாவல்
மையப்படுத்துகிறது. மலேசியாவின் சுதந்திரத்துக்குப் பெரிதும் போராடிய மாமாட் சுதந்திரத்துக்குப்
பிந்தைய இரு தேர்தல்களிலும் தோல்வியுறுகிறார். கிளாந்தானில் பேரலையாகத் திரளும் மத
அரசியல் சுதந்திரப் போராட்டத்தை முன்னிறுத்திய அரசியலை ஓரங்கட்டுகிறது. தேர்தலில் தோற்றால்
அரசியலிருந்து விலகுவேன் என்ற சவாலை ஏற்றுக் கொண்டு குடும்பத்துடன் தென் தாய்லாந்துக்கு
மாமாட் குடிபெயர்கிறார். தென் தாய்லாந்தில் நடக்கும் காளைச் சண்டையில் தான் வாங்கி
வளர்க்கும் சாலேட் எனும் காளையைக் கொண்டு பல போட்டிகளையும் வென்று காட்டுகிறார். வளைந்த
கொம்புகளைக் கொண்ட சாலேட் போட்டிகளில் எதிர் காளையை எளிதில் வீழ்த்திக் கொல்கிறது.
சாலேட்டை மாமாட்டின் நண்பரான லாசிம் வளர்த்துப் பயிற்சியளிக்கிறார். காளைச் சண்டையொன்றில்
பாக் இசா வளர்க்கும் லங்சாட் எனும் காளையைக் குத்திக் கொன்று விடுகிறது சாலேட். அதனால்
ஏற்படும் அவமானத்தைத் தீர்க்க மாடு வளர்க்கும் லாசிமையும் சாலேட் காளையும் இசா சுட்டுக்
கொன்று கிளாந்தான் மாநிலத்துக்குத் தலைமறைவாகிறான். பாக் இசாவைக் கொன்று பழி தீர்க்க
மாமாட்டும் அவருடைய வகையறாக்களான மாட் சான், ஜாலி, சலிம் ஆகியோர் பாக் இசாவைத் தேடியலைகின்றனர்.
இதற்கிடையில், அரால் எனும் இன்னொரு இளங்காளைக்குப் பயிற்சியளித்துச் சண்டைக்கு மாமாட்டும்
அவருடைய மாணவர்களும் தயார்படுத்துகின்றனர். எதற்கும் அடங்காததாக வெறி கொண்டு வளரும்
அராலையும் வீழ்த்த அதற்குத் தரப்படும் நீரில் மதுவைக் கலந்து கொல்ல பார்க்கின்றனர்
இசாவின் மாணவர்கள்.
இதனால்,
மாமாட், இசா ஆகிய இரு குழுவுக்கும் இடையிலான பகை இன்னும் முற்றுகிறது. இசாவின் கையாட்களில்
ஒருவனான டோலா முண்டோக்கை மாமாட்டின் மாணவர்கள் கொன்றுவிடுகின்றனர். அவர்களுக்கு இடையிலான
மோதலுக்குப் பின்னால் இருக்கும் வன்மம் கொள்ளும் பரிணாமத்தையே ஜுவாரா நாவல் பேசுகிறது.
விலங்குகளை
மோதவிட்டு நடக்கும் போட்டிகள் உலகம் முழுவதும் இருக்கும் தொன்மையான பண்பாடுகளில் ஓரங்கமாக
இன்றளவும் இருந்து வருகிறது. சி.சு.செல்லப்பா எழுதி தமிழில் வெளியான வாடிவாசல் நாவலில்
ஜல்லிக்கட்டு எனும் மாடுபிடி போட்டிக்குப் பின்னால் மனிதர்களுக்குள் இருக்கும் வன்முறை
உணர்வைக் காட்டப்பட்டிருக்கும். ஜுவாரா நாவல் காளைச் சண்டை வழியே மனித உளவியலில் உறைந்திருக்கும்
வன்முறை குணத்தை மாமாட் பாத்திரத்தின் வழி பேசுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்காற்றுகின்ற
மாமாட் தேர்தல் அரசியலில் தோற்றுப் போகிறார். அத்துடன், மாமாட்டின் மருமகன் மாற்று
அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் அவருடைய மகள் மணவிலக்கு பெற்று
பிறந்த வீட்டுக்கே திரும்புகிறாள். மற்றொரு மகள், திருமணமான சில மாதங்களிலே கணவன் இறந்து
இளம்விதவையாக வீட்டுக்குத் திரும்புகிறாள். தாய்லாந்தில் வாழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப்
பெற்று மாமாட் குடும்பத்துடன் தாய்லாந்தில் அடைக்கலமாகி வாழ்கிறார். அரசியல், வாழ்க்கை
ஆகிய இரண்டு தளங்களிலும் தோல்வியுற்ற மனிதராகவே மாமாட் இருக்கிறார். தோற்ற மாமாட் தன்னை
நிருபிக்கும் களமாக காளைச் சண்டையைக் களத்தையே காண்கிறார். அவருக்குள் இருக்கும் அதிகாரத்துக்கான
விழைவு வன்முறையின் வாயிலாக அதற்கான வடிகாலைத் தேடிக் கொள்கிறது.
மாடுகளின்
அங்கங்களைக் கூர்ந்து பார்த்து சிறந்த மாட்டைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மூர்க்கமான
பயிற்சிகளை மாமாட் அளிக்கிறார். சண்டையின் போது மூர்க்கமாகப் பாய்ந்து மண்ணை மூட்ட
வரும் எதிர்க்காளையின் மீது காளையை ஏவிவிட்டு கழுத்தைக் குத்திக் கிழித்துச் சூடான
ரத்தம் களத்தில் வீழ்வதைக் கண்டு தன்னை நிருபித்துக் கொள்கிறார். அவருடைய காளையும்
அதனை வளர்த்த நண்பனையும் கொன்றதற்குப் பழி வாங்குதலென்பது அவருக்கு விடுக்கப்பட்டிருக்கும்
நேரடிச்சவால். கொலையாளியைத் தேடும் பயணத்தின் போது தான் சுதந்திரத்துக்குப் போராடித்
தேர்தலில் தோல்வியுற்ற கிளாந்தான் மாநிலத்துக்குச் செல்கிறார். தான் தோற்கடிக்கப்பட்ட
கசப்பை மீண்டுமொருமுறை அங்கு உணர்கிறார்.
என்னுடைய போராட்டத்தில்
நான் மிகவும் தளர்ந்துவிட்டேன். ஏனென்றால், நான் மிக பலவீனமாக இருக்கிறேன். இந்தத்
தளர்வால், என்னுடைய ஆற்றல் தேவையற்றுப் போய்விட்டது. மக்களும் என்னைப் புறக்கணித்துவிட்டனர்.
போராட்டம் இன்னுமே தேவைபடுகிறது. ஆனால், என்ன செவது. மக்கள்தானே யாரை எங்கே வைப்பதென்று
தீர்மானிக்கின்றனர். மக்களுக்கு நாம் தேவையில்லை என்பதை வலியுறுத்திவிட்டால், சென்று
வருகிறேன் என உச்சரித்து அரசியலை விட்டுச்
செல்ல வேண்டியதுதான்.
நாவலிலிருந்து
கொலையாளியைக்
கண்டுபிடிக்கும் பயணம் தோல்வியில் முடிய மாமாட் இன்னுமே தளர்கிறார். தான் வளர்த்த அரால்
இளங்காளைக்குக் கொடுக்கப்படும் மதுவினால் மூர்க்கமாகி மாமாட்டையே குத்திச் சரிக்கிறது.
அராலுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளின் போது தன்னுடைய தளர்ந்த உடலை எண்ணி மனதுக்குள்
ஓயாத அலைகழிப்பை உணர்கிறார். வாழ்வில் அடைந்திருக்கும் தொடர் சரிவுகளை ஈடுகட்ட அடங்காத
குரூரமான வெற்றியைத் தேடி அலைகழிக்கப்படுகிறார்.
மறுபடியும்,
அரால் எனும் காளையைப் போட்டிக்குத் தயார் செய்து வெல்வதன் வழி தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
மீட்டெடுக்கிறார். அந்தப் பயணத்தின் இறுதியில் இசாவைக் கண்டடைந்து அவனையும் சுட்டுக்
கொன்றப்பின் மண்ணில் சரிகிறார். விழித்தெழுகின்ற போது, இசா செத்துவிட்டான் என்ற செய்தியைக்
கேட்டு மாமாட் நிறைவுடன் சிரிக்கிறார். அந்த உச்சத் தருணம் வாழ்வில் மொத்தமாய்த் தோற்கடிக்கப்பட்ட
ஒருவனின் அகம் வன்முறையில் வாயிலாகக் கொள்ளும் குரூரமான நிறைவாக நாவலில் வருகிறது.
கிளாந்தானில்
மெல்ல காலூன்ற தொடங்குகிற மதம் சார்ந்த அரசியல் இயக்கம் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை
முன்னிறுத்திய அரசியலை ஓரங்கட்டும் பின்னணியை நாவல் எடுத்துக் கொள்கிறது. ஒத்மான் கிளாந்தானுக்குள்
இருக்கும் அரசியல் போக்கு மீதான விமர்சனக் குரலும் நாவலின் பல இடங்களில் ஒலிக்கிறது.
அதிகாரத்தைக் கைபற்ற அரசியலில் செய்யப்படும் முறைதவறிய உத்திகளை மாட்டுச் சண்டையுடன்
ஒப்பீட்டு விமர்சிக்கிறார். அந்த அரசியல் குரலே, மனித உளவியலை முழுமையாக ஊடுருவும்
களத்தை அதிகாரத்தை நோக்கிய மனிதர்களின் விழைவைச் சொல்வதாகச் சுருக்கவும் செய்கிறது.
தன்னுடைய
அரசியல் போராட்டத்தில் தோற்று உடலாலும் துவண்டு போன மாமாட்டைச் சுற்றிலும் இருக்கும்
மாணவர்களுக்கும் தனிப்பட்ட விழைவுகள் இருக்கின்றன. மனைவியை இழந்த மாட் சான்னுக்கும்
ஜாலிக்கும் அவருடைய மகள்களைத் திருமணம் செய்வதற்கான விருப்பம் இருக்கிறது. மாட் சான்னுக்கு
மலேசிய குடியுரிமை இல்லை. ஜாலியோ ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவன். இதனாலே, தன்னுடைய
மகள்களைத் தர மாமாட் தயங்குகிறார். லாசிமைக் கொன்றவனைத் தேடும் பயணத்தில் மாமாட்டுடன்
உடன் நிற்க இப்படி மற்றவர்களுக்கும் தனித்த விழைவுகளும் காரணங்களும் இருக்கின்றன. ஆனால்,
நாவல் அதன் மாமாட்டுக்குள் இருக்கும் அதிகார விழைவை முதன்மைப்படுத்துகிறது.
ஜுவாரா
நாவல் அளிக்கும் காளைச் சண்டைக் களத்தின் சித்திரிப்பு உயிரோட்டமாக இருக்கிறது. காளைச்
சண்டைக்கான மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் நுட்பம் தொடங்கி களத்தில் பொருதவிடுவது வரையில்
நுணுக்கமான தகவல்களையும் சித்திரிப்பையும் ஆசிரியர் வழங்குகிறார். உந்தியில் இரட்டைச்
சுழி உள்ள மாடு நன்கு சண்டையிடுமென அறியப்படுவதால் வாழை மட்டையைக் கொண்டு மாட்டின்
உந்தியின் தேய்த்துப் போலியாக சுழியை உருவாக்குகின்றனர். மாட்டின் வால் பகுதியைக் கொண்டு
அதன் சண்டையிடும் ஆற்றலைக் கண்டுபிடிக்கின்றனர். எதிர் மாடு மண்ணைக் கீறி மூர்க்கத்துடன்
பாய்ந்து வந்து கொம்புகள் மண்ணைத் தாழ்த்துவது வரையில் காத்திருந்து மாட்டை நோக்கிப்
பாயச் செய்து கழுத்தைக் குத்தச் செய்கின்றனர். போட்டியில் வெல்ல உருக்கிய இரும்பைத்
தடம் தெரியாமல் கொம்புகளில் பூசி மறைக்கும் வித்தையெனப் சண்டைக்குள் இருக்கும் பிறழ்
உத்திகளையும் சொல்கிறார்.
ஜுவாரா
நாவல் தன்னுடைய உயிரோட்டமான காளைச் சண்டைச் சித்திரிப்பாலும் மனிதர்களுக்குள் இருக்கும்
அதிகாரத்துக்கான விழைவு எவ்வாறு குரூரத்தை நோக்கி தள்ளுவதையும் பேசுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக