முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

அசோகமித்திரனின் இரண்டு கதைகள்

அசோகமித்திரனின் இந்திராவுக்கு வீணை கற்று கொள்ள வேண்டும், இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை ஆகிய இரண்டு சிறுகதைகளுக்குமான கால இடைவெளி 21 ஆண்டுகள். முதல் கதை 1959 இல் வெளிவந்திருக்கிறது.  ஒரு இளம்பெண்ணுக்கு உருவாகின்ற வீணை கற்கும் ஆசையின் வழியே நடுத்தரக் குடும்பத்தில் பெண்களின் நிலை தெரிய வருகிறது. இரண்டாம் கதை, அந்த ஆசை ஈடேறாமல் மனதுக்குள் ஏற்படுத்தி விடும் அந்தரங்கமான வடுவொன்றைப் பேசுகிறது. இரு கதைகளுமே குடும்பச் சூழல், நெருக்கடிக்களுக்குள் புதைந்து போயிருக்கின்ற ஒரு பெண்ணின் அந்தரங்கமான உணர்வுகளைச் சொல்லுகின்ற முக்கியமான கதைகள்.

முதல் கதையில் குடும்பச்சூழலை நேர்த்தியான சித்திரிப்புகளால் அசோகமித்திரன் காட்டுகிறார். விற்பனைப் பிரதிநிதியான அப்பா தேர்வைக் காரணம் காட்டி மகளின் இசை வகுப்புக்குச் செல்லும் ஆர்வத்தைக் கலைக்கிறார். இசை ரசனை இல்லாத அம்மா, கோவில் கச்சேரியில் பாடவிருக்கும் கலைஞரைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள கேள்விகளால் இந்திராவைத் துளைத்தெடுத்து கச்சேரியின் போது வாய் பிளந்து தூங்குகிறார். அண்ணனோ, சீட்டு விளையாடும் ஆர்வத்தால் கச்சேரிக்கு வரவில்லை. இந்தச் சூழலில் எதிர்வீட்டு சரோஜா தன் இசை ஆசிரியரான வைத்தீஸ்வரன் கோவில் சகோதரர்களின் இசை மகிமையைச் சொல்லி அவர்களிடமே இசை கற்கச் சொல்கிறாள். அவர்களைக் காண தங்கையைத் துணைக்கழைக்கிறாள். அவளும் இவளைப் பொருட்படுத்தவில்லை. தனியாகவே சென்று இசை வகுப்பு பற்றி விசாரிக்கச் சென்று வந்தவளை அம்மா ஏசுகிறாள். அம்மாவின் ஏச்சை வாங்கியும் வீட்டு வேலைகளை அவள்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அந்தக் கோபத்தை அம்மாவுடனான படுக்கை இடைவெளியை ஒரு சாண் கூட்டுவதன் மூலம் மட்டுமே இந்திராவால் காட்ட முடிகிறது. நள்ளிரவில் மகள் விசாரித்த இசை வகுப்பைப் பற்றி அம்மா அறிந்து கொள்கிறாள். கொத்தமல்லி கொத்தைக் கூட பேரம் பேசி வாங்கும் அம்மா 20 ரூபாய் இசை வகுப்பு கட்டணத்தைக் கேட்டு அதிர்ந்த போனாலும் மகளை வகுப்புக்கு அனுப்ப சம்மதிக்கிறாள். ஆனாலும், அப்பா அனுமதிக்கமாட்டார் என இந்திரா தயங்குகிறாள்.  கட்டுச்செட்டாகக் குடும்பத்தை நடத்தியும் மாதக்கடைசியில் அக்கம் பக்கத்தாரிடம் அம்மாத்தான் கடன் வாங்குகிறாள். அந்த நெருக்கடிக்குள் மகளின் இசை ஆர்வத்தையும் அடக்கிவிட அவளின் மனம் காரணங்களைக் கண்டறிகிறது. இன்னும் ஈராண்டுகளில் திருமண வரன் கூடி வரும் போது பாடல்களைப் பாட வேண்டும். வீடு கட்ட செங்கல் சுண்ணாம்பு வாங்கும் மூலதனத்தைப் போல இசை வகுப்புக்குச் செல்வதும் திருமண வரன் கூடுவதற்கான மூலதனமே என அப்பாவிடம் சொல்வதற்கான காரணத்தைச் சொல்லி மகளை வகுப்பில் சேரச் சொல்கிறாள். மகள் இசை பயில அனுமதிக்க கலை ரசனையோ பொருளாதாரப் பலமோ அம்மாவுக்குத் தேவைப்படவில்லை. மகளின் அந்தரங்க ஆசையை அறிந்து கொள்ளும் நுண்ணுணர்வே அவளுக்குப் போதுமானதாக இருக்கிறது. அப்படி அனுமதித்த அடுத்தகணமே, அம்மா சத்தமின்றி உடல் குலுங்கி அழத் தொடங்குகிறாள். மகளின் நுண்ணுணர்வை அனுமதித்த அம்மாவுக்கு அடுத்த கணமே குடும்பச் சுமையில் கூடப்போகும் 20 ரூபாய்க்கான அலைச்சலும் அதற்காகக் கணவனிடம் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளும் சேர்ந்து அச்சுறுத்துகின்றன. மகளின் ஆசையை நிறைவேற்றிச் சற்றே பறந்து கொண்டிருந்தவளின் நுண்ணுணர்வு இறகுகளின் மீது வாழ்வின் அழுத்தங்கள் படிந்து அழத் தொடங்குகிறாள்.

உள்ளூர அம்மாவும் அப்படியான பல ஆசைகளைக் கைவிட்ட துயரை அறிந்தவளாகவே இருக்கக்கூடும். குடும்பச் சுமைகளின் முன்னே மகளின் ஆசையும் நிராகரிக்கப்படத்தான் போகிறது. அந்தத் துயரை அறிந்தவளாகத்தான் அம்மா தனக்குள்ளே அழுது கொள்கிறாள்.

 

இந்தக் கதையின் தொடர்ச்சியாக 1980 ஆம் ஆண்டு இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை எனும் சிறுகதையை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். இக்கதையில் நடுத்தர வயதை அடைந்திருக்கும் இந்திராவால் வீணையைக் கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. அவளின் மகனையாவது இசைவகுப்புக்கு அனுப்ப எண்ணுகிறாள். ஆனால், அவனுக்கும் ஆர்வமில்லாததால் இசை வகுப்புக்குச் செல்ல மறுக்கிறான். இசை வகுப்புக்குச் செல்ல முடியாத இளம்பருவத்து நினைவுகளில் ஒன்றை எண்ணிக் கொள்கிறாள். அவளுடைய அண்ணன்களுக்கு அறிமுகமான சங்கரன் எனும் நண்பன் வீட்டுக்கு வரத் தொடங்குகிறான். அசட்டுத்தனமான விவகாரங்களை வாதம் செய்கின்ற அண்ணன்களுக்கு வாய்த்த நண்பனான சங்கரன் எல்லாவற்றையும் தெளிவாக அணுகுகிறான். ஒரு நாள், இந்திராவின் மீது தனக்கிருக்கும் காதலைச் சொல்லிவிடுகிறான். ஆனால், அவனுடைய ஆசையைச் சொல்லி விட்ட சில நாட்களிலே வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொள்கிறான். இந்த நினைவு மீட்டலுக்குப் பின்னர் எதிரில் சங்கரன் தோன்றுகிறான். இந்திராவுக்கும் அம்மாவுக்கும் இருக்கின்ற நெருக்கத்தைக் காரணங்காட்டி அவளுடைய அண்ணன் தன்னைக் காத்திருக்கச் சொன்னதாக சங்கரன் கூறுகிறான். அம்மாவின் சம்மதம் கிடைக்காததாலும் இந்திராவும் தன் காதலைச் சொல்லாததாலுமே தான் ஒதுங்கி கொண்டதாகச் சொல்கிறான். அதைச் சொல்லிவிட்டுச் சட்டென வீட்டிலிருந்து வெளியேறுகிறான். மகனிடம் சொல்லி அவனை அழைத்து வரச்சொல்லித் தெருவுக்கு அனுப்புகிறாள். அங்கு யாருமே இல்லையெனச் சொல்லும் மகனை எண்ணி அவனைப் பொறுத்தவரையில் சங்கரனும் ஒன்றுத்தான் சர்தார் சிங்கும் ஒன்றுத்தான் எனச் சொல்லிக் கொள்கிறாள். கடைசியாக, சங்கரன் இறந்தே பல ஆண்டுகள் ஆகியிருந்தன என்பது இந்திராவுக்குத் தெரியாதெனக் கதையை முடிக்கின்றார்.

இசை கற்க முடியாத ஏமாற்றம் ஒருபக்கமிருக்க இன்னொருபக்கம் மனதுக்குள் இருந்த காதலும் சேர்ந்தே புதைந்து போன சோகத்தையும் நினைத்துப் பார்க்கிறாள். முதல் கதையில் அம்மா தனக்குள் குலுங்கி அழுது கொண்டதைப் போல காதலின் இழப்பையும் தனக்குள்ளே கற்பனையாக நிகழ்த்திக் கடந்து போகின்றாள். நுண்ணுணர்வு கொண்டவளான இந்திராவால் துயரைக் கற்பனையால் கடந்து போக முடிகிறதே தவிர ஏமாற்றங்களிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் தப்பிக்க முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...