இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன்.
அதன்படி மூன்று மாதங்களாக மூன்று நாவல்களை வாசித்திருந்தேன். மலேசியாவில் வழங்கப்படும் தேசிய இலக்கியவாதி விருது
பெற்றவர்களின் நாவல்கள், முன்னோடிகளின் நாவல்கள் இப்படியாகத்தான் தெரிவு செய்து வாசித்திருந்தேன்.
ஆனால், அந்தத் தெரிவு சரியானது தானா என்ற குழப்பம் இடையில் எழுந்தது. மலாய் எழுத்தாளர்
நண்பர் அஸ்ரினிடம் சில நாவல் பரிந்துரைகளைக் கேட்டேன். அவர் சில நாவல்களைப் பரிந்துரை
செய்தார். நான் அதுவரை வாசித்திருந்த நாவல்களின் களம், அணுகுமுறையிலிருந்து முற்றிலும்
மாறுபட்டவையாக சில நாவல்களைப் பரிந்துரை செய்தார். அவர் குறிப்பிட்ட எல்லா நாவல்களுமே
மறுபதிப்பு காணாத நாவல்கள். அந்த நாவல்களைத் தேடிக் கண்டையும் முயற்சியில் ஒவ்வொரு
மாதமாக வாசிப்பு தடைபட்டுக் கொண்டே வந்தது. உடனே வாசிப்பும் தடைபட்டு விட்டது. அதுவரையில்
வாசித்திருந்த மூன்று நாவல்களும் இலக்கிய அடிப்படையில் கலவையானதாக இருந்தது. எதற்காக
மலாய் நாவலை வாசிக்கின்றோம் என்ற கேள்வியெழுந்தது. அறியப்படாத மலாய் சமூகத்தின் வாழ்வை
அல்லது அவற்றின் இலக்கியத்தன்மையை உணர வாசிக்கின்றேனா என்ற கேள்வியெழுந்தது. எந்தத்
தீர்மானமான முடிவுக்கும் வரமுடியவில்லை. வாசித்துப் பார்த்துத்தான் அதற்கான பதிலைக்
கண்டடைய முடியும். ஆகவே, மறுபடியும் அதிகமும் அறியப்பட்ட நாவல்களிலிருந்தே வாசிப்பைத்
தொடர்வதென்ற முடிவுக்கு வந்தேன்.
அதன்படி 2015 ஆம் ஆண்டு தேசிய இலக்கியவாதி விருதை வென்ற சூரினா ஹாசானின்
Hatimu Aisyah (ஆயிஷாவின் இதயம்) என்ற நாவலை வாசிக்கத் தொடங்கினேன். மலேசியாவின் கெடா
மாநிலத்தில் பிறந்த சூரினா ஹசான் தென்கிழக்கு ஆசியா அளவில் இலக்கியத்துக்காகத் தரப்படும்
உயரிய விருதான SEA Writer விருதைப் பெற்றிருக்கிறார். நாவல், கவிதை, சிறுகதை, தன்வரலாறு
ஆகிய இலக்கிய வடிவங்களை எழுதியிருக்கிறார். Hatimu Aisyah நாவல் 1991 ஆம் ஆண்டு வெளியீடப்பட்டிருக்கிறது.
பழைமையும் மரபான வாழ்க்கை முறையில் வளர்ந்த ஆயிஷா தன் முன்னே நிகழும் காலமாற்றத்தால் மாறும் வாழ்க்கைமுறையைப் பார்வையாளனாக மாறிப்பார்ப்பதையே நாவலில் எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த கெடா மாநிலத்தின் சிம்போர் எனும்
கிராமம்தான் நாவலின் களம். சிம்போர் கம்பத்தில் வாழும் ஏழை விவசாயத் தம்பதிகளின் மூத்த
மகளான ஆயிஷாதான் நாவலின் முதன்மைப் பாத்திரம். கம்பத்து மலாய் மக்களின் வாழ்க்கை முறையே
நாவலின் பெரும்பகுதியாக இருக்கிறது. இளம்பெண் ஆயிஷாவை வீட்டு வேலைகளுக்கு அம்மா பழக்குகிறார்.
மிளகாய் சாந்தை அரைப்பது, தேங்காய் திருகி பால் பிழிவது. மெங்குவாங் தழைகளை முடைந்து
பாய் செய்வது இப்படி வேலைகளைப் பழக்குகிறார். அவள் பருவ வயதை அடைந்த சில ஆண்டுகளான
பின் ஒருநாளில் அம்மாவும் அப்பாவும் எதற்கோ ஏற்பாடுகளைச் செய்கின்றனர். குட்டையருகே
வளர்ந்திருக்கும் மெங்குவாங் தழைகளைப் பிடுங்கி இரவும் பகலுமாக அம்மா பாய் முடைகிறாள்.
ஊரில் இருக்கும் விறகுகளையும் தேங்காய்களையும் சேகரித்து வந்து வீட்டில் அடுக்குகிறாள்.
அவளுக்குப் புத்தாடை அணிவிக்கப்பட்டு அலங்காரமும் செய்யப்படுகிறது. வீட்டுக்கு அறியப்படாத சிலர் அவளைப் பெண்பார்க்க
வருகின்றனர். இரண்டு பெண்கள் ஆயிஷாவைப் பார்த்து மோதிரம் ஒன்றைத் தந்துவிட்டுச் செல்கின்றனர்.
அதன் பின் தான் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை ஆயிஷா அறிகிறாள். அவர்கள் வந்து சென்றப்பின்
அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் அவளை மெல்ல திருமணத்துக்குப் பழக்குகின்றனர். பெண்களின்
பெரும் பொறுப்பே திருமணம் தான் என்றும் வயதான பின் அவளைப் பிள்ளைகள்தான் பராமரிக்க
வேண்டுமென்பதால் மணம் செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றனர். ஓராண்டு கழித்துத்தான்
திருமணம் நடக்கிறது. முகத்தில் வளர்ந்திருக்கும் முடி மழிக்கப்பட்டு முட்டையின் வெண்கரு
பூசப்பட்டு பற்களை சிறிய இரும்பால் தீட்டி வெண்மையாக்குதல் எனத் திருமணத்துக்கு முன்னராக
ஆயிஷாவுக்கு அலங்காரங்கள் நிகழ்கின்றன. அவளுடைய வாழ்விலே எந்த வேலையும் செய்யாமல் ஓய்வாக
இருந்த காலக்கட்டமாக ஆயிஷா அதனை நினைவுகூர்கிறாள். திருமணம் முடிந்த பத்தாவது நாள்தான்
ஆயிஷா கணவன் தேடிக் கொண்டிருந்த இடுப்புப்பட்டையை எடுத்துத் தரும் போது பேசுகிறாள்.
பின்னாளில், அவளுடன் பேசுவதற்காகக் கணவன் இடுப்புப்பட்டையை ஒளித்து வைத்துத் தேடிக்
கொண்டிருந்தது என அறிகிறாள்.
திருமண வாழ்வுக்குப் பின்னர் ஆயிஷாவும் மற்ற பெண்களைப் போலவே முடிவற்ற குடும்பப்பொறுப்புகள்,
வீட்டுவேலைகளுக்குள் ஆட்படுகிறாள். மெல்ல ஆயிஷாவின் வாழ்வில் மாற்றங்கள் நிகழத்தொடங்குகின்றன.
கணவன் இசுலாமியச் சமய ஆசிரியராக ஆகின்றான். அவளுக்கு மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்பிள்ளைகள்
பிறக்கின்றனர். பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைகின்றனர். அவளின் குடும்பப்பொறுப்புகள்
அதிகமாகின்றன. நவீன வாழ்வின் ,மாற்றங்களால் கம்பத்துக்குள் தொடக்கப்பள்ளி வருகிறது.
உறவினர்களும் நண்பர்களும் பெண்பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். சமய ஆசிரியரான
கணவரின் கட்டாயத்தால் பெண்பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றாள். ஊராரின் கட்டாயத்தால்
பிள்ளைகள் ஆறாம் ஆண்டுடன் பள்ளிக்கு முழுக்கு போடுகின்றனர். அவர்களும் திருமணமாகி வெளியூர்களுக்குக்
குடிபெயர்கின்றனர். ஆண் பிள்ளைகள் பட்டதாரிகள் ஆகின்றனர். ஆயிஷா தன் வாழ்வின் தொடக்கத்தில்
கண்ட போக்குவரத்து முறைகள், கல்வி சூழல், வாழ்க்கை நெறிகள் மொத்தமும் தலைகீழாவதைக்
காண்கின்றாள். மகளின் வளைகாப்புச் சடங்கை மருமகன் முக்கியமில்லாததாகக் கருதுகிறான்.
மருத்துவச்சியின் துணையின்றி பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கின்றனர்.
பெண் பேரப்பிள்ளைகள் மிக இயல்பாக ஆண் நண்பர்களுடன் பேசுகின்றன. அத்தனை மாற்றங்களையும்
எந்தக் கேள்வியுமற்று ஆயிஷா பார்வையாளராகக் காண்கிறாள். கடந்து போன மரபார்ந்த வாழ்வின்
கடைசிப் பிரதிநிதியான ஆயிஷா எழுந்துவரும் நவீன வாழ்வின் போக்குகளைச் சந்தேகம் கலந்த
மெளனத்துடன் அணுகி தனக்குள் ஆறுதல் தேடுகிறாள்.
ஒரு பெரும் காலமாற்றத்தைச் சொல்லும் நோக்கில்தான் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
அந்தக் காலமாற்றத்தினூடே வாழ்வு நெறிகள் அல்லது மதிப்பீடுகளும் மாற்றங்கள் அடைகின்றன.
ஆனால், அதனைக் கேள்விக்குட்படுத்தும் நோக்கம் எதுவும் நாவலில் இல்லை. அந்த மாற்றத்தையும்
மதிப்பீட்டு மாற்றத்தையும் அப்படியே நாவல் பதிவு செய்கிறது. பெண் கல்வி பெறுவது, பண்பாட்டு
மாற்றம் என எல்லாமே அந்திம வயதை நெருங்கும் பெண் ஒருவரின் நினைவேக்கத்துடன் கலந்தவையாகவே
நாவல்களில் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கம்பத்து வாழ்க்கை சார்ந்து நாவல் காட்டும்
பண்பாட்டு உட்குறிப்புகள் மட்டுமே முக்கியமானைவையாகப்படுகின்றது. மற்றப்படியாக ஒரு
பெரும் காலமாற்றத்தை நாவல் விரைவாகத் தாவிகடக்கிறது. அதனை ஒட்டிய எந்தப் பெரிய கேள்விகளும்
நாவலில் இருக்கவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கேற்ப காலமாற்றத்துக்கேற்ப நிகழும் மாற்றங்களைப்
பார்வையாளனாக மையக்கதைமாந்தர் அணுகிறது. இன்னும் குறிப்பாக் நிகழும் காலமாற்றங்களை
எந்தவகையிலும் உணரமுடியாமல் தன்னுடைய மரபார்ந்த பார்வையால் தன்னைக் குறுக்கிக் கொள்ளும்
ஒரு மையப்பாத்திரத்தின் நினைவேக்கம் படிந்த வரலாற்றையே நாவலாசிரியர் காட்டுகிறார்.
கம்பத்து வாழ்வின் பண்பாட்டு உட்குறிப்புகளை விரிவான வாழ்க்கை முறைச் சித்திரிப்புகளுடன்
முன்வைப்பதொன்றே நாவலின் வெற்றியாகக் கருதுகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக