மலேசியாவில் தேசிய இலக்கியவாதி என்னும் விருதே இலக்கியத்துக்காக அளிக்கப்படும்
உயரிய விருது. இந்த விருதைப் பல எழுத்தாளர்கள் பெற்றிருந்தப்போதிலும் எழுத்தாளர் அ.சமாட்
சைட்டே தேசிய இலக்கியவாதியாக பெருமளவில் நினைவுக்கூரப்படுவராக இருக்கிறார். அதற்கு
முதன்மையான காரணம் இலக்கியத்துறைச் செயற்பாடுகளைத் தாண்டியும் சமாட் சைட்டின் செயற்பாடுகள்
விரிந்திருப்பதே எனலாம். (தமிழ்விக்கிப் பதிவு) இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி அறிவியல்,
கணிதப்பாடங்கள் ஆங்கிலமொழியில் கற்பிக்கப்படும் முடிவை எதிர்க்கும் போராட்டம், தேர்தல்
அரசியல் சீர்திருத்தம் கோரிய பெர்சே பேரணி எனப் பல போராட்டங்களை அ.சமாட் சைட் முன்னெடுத்திருக்கிறார்;பங்கெடுத்திருக்கிறார்.
அவருடைய முதல் நாவலான சலினா 1958 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1961 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.
சலினா நாவல் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சிங்கப்பூரைக் களமாகக் கொண்டது. இந்தியத்
தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பொதுப்பணித்துறைக் குடியிருப்பொன்றின் அடுத்து
இருக்கும் ஆட்டுக்கொட்டகைகளை அறைகளாகத் தடுத்து உருவாகியிருக்கும் கம்போங் கம்பிங்
(ஆட்டுக் கம்பம்) தான் சலினா நாவலின் களம். பொதுப்பணித்துறைப் பணியாளரான கருப்பையாத்தான்
ஆட்டுக்கொட்டகைகளை அறைகளாகத் தடுத்து ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு அதிக வாடகைக்கு
விட்டிருக்கிறார். அந்தக் குடியிருப்பில் வாழும் சலினா, அப்துல் ஃபாக்கர், ஹில்மி,
நஹிடா, ஹாஜி கர்மான் ஆகியோர்தான் நாவலின் முதன்மைப்பாத்திரங்கள். அந்தக் குடியிருப்பில்
வாழும் மனிதர்களின் வாழ்வைப் போர்பாதிப்பு புரட்டிப் போட்டிருக்கிறது. செல்வந்த குடும்பத்தைச்
சேர்ந்த சலினா போரினால் மொத்த குடும்பத்தையும் இழந்திருக்கிறாள். போரின் போது அவளுடைய
காதலனான யூசுப்பும் காணாமற் போய்விடுகின்றான். வாழ வழியற்றுப் பாலியல் தொழிலாளியாக
சலினா மாறுகிறாள். முன்னாள் கப்பல் பணியாளரான அப்துல் ஃபாக்காரையும் தன்னுடன் வைத்துக்
கொண்டு பராமரிக்கிறாள். சுகபோக வாழ்வுக்கும் ஊதாரித்தனத்துக்கும் சலினாவைச் சுரண்டி
பிழைக்கிறான் ஃபாக்கார். அந்தக் கம்பத்துக்குப் புதிதாக இடம்பெயரும் உயர்நிலைப் பள்ளி
மாணவனான ஹில்மியைத் தன்னுடைய சொந்த சகோதரனைப் போல சலினா எண்ணுகிறாள். அதே குடியிருப்பில்
போரில் ராணுவ வீரனான தந்தையை இழந்து மாற்றாந்தாயான ஷரினாவின் பராமரிப்பில் மன்சூர்
மற்றும் நஹிடா வளர்கின்றனர். அவர்களுடனே, நஹிடாவின் தந்தை போர்ப்பாதிப்பில் மீட்டு
வந்த சுனார்த்தோவும் ரிக்ஷா வண்டி ஒட்டி பிழைக்கின்றான். மாற்றாந்தாயின் பணத்தாசையால்
சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்படும் உணவகப் பணியாளராக நஹிடா வேலைக்குச் சேர்கிறாள்.
உணவகத்துக்கு வரும் ஆண் வாடிக்கையாளர்களின் பாலியல் தேவையயும் பணியாளர்கள் நிறைவு செய்ய
வேண்டிய சூழல் இருக்கிறது. நஹிடா மீது கரிசனம் கொண்ட ஹில்மிக்கு அவளுடன் காதல் உருவாகிறது.
உயர்கல்வி முடிந்ததும் நஹிடாவைத் திருமணம் செய்து கொள்வதாக ஹில்மி வாக்குறுதியளிக்கிறான்.
தன்னுடைய பணத்தாசையை நிறைவேற்ற தடையாக நஹிடாவைத் பாதுகாக்கும் வளர்ப்பு அண்ணன் சுனார்த்தோவையும்
அண்ணன் மன்சூரையும் வெவ்வேறு காரணங்களைக் காட்டி ஷரினா வீட்டை விட்டுத் துரத்த முயல்கிறாள்.
பெண்ணாசை கொண்ட ஃபாக்காரின் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி மது அருந்தவும் நஹிடா பழகி மெல்ல
வாழ்வைச் சீரழித்துக் கொள்கிறாள். இந்தச் சூழலில், இசுலாமியச் சமய ஆசிரியரான ஹாஜி கர்மானைச்
சமூகம் மனநிலைப் பிறழ்ந்தவராகவே காண்கிறது. அவராலும், சுற்றிலும் நடக்கும் எந்த நிகழ்வையும்
மாற்றமுடியாத இயலாமையிலும் வறுமையிலும் உழல்கிறார். இப்படியாக ஏழ்மையும் அறியாமையும் கம்போங் கம்பிங் மக்களின் வாழ்வை அலைகழிப்பதையே
நாவல் காட்டுகிறது.
பாலியல் தொழில் புரிவதால் சமூகத்தால் இழிவாகக் கருதப்படும் சலினா மற்றவர்களிடம்
கருணையைக் காட்டுகிறாள். தன்னுடைய துயர், ஏமாற்றம் எல்லாவற்றையும் தனக்கு விதிக்கப்பட்டதைப்
போல கேள்விகளற்று ஏற்றுக்கொண்டு ஃபாக்காரிடம் அடி உதை வாங்கி கொண்டு அவனையும் பராமரிக்கின்றாள்.
அதைப் போல, சுற்றிலும் இருக்கும் கத்திஜா, ஹில்மி, நஹிடா போன்றவர்களிடம் கருணையைக்
காட்டுகிறாள். ஒருவகையில் அவளுடைய வாழ்வைக் காவியத்துயரைப் போலவும் தியாகத்தைப் போலவும்
காட்டவே நாவல் முயல்கிறது. சலினா தரும் பணத்தாலே மது அருந்தவும் பெண்களுடனான உல்லாச
வாழ்வும் வாழ்கின்ற ஃபாக்காரைச் சலினா ஏன் பராமரிக்கின்றாள் என்பதை நாவலின் கடைசிக்கு
முந்தைய அத்தியாயத்திலே ஆசிரியர் தெளிவுப்படுத்துகிறார். சலினாவின் காதலனின் சாயலையொத்திருந்ததால்
அவனைப் பராமரிக்கவும் திருத்தவும் தான் முயன்றதாக சலினா கூறும் காரணம் வாசிப்பில் ஏமாற்றத்தைத்
தருகின்றது. அவனுடைய கொடுங்குணங்களைக் கடைசி அத்தியாயங்களில் ஒருவர் பின் ஒருவராக அவளிடம்
சொல்லி நீண்ட உபதேசங்களை ஆற்றியப்பின்பே அவனை விட்டு நீங்கிவிடும் முடிவைச் சலினா எடுக்கின்றாள்.
அத்துடன், நாவலின் பெரும்பகுதி வரை தான் புரியும் தொழில் இழிவானது, தவறானது என மற்றவர்களிடம்
மறைத்துப் பேசுவதையே ஆசிரியர் வாசகர்களிடம் சித்திரிக்கிறார். அவளின் பாலியல் தொழிலை
வாசகர்களுக்கு ஒருவிதமான அதிர்ச்சி மதிப்பீடாகவே ஆசிரியர் கடத்த எண்ணுகிறார் என்ற உணர்வை
வழங்குகிறது. வாழ்வில் நேர்ந்துவிடுகின்ற இழப்புகள், துயர்களால் பாலியல் தொழில் புரிகின்றவளாகச்
சொல்லப்படுகின்ற சலினா நன்மையே உருவானவளாக மட்டுமே இருக்கின்றாள். பாலியல் தொழில் முடிந்து
வீடு திரும்புகின்றவள் நன்மையும் பலவீனம் பொருந்தியவளாக மட்டுமே தன்னை முன்னிறுத்திக்
கொள்கின்றாள். இப்படியாக ஒற்றைப்படையான சித்திரிப்பையே ஆசிரியர் சலினாவில் உருவாக்குகிறார்.
அவள் காட்டும் கருணை, அவல வாழ்வு எல்லாமே அந்த
அதிர்ச்சி மதிப்பீட்டை இன்னும் வலுப்படுத்தவே இருப்பதாகத் தெரிகிறது. வாசகர்களிடமிருந்து
மறைக்கப்படும் பாலியல் தொழில் சித்திரிப்பு, ஃபாக்காரைப் பராமரிப்பதற்கான காரணங்கள்
எல்லாவற்றுக்குமான பதிலை அலுப்பூட்டும் நீண்ட சித்திரிப்புடன் கூடிய பிந்தைய அத்தியாயங்களில்தான்
சொல்லப்படுகிறது. அதன் பின்னர், தன்னுடைய பாலியல் தொழிலை விட்டுத் தூரத்திலிருக்கும்
கிளாந்தான் மாநிலத்தில் சலினா அடைக்கலமாகிறாள். சில ஆண்டுகளில் கம்போங் கம்பிங் எரிந்தழிந்து
அங்கிருந்த மனிதர்களில் சிலர் இறந்து போனப்பின்பு மறுபடியும் சிங்கப்பூருக்கே திரும்புகிறாள்.
தம்பியைப் போல நேசித்த ஹில்மியைக் காணும் ஆவலில் கடிதமெழுதுகிறாள். அழகும் நற்குணங்களும்
நிறைந்தவள் தன் வாழ்வில் நேர்ந்து விடுகின்ற கையறுநிலையால் எதிர்ப்படும் துயர்களைக்
கேள்விகளற்று ஏற்றுக் கொள்கிறாள். பின்னர், குரூர அனுபவங்கள் பலவற்றுக்குப் பின் தன்
மீது பூட்டிக் கொண்ட விலங்குகளைத் தானே கலைகிறாள். அவ்வாறாக, ஒழுக்கவாத மதிப்பீடுகளைக்
கடந்து மனிதர்களில் வெளிப்படும் நன்மை எனும் இடத்தை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய நாவல்
வேறொன்றை நோக்கிப் பயணிக்கிறது. ஆனால், அந்த முடிவும் சலினாவின் அழுத்தமற்ற அல்லது
தணிக்கைக்குட்பட்ட சித்திரிப்புகளால் அழுத்தமற்றதாகவே எஞ்சுகிறது.
சலினா நாவல் பிரச்சாரத் தன்மையற்று இயல்புவாதக் கதையாடலை முன்வைப்பதையே அதன்
முதன்மையான பலமாகக் குறிப்பிடலாம். ஒரு நவீன நாவலுக்கான தன்மையான இயல்புவாத கதையாடலை
மலாய் நாவல் உலகுக்கு சலினா நாவலே அறிமுகப்படுத்தியது எனச் சொல்லப்படுகிறது. அத்துடன்,
சலினா நாவலில் இருக்கும் நாவலாசிரியரின் கண்ணோட்டம் ஒரு காமிரா கோணத்தைப் போலவே நகர்வதைச்
சில அத்தியாயங்களில் காணமுடிகிறது. ஒரு நிகழவைச் சொல்லும் போது ஊடே அருகே இருக்கும்
இணைநிகழ்வுகளையும் ஆசிரியர் விவரிக்கிறார். பால்பெட்டிகள், தகரங்கள் எனக் கிடைக்கும் பொருட்களை எல்லாம் கொண்டு
எழுப்பப்பட்டிருக்கும் சலினாவின் வீட்டு மூலையில் பால்புட்டிகளை அடைக்கும் அட்டைப்பெட்டிகளில்
அடைக்கலமாகியிருக்கும் எலிக்குட்டிகளின் நடமாட்டத்தைச் சொல்லியே சலினாவுக்கும் ஃபாக்கருக்கும்
இடையிலான உறவைச் சொல்கிறார். ஹில்மி வீட்டின் முன்னால் எப்பொழுது ஆடையற்றுத் திரியும்
சிறுவன் பூலாட்டைச் சொல்கிறார். இரவு நேரத்தில் அருகில் இருக்கும் தொழிற்சாலைகளில்
எழும் மர வெட்டும் இயந்திர ஒலி, எஞ்சினின் உறுமல், தெருவில் விளையாடும் சிறுவர்கள்,
தண்ணீர் பீலிக்குக் காவல் இருக்கும் பல்வந்த் சிங் காட்சியாக ஒவ்வொரு அத்தியாயமும்
சுவாரசியமான சித்திரிப்புகளால ஆனதாக இருக்கிறது. ஆனால், நாவலின் கதையோட்டத்தில் ஒவ்வொரு
அத்தியாயத்திலும் குறிப்பிட்ட சித்திரிப்பின் போது பின்னணிக் காட்சிகள் நிலைப்பெற்றுவிடுவது
சலிப்பூட்டுகிறது. இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் பின்னணியில் இந்தியர்களைப் பற்றிய
நாவலாசிரியரின் சித்திரிப்புகள் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன. ஆரியமாலா படத்தைப்
பார்த்துவிட்டு ஆரியமாலா பாடலை முணுமுணுத்துக் கொண்டு தெருவில் சீட்டு விளையாடுகின்றனர்.
அத்துடன், கொச்சையான மலாயில் தமிழர்கள் பேசுவதும், வேடிக்கையாக நடந்துகொள்வதெனப் பின்னணிப்
பாத்திரங்களாக வலுவற்ற பாத்திர வார்ப்பையே தமிழ்ப்பாத்திரங்களுக்குச் செய்யமுடிகிறது.
அத்துடன் சமூகத்தின் அறியாமையையும் சுட்டிக்காட்ட நாவலின் சித்திரிப்பை ஆசிரியர் பயன்படுத்துகிறார். கம்போங் கம்பிங்கில் முழங்கப்படும் தேர்தல் பரப்புரை வாக்குறுதிகள், சுதந்திர முழக்கம் ஆகியவற்றை மக்கள் பொருள் புரியாது காண்கின்றனர். நஹிடாவுக்கும் ஹில்மிக்கும் இடையிலான உரையாடல்களில் மலாய் மேல்தட்டு (ஆங்கிலக்கல்வி கற்ற) மக்களிடம் இருக்கும் ஆங்கிலேய வாழ்க்கை முறை, மேற்கு இலக்கிய மோகம் குறிப்பிடப்படுகிறது. மதுபான விடுதிகளில் பணியாளர் வேலை, மது அருந்துவது, பாலியல் தொழில் ஆகியவை சீரழிவுகளை உண்டாக்குவதையும் சித்திரிப்புகளில் குறிப்பிடுகிறார்.
இந்த நாவலின் வாசிப்பையொட்டி இணையத்தில் தேடிப்பார்க்கும் போது நாவலை ஒட்டி
மலாய் இலக்கியத்தில் இலக்கியத்தன்மை குறித்து நடந்த சுவாரசியமான விவாதமொன்றைப் பற்றியும்
காண முடிந்தது. மலேசியா சுதந்திரம் பெற்றப்பிறகு மலாய் மொழி வளர்ச்சிக்காக டேவான் பகாசா
டான் புடாயா எனும் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. அந்தத் துறையே உயர்கல்வி மாணவர்கள்
வாசிக்கும்படியான நாவல்களை எழுத எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 1958 ஆம் ஆண்டு
நாவல் போட்டியொன்றை அறிவித்தது. அந்தப் போட்டியில் தேர்வுபெறும் முதல் இரண்டு நாவல்களையும்
அரசுத்துறையே பதிப்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரச்சாரம், பொழுதுப்போக்கு
ஆகிய நோக்கங்கள் மட்டுமின்றி இலக்கியத்தன்மையுடன் நாவல் எழுதப்பட்டிருக்க வேண்டுமென
போட்டியின் விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது. அந்த நாவல் போட்டிக்காகத்தான் சமாட் சைட்
சலினா நாவலை எழுதி அனுப்பி வைத்தார்.
கிரகணம் என்ற மூலப்பெயரில் இருந்த சமாட் சைட்டின் நாவலைப் பரிசுக்குரியதாகத்
தேர்வு செய்வதில் தேர்வுக்குழுவினரிடையே மாற்றுக்கருத்துகள் இருந்ததாக குழுவில் இருந்த
கிரிஸ் மாஸ் எனப்படும் எழுத்தாளட் கமாலுடின் முகமாட் பின்னர் குறிப்பிட்டார். பள்ளி
மாணவர்களுக்கான இலக்கியப்பிரதி என்பது புரிந்துகொள்ளத்தக்க வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதால்
நாவலின் இலக்கியத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தியிருக்கின்றனர். நாவலில் இடம்பெற்றிருக்கும்
ஒழுக்கப்பிறழ்வான சித்திரிப்புகள் மாணவர்களுக்கு ஏற்புடையதில்லை என்பதாலே நாவலை ஏற்றுக்கொள்ளத்
தயக்கம் காட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இறுதியாக, முசாபிர்( யாத்ரீகர்) எனும்
நாவலே பரிசுக்குரியதாகத் தெரிவு செய்கின்றனர். இரண்டாம் பரிசு பெற்ற சலினா நாவல்
1961 ஆம் ஆண்டு சில திருத்தங்களைக் கண்டப்பின்பே பிரசுரமாகிறது. ஆனால், சலினா நாவலே
இலக்கியத்தன்மை மிகுந்த நாவலாகக் கருதப்படுகிறது. அதற்கு முதன்மையான காரணம், ஒழுக்கவாத
மதிப்பீடுகளைக் கொண்டு நாவலை மதிப்பீடக்கூடாதென்ற பார்வையே. ஷானோன் அகமாட் போன்ற விமர்சகர்கள்
சலினா நாவலின் இசுலாமிய நெறிக்கு மாறான பாத்திரப்படைப்பையும் அதன் ஆன்மீகச்சாரமின்மையையும்
சுட்டிக்காட்டி நிராகரிக்கின்றனர்.
நவீன நாவல் என்னும் வடிவத்தை மலாய் இலக்கியச் சூழலில் அறிமுகப்படுத்திய வகையில்
நிச்சயமாக சலினா நாவல் முக்கியமானது. அத்துடன், இலக்கியமென்பது ஒழுக்கவாத மதிப்பீடுகளைக்
கடந்து அதன் இலக்கியத்தன்மையாலே மதிப்பீடவேண்டும் என்ற விவாதத்தை இலக்கியச் சூழலில்
கொண்டு வந்த வகையிலும் முக்கியமானது. ஆனால், அந்த விவாதத்தின் நெருக்குதலால் நாவலில்
கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் எந்தளவு நாவலின் மூலப்பிரதியில் மாற்றங்களைக் கொண்டு
வந்ததென அனுமானிக்க முடியவில்லை. ஆனாலும், இசுலாமிய நெறி பரவலான ஆதிக்கம் செலுத்தும்
மலாய் இலக்கியத் துறையில் பாலியல் தொழிலாளியை மையப்பாத்திரமாகப் படைத்து அடித்தட்டுச்
சமூகச்சூழலைச் சித்திரிக்க சமாட் சைட் முன்வந்திருப்பதே நிச்சயமாக இலக்கியத்தன்மை குறித்து
அவருக்கிருந்த தனிப்பட்ட புரிதலைக் காட்டுவதாகவே இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக