முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜகாட்- சூழல் மாற்றும் மனிதர்கள்

 

2015 ஆம் ஆண்டு முகநூலில் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் ம.நவீன், பாலமுருகன் ஆகியோர் எழுதிய பதிவுகளின் வாயிலாகவே ஜகாட் படத்தைப் பார்க்கும் உந்துதல் எழுந்தது. என்னுடைய நண்பர்கள் பலருக்கும் மலேசியப் படத்தைத் திரையரங்கில் பார்ப்பதில் தயக்கமிருந்தது. எனக்கும் கூட ஒரிரண்டு மலேசியப்படங்களைத் திரையரங்கில் பார்த்த கசப்பான அனுபவங்கள் இருந்தன. ஆனால், ஜகாட் படத்தின் முன்னோட்டம், போஸ்டர் வடிவமைப்பு, படத்தையொட்டி வெளியீடப்பட்ட பாடல் (ஜகாட்ன்னா நல்லா பையன்) எல்லாமே அது வரையில் நான் பார்த்திருந்த மலேசியப் படங்களைக் காட்டிலும் வித்தியாசமான படமாக ஜகாட் இருக்குமென்ற எண்ணத்தை உருவாக்கியது. அதோடு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் அதிகளவு புழங்கி தமிழ்மயப்பட்டுவிட்ட சொற்களில் ஜகாட் என்பது முக்கியமானது. ''அவன் ரொம்ப ஜகாட் புடிச்சவன், ஜகாட் காக்கி, ஜகாடானவன்'' என மிகச் சாதாரணமாக கொஞ்சம் அடாவடியான அல்லது ஒழுங்குகளைப் பின்பற்றாதவர்களைச் சுட்ட மிக இயல்பாக மலேசியத் தமிழர்களிடம் புழங்கிய சொல் அது. இப்படியாக, படத்தின் தலைப்பே மலேசியத் தமிழர்களின் வாழ்வியலுடன் நெருங்கியத் தொடர்பிருப்பதை உணர்த்தியது.


அந்த நம்பிக்கையில் கோலாலம்பூர் வந்திருந்த போது படத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். செந்தூல் திரையரங்கில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக் காட்சியில் பின் வரிசை மட்டும் முழுமையடைந்த திரையரங்கில் ஜகாட் படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன். படத்தின் முடிவு நிறைவு பெறாமல் ஏதோ தொக்கியிருப்பது போன்றிருந்தது. நானுமே தமிழர்கள் நிறைந்த கம்பத்தில் வளர்ந்திருந்ததால் படத்தின் களத்துடன் ஒன்றிப்போக முடிந்திருந்தது. அதோடு, சமூகச்சூழல், அரசியல் பின்னணி ஆகியவையும் படத்தைப் புரிந்து கொள்ள உதவியது. படம் முடிந்ததுமே ஏதோ உணர்வெழுச்சி எழுந்தது. ஒரு விமர்சனக்குறிப்பை எழுதி வைத்துக் கொண்டேன். அதனைப் பின்னாளில் முகநூலில் ஜகாட் படத்தையொட்டி நடத்தப்பட்ட விமர்சனப்போட்டிக்கு அனுப்பி வென்றேன். பின்னர், இயக்குநர் சஞ்சயின் அடுத்தடுத்த திரைப்பட முயற்சிகளை அறிந்து கொள்வது தொடங்கி அவரை நேர்காணவும் அமைந்த வாய்ப்பு எதிர்பாரதது. அப்படியாகத்தான், பத்தாண்டுகள் கழித்து ஜகாட் படத்தின் மறுவெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது.


ஜகாட் படத்தின் மையமென்பது இந்தியர்களின் சமூகச்சூழலைப் பற்றிய உரையாடல்தான். தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட இந்தியர்கள் நகரத்துக்குப் பெயர்ந்த பின்னர் ஏற்பட்ட சமூகச்சூழல்தான் படத்தின் களம். பொருளாதாரச் சூழல், கல்வி எனப் பலவற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சமூகம் வன்முறையைப் பற்றிக் கொள்கிறது. இந்தச் சமூகச்சூழலைப் பிரச்சாரமாக ஜகாட் படம் முன்வைக்கவில்லை. இரண்டு தலைமுறையைச் சேர்ந்த ஆண்களின் வாழ்வுடன் அதனைத் தேர்ந்த திரைமொழியுடன் முன்வைத்திருக்கிறது. மறுவெளியீட்டில் நான் பார்த்த ஜகாட் படத்தை வெறும் சமூகச்சூழலுடன் மட்டுமே என்னால அடையாளப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. படத்தில் இருக்கும் நான்கு ஆண் பாத்திரங்ளுக்குள் இடப்பெயர்வு செய்திருக்கும் மாற்றங்கள் குறித்ததாகப் புரிந்து கொண்டேன்.

அப்போயின் அப்பாவான மணியம் கண்டிப்பு மிகுந்த தந்தை. மர ஆலையில் கடுமையான பணிகளைச் செய்கின்றார். மகனின் கல்வி முன்னேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்டவர். கல்வியைத் தவிர வேறு திசை நோக்கி அவனுடைய கவனம் திரும்பும் போது கோபப்பட்டு உடனே கண்டிக்கச் செய்கிறார். அப்போய்க்கு மைக்கேல் ஜாக்சனின் மீது இருக்கும் ஈர்ப்பை அறிந்து கொண்டு கடும் கோபத்துடன் அவனே வடிவமைத்திருக்கும் மைக்கல் ஜாக்சனின் சட்டையை ஆவேசத்துடன் கிழித்தெறிகிறார். அதற்குப் பின் இருப்பது மகனுடைய எதிர்காலத்தின் மீதான கோபம் மட்டுமில்லை. தன்னுடைய இளமைக்காலத்தில் தோட்டத்தில் திருவிழாக்களின் போது நாடகம் நடித்து கலையார்வம் அது அளிக்கும் மகிழ்ச்சியையும் மணியம் அறிந்தவர்தான். ஆனால், தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நகர வாழ்வில் கடும் பணி செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு தம்பிகள் இருவரும் வன்முறைக் குழுக்களில் திரும்பிவிட்ட ஆற்றாமை கல்வியை மட்டுமே தன்னுடைய மகனுக்கு அளிக்க வேண்டுமென்ற இறுக்கத்தை அளிக்கிறது. சென்ற காலத்துத் தந்தையர்களின் இறுக்கத்துக்குப் பின் இருப்பது சமூகச்சூழலை அறிந்து கொள்ளும் பதற்றம் மட்டுமில்லை. மாறாக, தன்னுடைய இளமையில் பறிபோன கனவுகளின் ஏமாற்றமும் கூட என்பதை மணியம் பாத்திரம் உணர்த்துகிறது.

அப்போயின் முதல் சித்தப்பாவான பாலாவும் தோட்டத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் தான். ஆனால், அவனுக்கான இடத்தை வன்முறை, போதை வஸ்துவின் வாயிலாகக் கண்டு கொள்ள முயல்கிறான். பாலாவுக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்வின் மீதான பார்வை இருப்பதை அறிவார்த்தமான உரையாடல்களால் இயக்குநர் காட்டுகிறார். அந்த நிதானமும் துணிவுமே வன்முறைக் கும்பலில் மிக உயரிய நிலையான குழுத்தலைவனின் அணுக்க உதவியாளனாக அவனை முன்னிறுத்துகிறது. ஆனால், வன்முறைக் கும்பல தன்னளவில் சட்டவிரோத வியாபாரங்களைச் செய்யும் முதலாளிக்கான பாதுகாப்பையே அளிக்கிறது. தான் அதில் ஈட்டும் உயர்வென்பது தற்காலிகமானது. காவல் துறையிடம் சிக்காத வரையில் அல்லது பலியாடாக ஆக்கப்படாத வரையில் மட்டுமே பாதுகாப்பானது. அப்படி போதையினால் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்படும் பாலா குழுவினரால் கைவிடப்படுகிறான். அதன் பின்னர் அதிலிருந்து விலகி மீனவனாக வாழ்வை அமைத்துக் கொள்கிறான். அவனுடைய போதைப்பழக்கம் உள்ளிருந்து மெல்ல அவனை அரித்துத் தின்கிறது. போதை தரும் தன்னிலையழிவுக்குள் மூழ்கி மெல்ல இல்லாமல் போகிறான்.

அப்போயின் அடுத்த சித்தப்பாவான மெக்சிக்கோவும் சீன முதலாளியின் ஆசை வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அவனின் அணுக்கனாக மாறுகிறான். ஆனால், அதன் ஆயுள் எவ்வளவு தற்காலிகமானது என்பதை விரைவாகவே உணர்கிறான். காவல் துறையால் தடுக்கப்படுகின்றவனை சீன முதலாளி கைவிடுகிறான். அவனை மீட்டெடுக்க அண்ணனே முயல்வதை உணர்ந்து வன்முறைப் பாதையிலிருந்து விலக முடிவெடுக்கிறான். குழுவிலிருந்து விலகுபவனை, குழு சட்டவிதிப்படி ரத்தம் வரும் வரையில் அடித்துத் துன்புறுத்துகின்றனர். தன்னுடைய ஆற்றலின் எல்லையை உணர்ந்து வெடித்தழுகிறான்.

அப்போய்க்குமே அவனுடைய தந்தையைப் போல கலையின் மீதான ஆர்வம் இருக்கிறது. அவன் வரைகின்ற வடிவமற்ற வடிவம், மைக்கேல் ஜாக்சன் உடைக்கான சிரத்தை, மனனக் கல்வியின் மீதான வெறுப்பு என ஒவ்வொன்றாக அவனின் மாற்றுச்சிந்தனையும் கலைப்பார்வையும் வெளிப்படுகிறது. ஆனால், மனனக் கல்வி, கேள்விகளற்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள பழக்குவது, கடிவாளமிட்ட குதிரையாகத் தயார்படுத்துவது ஆகியவற்றிலே அவனைச் சுற்றிலும் இருக்கும் சமூகம் ஈடுபடுகிறது. இந்தச் சூழலின் மீதான ஒவ்வாமையுடன் வளர்கின்றவனுக்குச் சித்தப்பாவின் வன்முறை வாழ்வு மீது ஈர்ப்பு உருவாகிறது. அவனுடைய சித்தப்பா மெக்சிக்கோ வெடித்தழுவதைக் கேட்டதும் அவனுக்குள் மாற்றாக உருவாகியிருக்கும் பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. அந்த ஆற்றாமையுடனே அவனைக் கேலி செய்தவனைத் தாக்குகிறான். தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொள்ள முனையும் அப்போய் அடையும் ஒவ்வொரு உருமாற்றத்தையும் ஜகாட் காட்டுகிறது.

ஜகாட் காட்டும் வாழ்க்கையில் பெண்களுக்கு இடமில்லையென்றே கருதவேண்டியிருக்கிறது. அப்போயின் அம்மா குடும்பப்பாங்கான பெண். வேலை, வீட்டு வேலை, கணவனின் சொற்படி நடப்பது, மகனைக் கணவனின் மூர்க்கமான தாக்குதல்களிலிருந்து காப்பது ஆகியவையே அவள் செய்யக்கூடிய பொறுப்புகள். ஆண்மயப்பட்ட குடும்பச்சூழலுக்குள் புழங்குகின்ற பெயரற்றவளாகவே படைக்கப்பட்டிருக்கிறாள்.


அடுத்ததாக, படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் மிகச்சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு காட்சியும் ஒளிப்பதிவு செய்ய தேர்ந்தெடுத்திருக்கும் இடங்கள் அபாரமாக இருந்தது. மலையுச்சியில் தன்னந்தனியனாக அப்போய் அமர்ந்திருக்கும் காட்சி, கட்டடங்களில் வேர்பற்றி உயர்ந்து நிற்கும் ராட்சத மரங்கள் இடையே நிகழும் சண்டைகள் சிறப்பாக இருந்தது. அதோடு,சிறுவன் அப்போயாக நடித்திருக்கும் அர்வின், மணியமாக நடித்திருக்கும் குபேந்திரன், தினேஷ் சாரதி எனத் தேர்ந்த நடிப்பாற்றலையும் நடிகர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.

ஒரு சமூகச்சூழல் மாற்றம் எவ்வாறு மனிதர்களை வெவ்வேறாக இயக்குகிறது என்பது குறித்து ஜகாட் முன்வைக்கும் சித்திரம் மிகமுக்கியமானது. அக்டோபர் 3 மறுவெளியீடு கண்டிருக்கும் ஜகாட் படத்தை அவசியமாகத் திரையரங்கில் பாருங்கள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...