முதல் விசா தோல்வியடைந்ததுமே பயணத்தில் இணையலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு அரை நாள் அந்தச் சிந்தனையிலே மூழ்கியிருந்தேன். மறுவிண்ணப்பம் செய்திருந்த போதும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. ம.நவீனிடமே ஏன் அமெரிக்கப் பயணம் முக்கியமானது எனக் கேட்டேன். அவரும் உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என்பதை விளக்கினார். எல்லா முயற்சிகளுக்கும் பின்னரும் அறியப்படாத ஒரு சரடு பின் தொடரச் செய்கிறது. உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் திட்டம் உருவாகிக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் மற்ற இன எழுத்தாளர்கள் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்தன. 2025 ஆம் ஆண்டு மலாய்- சீன- தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி உரையாடும் களமான முக்கோணக்கதைகள் நிகழ்ச்சியை வல்லினம் ஒருங்கிணைத்தது. மலேசியா சுதந்திரமடைந்து 60க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் இம்மாதிரியான முயற்சிகள் பெரும்பாலும் நடந்ததில்லை. அதனை வல்லினம் உண்மையான தீவிரத்துடன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழிலிருந்து மலாய்க்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சிறுகதை தொக...