முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக் கனவு 2

 

முதல் விசா தோல்வியடைந்ததுமே பயணத்தில் இணையலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு அரை நாள் அந்தச் சிந்தனையிலே மூழ்கியிருந்தேன். மறுவிண்ணப்பம் செய்திருந்த போதும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. ம.நவீனிடமே ஏன் அமெரிக்கப் பயணம் முக்கியமானது எனக் கேட்டேன். அவரும் உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என்பதை விளக்கினார். எல்லா முயற்சிகளுக்கும் பின்னரும் அறியப்படாத ஒரு சரடு பின் தொடரச் செய்கிறது. உலக அரங்கின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் திட்டம் உருவாகிக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் மற்ற இன எழுத்தாளர்கள் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை முன்வைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்தன. 2025 ஆம் ஆண்டு மலாய்- சீன- தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி உரையாடும் களமான முக்கோணக்கதைகள் நிகழ்ச்சியை வல்லினம் ஒருங்கிணைத்தது. மலேசியா சுதந்திரமடைந்து 60க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் இம்மாதிரியான முயற்சிகள் பெரும்பாலும் நடந்ததில்லை. அதனை வல்லினம் உண்மையான தீவிரத்துடன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழிலிருந்து மலாய்க்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சிறுகதை தொகுப்பு, மலாயிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு, மாண்டரின் மொழியிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட சிறுகதை வெளியீடு ஆகியவை நிகழ்ச்சியை ஒட்டி நடந்தன. படைப்புகளை வெளியீட்டப்பிறகு அதனை ஒட்டி ஒரு உரையாடல் அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படியாக எல்லா வகையிலும் ஒரு ஆரோக்கியமான முயற்சி நடந்து கொண்டிருந்த சூழலில்தான் வாழும் தமிழ் மாநாடுக்கான திட்டமிடலும் பின்னணியில் நிகழ்து கொண்டிருந்தது. ஒருவகையில் மலேசியாவுக்குள் தமிழிலக்கியத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்க நவீன் முயன்று கொண்டிருந்த சூழலில்தான் ஜெயமோகன அதனை உலகப்பரப்புக்கு எனும் பெரும் கோட்டை வரைந்து கொண்டிருந்தார். பெருங்கனவுகளைச் சூல் கொண்டிருந்த இரு ஆசிரியர்களின் திட்டங்கள் உருவாகி வருவதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு அமைந்தது.


இந்தச் சமயத்தில்தான் தமிழ் இலக்கியச் சூழலின் இன்னொரு முரணும் நடந்தது. இலக்கியத்துக்காக இந்திய அளவில் வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. இருபதாண்டுகள் கழித்து தமிழுக்கு வழங்கப்பட்ட பாடலாசிரியரான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது உண்மையிலே தமிழில் நிலைகொண்டிருக்கும் நவீன இலக்கியத்தை இழிவுபடுத்துவதே. அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி என எத்தனையோ தமிழ் இலக்கிய ஆளுமைகள் நீடு வாழ்வு வாழ்ந்தருக்கின்றனர். அவர்களுக்கு ஞானபீடம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ஞானபீடம் தன் இலக்கியப் பெறுமதியைத் தமிழ்ச்சூழலில் இழந்ததாகவே சொல்லாம். வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு ஜெயமோகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இனி உலக மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புக்குத் தமிழில் இருந்து தரப்படும் அங்கீகாரமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வாழும் தமிழ் விருது தரப்படும் என அறிவித்தார். வாழும் தமிழ் மாநாடு தமிழ்பரப்பிலிருந்து உலக இலக்கியப் பரப்பு நோக்கி நகர்ந்தது.


எனக்கு எப்பொழுதுமே பதற்றம் சற்று அதிகம்தான். அதுவும் காரியங்கள் சரியாக நடக்காதப்போது பதற்றத்துடன் கோபம் சோர்வு எல்லாமே சூழ்ந்துவிடும். அதனால் சில காரியங்கள் சரியாக நடந்துவிடுவதும் உண்டு. சில இருக்கும் சூழலை இன்னும் மோசமாக்கிவிடவும் செய்து விடும். போர்டிங் டிக்கெட் அச்சிட முடியாமல் சுயமாக அச்சிடும் கணினியுடன் மல்லுகட்டிக் கொண்டிருந்த இருபது நிமிடமும் இந்தப் போராட்டம்தான் மனதுக்குள் தொடர்ந்தது. எப்படியோ விமான நிறுவனத்தின் இந்தோனேசிய பணியாளர் எனக்குப் பின்னாள் நின்று கொண்டிருந்த மூன்று அழகியச் சீனத் தோழியர்களுக்கு உதவி செய்த பின்னர் எனக்கு உதவ வந்தார். அத்தோடு எனக்கு எந்த டிக்கெட் வேண்டுமெனவும் கேட்டார். நான் பெரிதாய் ஒன்றும் சிந்திக்காமல் சன்னலுக்குப் பக்கத்தில் என்றேன். அப்பொழுது கொஞ்சம் நிதானத்துடன் இருந்திருந்தால் பின்னாளில் ஹோங் காங் - நியுயார்க் பயணத்தில் கழிப்பறைக்குச் செல்ல அருகிலிருந்த சீனப் பயணிகள் இருவரையும் எழுப்பும் சங்கடத்தைத் தவிர்த்திருக்கலாம். பதற்றத்துடன் சுயவதையும் உடன் பிறந்ததாயிற்றே.




அதன் பிறகு ஹாங்காங்க்குக்கான முன்றரை மணி நேரப் பயணம் தொடங்கியது. பக்கத்தில் காலி இருக்கைக்கள். விடியற்காலை தூக்கம் கண்களை அமட்ட தூங்கி எழுந்த போது ஹாங்காங்கில் சூரிய உதயம். மலேசியாவுக்கும் ஹாங் காங்கும் ஒரே ஜிஎம்டி எனப்படும் நேரக்கோட்டில் இருக்கிறது. வழிநெடுக என் எண்ணமெல்லாம் அடுத்த 16 மணிநேரப் பயணத்தைப் பற்றியே இருந்தது . விமானநிலையத்திக் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த மலாய் பெண் என் முகக்குறிப்பை உணர்ந்திருக்க வேண்டும். எங்கு செல்கிறாய் இருவரும் ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டோம். கொஞ்ச நேரத்திலே அமெரிக்கப் பயணத்துக்கு எனக்கு துணையொன்று உருவாகிவிட்டது. அடுத்தடுத்து ஒவ்வொரு கடப்பிதழ், பொருள் சோதனையின் போதும் அவரைத் தூரத்திலிருந்து எட்டிப் பார்த்துக் கொள்வேன். சரியா என்பது போல ஒரு தலையசைப்பும் கண்ணசைவுமாகத் துணையாக இருந்தார். இடையில் ஹாங்காங்கில் விமான மாற்றத்தின் போது இன்னொரு சீனர் எந்த முனையத்துக்குச் செல்ல வேண்டும் என வழிகாட்டினார். வழிபயணிகள் என்னை நோக்கி வர பதற்றம் உதவியிருக்கிறது போலும். அப்படியே ஹாங்காங்கிலிருந்து நியு யார்க் ஜான் எப் கென்னடி நிலையத்துக்குச் செல்லும் விமானத்தில் ஏறியமர்ந்தேன். விமான முழுமையும் சீனப்பயணிகள். ஒன்றிரண்டு வெள்ளையர்களே இருந்தனர். என்னருகில்  வயதான தாயுடன் மகன் அமர்ந்து கொண்டார். ஒரே போர்வையைப் போர்த்திக் கொண்டு அம்மா மகனின் தோளில் தலை வைத்து தூங்கினார். இடையிடையே அவர்கள் விழிக்கும் நேரமாகப் பார்த்து கழிப்பறைக்குச் சென்றேன். சங்கடம்தான். ஆனால், பதினைந்து மணி நேரப் பயணமாயிற்றே. அந்தச் சங்கடமூட்டும் நீண்டப்பயணம் தொடங்கியது. இருக்கைக்கு முன்னால் இருந்த திரையில் இரண்டு படங்களை ஓடவிட்டுப் பார்த்தேன். ஒரு சீனப்படம் 96 படச்சாயலில் இருந்தது. பதினெட்டு ஆண்டுகள் முன்னால் கண்ட ஜப்பானியக் காதலியைத் தேடிக் காதலன் செல்கிறான். நீண்ட கால இடைவெளியில் கணினி விளையாட்டுகளை உருவாக்கி நிறுவனம் தொடங்கி செல்வந்தனாகிறான். நிறுவன பங்குதாரர்களுடன் மோதல் உருவாகிறது. நிறுவனத்திலிருந்து விலகி சாதாரணனாக ரயிலில் பயணிக்கிறான்.


 நாயகனுக்கு வயதாகிவிட்டது என்பத்கைக் காண்பிக்க கண்ணாடியொன்று போதுமென இயக்குநர் எண்ணியிருப்பார் போல. அவன் தேடிச்சென்ற காதலி படமாக வீட்டில் மாட்டப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நடந்தது இவன் எண்ணுவது எல்லாமே இந்தியப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு எளிதில் ஊகிக்கக்கூடியவையே. இன்னொரு அமெரிக்கப் படமான french connection, தமிழ்ப்படம் குடும்பஸ்தன் என எத்தனை மணி நேரம் பார்த்தாலும் கடக்க வேண்டிய நேரம் பல மணித்தியாலங்கள் எனத் திரை காட்டிக் கொண்டே இருந்தது. பாடல்களையும் கேட்டுப் பார்த்தேன். இடையிடையே மூடப்பட்டிருந்த திரையை மேலேற்றி ஆகாயத்தையும் பூமியையும் பார்த்தேன். பசிபிக் பெருங்கடலின் பாதிவழியிலே கதிரொளி அணைந்து பங்குனி நிலவு காய்ந்து கொண்டிருந்தது. கீழே நுரைக்குமிழ்களாக பொங்கிய மேகங்கள். பகல் இரவுகளை எல்லாம் வகிர்ந்து விமானம் சென்று கொண்டிருந்தது. அமெரிக்கா நெருங்கியதுமே சன்னலில் பனி ஒட்டத் தொடங்கியது. கீழே பனியடர்ந்து போய் நிலங்கள் வெண்பாளங்களாக இருந்தன. விவசாய நிலங்களாக இருக்கவேண்டும். தேங்கியிருந்த குளங்களும் பனியிறுகி போயிருந்தது. ஜே.எப்.கே வந்ததுமே குளிரும் பதற்றமும் சேர உடலே நடுங்க தொடங்கிவிட்டது.

வந்து நின்றதுமே பாதுகாப்புச் சோதனைகள் தொடங்கிவிட்டன. கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது. தேவையான ஆவணங்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள் என எத்தனையோ முன்னறிவிப்புகள். அத்தனையும் நீ செல்வது அமெரிக்காஆஆவுக்கு என்ற எச்சரிக்கையைத் தரக்கூடியது. அறிவிப்புகளின் அச்சம் வேறெதிலும் இல்லை. ஒரு நீண்ட வரிசை. அது கலைந்து கலைந்து ஏழு முகப்புகளின் முன்னால் குறுக்க் விடுகிறது. வரிசையாக முக்குத்தி அணிந்த இந்தியப் பெண், ஆப்ரிக்க, சமோவ முகங்கள் நின்று இங்கு நில் சிவப்பு கோட்டைத் தாண்டாதே என அறிவிக்கிறார்கள். பதினொன்றாவது முகப்பு முன்னால் நில் என்றார்கள். எனக்கு முன்னால் இரண்டு சகோதரிகளிடம் ரோமன் ரெய்ன்ஸ் (wwe மல்யுத்த வீரர்) சாயலில் இருந்த அதிகாரி சிரித்துக் குலைந்து கொண்டிருந்தான். ரேகை வருடியில் அவனே கைகளைப் பற்றி ரேகை பதிக்க கற்றுக்கொடுத்தான். அடடே என்ன …சரியான வரிசைக்குத்தான் வந்திருக்கிறோம் என்றிருந்தது. அவர்களை எட்டிப் பார்க்கும் போதே சார் என ஒரு அதட்டல். என்ன என்று பார்ப்பதற்குள்.. நான் சிவப்புக் கோடு என்று சொன்னேன் என ஆப்ரிக்க அமெரிக்கப் பெண் கையிலிருந்த லத்தியைக் காட்டிச் சொன்னார். பட்டென கால் பின்னால் இழுத்துக் கொள்ள தொடங்கியது அமெரிக்கப் பதற்றம். என் முறை வந்தது. ஏன் நுழைகிறாய் என்றான். புருவங்கள் வளைந்து சுருங்கின. ஒவ்வொன்றாய்ச் சொன்னேன். அவன் சந்தேகம் தீரவில்லை. ஏத நாடு, தங்குமிடம், பணம் கொண்டு வந்திருக்கிறாயா, மது வாங்கினாயா என ஒவ்வொன்றாய் கேட்டான். மலேசியா என்பதையே முதன் முறை கேட்பதைப் போல கேட்டான். திக்கென்றிருந்தது. மறுபடியும் 22 மணி நேரம் பயணம் செய்து திருப்பி அனுப்பப்படவா வந்தோம் என்றிருந்தது. என்ன இருந்தாலும் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த்காயிற்று.. அவன் புருவ நெளிவுகள் தொடர்ந்தன.நான் நேராக விஷ்ணுபுரம் அழைப்பிதழைக் காட்டினேன்.   எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின்னர்,கையிலிருந்த தாளில் ஒரு ரப்பர் முத்திரை பதித்தான். போகலாம் என்றான். லக்கேஜுக்கு நிற்கும் போதுதான் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறோம் என்ற நிறைவே வந்தது. எத்தனை மொழிகள், வெவ்வேறு சாயல் முகங்கள் எனப் புலனுக்கு அகப்படுவதெல்லாம் வேற்றுமைகள்தான். லக்கேஜை எடுத்ததுமே என்னிடமிருந்த பதற்றம் வடிந்தது. இறுதி கோட்டைத் தொடுவதற்கு முன்னாலே ஒரு ஆசுவாசம். கைப்பேசியைத் திறந்து விஷ்ணுபுரம் பொறுப்பாளர் மகேஸ்வரிக்கு அழைத்தேன். முன்னரே அழைத்திருந்தார். ஒரு அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின்  விபு அமெரிக்க நண்பர் பழனியும் அவரது மகளான அஞ்சனாவும் அழைத்துச் செல்ல வந்திருந்தனர். உடன் கொரியாவில் பொரியியலாலராகப் பணியாற்றும் நண்பர் சதிஷும் வந்திருந்தார். ஒரு வேனில் ஏறியமர்ந்து பெல்ட்டை தளர்த்தியமர்ந்து கொண்டு அப்பாடா என்றிருந்தது. வழக்கமான  அறிமுகப் பேச்சுகள்.. என்னைப் பற்றி முன்னரே சதிஷ் வல்லினம் வாயிலாக அறிந்திருந்தார். ஆச்சரியம்தான். கதை, நிகழ்ச்சி என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுச் சொல்லும் போது அறியாத நிலத்தில் நம்மை அறிந்தவர்கள் மத்தியில் என்ற நிறைவு வந்தது. எனக்கடுத்து சுவிஸிலிருந்து சயந்தன் வந்தார். அவரையும் ஏற்றிக் கொண்டோம். கென்னடி விமான நிலையம் சுற்றிலும் புதிய நிலைய கட்டுமானப் பணி, சாலைப் பணிகள் எனப் பணிகளால் நெரிசல் அதிகமாக இருந்தது. அதோடு குடிநுழைவு துறைக்கான ஒதுக்கிடு தாமதமாகியதால் அதிகாரிகளுக்கான சம்பளத்தில் சிக்கல் இருப்பதால், வேலை செய்ய கூடியவர்களே குறைவாக இருப்பதாகச் சொன்னார்கள். வார நாள் மாலை என்பதால் வேலைக்குச் சென்று திரும்பும் வாகன நெரிசல் ஒருபக்கமிருந்தது. ஏறக்குறைய இன்னுமொரு நீண்ட பயணம். வழியில் நியுயார்க் நகரைக் கண்ணாடிச் சுவர் வழியே கண்கள் மேயத் தொடங்கின.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...