சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி பிறந்தநாள் விழா - 25 ஜனவரி 2025
சுவாமிபிரம்மானந்த சரஸ்வதிக்கு 70 வயது பிறந்தநாள் விழா அவரின் நண்பர்களாலும் மாணவர்களாலும் ஒருங்கிணைக்கப்படுகிறதென்று தெரிந்ததுமே அதில் கலந்து கொள்ளலாமென முடிவெடுத்தேன். எழுத்தாளர் ம.நவீனும் அழைத்துக் கேட்க உடனே வருகிறேன் எனச் சொல்லி விட்டேன். சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை நான் அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்க் கல்விக் கழகத்தில் பயிலும் போது விரிவுரைஞர் தமிழ்மாறன் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யும் பாரதி விழாக்களின் போது சுவாமியைச் சந்திப்பேன். அதைச் சந்திப்பு எனச் சொல்வதை விட அணுக்கத்திலிருந்து எந்த அறிமுகமும் இல்லாமல் கொஞ்சம் அகல நின்று பார்ப்பதாகத்தான் சொல்ல வேண்டும். நானும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் இருந்ததால், தொடக்கம் முதல் முடிவு வரை நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளில் சுவாமியும் இணைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆசிரமத்தில் தங்கியிருந்த மாணவர்களிடம் மண்டபத்தில் நாற்காலிகளை அடுக்கச் சொல்வது தொடங்கி அன்னதான மண்டபத்தில் உணவுத் தயாராவது, பரிமாறுவது என எல்லா வேலைகளையும் சுவாமி உடனிருந்து கவனித்துக் கொண்டே இருப்பார். நிகழ்ச்சித் தொடக்கத்தில் மெல்லிய கார்வையுடன் தொடங்கும் பஜனைப் பாடல்கள் தொடங்கி உரை ஆற்றுவது தவிர மற்ற நேரங்களெல்லாம் மண்டபத்தில் ஒரு மூலையில் எதாவது பணியில் இருந்து கொண்டே இருப்பார். ஞான நிறைவுடன் அமர்ந்து ஆசியளித்து சத்சங்கம் செய்யும் கற்பனையிலிருந்த ஆன்மீகக்குருவுக்கு முற்றிலும் நேர்மாறானவராக வெடிச்சிரிப்புடன் சிரித்துப் பேசிக் கொண்டே எல்லா பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் தொடங்குகின்ற சுவாமியின் உரைகளில் பெரும்பாலும் அப்போதைக்குத் தான் வாசிக்கும் படைப்புகளிலிருந்து சில வரிகளே முதன்மையாக இருக்கும். கூலிமில் ஏற்பாடு செய்யப்படும் நவீன இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைக்கும் முகமாகவும் சுவாமி இருந்து வந்தார். பின்னாளில், என்னைத் தனியாக அவர் கண்டுகொண்ட நாட்களில் இலக்கியத்தைப் பற்றி ஒரிரு வரிகள் பேசுவார். எழுத்தாளர் ஜெயமோகன் ஒவ்வொரு நாளும் எழுதி வந்த மகாபாரத மீளாக்கமான வெண்முரசின் உச்சக்கட்ட படுகள காட்சிகளின் வாசிப்பனுபவத்தைச் சொல்லும் போது அது வாசிப்பில் தனக்குத் தந்த உளைச்சலையும் அதை எழுத்தாளன் எழுதும் போது அடையும் உலைவு எப்படியானதாக இருக்குமென ஒரு சந்திப்பின் நிறைவின் போது சொன்னார். இலக்கியத்தை அவர் அணுகுகின்ற விதம் அவரின் வாசிப்பனுபவத்தின் ஆழத்தைக் காட்டியது. இன்னொரு வகையில், ஆன்மீகக் குருவாக அவரால் ஊடுருவிப் பார்க்க முடிந்த நுண்ணுணர்வுகளையும் எனக்கு காட்டியது.
மனித
உணர்வுகளின் உச்சங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் போர்க்களத்தை
எதிர்கொண்டு தனக்குள்ளும் வெளியேயும் ஓயாமல் சமரிட்டு வீழும் உணர்வை உணர்வதால
காலையிலே தொடங்கிய யாகங்களுக்குப் பின்னர் நடந்த பொது நிகழ்ச்சியில்தான் நானும் நவீனும் கலந்து கொண்டோம். ஆசிரமத்துக்கு வந்ததும் சுவாமியின் அறை அமைந்திருக்கும் மைய அறைக்கு வெளியே நின்று காத்திருந்தோம். எங்களைப் பார்த்ததும் ‘ நான் யாரையும் கூப்பிடலே நவீன்…நீங்கள்லாம் வருவீங்கன்னு எனக்கு தெரில’ எனச் சொன்னார். அவரிடம் ஆசி பெற்று விட்டு ‘’ சாப்டிங்களா…எப்பவும் சாப்பாடு நல்லா இருக்கும்….இன்னைக்கு இன்னும் நல்லா இருக்கும்…போயி சாப்புடுங்க’’ என்றார். சாப்பிட்டுவிட்டு மண்டபத்துக்குள் நுழைந்து பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டோம். அரங்கு முழுவதும் சுவாமியின் மாணவர்களும் நண்பர்களும் நிறைந்திருந்தனர். மண்டபத்துக்குள்ளும் வெளியேயும் மணமேடை அலங்கார வாயில்களும் தூண்களும் நிறைந்திருந்தன. தன்னுடைய பயணத்தில் இணைந்திருந்த முக்கியமானவர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து சுவாமி மரியாதை செய்தார். சுவாமியின் வாழ்க்கை வரலாற்றையும் ஆன்மீகப் பயணத்தையும் குறிக்கும் சிறப்பான காணொளி தொகுப்பொன்று திரையிடப்பட்டது. சுவாமியுடன் சின்மயா மிசனின் உடன் பயின்ற நால்வர் சுவாமியுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். முதல் மூவர் வட இந்தியர்களென்பதால் ஆங்கிலத்தில் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சின்மயா மிசனுக்கு வரும் போது தாங்கள் பார்த்த முனியாண்டியைப் பற்றி சொன்னார்கள். அப்பொழுதே, பின்னாளில் உருப்பெற்ற சுவாமி பிரம்மானந்தருக்கான ஆன்மீக ஆளுமையும் குணங்களும் அவரிடம் இருந்ததை மிகுந்த பரவசத்துடன் சொன்னார்கள். நான்காவதாகப் பேசிய சுவாமிநாதன் என்னும் சுவாமியின் நண்பரின் உரை அவருடனான தன்னுடைய நட்பின் அந்தரங்கத்தையும் ஆளுமையும் ஒருசேர சொல்வதாக் இருந்தது. பொதுவாகவே தன்னுடைய மலேசிய அனுபவங்களின் வாயிலாக இங்குள்ளோரிடம் இந்தியா புண்ணிய பூமி, ஆன்மீக நிறைவு கொண்டோர் வாழுமிடம் போன்ற மனச்சாய்வு இருப்பதைக் காண முடிவதாகக் குறிப்பிட்டார். ஆனால், பாரதத்தின் வடக்கில் நிகழ்ந்த சிவபெருமானின் திருமணத்தைக் காண பாரதமே வடக்குக்குப் படையெடுத்த போது மேலுயர்ந்த தெற்கு நிலப்பகுதியைச் சமன்படுத்த அகத்தியரைச் சிவனே அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் புராணக்கதையைப் போல மலேசியா மண்ணுக்குச் சுவாமி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் . அவரின் ஆன்மீக ஆளுமையும் அறிவும் தனிப்பட்ட முறையில் தன்னுடைய வாழ்வென்னும் சம்சார சாகரத்தைக் கடக்க வழித்துணையாக இருந்தது. அவரின் ஆளுமையையும் அறிவாற்றலையும் இன்னும் பயன்படுத்திக் கொள்ளும் தீவிரம் போதுமானதாக இல்லையெனவும் தன்னுடைய மனக்குறையைச் சொன்னார்.
அதன் பிறகு சுவாமி பேசினார். துறவிக்குப் பிறந்தநாள் விழா எற்புடையதுதானா என்ற கேள்வியை மையப்படுத்திப் பேசத் தொடங்கினார். இதற்கு முன்னர் தனக்கு அணுக்கமானவர்கள் பலரும் நற்காரியங்களுக்கு அழைத்தப் போதிலும் அதனை விலக்கியதைப் பற்றிச் சொன்னார். அதற்கு உள்ளூர துறவில் இருப்பவர்கள் கைகொள்ள வேண்டிய விலக்கு முக்கியமான காரணமாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். பரதேசி வந்தான் எனும் தி.ஜானகிராமனின் கதையில் திருமணத்தன்று ஆண்டிக்கோலத்தில் அன்னதான மண்டபத்திலிருந்து அவக்கோலமெனக் கருதி விரட்டப்படும் பரதேசியின் சித்திரிப்பைக் காட்டி நற்காரியங்கள் நிகழும் போது மனத்தில் தோன்றும் மங்கலம் எனும் சமூகத் தோற்ற மயக்கங்களுக்கு ஆட்படாதிருத்தல் எனும் விலக்குக் கொள்கையைச் சொன்னார். இருந்த போதும் தன்னுடைய மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த நிகழ்வில் இருத்தல் மட்டுமே தான் ஆற்றுவதால் அதனை அனுமதித்தாகக் குறிப்பிட்டார்.
மதியம்
இன்னொரு நல்ல உணவை உண்டுவிட்டு ஆசிரியர் தமிழ்மாறனிடமும் விடைபெற்றுக் கொண்டேன். சுவாமியுடன்
நானும் ம.நவீனும் தனித்தனியே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆசி பெற்றுவிட்டுப்
புறப்பட்டோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக