பெருமாள் முருகனின் கூளமாதாரி நாவலை வாசித்தேன். மோட்டாங்காடு எனப்படும் வறண்ட காட்டில் பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் (ஆளுக்கார பசங்க) பதின் பருவத்துச் சிறுவர்களின் உலகை நாவல் பேசுகிறது. பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் கூளையன், நெடும்பன், வவுறி, செவிடி, மொண்டி ஆகிய ஐந்து சிறுவர்களின் உலகையே நாவல் சித்திரிக்கிறது.
ஆண்டுக்கு இவ்வளவு என கூலி பேசப்பட்டுக் கொத்தடிமைகளைப் போலவே சிறுவர்கள் ஆடுகளை
மேய்க்கவும் பட்டியைத் தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்கின்றனர். சாதியால் தாழ்த்தப்பட்ட
தெலுங்கு பேசும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த சிறுவர்களை நிலவுடைமைச் சாதியினரான கவுண்டர்களின்
பட்டிகளில் வேலை செய்கின்றனர். ஆடுகளை மேய்க்கக் கிளம்பும் காலையில் குச்சியால் தூக்குப்
போசியைத் தூக்கிக் கைபடாமல் முன்னிரவு மீந்து போன கம்மஞ்சோற்றை வைத்து மீண்டும் குச்சியாலே
இடையச் சிறுவர்களுக்குத் தருகின்ற அளவு சாதித் தீண்டாமை இருக்கிறது.
சிறுவயதிலே குடும்பத்தை விட்டுப் பிரிந்து பண்ணைக்காரர்களின் கொடும் வசவுகளைத் தாங்கி கொண்டு கொடுமையான வேலையையும் செய்யும் சிறுவர்கள் தங்களுக்கான மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்கின்றனர். வறண்ட மோட்டாங்காட்டும் கொத்தடிமை வாழ்வும் என நிலமும் வாழ்வும் சாயமிழந்து கிடக்கும் சூழலில் கிணறு, நுங்கு, கள், கொதிக்கும் வெய்யிலில் மரத்தடி நிழல், காடை முட்டைகள் எனக் காடு மறைத்து வைத்திருக்கும் தின்பண்டங்களும் மகிழ்ச்சியையும் என வாழ்வைத் தேடிக் கொள்கின்றனர். கொடும் வாழ்வை எப்படி சிறுவர்கள் தங்களின் விளையாட்டுகளாலும் தாங்களே காடுகளில் கண்டடையும் உணவுகளாலும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உணர்வு வலையாலும் எப்படி சுவாரசியப்படுத்தி கடந்து செல்கின்றனர் என்பதும் நாவலில் மிக நுட்பமாக நாவலசிரியர் சொல்கிறார்.
பொந்துகளில் ஒளிந்திருக்கும் காடை முட்டை, இரவில் ஆடுகளைப் பட்டிப்போட்டு காக்கும்
போது மரத்திலிருந்து விழும் பனங்காயின் சத்தம், பனைமரத்தில் தெளுவு கட்டப்பட்டிருக்கும்
கள் சட்டி என வறண்டகாட்டின் இனிப்பை, சிறந்தவற்றைச் சிறுவர்களின் உலகம் திரட்டி வைத்திருக்கிறது.
அச்சாங்கல், பல்லாங்குழி, கிணற்று நீச்சல் என விளையாட்டின் சுவாரசியங்கள் வழியும் வாழ்வைக்
கடத்துகின்றனர். நாம் வாசிப்பில் கண்டடையும் வாழ்வின் சிரமங்கள், சாதியக் கொடுமை ஆகியவற்றிலான
அநீதியான வாழ்வுக்கு மத்தியில் இன்பத்தையும் விடுபடலை மட்டுமே நாடும் சிறுவர்கள் என்ற
கோணமே நாவலை அணுகச் சரியானதென எண்ணுகிறேன். அந்தக் கோணமே, இக்கட்டுகள் சூழும் போது
அந்த உணர்வுத் தீவிரத்தை உடனுக்குடன் மறக்கடிக்கச் செய்து அடுத்தடுத்த சுவாரசியத்துக்கும்
ஆடலுக்கும் முன்னால் அவர்களை நிற்கச் செய்கிறது. ஆடுகளை மேய்க்கச் சென்று கொஞ்சம் அசந்தபிறகு
சோளக்காட்டில் கதிரை விழுங்கி அடுத்தடுத்து மூன்று ஆட்டுக்குட்டிகளைப் பறிகொடுக்கின்ற
நெடும்பன் பண்ணையாரின் அடிக்குப் பயந்து ஊரை விட்டு ஓடிப்போகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடித்து
உடல் நோக அடித்துத் துன்புறுத்துகின்றனர். நெடும்பன் வராமல் போன வருத்தம் ஒருபக்கம் வாட்டிக்
கொண்டிருக்கும் போதே கூளையனும் அவன் மேய்ச்சல் தோழர்களும் மீன்களைப் பிடித்துத் தின்ன
ஆசை வந்து மீன்பிடிக்கப் போகிறார்கள். காயங்களுடன் வந்து சேர்கின்றவனை சிரிப்புடன்
அவர்கள் வரவேற்கின்றனர். முனிசாமியின் அருள் வடிவாக இருக்கும் கிடா ஆட்டுக்கு வீரன்
எனப் பெயரிட்டு வளர்க்கிறான் கூளையன். மொத்தப் பட்டி ஆடுகளுக்கும் தனக்குமே வீரன் தான்
காவல் என்பதைப் போல ஆசையுடன் வளர்க்கிறான். முனி சாமிக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடு வெட்டப்படும்
நாளன்று ஆடுகளின் கதறல்களில் அதன் குரலைத் தனியே பிரித்தரிந்து கேட்கிறான். அது வெட்டுப்பட்ட
நாளன்று அதன் நினைவுகள் அவன் மனத்தை வருத்திப் பிழிகின்றன. மறுநாள் காலையில், வழக்கமாகப்
பண்ணையார் அம்மாவால் தரப்படும் தூக்குப் போசியில் அதன் கறி இல்லாததைக் கண்டு ஏமாற்றமும்
அடைகிறான். வளர்த்த ஆட்டை வெட்ட கொடுத்த துயர் வருத்திக் கொண்டிருந்த மனத்தில் தான்
கறிச்சோறு உண்டு நாளாகிவிட்டதெனும் உணர்வும் ஏற்படுகிறது. எந்த உணர்வு நிலைகளிலும்
சிறுவர்கள் நிலைத்திருப்பதில்லை. நாவல் சொல்லும் சமூக வாழ்க்கை சார்ந்த நியாய அநியாயங்கள்
ஒருபுறமிருக்க முதன்மையாக அவர்கள் சிறுவர்கள் என்ற எண்ணம் மட்டுமே ஏற்படும்படியாக பெருமாள்
முருகன் அவர்களின் அகவுலகை மிக நுட்பமாக கட்டமைத்திருக்கிறார்.
சிறுவர்களின் அகவுலகில் படியும் வன்முறையும் வசையும் எவ்வாறு வன்மமாகத் திரள்கிறது
என்பதையும் காட்டவே செய்கிறது. தன்னுடைய பண்ணையாரின் மகனான செல்வன் பள்ளியில் ஆசிரியரிடம்
அடி வாங்குவதை அறிந்து உள்ளூர கூளையன் மகிழ்கிறான். காட்டில் பட்டிப் போடப்பட்ட நாளன்று
திருட்டுத்தனமாகச் சினிமா பார்க்க பண்ணையாரின் மகன் செல்வன் கூளையனை வற்புறுத்துகிறான்.
அவனுடைய வற்புறுத்தலுக்கிணங்கி படம் பார்க்க செல்கின்றவனின் ஆட்டுக்குட்டியை யாரோ களவாடிவிடுகிறார்கள்.
அதனால் பண்ணையாருக்கு ஏற்பட்ட நட்டத் தொகையான நூறு ரூபாயை அவன் சம்பளத்தில் பிடித்தம்
செய்து கொள்கிறார்கள். வறண்ட காட்டில் அரிதாகவே தென்படும் தென்னை மரத்தில் ஏறி இளங்காய்களைத்
திருடிப் பறித்து சாப்பிட கூளையன் எண்ணுகிறான். காய்களைப் பறித்துக் கொண்டிருக்கும்
போதே பண்ணையாரிடம் பிடிபட்டு கடுமையாக அடி வாங்குகிறான். முன்னரே களவாடிய காய்கள் இருக்கும்
தோப்பு உரிமையாளருக்கும் அவனுடைய பண்ணையக்காரர்க்குமான முன்பகையால் கூளையனுக்கு கடுமையான
தண்டனை தரப்படுகிறது. கயிற்றால் இறுக்கப்பட்டு கிணற்றில் நாள் முழுவதும் மிதக்கவிடப்படுகிறான்.
உடல் வலியால் ஏற்படும் காந்தலும் கிணற்றுத் தவளைகளின் குரலும் தண்ணீரின் சில்லிப்புமாக வாழ்நாள் முழுவதும்
தொடரும் உள உளைச்சலுடன் கூடிய வலியை அனுபவிக்கிறான். இப்படியாக அழுத்தப்பட்ட உணர்வுகள்
சேர்ந்தே நாவலின் இறுதியில் கூளையனை செல்வனைக் கிணற்றில் மூழ்கடிக்கவும் செய்கிறது.
அதையும் சேர்த்துத்தானே அந்த வாழ்வு அவனுக்கு அளிக்கிறது.
கூளமாதாரி நாவல் ஆடு மேய்க்கும் சிறுவர்களின் வாழ்வைப் பருவம் வாரியாக உதிரிச்
சித்திரங்களாகக் கட்டியெழுப்புகிறது. அந்த நில, வாழ்வு சித்திரிப்புகளோடு சிறுவர்களின்
அகவுலகின் நுட்பங்களையும் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார். வறண்ட வாழ்விலிருந்து சிறுவர்கள்
மகிழ்ச்சியை மட்டுமின்றி வன்மத்தையும் சேர்த்தே தேக்கச் செய்கிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக