முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Blues- அனுபவம்

சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படமான ப்ளூஸ் (Blues) படத்தைப் பார்த்தேன். மலேசியத் தமிழ்த் திரைப்படச் சூழல் இயங்கும் விதத்தை ஒட்டிய விமர்சனத்தையும் அதன் ஊடே தனக்கான அடையாளத்தைத் தேடிக் கண்டடைய ஒரு இளம் இயக்குநர் படும் அக, புறப் போராட்டங்களைப் பற்றியதாகப் படம் இருக்கிறது.



சிவம், சக்தி, சிவசக்தி என மூன்று அத்தியாயங்களாகப் படம் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று அத்தியாயங்களின் பகுப்பும் அதன் கதாபாத்திரங்கள் வழி இயக்குநர் முன்வைக்க எண்ணுவது ஒரு தத்துவார்த்தமான இணைப்பை என்பதைப் படம் பார்த்து முடிந்ததும் உணர முடிகிறது. முதல் அத்தியாயமான சிவத்தில் கார்த்திகை மைந்தன் எனும் இளைஞன் இயக்குநராகும் கனவுடன் இருக்கிறான். மலேசியத் தமிழ் தொலைக்காட்சிச் சூழலில் படங்களும் நிகழ்ச்சிகளும் இயக்கும் மூத்த இயக்குநரின் உதவியாளராகப் பணிக்குச் சேர்கிறான். தமிழ்நாட்டுப் படங்களின் சாயலுடன் மெல்லுணர்ச்சியோடு எடுக்கப்படும் படங்களின் மீது அவனுக்கு ஆழமான ஓவ்வாமை இருக்கிறது. ஆனால், தான் இயக்க எண்ணும் படத்துக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறான். இன்னொரு புறத்தில், அவனுடைய காதலியான சுபாவுடனான உறவும் காட்டப்படுகிறது. அவனுடைய கனவின் மீது சுபாவுக்கு நம்பிக்கை இருப்பதாகவே காட்டப்படுகிறது. ஆனால், அவளுக்குமே திருமணம் சார்ந்த அழுத்தங்கள் பொறுக்கமுடியாமல் போகும் போது உலகியல் வாழ்வில் அவனது கனவின் சாத்தியமின்மையைப் பற்றிக் குத்திக் காட்டவே செய்கிறாள். அவனுடைய கனவில் எழும் நிராகரிப்புகளின் சோர்வு அவனை எளிதில் சூழ்கிறது. தான் நம்புகின்ற துறையில் நடக்கும் ஏமாற்றங்களும் உறவில் ஏற்படும் பதற்றங்களுக்கும் சேர்த்து அவனிடம் இருப்பதெல்லாம் நம்பிக்கையினால் துளிர்விடும் சமாதானங்கள்தான். விதையைப் போல சத்தமின்றி முளைவிடுவேன், நம்பிக்கையுடன் இருந்தால் பொன்னிற ஆமை கடலில் தெரியும் இப்படியான சமாதானங்கள் மட்டுமே அவன் தேர்ந்திருக்கும் பாதைக்கான தீவிரத்துக்குப் போதுமானதில்லை. தன் கனவுகளின் மீதான தீவிரமின்மையே அவனைத் தற்காலிகமாக அதிலிருந்து வெளியேற்றுகிறது.  மற்றவர்களைப் போல சாதாரண வாழ்வை அமைத்துக் கொள்ளப் போவதாகச் சொல்லும் போது சுபாவே அவனை நிராகரித்தும் விடுகிறாள்.


இரண்டாவது அத்தியாயமான, சக்தியில் அகப்புற சோர்வுகளால் திரைப்படத்திலிருந்து ஒதுங்கியிருந்தவன் நீண்ட இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் திரைப்படச் சூழலுக்குள் ஒலிப்பதிவு உதவியாளராகத் தொடர்கிறான். அவனுடைய இயக்குநராகும் கனவுகள் மறைந்து திரைப்படச் சூழலுக்குள் ஒரங்கமாக மட்டும் வாழ்க்கையைத் தொடர்கிறான். சீன, தமிழ் கலப்பினத்தைச் சேர்ந்த பேச்சாயி எனும் பெண் அவனுக்கு அறிமுகமாகிறாள். அவனைப் போலவே, அவளுக்கும் கலை சார்ந்ந ஆர்வம் இருக்கிறது. முந்தைய காதல் உறவு விலகலால் ஏற்பட்ட கசப்பும் இருக்கிறது. இந்தக் குழப்பங்களால் அவளுமே அலைகழிந்து கொண்டுத்தான் இருக்கிறாள். அவளின் குழப்பங்களுக்கும் சோர்வுகளுக்கும் கார்த்தி ஆறுதலாகிறான்.  கார்த்திக்கு உள்ளூர அவளைத் துணையாக்கிக் கொள்கின்ற விழைவும் இருப்பதும் காட்டப்படுகிறது. ஆனால், உள்ளூர அவனுக்குள் இருக்கும் பலவீனத்தை பேச்சாயி சுட்டிக்காட்டுகிறாள். அதனால் உந்தப்பட்டுத் திரைக்கதையை எழுதுவதற்கான முயற்சிகளும் சோர்வை நோக்கியே செல்கிறது.

மூன்றாம் பகுதியான சிவசக்தியில் அவனை அணைத்திருக்கும் அப்பாவின் கரத்தை உணர்கிறான். குடியால் அழிந்து போன தன் தாத்தாவின் படத்தைக் காண்கின்ற போது ஏற்படும் திடுக்கிடலும் அப்பாவின் அன்பையும் உணர்கிறான். அப்படி அவனை தொட்டணைத்திருந்த அன்பை உணர்கிறான். உள்ளுக்குள் தூர்ந்து போயிருந்த கலை மறுபடியும் ஊற்றெடுப்பதற்கான கண் திறக்கின்றது. இத்தனை அலைக்கழிவுக்குப் பிறகு உருவான திரைக்கதையுடன் கரை முன்னால் நின்று கடலைப் பார்க்கிறான். 

படத்தின் தொடக்கத்தில் நம்பிக்கையுடன் காண்கின்ற போது பொன்னிற ஆமையின் தரிசனம் கிடைக்கும் எனச் சொல்பவனுக்கு இறுதியில் அதற்கான தரிசனம் கிடைத்திருக்கக்கூடும் என்பதாகவே படம் முடிகிறது. நீலம் மட்டுமே பரவிநிற்கும் கடலில் பொன்னிற ஆமை எழுந்து வந்து காட்சிதந்த தருணமாக அதனைக் காணமுடிகிறது. நீலம் என்பது முடிவின்மையின் ஆழத்தின் அறியப்படாததின் நிறம். அதில் பொன்னிற ஆமையைத் தரிசிப்பதென்பது அதற்காக நம்மை செலுத்துவதுதான். கார்த்தியின் கலைக்கான தேடலென்பது அப்படி அறியப்படாத நீலவெளியில் இருக்கும் தேடல்தான். அதில் அவன் அடைந்த தரிசனத்தையே படம் காட்டும் அவனுடைய அனுபவங்களாகின்றன.

ஆண் பெண் உறவையும் படம் சிறப்பாகக் காட்டுகிறது. கார்த்தியின் படம் இயக்கும் கனவுக்கு சுபா துணையிருக்கிறாள். திருமணப் பேச்சு எழும் போது அவனது கனவை நிராகரிக்கிறாள். அவனே, தன் மீதான நம்பிக்கை இழக்கும் போது அவளே அவனைப் பிரிந்துவிடுகிறாள். அடுத்ததாக, பேச்சாயியுடன் ஏற்படும் உறவு ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் தாண்டிய உறவாக அமைகிறது. ஒரே மாதிரியான மன வார்ப்பும் தடுமாற்றங்களும் கொண்டவர்களாக கார்த்தியும் பேச்சாயியும் இருக்கின்றனர். ஒருவரின் மனச்சோர்வை மற்றொருவர் நிகர் செய்து கொள்கின்றனர்.

சஞ்சயின் திரைமொழி புளூஸ் இலும் சிறப்பாக இருந்தது. மலேசியத் தமிழ்த் திரைச்சூழல் இயங்கும் விதத்தையொட்டிய கூரிய அங்கதமும் படம் முழுவதுமே இழையோடுகிறது. 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்ததைப் போல தமிழ்ப்பாடல்களுக்கான் நடனக்காட்சிகளும், தமிழ்ப்படங்களைப் பிரதியெடுக்கும் வசனங்களும் நடிப்பும் என மலேசியத் தமிழ்ச்சூழலின் அபத்தம் காட்டப்படுகிறது. உதவி இயக்குநராக இருக்கும் கார்த்தி ஒவ்வொரு நாளும் புறாக்களுக்குத் தீனி போடுகிறான். அவன் பணியாற்றும் இயக்குநர் படக் கதையைச் சொல்லி செயற்கையாக அதில் உணர்ச்சியூட்ட செய்யும் உத்திகள் அபத்த நகைச்சுவையாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன்னுடைய பழைய இயக்குநரும் புறாக்களுக்குத் தீனிபோடும் காட்சியொன்று காட்டப்படுகிறது. வா… வா என கூவியழைத்துக் கொண்டே புறாக்களுக்குத் தீனி போடுவதிலிருந்தே அவரின் சிந்தனை, திரைப்படம் எடுப்பதன் விதம் எதுவுமே மாறியிருக்கவில்லை என்பதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

தேடலும் குழப்பமும் ஏமாற்றமும் என கலைக்கான தேடல் கொண்ட கலைஞராக கர்ணன் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். மலேசியத் தமிழ்த் திரைச்சூழலில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான படைப்பாக ப்ளூஸை முன்னிறுத்தலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...