முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீ.முவுக்கு அஞ்சலி

 ''சீ.மு ஒரு சிங்கம் மாதிரி தனித்துத்தான் இருப்பார்'' என்றுதான் எழுத்தாளர் சீ.முத்துசாமியை இலக்கிய நண்பர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 2017 ஆம் ஆண்டு கூலிம் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்புத்தான் கல்லூரிக்கு வெளியே நான் கலந்து கொண்ட முதல் இலக்கியக்கூட்டம். ஜெயமோகனின் வெண்முரசு நாவல் தொடரையும் அவருடைய எழுத்துகளையும் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். பொதுவாகவே, என்னுடைய தனிப்பட்ட கூச்ச இயல்பால் உரையாடலையோ சந்திப்புகளையோ பெரும்பாலும் தவிர்த்துவிடவே செய்வேன். ஆனால், ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு வருகிறார் எனும் போது நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்கிற உந்துதல் எழுந்தது. அப்போதைக்கு  வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு தெரிந்த ஒரே இலக்கிய நண்பர் கூலிமைச் சேர்ந்த சு.தினகரன் தான். அவருக்கு நவீன கவிதைகளில் ஆர்வம் இருந்தது. நாளிதழ்களில் தொடர்ச்சியாக கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தார்.  நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென தினகரனும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.அந்த உந்துதலுடன் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.


 முதல் இலக்கியச் சந்திப்பே பல வகையில் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.  அதுவரையில் நான் வாசித்திருந்த கேள்விபட்டிருந்த மலேசிய இலக்கிய ஆளுமைகளை நேரடியாகச் சந்திக்கும் அனுபவம் ஏற்பட்டது. மலேசிய இலக்கியச் சூழலில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி எப்பொழுதுமே இலக்கிய மையமாகவே இருந்து வந்திருக்கின்றார். அதனை முதன்முறையாக நேரில் காணும் அனுபவம் எனக்கு அப்பொழுதுதான் வாய்த்தது. அந்த ஒரு நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான  எழுத்தாளர்கள் எல்லாருமே கலந்து கொண்டிருந்தனர். அங்கு சென்றப் பிறகுத்தான் கருத்து வேறுபாடுகள், மனத்தாங்கல்களால் விலகிப்போயிருந்த எழுத்தாளர்களும் அதனால் பிளவுபட்டிருந்த இலக்கியச் சூழலையும் ஒருவகையில் உணர்ந்து கொண்டேன். 

அப்போதைக்கு நானும் ஒரு இலக்கியக் குழாமில் தற்காலிகமாக இணைந்திருந்தேன். அங்கிருந்த நண்பர்கள் தான் சீ.முத்துசாமியை ஒரு சிங்கம் மாதிரி எனச் சொல்லி அறிமுகப்படுத்தியிருந்தனர். பரிசு, பதவி என எல்லாவற்றையும் துச்சமாக நினைக்கக்கூடியவர். கறாரான இலக்கியவாதி என அவரை அறிமுகப்படுத்திப் பேசினர். அவரைப் பற்றி அறிந்து வைத்திருந்தாலும் எந்தப் படைப்பையும் அதுவரையில் வாசித்ததில்லை என்ற குற்றவுணர்வு எழுந்தது. முதல் நாள் நிகழ்ச்சிக்கே சீ.முத்துசாமி சற்று தாமதமாகத்தான் வந்தார். அவரிடம் என்னையும் தினகரன் அறிமுகப்படுத்தி வைத்தார். மிக இயல்பாகக் கைகுலுக்கி கல்லூரியில் இலக்கியம் வாசிக்கிறீர்களா எனச் சந்தேகத்துடன் பார்த்தார். நானும் வாசித்தவற்றைக் குறிப்பிட்டேன். பெரிதாக ஆர்வம் ஒன்றும் அவரிடம் எழவில்லை.

அன்றிரவே, நாங்கள் இணைந்திருந்த இலக்கிய குழாம் நண்பர்கள் சீ.முத்துசாமியை அழைத்து வெகுநேரம் இரவில் பேசிக் கொண்டிருந்தார்கள். இரவில் ஆசிரமத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த மலாய் உணவகத்துக்கு நடந்து சென்று பேச்சைத் தொடர்ந்தோம். நடக்கையில் தனித்திருக்க நேர்ந்தவரிடம் எதையாவது பேசிவிட வேண்டுமென அருகே செல்ல முயலும் போதெல்லாம் நண்பர்கள் அவரிடம் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும், 70 களில் இருந்த இலக்கியச் சூழலைப் பற்றிய விமர்சனம்தான் பேசுபொருளாக இருந்தது. அப்படியும் அவர் மட்டுமே தொலைவில் என்னுடன் நடந்து வந்த போது மறுபடியும் என்னை அறிமுகம் செய்து கொள்ள மட்டும்தான் முடிந்தது. மறுபடியும் சந்தேகத்துடன் என்னைப் பார்த்தார். அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் ஜெயமோகன் ஆற்றிய உரைகள் பெரும் அகத்திறப்பு அனுபவங்களாக இருந்தன. மறுநாள் மலேசிய இலக்கியத்தைப் பற்றிய அமர்வொன்றில் ம.நவீன், யுவராஜன், கோ.புண்ணியவான் ஆகியோர் பேசினார்கள். அன்றைய நாளின் நிறைவுரையின் போதுதான் ஜெயமோகன், சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருதை அறிவித்தார். சீ.முக்கு மட்டுமில்லை மலேசிய இலக்கியத்துக்குமான ஏற்பாகவும் அந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, இலக்கியக்குழாம் நண்பர்கள் சீ.முவைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். எல்லா வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்ட சீ.முத்துசாமியின் முகத்தில் வந்ததிலிருந்து இருந்த விலக்கம் சற்று இளகியதாகத்தான் தெரிந்தது. ஆசிரமத்தின் உணவு மண்டபத்தில் சில நிமிடங்கள் மட்டும் நண்பர்களின் வருகைக்கு முன்னால் தனித்திருந்தவரைக் கண்டேன். இதுதான் நாம் அவருடன் பேசுவதற்கான சரியான தருணமென எண்ணி அவரருகில் அமர்ந்து வாழ்த்துகளைச் சொன்னேன். அவருக்கு நான் யாரென ஓரளவு அறிமுகமாகியிருந்தது. அவருடைய படைப்புகளைப் பற்றி எதும் பேசமுடியவில்லை. கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர், ''தம்பி முதல்ல நல்ல வேலைக்குப் போய் சம்பாதிங்க...என்னோட அனுபவத்துல சொல்றேன்...காசு இல்லன்னா கட்டுனவங்க கூட மதிக்கமாட்டாங்க... வெளியில இருக்குறவங்களுக்கும் எழுதுறோம்ன்னு சொன்னா எவ்வளவு கெடைக்கும்ன்னுதா கேப்பாங்க..  வாழ்க்கைய அமைச்சுக்கிட்டு அதுகப்புறமா நல்லா எழுதுங்க... '' என்றார். அதற்கடுத்து நண்பர்கள் சூழ்ந்து கொள்ள மறுபடியும் இலக்கியச் சர்ச்சைகள், கதைகள், வாழ்த்துகள் எனத் தொடர்ந்தது. ஏறக்குறைய இருபதாண்டு காலம் இலக்கியத்திலிருந்து விலகியிருந்த சீ,முத்துசாமி 90 ஆம் ஆண்டுகளின் பிற்பாதியில்தான் இன்னும் தீவிரத்துடன் எழுதத் தொடங்கினார். அந்த இடைவெளித்தான் சீ முத்துசாமி அப்படி குறிப்பிடுவதற்கான காரணமாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.

இன்றைக்கு 11 மார்ச் 2026 அவர் மரணமடைந்துவிட்டார் எனத் தெரிந்த போது அவருடைய நினைவாக எனக்கு தோன்றுவது அவர் குறிப்பிட்ட அந்தச்  சொற்கள்தான்.  வாழ்க்கை ஓட்டத்தில் இலக்கியத்திலிருந்து சற்றே விலகியிருந்தவரின் சொற்களாக மட்டும் அவற்றைக் குறுக்கிவிடமுடியவில்லை. பின்னாளில் அவருடைய படைப்புகளை வாசித்தப் போதும் அதன் உள்ளுறையாகவும் வாழ்வுக்குப் பின்னால் இருக்கும் புரிபடாத மர்மமும் அதன் சோர்வுமே இருந்ததை உணரமுடிந்தது. அவருக்கு என்னுடைய அஞ்சலிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...