முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக் கனவு

 அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2, 2026 நடந்த வாழும் தமிழ் விழா பற்றிய என் மனப்பதிவை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். அது மனப்பதிவு மட்டுமில்லாமல் குறிப்பாக, பயண அனுபவமாக விரிந்திருக்கிறது. அதனை ஒவ்வொரு பதிவாக இடலாம் என்றிருக்கிறேன்.



கனவு 1

2022 ஆம் ஆண்டு ஜெயமோகன் மலேசியாவுக்கு வந்திருந்தார். ஜார்ஜ் டவுன் இலக்கியத் திருவிழாவின் சிறப்பு` விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம.நவீன் தமிழினி 2000 போன்ற மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற யோசனையைச் சொன்னார். அவர் சொன்னப்போது நானும் உடனிருந்தேன். 2000 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழ் புத்தாயிரத்தில் தமிழிலக்கியத்தில் செல்திசையை ஒட்டி தமிழினி 2000 எனும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கல்வியாளர்களே கலந்து கொண்டனர். அவர்களின் கட்டுரைகளை மாநாட்டு மலரில் கண்ட போது அதன் ‘’கல்வியியல் ஆய்வுக்கட்டுரைத் தனமை’’ தனக்கு அளித்த ஓவ்வாமையைப் பற்றி நவீன் அதற்கு முன்னரே என்னிடம் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அந்த மாநாடு முடிந்த 25 ஆண்டுகளில் ஒரு மாநாட்டைச் செய்ய வேண்டும். கால் நூற்றாண்டில் தமிழிலக்கியத்தில் நடந்திருக்கும் மாற்றங்களை மீளபார்ப்பதாக அந்த மாநாடு இருக்க வேண்டும் என்று நவீன் சொல்லியிருந்தார். ஜெயமோகனின் வருகைக்கு முன்னரே அதனைப் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார். அந்த மாநாட்டுக்காக நாம் உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். ஜெயமோகனிடம் அவர் சொன்னதை மட்டுமே நான் அறிவேன். பின்னாளில், எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வையில் அது இன்னுமே விரிந்து ஒரு உலக அறிவு நிகழ்வாக விரிந்தது.

உலக இலக்கியக்களத்தின் முன்னால் தமிழ் எழுத்தாளர்களை நிறுத்தும் முதன்மையான நிகழ்ச்சியாக மாறியது. அந்த மாபெரும் திட்டத்தில் நானும் இணைவேன் என்பதும் நான் அறிந்திராதது. அந்தத் திட்டத்தின் மூலக்கருவைச் சுமந்திருந்த எழுத்தாளர் ம.நவீனே எனக்கும் அதன் முக்கியத்துவத்தைச் சொல்லி வந்தார். அப்படித்தான் நானும் அந்தத் திட்டத்தில் பங்கேற்றேன். அமெரிக்கப் பயணத்துக்கான முன் தயாரிப்புகளை நவீன் 2025 ஆம் ஆண்டே தொடங்கியிருந்தார். அதற்கான முன் பணிகளை நவீனே ஒருங்கமைத்தார். விசா, பயணச்சீட்டு என எல்லாவற்றையும் நவீன் 2025 ஆம் ஆண்டில் நிறைவு செய்திருந்தார்.

அவரின் பயணத் திட்டம் முழுமையடைந்ததும்தான் நானும் முன் தயாரிப்புகளைச் செய்யத் தொடங்கினேன். விசா எடுப்பதுதான் பெரும் சவாலாக இருந்தது. விசா எடுக்கும் முறையை ஒட்டியும் நவீனே எனக்கு வழிகாட்டினார். அரசு ஊழியாராக இருப்பதால் எளிதில் விசா கிடைத்துவிடுமென்றே தோன்றியது. நவீனும் அப்படித்தான் சொல்லியிருந்தார். ஆனால், பரபரப்பும் பதற்றம் சேரும் போது பாதாளக்கரண்டிக்குச் சிக்காத நீராக எனக்குள் இருக்கும் சொற்களும் திட்டங்களும் ஒளிந்து கொள்ளும் என்பதை எப்பொழுதும் போல அப்பொழுதும் எண்ணியிருக்கவில்லை. அதன்படியே விசா நேர்முகத்துக்குச் சென்றேன். கோலாலம்பூர் தூதரகக் கட்டடத்தின் முன்னால் இருந்த வரிசையும் அங்கிருந்த பாதுகாப்புச் சோதனைகளையும் காணக்காண எச்சிலை விழுங்கத் தொடங்கினேன். அந்த வரிசையில் நானும் இணைந்து கொண்டு வந்த நேர்முகத்துக்கான உறுதிக்கடிதம் கடப்பிதழ் ஒவ்வொன்றையும் அவர்கள் கேட்கக்கேட்க இயந்திரத்தைப் போல துழாவித்துழாவி எடுத்துத் தந்தேன். உள்ளே சென்றதும் ஒரு மடாலயத்தைப் போல நடுவே இருந்த கட்டடத்தைச் சுற்றி சிறிய பூங்கா ஒன்றிருந்தது. அதைக் காண மனம் சற்றே எளிதானதாக இருந்தது. ஆனாலும். வாசலில் இருந்த பாதுகாவலர் விரைவுபடுத்தி உள்ளே அழைத்துச் சென்றார். மறுபடியும் பாதுகாப்புச் சோதனை, ஆவணங்கள் சோதனை முடிந்து உருவாகியிருந்த வரிசையில் நின்று கொண்டேன். ஒரு கண்ணாடி முகப்பின் முன்னால் நடந்து கொண்டிருந்ததுதான் நேர்முகம் என்பதை உணரவே வரிசையில் நின்ற ஐந்து நிமிடங்கள் கழித்துதான் தெரிந்து கொண்டேன். முதல் முகப்பில் என் முகத்தையும் அடையாள அட்டையையும் வெறித்துப் பார்த்து இரண்டு படங்களுக்கும் ஐந்து வேற்றுமைகளைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியில் என்னை அடுத்த முகப்புக்கு அனுப்பி வைத்தாள் வெள்ளைக்கார பெண்ணொருத்தி. அந்த முகப்பில், விஷமமான புன்னகையொன்றுடன் ஐந்து விரல்களும் ஸ்கேனரில் ஒற்றியெடுக்கச் சொன்னாள் இன்னொரு பெண். அங்கிருந்து மூன்றாவது முகப்பில் நின்று கொண்டிருந்த ஆணைப் பார்க்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. கறுப்புக்கண்ணாடியும் நேர்த்தியான தோற்றமும் நேர்முகம் எளிதாக இருக்குமென எண்ணத்தை அளித்தது. அதுவரையில் மனத்தில் இருந்த தயக்கம் களைந்து நானும் இயல்பாய் கேட்கும் கேள்விகளுக்கு அளிக்கும் ஒரிரண்டு பதில்களுடன் தயாராகியிருந்தேன். என்னை ஒன்றுமே கேட்காமல் மும்முரமாய் கணினி திரையிலும் ஆவணங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். நானும் பார்த்து முடியுமட்டும் முகப்பையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனாகவே, ஏன் செல்கிறாய் எனக்கேட்க நாவில் சிக்கிச் சுழன்று வந்து கொண்டிருந்த சொற்களில் காரணக்களைச் சொன்னேன். அடுத்தடுத்து ஒவ்வொன்றாய்க் கேட்டான். அதற்கேற்றப் பதில்களைக் கூறி முடித்தேன். எல்லாவற்றையும் கேட்டவனுடைய முகத்தில் எந்த மாற்றமில்லை. இறுதியாக, முகக்குறிப்பு மாற்றமோ அல்லது தொனி மாறுதலோ இல்லாமல் சோரி…இந்தமுறை இல்லை என ஒரு தாளைத் தந்தான். அதை என்னவென்று பார்ப்பதற்குள் பின்னால் இருந்த சீனர் முன்னால் முகப்பை எட்டிப்பார்த்தார். அந்த வெள்ளைக்காரனும் கணினித்திரையிலிருந்து முகத்தை எடுப்பதாக இல்லை. தாளை இன்னொரு முறை பார்க்கலாமென வெளியே வந்தேன். வெளியிலிருந்த பூங்காவில்தான் மன்னிக்கவும் நீங்கள் விசாவுக்குத் தகுதிபெறவில்லை என்ற மாதிரி அறிவிப்பைப் பார்த்தேன். உடனே, அதனைச் சுருட்டியெடுத்து பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டு நவீனுக்கும் வாழும் தமிழ் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் செளந்தருக்கும் அழைத்துச் சொன்னேன். இருவருமே, என் பதில்களைக் கேட்டு இவ்வாறாக இருக்கலாம் என்றும் ஒரு பதிலைச் சொன்னார்கள். எப்படியோ, நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே வலுவாக இருந்தது. அந்த இரவே, அடுத்த நேர்முகத்துக்கான விண்ணப்பம் செய்தேன். நவீனிடம் குறிப்பிடவும் செய்தேன். செய்து பாருங்கள்…நாள் இருக்கிறது என மட்டும் சொன்னார்.

இம்முறை இருபது நாட்களுக்கு முன்னதாகவே எதற்காகச் செல்கிறேன் என்பது குறித்து நானே பதில்களை எனக்குள் உருவாக்கத் தொடங்கினேன். உலக அரங்குக்கு முன்னால் நாம் முன்வைப்பது எதனை. தமிழ் இலக்கியத்தை. தமிழில் நடந்து வரும் முதன்மையான அறிவுச் செயற்பாட்டை. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமையில்லை…எனப் பாரதி சொன்னவற்றின் நீட்சி. அடுத்த நேர்முகமும் பதற்றத்துடன் தொடங்கியது. ஆனால், உள்ளுக்குள் தடையறா ஒழுக்காய் சொல்லவேண்டிய பதில்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. இந்தமுறை அமெரிக்க ஜப்பானிய பெண் நேர்காண்பவராக இருந்தார். அவரிடம் நான் ஒரு எழுத்தாளன் எனத் தொடங்கி எதற்காகச் செல்கிறேன் எனச் சொன்னேன். திரையைப் பார்ப்பதை நிறுத்துவிட்டு என்னைக் கொஞ்ச நேரம் பார்த்தார். எல்லாமே மனதுக்குள் மிக பக்காவாகச் சொல்லிப் பார்த்துக் கொண்ட பதில்கள். அவை எனக்கே புதுமையாக இருந்தது. நேர்காணலுக்கான முதன்மை டிப்ஸாக நவீன் சொன்னது மறுபடியும் மலேசியாவுக்கே திரும்புவோம் என்ற உறுதியையே அவர்களுக்கு முதன்மையாகத் தந்துவிடவேண்டும் என்றார். அதனைக் குறிக்கும் விதமாய், எனக்கும் மலேசிய மண்ணுக்குமான குடும்ப, வேலை, சொத்து, அரசு வேலை என இருக்கும் அத்தனைத் தொடர்புகளையும் நிறுவினேன். எல்லாவற்றுக்கும் ஒரே சாதாரண முகம்தான் ஜப்பானியப் பெண்ணிடம். கடைசியாக, நீ யாருடன் வசிக்கிறாய் என்ற கேள்வியை அழுத்திக் கேட்டார். அதற்கு, குடும்பத்துடன் எனச் சொன்னேன். முந்தைய நேர்முகத்தில் சகோதரர்களுடன் என்றிருக்காயே என்றார். எங்கோ அடியில் காணாமற்போயிருந்த எதோ ஒன்றைப் பட்டெனத் துழாவியெடுத்ததைப் போல ஆமாம். சகோதரர்களையும் உள்ளடக்கியதுதானே குடும்பம் என்றேன். ஜப்பானியப் பெண் மீண்டும் என்னைப் பார்த்து முடிவெடுத்தவளாய் உனக்கு விசா அனுமதி கிடைத்துவிட்டது என்றாள். மனதுக்குள் அப்படியொரு மகிழ்ச்சியாக இருந்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...