இவ்வாண்டுக்கான வல்லினம் விருதுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி
தேர்வு செய்யப்படுவது குறித்து எழுத்தாளர் ம.நவீன் என்னிடம் குறிப்பிட்டதும், ஒரு கேள்வி
எனக்குள் எழுந்தது. அவர் வகித்த பணியைக் கொண்டுதானே அவர் பல பங்களிப்புகளைச் செய்தார்
என்பதைப் போல. விருதுக்கு அவர் தேர்வு பெற்றிருக்கும் செய்தியை அவரிடம் சொல்வதற்கு
நவீன் என்னையும் அழைத்திருந்தார். அதுவரையில் வல்லினம் நிகழ்ச்சியில் இரண்டொரு முறை
சந்திருந்ததும் நான் அறிந்து வைத்திருந்த செய்திகளைக் கொண்டும் மூர்த்தியை மனதுக்குள்ளாக
வரையறை செய்து கொண்டேன். அவர் அறிமுகப்படுத்திய படைப்பிலக்கியப் பிரிவு குறிப்பாக சிறுகதைப்
பகுதி வழி ஊக்கம் பெற்ற தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அவரால் உரமூட்டப்பட்டு மலேசியா
முழுவதும் இலக்கியப் பாடத்தை மாணவர்கள் தேர்வு பாடமாக எடுக்க துணை நின்ற ஆசிரியர் படையில்
ஒருவரான குமாரி ராதாவின் தூண்டுதலாலே நானும் இலக்கியம் பாடத்தைத் தேர்வு செய்திருந்தேன்.
நான் எஸ்.பி.எம் தேர்வில் அமரும் ஆண்டுக்கு முன்னர்தான் கல்வி அமைச்சின் பாட வரம்பு
நிர்ணயத்தால் அறிவியல் பிரிவு மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடம் எடுக்க முடியாத சிக்கல் உருவாகியிருந்தது. அந்தச் சிக்கலையும்
மூர்த்திதான் அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு சென்று களைந்திருந்தார். அப்போதைய
உங்கள் குரல் இதழின் முகப்பட்டையிலே அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் கவிதையும் படமும்
வெளிவந்திருந்தது. அந்தப் பெரும்பணிக்குப் பின்னாலும் மூர்த்தியின் பங்களிப்பு இருந்தது.
விழாவில் மூர்த்தியுடன் நான்
இவ்வாறாக மூர்த்தியின் ஒவ்வொரு பங்களிப்பும் மனதுக்குள் திரண்டு வர கல்வி அமைச்சுப் பணி என்பது அவர் செய்ய நினைத்த பல பணிகளுக்கான கருவியாக மாறியிருந்தை உணர முடிந்தது. விருது விழாவில் மூர்த்தியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியீடும் திட்டத்தையும் ம.நவீன் குறிப்பிட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்கும் பணியில் எழுத்தாளர் சாலினி, ஆசிரியர் சுப்புலெட்சுமி, ஆசிரியர் புஷ்பா ஆகியோருடன் நானும் இணைந்து கொண்டேன்.அப்படித்தான் மூர்த்தியின் தேர்வு வாரியப் பணிகள் குறித்து நேர்கண்டு கட்டுரையாக எழுதும் வாய்ப்பு அமைந்தது.
நூல் தொகுப்பாசிரியர்கள்ஏறக்குறைய ஆறு மணி நேரம் நீடித்த நேர்காணலில் பத்து இடங்களிலாவது ‘’ இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது’’ ‘’ அப்போத்தான் இப்படி படித்தது/ பார்த்தது/ கேட்டது நினைவுக்கு வந்தது…அதைத் தமிழுக்கும் கொண்டு வரணும்ன்னு நெனச்சேன்’’ இப்படியாகச் சொல்லியிருப்பார். அதனைக் கட்டுரையாக எழுதும் போதுதான், மூர்த்தி எவ்வாறு தான் பெற்ற தூண்டுதல்களையும் எண்ணங்களையும் செயற்படுத்த தேர்வு வாரியப் பணியை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார் என்ற வியப்பு உருவானது. நேர்காணலை எழுதி முடித்து நிறைவு செய்யும் பணியின் போதுதான் நவீன், கட்டுரையில் மூர்த்தியின் அகம் பதிவாகவில்லையே எனக் கேட்டார். உண்மையிலே, அவரின் பங்களிப்பைச் சொல்ல வேண்டுமென நானே அவருடைய அகம் வெளிப்படும் இடங்களைச் சுருக்கியிருந்தேன். அதன் பிறகுத்தான், மறுபடியும் கட்டுரையை வாசித்து அவருடைய அகம் வெளிப்படக் கூடிய இடங்களைக் குறிப்பிடச் செய்தேன். அந்தக் கட்டுரையை வாசித்து மூர்த்தி ‘’ இது ஏதோ நானே எல்லாவற்றையும் செஞ்சது போல இருக்கு…மற்றவர்களுக்கும் அதில் பங்கிருக்கிறது.. கொஞ்சம் அதுல கை வைச்சுக்குறேன்…’’ என்றார். அப்படியாகத்தான் கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை நூல் முழுமையாக உருவானது. முழு நூலாக உருப்பெற்று கையில் கிடைக்கப் பெற்றதும் ஒரே நாளில் நூலை வாசித்து முடித்தேன். ஒரு புனைவுக்குரிய சுவாரசியம் கொண்டதாகவே அமைந்திருந்தது மூர்த்தியின் வாழ்க்கை. எவையெல்லாம் அவரின் ஆளுமையை உருவாக்கியிருக்கிறதென நூல் மிக அழகாகத் தொட்டுக் காட்டுவதை நவீனிடம் மகிழ்ச்சியுடன் சொன்னேன். விருது விழாவுடன் ஒட்டி முகாம் ஒன்றையும் நடத்துவதென நவீன் திட்டமிட்டிருந்தார். எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை மற்றும் சிறுகதை பட்டறை நடத்த அழைக்கப்பட்டார். ஒரு எழுத்தாளர் அழைக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய படைப்புலகத்தைப் பற்றி வாசகர்கள் அறிந்திருக்க வேண்டுமென்பது வல்லினத்தின் எண்ணம். அதன்படியே பெருமாள் முருகனின் நூல்கள் தமிழாசியா மூலமாகத் தருவிக்கப்பட்டன. நவம்பர் வல்லினம் இதழ் அவருடைய படைப்புகளின் வாசிப்பனுபவத்தையும் அவருடைய விரிவான நேர்காணலையும் தாங்கி வெளிவந்திருந்தது. நவம்பர் தமிழாசியா சந்திப்பில் அவருடைய ஐந்து சிறுகதைகள் ஒட்டி விவாதிக்கப்பட்டது. அத்துடன், கழிமுகம், கூளமாதாரி, ஏறுவெயில் ஆகிய நாவல்களை வாசித்தேன். அவருடைய முதல் நாவலான ஏறுவெயில் நிலவுடைமை வாழ்விலிருந்து அந்நியப்பட்டு வீழ்கிற முதல் தலைமுறை குடும்பத்தின் கதை. ஒரு வீழ்ச்சியின் சித்திரத்தை மிகக் கச்சிதமாகச் சொல்லும் நாவல். நான் வாசித்தவரையில் கூளமாதாரி தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகவே காண முடிந்தது. அதனைப் பற்றி ஒரு வாசிப்பனுபவப் பதிவையும் எழுதியிருந்தேன்.
பட்டறை
ஒன்றரை
நாள் பட்டறையில் சிறுகதைகளின் வரலாறு, எழுதும் உத்திகள், கட்டுரை வகைமைகள் எனத் தகவல்களும்
அனுபவங்களுமான செறிவான உரைகளைப் போலவே பட்டறை அங்கங்களை பெருமாள் முருகன் வழிநடத்தினார்.
கழிமுகம் நாவலை ஒட்டிய என்னுடைய வாசிப்பனுபவத்தையும் முகாமில் பகிர்ந்து கொண்டேன்.
கழிமுகம் நாவல் வாசிப்பனுபவப் பகிர்வு
21 டிசம்பர் 2025 மதியம் இரண்டுக்கு விருது விழா தொடங்கியது. அரங்கு நிறைந்த கூட்டத்தில் ஏற்பாட்டுக் குழுவில் நண்பர்களுடன் இணைந்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது. மலேசியத் தமிழ்க் கல்விச் சூழலுக்கு உரமூட்டிய ஒரு பெரும் ஆளுமையைச் சிறப்பிக்கும் முயற்சியில் இணைந்திருந்த மகிழ்ச்சித்தான் அது. ஒரு அறிவார்ந்த கொண்டாட்டத்தில் இணைந்திருந்த மகிழ்ச்சி அது. எல்லாம் சரிபட்டு வந்தபிறகு செயலாற்றுவேன் என்பதைவிட இருக்கும் நிலையிலே செய்யத் தொடங்குவதுதான் சரி என மூர்த்தி சொன்னது செயல் நோக்கி உந்தி தள்ளக் கூடியதாக இருந்தது.
மூர்த்தியின் ஏற்புரை
நிகழ்ச்சிக்கு மறுநாள் எழுத்தாளர் ம.நவீனுடன் நானும் பெருமாள் முருகனை மை ஸ்கில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றோம். கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு மாணவர்களுடன் பேசிவிட்டுத் திரும்பினோம். மிக இயல்பான யதார்த்தமான மனிதராகவே எழுத்தாளர் பெருமாள் முருகன் நேரடி உரையாடல்களில் இருந்தார். என்னுடைய சிறுகதைத் தொகுப்பையும் ஆர்வத்துடன் கேட்டுப் பெற்றுக் கொண்டார். நற்பொழுது.
எழுத்தாளர் பெருமாள் முர்கனுடன் நான்எல்லா முடிந்தபின்னும், நண்பர்களுடன் இணைந்து ஒர் ஆளுமையைக் கொண்டாடிய மகிழ்ச்சியும் கற்றலும் நிறைந்திருக்கிறது. வல்லினத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி







கருத்துகள்
கருத்துரையிடுக