எழுத்தாளர் ஹம்சா உசேனை எனக்கு அறிமுகம் செய்தது மலாய் எழுத்தாளரும் செம்மையாக்குநருமான அஸ்ரின் பவ்ஸிதான். மலாய் நாவல் உலகில் ஹம்சா தனித்துவமானவர் எனக் குறிப்பிட்டு அவரின் நாவல்களை வாசிக்க அஸிரின் தான் பரிந்துரை செய்தார்.
எழுத்தாளர் ஹம்சா அப்துல் மஜிட் பின் ஹுசேன் சிங்கப்பூரைச் சேர்ந்த மலாய் எழுத்தாளர். இலக்கிய உலகில் ஹம்சா ஹுசேன் அல்லது பாக் எனும் பெயரிலே அறியப்படுகிறார்.
https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=11b77927-df80-4e6b-b953-d2240292abd8 ஹம்சா ஹுசேனின் வாழ்க்கைக் குறிப்பு
Hamzah Husseinமலாய் இலக்கிய உலகில் மிகப் புகழ்பெற்ற முன்னோடி இலக்கிய இயக்கமான அஸாஸ் 50 (Asas 50) இல் ஹம்சா மிகத் தீவிரமாக இயங்கியிருக்கிறார். அந்த அமைப்பில் கலை கலைக்காகவா அல்லது மக்களுக்ககாவா எனும் விவாதம் எழுந்திருக்கிறது. ஹம்சா கலை கலைக்காகத்தான் எனும் தரப்பை எடுத்து அமைப்பிலிருந்தே வெளியேறியிருக்கிறார். சிங்கப்பூரில் பிரபலமாக இயங்கிய ஷா பிரதர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பின்னாளில், சித்ரா பிலிம் எனும் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். மலாய் திரைப்பட உலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து தன்வரலாற்று நூலொன்றையும் எழுதியிருக்கிறார். அவருடைய வாழ்வைப் போல எழுத்தும் நாவலின் பின்னணிகளும் சுவாரசியமானவையாகவே இருக்கின்றன.
ரெட்ரோ நாவல் வரிசையில் ஹம்சா
ஹூசேனின் பெரெம்புவான் குஸ்தி ( மல்யுத்தப் பெண்), சம்சேங் (ரவுடி, ருமா கோசோங் (
காலி வீடு) ஆகிய குறுநாவல்களைத் தொகுத்து பிக்சி பதிப்பகம் 2022 ஆம் ஆண்டு
மறுபதிப்பு வெளியீட்டிருக்கிறது. ஹம்சா ஒரு சுவாரசியமான எழுத்தாளர் என்பது முதல்
குறுநாவல் வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது. நேரடியான மொழியில் திரைக்கதையைப்
போலவே நாவலைக் காட்சிகளாக நகர்த்துகிறார்.
இந்தக் குறுநாவல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது நாவல் சம்சேங். மலாயில் சம்சேங் எனும் சொல் ரவுடி எனும் பொருளைக் குறிக்கும். இந்த நாவலின் மையப்பாத்திரமான மாமோரை அறிமுகம் செய்யும் போதே ‘’அவன் சண்டை போட வேண்டுமென்பதற்காகச் சண்டை போட்டான்’’ (DIA BERGADUH LANTARAN DIA MAHU BERGADUH) என்றுத்தான் அறிமுகம் செய்கிறார். சண்டையிட வேண்டும் என்ற காரணத்துக்காகவே ஒருவன் சண்டையிடுகிறான் என்பது அவனைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வத்தை உண்டாக்குகிறது.
ஜப்பானியராட்சிக்கு முந்தைய சிங்கப்பூரில் அமெரிக்க வன்முறை படங்களைப் பார்த்து வளர்ந்தவன் மாமோர். அவனுக்கு என்றாவது எவரையாவது தாக்கிவிட வேண்டுமென்ற தினவு இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான தருணத்தையும் சரியான காரணத்துக்காகவும் இரண்டு மாதங்களாகத் தெருவையே பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாள், வெறித்துப் பார்த்தான் என்ற காரணத்துக்காக வம்படியாக ஒர் இளைஞனைத் தாக்கி காவல் துறையால் கைது செய்யப்படுகிறான். அன்று மாலையே தன்னுடைய தாய் கட்டும் பிணைத்தொகையால் சிறையிலிருந்து விடுதலையாகிறான். அங்கிருந்து சிங்கப்பூரில் இயங்கும் இரகசிய வன்முறை கும்பல்களில் அவனுடைய பயணம் தொடங்குகிறது.
எந்தக் காரணமும் இன்றி ஒருவனைத் தாக்கினான் என்பதே அவனைப் பூஜாங் தன்னுடைய குழுவில் அடியாளாக இணைக்கக் காரணமாக இருக்கிறது. குழுவில் அடியாளாக இருப்பது மாமோருக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அந்தக் குழுவின் சட்டத்திட்டங்கள், வணக்கமுறைகள் எல்லாவற்றையும் கற்கிறான். அந்தக் குழுவைச் சேர்ந்த காசிம் என்பவனைப் பெண்ணை மானப்பங்கப்படுத்தியதற்காக இன்னொரு குழு தாக்கக் காத்திருப்பதை அறிகிறான். அவர்கள் தாக்கும் முன்னரே அவர்களைத் தாக்கி பலரையும் காயப்படுத்திவிட்டு வருகிறான். காரணமே இல்லாமல் எதிராளியை உடனே தாக்கும் அவனுடைய சாகசச் செயல் குழுவில் இருப்பவர்களுக்கு அவன் மீது மதிப்பை ஏற்படுத்துகிறது. அவனைக் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவனாக பூஜாங் அறிவிக்கிறான். அவனுடைய செயல்களுக்காக மாமோரின் தாய் அவனை வெறுக்கிறாள். மாமோர் மெல்ல மெல்ல மற்றவர்களால் அஞ்சப்படுகின்றவன் ஆகின்றான். அப்படியே, மது, விலைமாதர், உல்லாசமான வாழ்வு என வாழ்வு மாறுகிறது.
அவன் தரும் பணத்துக்காகவே அவனுக்கான ஆசை நாயகியாக ஜோரா மாறுகிறாள். ஆனால், ஜப்பானியர் ஆட்சி மாமோர் உருவாக்கியிருக்கும் ரவுடி பிம்பத்தைக் கலைத்துப் போடுகிறது. ஜப்பானிய காவல் படை ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக கிளர்ச்சியாளன் எனச் சந்தேகப்பட்டு மாமோரை சிறையிலடைத்துத் துன்புறுத்துகிறது. அவர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக மற்ற இரவுடிகளைக் காட்டிக் கொடுக்கும் உளவாளியாக ஜப்பானியர்களுக்கு உதவுவதாக மாமோர் வாக்களிக்கிறான். அதன் படியே, ஜப்பானியர்களால் தேடப்பட்டு வரும் தன்னுடைய குழுவின் தலைவன் பூஜாங்கைக் காட்டிக் கொடுக்கிறான். அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டி ஜப்பானியர்கள் தங்கள் காவல்துறையான கெம்பெத்தாயில் மாமோரைச் சேர்க்கின்றனர். இடையில் ஜப்பானிய இராணுவ வீரர்களுக்கான பாலியல் சேவையை வழங்குகின்றவளாக ஜோரா மாறிப்போகிறாள். அவளை எப்படியாவது கைபற்றிவிட வேண்டுமென்ற மாமோரின் எண்ணம் ஈடேறாமல் போகிறது. இருந்தப்போதிலும் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு ஜோரா உள்ளிட்ட மற்றவர்களை அச்சுறுத்துகிறான். போரில் தோற்று ஜப்பானியர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைகின்றனர். மறுபடியும், மாமோர் அதிகாரமிழந்து போகிறான். அவனுடைய உதவிக்கு ஈடாக ஜப்பானியப் படையிலிருந்து சில துப்பாக்கிகளும் கையெறிக் குண்டுகளும் வழங்கப்படுகின்றன. இழந்த அதிகாரத்தை மீட்பதற்காக அவனுடன் ஜப்பானிய கெம்பத்தாய் படையில் பணியாற்றிய வீரர்களைக் கொண்டு 208 எனும் இரகசிய ரவுடிக் குழுவை ஆரம்பிக்கின்றான். ஜப்பானியர் ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேய கைக்கூலிகளகளாகச் செயற்பட்டார்கள் எனும் சந்தேகிக்கப்படுபவர்களைத் தாக்குகின்றனர். ஓராண்டிலே 208 குழு பெரிய இரவுடிக் குழுவாக வளர்கின்றது.
ஆனாலும், ஆங்கிலேய ஆட்சியின் கெடுபிடிகள் காரணமாகப் பணம் சம்பாதிக்கும் வழிகள் தெரியாமல் இருக்கிறது. விலைமாதர்களை மிரட்டி காவல் பணத்தைப் பெறுவதன் மூலம் பணம் ஈட்டலாம் என மாமோருக்கு யோசனை எழுகிறது. அவனுடைய திட்டத்தை அறிந்து கொள்கின்ற ஜோரா தன்னுடைய தோழிகளை எல்லாம் ஒன்றுசேர்த்துப் பணம் தர மறுக்கிறாள். அவர்கள் முன்னரே வேறொரு குழுவுக்குக் காவல் பணம் செலுத்துகின்றனர். அந்தக் குழுவைத் தாக்குவதற்காக விலை மாதர்கள் தொழில் செய்யும் விடுதியின் மீது மாமோர் குண்டுகள் வீசுகிறான். அந்தத் தாக்குதலால் விலைமாதர்கள் இறக்கின்றனர். தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த விடுதியைத் தாக்கி அழித்த 208 குழுவைத் தாக்குவதற்காக 17 எனும் கும்பல் வஞ்சத்துடன் வருகிறது. அவர்களுடன் ஏற்படும் சண்டையில் மிகக் குரூரமாகத் தாக்கப்பட்டு மாமோர் சாகின்றான்.
ஒரு திரைக்கதையைப் போல காட்சிகளை அடுக்கியே நாவல் நகர்கிறது. இந்த நாவல் பேசுவது மனிதனுக்குள் இருக்கும் வன்முறை எனும் புதிரைப் பற்றித்தான். அதிகாரத்துக்கான வழியாகவே வன்முறையை மாமோர் கண்டுகொள்கிறான். அதற்கான விதை சிறுவயதிலே மாமோருக்குள் விழுகிறது. பள்ளியில் ஹசிமாவைப் பின் தொடரும் முஸ்தாபாவைத் தாக்குகிறான். பொழுது வாய்க்கும் போதெல்லாம் முஸ்தாபாவை எச்சரித்து அனுப்புகிறான். அவன் அவ்வாறு செய்யுந்தோறும் ஹசிமா சிறிய சிரிப்பொன்றை ஏற்பின் அடையாளமாய் உதிர்க்கின்றாள். திரையில் காணும் வன்முறைக் காட்சிகள் ஒருவழியில் சமூகத்தின் ஏற்பைப் பெற்றுவிடத் துடிக்கும் அவனுடைய விழைவுக்குக் காரணமாய் இருக்கின்றது. அப்படி வன்முறையின் வாயிலாக அதிகாரத்தைப் பெற்றுவிட்டப் பின்னரும் அதனைத் தக்கவைக்கும் பெரும் போராட்டம் அவனுக்குள் தொடங்குகிறது. அந்தப் போராட்டமே கீழ்மையை நோக்கி அவனைச் செலுத்துகிறது. ஜப்பானியர் படையெடுப்பின் போது எல்லா இடங்களிலும் குண்டுமழை பொழியப்படுகிறது. ஓயாத குண்டு வீச்சுகளால் நகரமே கட்டிட இடிபாடுகளால் ஆனதாக மாறுகிறது. கட்டிடங்களின் இடிபாடுகளில் மக்களின் அழுகையொலிகளும் பிரார்த்தனைக் குரல்களும் கேட்கின்றன. மாமோரும் இடிபாடுகளுக்குள் பதுங்கி அவனையும் அறியாமல் உயிர்பயத்தால் புனித யாசின் வாக்கியத்தை மாமோர் வாசிக்கின்றான். தாயிடம் மன்னிப்பு கேட்டுவிடவும் எல்லாவற்றையும் கைவிட்டுவிட எண்ணுகிறான். உடல் சோர்ந்த நிலையில் வீட்டுக்குச் செல்கிறான். ஆனால், அதற்கடுத்த நிமிடமே, கட்டிட இடிபாடுகளில் தட்டுப்படும் வயதான மூதாட்டியின் பிணத்தைத் திருப்பிப் பார்க்கின்றான். அவள் கழுத்தில் இருக்கும் தங்கச்சங்கிலியும் காது தோட்டையும் பிணத்திலிருந்து பிய்த்தெடுக்கின்றான். ஒரே கணத்தில் மீட்பை உதறி இருளுக்குள் அடியெடுத்து வைக்கின்றான்.
அதிகாரத்துக்கான விழைவு மேலும் மேலும் எனத் திரும்பி பார்த்துவிடாத கீழ்மையின் ஆழங்களுக்குள் அவனைச் செலுத்திக் கொண்டே இருக்கிறது. அவனைத் தன் கும்பலில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்கின்ற பூஜாங்கையே ஜப்பானியர்களுக்குக் காட்டிக்கொடுத்துக் கொல்கிறான். அதிகாரத்தைத் தக்கவைக்கும் மாமோரின் செயல்கள் பலவும் விரைவான திரைக்காட்சிகளைப் போல ஆழமின்றியே நகர்கின்றன. பூஜாங், ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்கள் என மாறிவரும் அதிகார மாற்றத்துக்கேற்ப தனக்கான அதிகாரத்தை பூஜாங் உருவாக்கிக் கொள்கிறான். ஒவ்வொரு அதிகார மாற்றமும் அவன் இழந்துவிட்டதை எண்ணிய பதற்றத்தை உண்டுபண்ணுகிறது. ஆனால், உடனுக்குடன் அடுத்தடுத்த நகர்வுகளை உருவாக்கிக் கொள்கிறான். அவ்வாறுத்தான், ஜோரா எனும் விலைமாதுவையும் அதிகாரம் இழந்த தருணங்களில் அடைக்கலமாய்த் கொள்கிறான். அவள் மற்றவர்களுக்குப் பாலியல் சேவை தருவது அவனால் ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது. அவள் சேவை தருபவர்களை சாகடிக்கச் செய்கிறான். கடைசியாக, இனி ஒருபோதும் தன்னுடைய தேவைகளுக்கு ஜோரா இணங்கப்போவதில்லை எனத் தெரியும் பொழுது அவளைக் கொன்றுவிடுகிறான்.
இநத நாவல் நிகழும் காலப்பின்னணி என்பது மலாயா சிங்கப்பூர் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டம். போர்பதற்றம், வறுமை என எங்கும் பதற்றம் நிலவி வந்த காலம். அந்தக் காலத்தில் வறுமையான மலாய் குடும்பப்பின்னணியிலிருந்து வந்தவன் எவ்வாறு வன்முறை வாயிலாக சமூகத்தில் எளிதில் அடையமுடியாத அதிகாரத்தை அடைகிறான். அதனைத் தக்கவைக்க எந்த இருளின் ஆழங்களுக்குள் பயணிக்கிறான் என்பதைத் தொட்டு நாவல் செல்கிறது. அவன் செல்லும் பாதையைக் குறித்த நேரடியான விமர்சன்ம் என்பது நாவலில் இல்லை. அவனுடைய வாழ்வை காட்சிகளைப் போல ஹம்சா சொல்ல மட்டுமே செய்கிறார். அதில் ஆசிரியரின் எந்தத் தலையீடும் இல்லை. கதைசொல்லலில் ஆசிரியர் தலையீடோ அல்லது நெறி உணர்த்தும் பணியோ இல்லை என்பதில் ஹம்சாவுக்கு தெளிவு இருக்கிறது. ஆனால், நாவலின் இறுதியில், மாமோர் குரூரமாகக் கொல்லத்தான் படுகிறான். கொலைக்கு முன்னால் தன்னால் கொல்லப்பட்டவர்கள் ஓவ்வொருவராக அவன் முன்னால் உருவெளித் தோற்றங்களாகத் தோன்றி மறைகின்றனர். அவன் வாழ்வின் ஒரே லட்சியமான வன்முறை வழி அதிகாரம் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. அதனாலே அவனுடைய உயிரும் காவு வாங்கப்படுகிறது.
நிறைவாக, ஒரு நாவலை வாசித்த உணர்வை சம்சேங் தரவில்லை என்றுத்தான் சொல்லமுடிகிறது. ஒரு வாழ்வை எந்த நியாயச் சார்பும் இல்லாமல் ஹம்சாவால் சொல்லமுடிகிறது. வன்முறையின் வழி மீண்டும் மீண்டும் மாமோர் பெற நினைப்பதுதான் என்ன, அதனை அடைய முடியாதப்போது அவன் கொள்ளும் பதற்றம்தான் என்ன, அதை அடைந்தபின்னர்தான் அவன் பெற்றதுதான் என்ன எனப் பல ஆழமான கேள்விகள் நாவலில் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு அவர் பதில் சொல்லவில்லை. ஒரு வாழ்வைச் சொல்ல முடிந்த ஹம்சாவால் அதன் வழி மனித மனத்தை முழுமையாக ஊடுருவ முடியவில்லை. ஆனாலும், மலாய் மொழியில் ஒரு தேர்ந்த கதைசொல்லியைக் கண்டுகொண்ட உணர்வை சம்சேங் நாவல் அளிக்கத்தான் செய்கிறது.
.


கருத்துகள்
கருத்துரையிடுக