நீண்ட பயணமாக இருக்குமென்பதால் வழியிலே வெண்டிஸ் பர்கர் கடையில் ஒரு கோழி சாண்ட்விச்சை வாங்கி தந்தார். இடப்பக்க ஒட்டுநர் இருக்கை, இம்பிரியல் கணக்கு என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டும் அமெரிக்காவில் பர்கர், சாண்ட்விச் என எல்லாமே மலேசியாவைக் காட்டிலும் அளவில் பெரிதாகவே இருந்தது. வழியில் வித்தியாசமான விளம்பரப் பலகைகள் தென்பட்டன. சந்தேகத்துக்குரிய இணையரா எங்கள் தனியார் துப்பறிவாளரை நாடவும் என்று ஒரு பலகை இருந்தது. உங்கள் ஐ டி எண் நினைவில் இல்லையா..அமெரிக்க மறதொ நோய் கழகத்தில் இணையுங்கள். அதோடு வழிமுழுவதும் அழகிய சுவர் கிறுக்கல்கள் இருந்தன. எட்ட முடியாத மேம்பாலச் சுவர்களில் கூட எப்படியோ ஏறி வரைந்திருந்தனர். ஒரு எதிர்ப்பு கலையாக ( rebel) சுவர் கிறுக்கல்கள் இருப்பதாக பழனி ஜோதி குறிப்பிட்டார். வழியில் ஹட்சன் ஆற்றின் கீழ் கட்டப்பட்டிருக்கும் ஹோல்லாந்து சுரங்கத்தைக் கடந்து நியு ஜெர்சிக்கு வந்தோம். நியு யார்க்கு நேர் எதிராக நியு ஜெர்சி ஒரு மெளனத்துடன் இருந்தது. தளிருக்குக் காத்திருந்த மொட்டை மரங்களும் பருவம் பொறுக்காது பூத்துக் குலுங்கத் தொடங்கிய செர்ரி மரங்களுமாக நகரம் அழகாக இருந்தது. எனக்...