முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கனவு

 

நீண்ட பயணமாக இருக்குமென்பதால் வழியிலே வெண்டிஸ் பர்கர் கடையில் ஒரு கோழி சாண்ட்விச்சை வாங்கி தந்தார். இடப்பக்க ஒட்டுநர் இருக்கை, இம்பிரியல் கணக்கு என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டும் அமெரிக்காவில் பர்கர், சாண்ட்விச் என எல்லாமே மலேசியாவைக் காட்டிலும் அளவில் பெரிதாகவே இருந்தது. வழியில் வித்தியாசமான விளம்பரப் பலகைகள் தென்பட்டன. சந்தேகத்துக்குரிய இணையரா எங்கள் தனியார் துப்பறிவாளரை நாடவும் என்று ஒரு பலகை இருந்தது. உங்கள் ஐ டி எண் நினைவில் இல்லையா..அமெரிக்க மறதொ நோய் கழகத்தில் இணையுங்கள். அதோடு வழிமுழுவதும் அழகிய சுவர் கிறுக்கல்கள் இருந்தன. எட்ட முடியாத மேம்பாலச் சுவர்களில் கூட எப்படியோ ஏறி வரைந்திருந்தனர். ஒரு எதிர்ப்பு கலையாக ( rebel) சுவர் கிறுக்கல்கள் இருப்பதாக பழனி ஜோதி குறிப்பிட்டார். வழியில் ஹட்சன் ஆற்றின் கீழ் கட்டப்பட்டிருக்கும் ஹோல்லாந்து சுரங்கத்தைக் கடந்து நியு ஜெர்சிக்கு வந்தோம். நியு யார்க்கு நேர் எதிராக நியு ஜெர்சி ஒரு மெளனத்துடன் இருந்தது. தளிருக்குக் காத்திருந்த மொட்டை மரங்களும் பருவம் பொறுக்காது பூத்துக் குலுங்கத் தொடங்கிய செர்ரி மரங்களுமாக நகரம் அழகாக இருந்தது. எனக்கு முன்னரே ம. நவீன் அறையில் காத்திருந்தார். வந்த உடனே விஷ்ணுபுரம் நண்பர்கள் ராலே ராஜன், ஆஸ்டின் செளந்தர் ஆரத்தழுவி கொண்டனர். ஜெயமோகனின் தளத்தில் மட்டுமே அறிமுகமாகியிருந்த நண்பர்கள் பல நாட்கள் அறிமுகமானதைப் போல பெயர் சொல்லி வரவேற்றனர். அறைக்குச் சென்று ஓய்வெடுத்தேன். எனக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே வந்திருந்த நவீன் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி சொன்னார். நியு யார்க் நகரத்தில் மூலை வரை சென்று திரும்பும் அளவு அவருக்கு நகரம் பழகியிருந்தது. படுக்கையில் கண்களை மூடிப் படுத்தும் தூக்கம்

வரவில்லை. மலேசிய நேரத்துக்கு அதிகாலை ஆன போதும் உடல் அமெரிக்காவா மலேசியாவா என மூளை அளித்த தத்தளிப்பில் சிக்கியிருந்ததோ என்னவோ.. உடனே கண் விழித்துக் குளித்து விடுதி கீழே சென்றேன். செளந்தரிடம் நான் கொஞ்சம் வெளியில் சென்று திரும்பவா என்றேன்.. பதினைந்து நிமிட நடைக்குள் எங்கு வேண்டுமானால் சென்று திரும்புங்க என்றார். விடுதிக்கு இடப்பக்கமாய் நேராக நடந்து சென்றேன். மின்விளக்குகள் சூழ இருந்த உயர் கட்டிடங்களின் பிம்பம் படும் நீர்திரை கண்ணுக்குத் தெரிந்தது. அங்கு சென்று நின்று படமெடுக்கத் தொடங்கினேன். பங்குனி உத்திர நிலவு பிரகாசமாய்த் தெரிந்தது. ஒரு மாதமாகவே வாழும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சியின் முன் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன். பயண ஏற்பாடு ஒருபுறம் மறுபுறம் அதையொட்டி சில கேள்விகளும் இருந்தன. அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள்தான் அமர்வுகளுக்கான மட்டுருத்துநர்கள். ஆங்கிலத்தில் நிகழும் நிகழ்ச்சியை அவர்கள்தான் முழுமையாக வழிநடத்துகின்றனர் எனத் தொடர்ந்து விழா தொடர்பான பதிவுகளை ஜெவின் தளத்தில் வாசித்து வந்தேன். அவர்களின் பங்கேற்பு, நிகழ்ச்சி எப்படி இருக்கும் எனக் கேள்விகள். இதற்கிடையில் முக நூலில் விழாவையொட்டி நாளும் விவாதங்கள் நடந்ததையும் அறிந்தேன். உலகின் முன் தமிழை முன்வைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த விவாதங்க பாதிக்கும் மேற்பட்டவை விருந்தினர் தகுதி, நிகழ்ச்சிக்கு தாங்களாகக் கற்பித்துக் கொண்ட உள்நோக்கங்களாகவே இருந்தது.  ஒரு பதிவில் என்னுடைய தகுதியைப் பற்றிய கேள்வியுமிருந்தது. வழக்கம்போல ஒரு கைநகர்த்தலில் கடந்துவிட்டேன். இருந்தாலும் நான் நிகழ்ச்சியில் எதற்காகப் பங்கேற்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதிய குரல்களைப் பிரதிநிதிக்கத்தான் பங்கேற்கிறேன் என முடிவுக்கு வந்தேன். அமர்வில் தமிழில் பேசுவதாக இருந்ததால் மொழிபெயர்க்க ஏதுவாக பதில்களை முன்னரே அனுப்பியிருந்தேன். அதிலும் அப்படியான பதில்தான் இருந்தது. இருந்தாலும் மனதுக்குள் அமர்வில் எப்படி வெளிப்படுவோம் என்ற கேள்வி இருந்து கொண்டேதான் இருந்தது. ஹட்சன் ஆற்றின் கனேடிய வாத்துகள் கலைத்துக் கொண்டிருந்த நிலவின் பிம்பத்தைப் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பினேன்.

தங்கும் விடுதிக்குத் திரும்பியப் பின், இரவுணவு தயாராகியிருந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராக விடுதிக்குள் வந்து கொண்டிருந்தனர். எழுத்தாளர் அழகு நிலா, செந்தில் ஜெகந்நாதன் என ஒவ்வொருவராக அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். எல்லாரிடமும் ஒரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அறையில் தூங்கி கொண்டிருந்த நவீனுக்கும் சேர்த்து சைவ சாண்ட்விச்சை எடுத்துச் சென்றேன். அறையிலிருந்து வெளியேறும் போதே கார்டையும் எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால், கதவு முகப்பிலிருந்த திரையில் கார்டால் வருடி திறக்க வேண்டும். நானும் ஆன மட்டும், கார்டால் வருடி கதவைத் திறக்க முயன்று கொண்டேன். நழுவும் சாண்ட்விச்களை இறுக்கப்பிடித்து அட்டையால் எவ்வளவு வருடிக் கொடுத்தும் கதவு திறக்கமாட்டேன்கிறது. நவீன் ஏதும் கதவை அடைத்துவிட்டாரா எனவும் தெரியவில்லை. சுற்றிலும் யாராவது பார்க்கிறார்களா என்றும் பார்த்துக் கொண்டேன். யாரும் தட்டுப்படவில்லை. நவீனுக்கு அழைத்துப் பார்த்தேன். கதவைத் திறக்க முடியாததைப் போல அவருடைய தூக்கத்தையும் அறையைத் தாண்டி வெளிவரை கேட்ட அழைப்பொலியாலும் அவ்வளவு எளிதில் ஊடுருவ முடியவில்லை. ஐந்து முறை அழைத்துப் பார்த்த பின்னர், கடைசியாக ஒப்புக்காக அட்டையைத் தேய்த்து விட்டுக் கதவைத் திறக்க கதவு திறந்து கொண்டது. என்னுடைய அபயக்குரலுக்கு அந்நேரம் இறங்கி வந்த கதவு நோக்கி கும்பிட்டு உள்நுழைந்தேன்.

நவீன் அப்பொழுதும் உறக்கம் கலைந்திருக்கவில்லை. சாண்ட்விச்சைச் சாப்பிட்டுவிட்டு அறையிலமர்ந்தேன். அடிப்படையில் என்னுடைய இயல்பு தனிமையாக இருத்தல். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்து தனிமை பாராட்டுவது என்பது செயலால் முனைப்பால் ஆடம்பரம்தான். ஆகவே, அதனை முடிந்தளவு தவிர்ப்பது என்பது பயணத்திட்டத்துடன் இணைந்தே எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் தோன்றியவுடனே, இன்னொருமுறை ஹட்சன் ஆற்றைப் பார்க்கலாமென்று கிளம்பிச் சென்றேன். விஷ்ணுபுரம் நண்பர்கள் டெல்லியிலிருந்து கிளம்பி ரோமில் இறங்கி பின்னர் நியுயார்க்குக்கு முப்பதாறு மணி நேரப் பயணம் வந்த நண்பர்களை அறைக்கு அழைத்துச் செல்லும் பணியிலிருந்தனர். எழுத்தாளர்கள் யுவன், பெருந்தேவி ஆகியோரிடம் சென்று பேசிவிட்டு ஹட்சனைப் பார்க்கச் சென்றேன். ஹட்சன் ஆறு நியுயார்க்கையும் நியுஜெர்சி மாகாணத்துக்கும் இடையில் ஓடுகிறது. இரு மாகாணங்களுக்கான கிழக்கெல்லையாகவும் இருக்கிறது.  Adirondack Mountains இலிருந்து தொடங்கும் ஆறு 507 கி.மி நீளம் பயணித்து நியுயார்க் வழியே அட்லாண்டிக் கடலில் கலக்கிறது. விடுதிக்கு வரும் வழியிலே ஒரு பாலத்துக்கடியில் பரந்து விரிந்த கடல் போல ஓடிக் கொண்டிருந்தது ஆறென்பதே ஆச்சரியமாக இருந்தது.

ஹட்சன் ஆற்றில் இன்னும் குளிர் கூடியிருந்தது. குளிர் அறைந்து கொண்டிருந்த காற்று வீல் வீல் என மோதியது. இன்னொருபக்கம் கனடிய வாத்துகளின் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த ஆற்றில் காணாமற் போன ஹட்சனின் பெயர்தான் ஆற்றுக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தின் கடலோடிகளில் ஒருவர்தான் ஹட்சனும். மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் புதிய கடல்வழிகளும் அறியப்படாத நிலங்களும் உலகத்தில் கண்டடையும் முயற்சியை ஐரோப்பிய கடலோடிகள் செய்து வந்தனர். ஹட்சனும் அவ்வாறு புதிய நிலங்களையும் கடல்வழிகளையும் கண்டடையும் முயற்சியில் இருந்தார். 1607 தொடங்கி வெவ்வேறு நிறுவனங்களின் நிதியுதவியைப் பெற்று ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்குச் செல்லும் புதிய கடல்வழிகளைத் தேடிக் கண்டடைந்திருக்கிறார். அவருடைய கடல் வழி பயணங்கள் பற்றி விக்கியில் இருக்கிறது. இடையில், ஆசியாவுக்கான கிழக்கு வழிப்பாதையைத் தேடும் பணியில் ஈடுபடத் தொடங்குகிறார். அரை நிலவு halve mean என ஐரோப்பிய மொழியில் பெயரிடப்பட்ட கப்பலைக் கொண்டு ஆசியாவுக்கான கிழக்குப் பாதை தேடும் அவரது முயற்சி நார்வே கடற்பகுதியில் தட்டுப்படும் பனிப்பாறைகளால் தடைபடுகிறது. அங்கிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார். வழியில் தீவுகளில் இளைப்பாறும் போது தீவின் பூர்வக்குடிகளைக் கொல்வது தாக்கிப் பொருட்களைக் கவர்வது எனத்தான் அவரது பயணம் அமைந்திருக்கிறது. ஒருவழியாக வட அமெரிக்காவுக்கு வந்து அட்லாண்டிக் கடலுடன் சேரும் ஹட்சன் ஆற்றில் முதன்முறையாகப் பயணம் செய்கிறார். அதன் பின்னர் 1611 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை ஹட்சன் ஆற்றின் வழி ஆசியாவுக்கான பாதையைத் தேடத் தொடங்குகிறார். இந்தமுறை ஆங்கிலேய கம்பெனியான விர்ஜினியாவின் நிதியுதவியைப் பெற்று தொடரும் அவரது பயணம் வடமேற்கு பாதையைக் கண்டடைகிறது. ஆனாலும், அவர் தேட எண்ணிய ஆசியாவுக்கான பாதை தட்டுப்படாததாகவே இருக்கிறது. இடையில் ஜேம்ஸ் பே பகுதியில் இருக்கும் பனிப்பாறைகளால் அவரது பயணம் தடைபடுகிறது. குளிர்காலம் முடிந்து பாறைகள் உருகத் தொடங்கும் வரை கப்பலில் காத்திருக்கின்றனர். 1611 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது மீண்டும் தன்னுடைய இலக்கை நோக்கிப் பயணிக்க எண்ணும் போதுதான் ஹட்சனுடன் பயணித்த மெய்க்காப்பாளர்களுக்குள் கலகம் ஏற்படுகிறது. அந்தப் பூசலினால், ஹட்சனும் அவரது பதின்ம வயது மகன் ஜோனும் உடனிருந்த அவரது விசுவாசிகளான எட்டு மெய்க்காப்பளர்களும் சிறு படகில் தனித்துவிடப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான கொஞ்சமான உடைகளும், சமைப்பதற்கான உபகரணங்களும் உணவும் தரப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு, அவர்களின் பயணம் என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இல்லை. அவர்களைத் தேடிக் கண்டடையும் முயற்சியும் தோல்வியுற்றது. அப்படி அவர்கள் காணாமற் போன கரையைத்தான் ஹட்சன் ஆறு என என்றும் ஹட்சன் கரை என்றும் அழைக்கப்படுகிறது. ஆற்றில் பட்டுக்கொண்டிருந்த நிலவொளி மயக்கும் பிரகாசத்துடன் தான் இருந்தது. 

குளிரும் சேர்ந்து கொள்ள நெடுநேரம் இருக்கமுடியாமல் விடுதிக்குத் திரும்பி முகப்பில் இருந்தபோது ஜெயமோகன் சட்டென விடுதிக்குள் நுழைந்தார். பட்டென என்னருகே வந்து கைகுலுக்கி நலம் விசாரித்துவிட்டு அறைக்குச் சென்றார். நானும் அறைக்குச் சென்றேன்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...