முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞனின் உறுதி

 


கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் வீட்டுக்குள்ளே எல்லாரும் முடங்கியிருந்த சூழலில்தான் சிகண்டி நாவலை நவீன் உச்சவிசையுடன் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு ஒர் அத்தியாயமென சிகண்டி நாவலை நவீன் ஊக்கத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். அதை முதலில் வாசிக்க நேர்ந்த ஒரு சில வாசகர்களில் நானும் ஒருவன் என்றவகையில் ஒரு இலக்கிய உபாசகனின் தரிசனத்தை அருகிலிருந்து பார்த்த அனுபவமாகத்தான் அதனைக் குறிப்பிட வேண்டும். சரியாக மதியத்துக்குள்ளாக எழுதிய அத்தியாயங்களை எனுக்கு அனுப்பிவிடுவார். அதனை உடனே வாசித்துக் குரல்பதிவாகவோ அல்லது கட்டுரையாகவோ என்னுடைய கருத்துகளை அனுப்பிவைப்பேன். அதில் உடன்பாடில்லாத சிலவற்றைக் கூட துடுக்காகக் கூறியிருக்கிறேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு அதனைப் பற்றிய எதிர்க்கேள்விகளுடன் எனக்கு அழைத்துப் பேசுவார். பல சமயங்களில் என்னுடைய எழுத்தில் இருக்கும் தெளிவு நேர்ப்பேச்சிலும் உரையாடலிலும் இருப்பதில்லை. தேவைப்படும் நேரத்தில் கைகளுக்கு எட்டாத பாதாளக்கரண்டியாகச் சொற்கள் பதுங்கி கொள்ளும். அப்பொழுதெல்லாம் நான் சொல்லும் உதிரிச் சொற்களைக் கொண்டு நான் சொல்ல உத்தேசித்தவற்றை எனக்கே சொல்லி தன்னுடைய நாவலுக்கான கருத்துகளை நவீன் பெற்றுக்கொள்வார். சிகண்டி நாவலின் உச்சமான பல அத்தியாயங்கள் வாசிக்கும் போது எனக்குமே மனக்கொந்தளிப்பாகத்தான் இருந்தது. அந்த மனநிலை அடங்கியப்பின்னர், அதனைக் குறித்து அவரிடம் பேசியிருக்கிறேன். நாவல் நிறைவுற்றப் பின்னர், நவீன் எனக்கு அழைத்தார். நாவல் வாசிப்பை விட என்னைப் பதைபதைப்பில் ஆழ்த்தியது அவர் சொன்ன செய்தி. கோவிட் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கடுமையான மூச்சிளைப்பும் இருந்தது. கோவிட் தொற்று ஏற்படுத்தியிருந்த கடுமையான உடற்சோர்வும் மூச்சிளைப்புமாக என்னிடம் நாவலைப் பற்றி பேசினார். அதன் முழுவரைவையும் எனக்கு அனுப்பி வைப்பதாகவும் அதனைப் படியெடுத்து எனக்கொன்றும் எழுத்தாளர் அ.பாண்டியனுக்கு ஒன்றும் மீதத்தை அவருக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அன்று அவர் குரலில் இருந்தது தான் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து கொண்ட ஒரு கலைஞனின் உறுதி மட்டும்தான். அவர் வழியே எனக்கும் கிடைத்த தரிசனமாகத்தான் அத்தருணத்தை என் மனம் நினைவில் வைத்திருக்கிறது. பின்னாளில், எத்தனையோ பொழுதுகளில் அவர் வழியே நான் அந்த தரிசனத்தை அடைந்திருக்கிறேன்.



நானும் அவரும் நேபாளத்தின் உயரமான மலை அடிவாரங்களில் ஒன்றான அன்னப்பூர்னா மலை ஏற்றத்துக்குச் சென்றிருந்தோம். மூன்றே நாட்களில் பல்லாயிரகக்கணக்கான படிகள், செங்குத்தான பாறைகள், பனிச்சரிவுகள் வழியே மலையேறும் சற்றே சாகசமான பயணமாகத்தான் இருந்தது. இரண்டாவது நாளிலே நவீனுக்கு கடுமையான முதுகு வலி ஏற்படத் தொடங்கியது. மற்றவர்களை விட ஒரு நாள் பிந்தித்தான் மலையுச்சியை வந்தடைந்தார். அவர் வந்து சேர்ந்ததுமே, நாங்கள் உச்சியிலிருந்து கீழிறங்குவதற்குத் தயாரானோம். இன்னும் இரண்டரை நாட்கள் இடைவிடாமல் பயணித்துத்தான் மலைச்சரிவை அடைய வேண்டியிருந்தது. அதனை எளிதில் கடந்துவிடலாம் என்று எங்களின் வழிகாட்டி உட்பட பலரும் அவரிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

‘’ நான் ஒர் எழுத்தாளன். இந்தப் பயணத்தை நான் எப்பாடு பட்டேனும் கடந்துவிடுவேன். ஆனால், இந்தப் பயணத்தால் என்னுடைய முதுகு பாதிக்கப்பட்டு என்னுடைய எழுத்துக்குத் தடை ஏற்பட்டுவிடக்கூடாது. என்னுடைய பிறப்பின் பொருளுக்குத் தீங்கிழைக்க விரும்பவில்லை’’ எனப் பொருள்படும்படி நவீன் மிக உறுதியாகத் தெரிவித்தார். கடைசியாக, ஹெலிகப்டர் வாயிலாகத்தான் மலையிலிருந்து இறங்கினார். என் முன்னால் நான்காயிர மீட்டர் உயர பனிமலைச் சிகரம் தெரிந்து கொண்டிருந்தது. அதன்  உச்சத்தைக் காண நான் மேற்கொண்ட பயணத்தைக் காட்டிலும் ஒருபடி மேலானதாகத்தான் அவருடைய சொற்களின் உறுதி எனக்குள் பதிந்தது.

இலக்கியம் மனிதனின் நுண்ணுணர்வான பகுதிகளையும் உணர்வுகளையும் தான் பாடம் செய்து காட்டுகிறது. பொதுவாக, செயல்புரியும் மனிதர்கள் முதலில் இழக்க நேர்வது நுண்ணுணர்வு எனும் மனதின் மெல்லிய இழையை. அது காலம், சூழல், மனிதர்கள் என எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் அவசத்தில் மெல்ல அகன்றிருக்கும். ஆனால், நவீனின் உறுதி அவரை ஒரு செயல்புரியும் மனிதராக மட்டும் நிறுத்திவிடமால் மனத்தில் இருக்கும் நுண்ணுணர்வு மிகுந்த சிறுவன் ஒருவனையும் பாதுகாத்து வருகிறது. செயல்புரியும் மனிதர்களுக்கே உரிய இறுக்கம் அவரிடமும் சமயங்களில் இருக்கத்தான் செய்யும். ஆனால், அது எந்தவகையிலும் சூழ இருப்பவர்களைத் தாங்கும் அவருடைய உறுதியை இழக்கச் செய்துவிடவில்லை. அதோடு, தான் வாழும் சமூகம், மொழி, கலை, ஆளுமைகள் என அனைத்தின் மீதும் மெய்யான ஆர்வமும் அக்கறையும் கொண்ட ஒரு கலைஞனாகவும் ஆக்கியிருக்கிறது.

இப்படியாக நவீன் வழியே, நான் அடைய நேர்ந்த எத்தனையோ தரிசனங்கள் இருக்கின்றன. ஒருவகையில் என்னுடைய ஞானாசிரியனாகத்தான் அவரைக் காண்கிறேன். அவர் வழியே நான் அடைய நேர்ந்த அத்தனை தரிசனங்களுக்கும் நன்றி. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

 எழுத்தாளர் ம. நவீனின் பிறந்தநாளுக்காக எழுதப்பட்ட கட்டுரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...