முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசிப்பும் செயலும்

 இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல்

1.கூளமாதாரி

2. கழிமுகம்

3. கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை

4. சொல்லாததும் உண்மை

5. ஜுவாரா

6. ஹத்திமு ஆயிஷா

7. சலினா

8. ரஞசாவ் செபாஞ்சாங் ஜாலான்

9. மாட் லேலா கீலா

10. செம்மண்ணும் நீலமலர்களும்

11. நினைவுசின்னம் நாவல்

12. குருதிவழி

13. காச்சர் கோச்சர்

14.புத்தம் வீடு

15. கன்னி நாவல்

16. கடல்புரத்தில்

17. ஆகாயத்தாமரை

18.இன்று

19. ஒற்றன்

20. யுத்தங்களுக்கிடையில்

21அசோகமித்திரன் கட்டுரைகள்

22.இலட்சியப்பயணம்

23.`வானம் வசப்படும்

24. கர்ப்ப நிலம்

25. Harimau Jadian

26. அமுதசுரபிகள்

27. அழகான மெளனம்

28.கம்பா நதி

29. குறத்தி முடுக்கு

30. செல்சி நீலம்

31 பிரசாதம் சிறுகதைத் தொகுப்பு

32. அசோகமித்திரன் சிறுகதைகள்

33. கிளி சொன்ன கதை

34. காவியம்

35.கிராமம் நகரம் மாநகரம்

36. ஏறுவெயில்

 இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவல் வாசிப்பதென முடிவெடுத்திருந்தேன். வாசிக்க வேண்டிய நாவல்கள், எழுத்தாளர்கள் என மனதுக்குள்ளே சிலவற்றைத் தெரிவு செய்திருந்தேன்.  எல்லாமே முன்னோடி மலாய் எழுத்தாளர்கள் மற்றும் நாவல்கள். அப்படியாக முதல் நான்கு மாதம் சீராக மாதமொரு நாவலை வாசித்து பதிவுகளையும் எழுதினேன். அடுத்தடுத்து மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கியப் பணிகளின் காரணமாக ஒரு சில மாதத் தடைக்குப் பின்னரும் இரண்டு நாவல்களை வாசித்து பதிவுகளை எழுதியிருந்தேன். இடையில், வாசிக்கும் நாவலின் இலக்கிய இடத்தையொட்டிய ஐயம் எழுந்தது. இளம் மலாய் எழுத்தாளர் அஸ்ரினிடம் மலாய் நாவல் பரிந்துரையைக் கேட்டேன். அவர் அதுவரையில் நான் வாசித்த எழுத்தாளர்களின் பட்டியலிலிருந்து மாறுபட்ட ஒரு பட்டியலைத் தெரிவு செய்து தந்தார். அவர் பரிந்துரைத்த எழுத்தாளர் சிங்கப்பூர் மலாய் எழுத்தாளரான ஹம்சா ஹுசேன். அவருடைய நாவல்கள் எதுவுமே மறுபதிப்பு கண்டதாகவும் தெரியவில்லை. இடையே அவருடைய சில நாவல்களை இணையக் கடைகளிலும் புத்தகக் கடைகளிலும் தேடியும் கிடைக்காமல் மாதம் ஒரு மலாய் நாவலை ஆறு நாவல்களுடன் நிறைவு செய்துவிட்டேன். அடுத்தாண்டாவது, அஸ்ரின் பரிந்துரைத்த மலாய் நாவல்களைக் கண்டடைந்து வாசிப்பைத் தொடர வேண்டுமென்ற எண்ணமிருக்கிறது.

மலாய் நாவல் வாசிப்பு தடைபட்டாலும் மற்ற வகைமை வாசிப்பு சீராக நிகழ்ந்து கொண்டிருந்தது. வாசிப்புப் பட்டியலைப் பார்க்கும் போது நாவல் வாசிப்பே பெருமளவு இடம்பிடித்திருப்பது தெரிகிறது. ஒரு நீண்ட வாழ்வு வாழ்ந்த அனுபவத்தை நாவல்களே தருகின்றன. அந்த அனுபவத்தைப் பெறத்தான் எனக்கும் விருப்பமாக இருக்கிறது. அடுத்தாண்டு, கவிதை, புனைவல்லாத நூல்களை நோக்கியும் வாசிப்பைத் திருப்ப வேண்டும்.  வாசிக்க எடுத்து  பாதியிலே நிற்கும் நூல்களும்  இருக்கின்றன. வாங்கி அடுக்கி அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்று வாசிக்காமல் இருக்கும் நூல்களும் இருக்கின்றன. இந்த ஆண்டின் நடுவே சில வாரங்களை மட்டும் அசோகமித்திரனின் எல்லா நாவல்களையும்  வாசிக்க எடுத்துக் கொண்டேன். அசோகமித்திரனின் எல்லா நாவல்களையும் முக்கியமான சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அசோகமித்திரனைப் பற்றிய ஒரு சித்திரத்தை வாசிப்பில் கண்டுகொள்ள முடிந்தது.

இவ்வாண்டு, வல்லினத்தின் இரண்டு மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகள், சீனச் சிறுகதை மொழிபெயர்ப்பு ஆகியப் பணிகளுக்கு இடையே சில சமயங்களில் வாசிப்புக்கான நேரம் குறைவாக இருந்தது. அந்தச் சமயத்தில்தான் சில பொது வாசிப்புக்குரிய நூல்களையும் வாசித்தேன். ஒரு சில நாட்களில் வாசித்து முடிக்கக்கூடிய தீவிர வாசிப்பு எதுவும் கோராத எளிய வாசிப்புக்குரிய நூல்களாகத் தேடி வாசித்திருக்கிறேன். தொடர்ந்து தீவிர இலக்கிய வகை நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்து அதனைப் பற்றிய சிறு குறிப்பாவது எழுதி வைத்துக் கொள்வேன். அதனை முகநூலில் பகிர்வதுண்டு. இவ்வகையான எளிய வாசிப்புக்குரிய நூல்கள் குறித்து அப்படி எதுவும் எழுதி வைப்பதில்லை. ஒரு மாற்றனுபவமாக வேலைகள் அதிகம் இருந்தாலும் இடையிடையே வாசிக்கத் தகுந்தவையாக இவ்வகையான நூல்கள் இருந்தன. நடிகர் பிரகாஷ் ராஜின் சொல்லாததும் உண்மை, ந.முத்துக்குமாரின் கிராமம் நகரம் மாநகரம் ஆகியவை முற்றிலுமாக பொதுவாசிப்புக்குரியவை என்று சொல்லிவிடமுடியாத வாழ்வின் சில தரிசனங்களையும் தீற்றல்களையும் வழங்கத்தான் செய்கின்றன. தீவிர வாசிப்புக்குரிய நூல்களைப் போல ஒரே மூச்சில் இல்லாமல் துண்டுத்துண்டாக நேரம் கிடைக்கும் போது வாசித்திருக்கிறேன். வாசிப்பு எங்கும் தடைபடாமல் இருக்க இந்தவகைமை நூல்களை வாசிக்கலாம்.

அதனுடன் இவ்வாண்டு எழுத்தாளர் அஸ்ரின் கேட்டுக் கொண்டதற்கிணங்க முன்னோடி மலேசிய நாவல்களில் ஒன்றான எம்.குமரனின் செம்மண்ணும் நீலமலர்களும் நாவலைப் பற்றி மலாய் மொழியிலே ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். மலாய் பள்ளியில் பணியாற்றி மலாய் மொழியைப் புழங்கினாலும் அது முற்றிலும் அலுவல் தேவைக்கான மலாயாகவே இருந்தது. அதனாலே, இலக்கியக் கட்டுரைக்கான மொழியில் சில குழப்பங்கள் எழத்தான் செய்தன. அதனையும் தாண்டி துணிவை வரவழைத்துக் கொண்டு கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையைச் சற்று ஒழுங்கமைத்திருப்பதாக எழுத்தாளர் அஸ்ரின் குறிப்பிட்டார். அடுத்தாண்டு அந்தக் கட்டுரை வெளிவரும் என எதிர்ப்பார்க்கலாம். அதனுடன், இவ்வாண்டு மலேசியத் தமிழ்க் கலை, பண்பாட்டுச் சூழலில் முக்கியமான மூன்று ஆளுமைகளுடன் நேர்காணலையும் மேற்கொண்டிருந்தேன். மலேசிய இந்தியர்களின் சூழலை மிகச்சரியாகப் படம்பிடித்துக் காட்டிய படமென ஜகாட் படத்தையே குறிப்பிட முடியும். அந்தப் படத்தின் வாயிலாக தேசிய விருதைப் பெற்றவர் இயக்குநர் சஞ்சய். திரைக்கலை, வாழ்க்கை என அவருடைய பார்வை தனித்துவமானது மட்டுமின்றி தன்னையறியும் ஆன்மீகவழியாகவும் கலையைக் கண்டுகொண்ட கலைஞர் சஞ்சய். அவருடன் விரிவான நேர்காணலொன்றை வல்லினம் இதழுக்காக எடுத்திருந்தேன். அதைப் போல, வல்லினம் விருது பெற்ற மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம் மூர்த்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான கனவுகளைத் துரத்திச் செல்பவனின் கதை நூலுக்காக அவருடைய தேர்வு வாரிய அனுபவத்தை ஒட்டியும் விரிவான நேர்காணலை மேற்கொண்டேன். அடுத்ததாக, மலேசிய தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை இசை வடிவத்துக்கு மாற்றி ஆவணப்படமாக அதனை இயக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் இயக்குநர் கோகுலராஜனையும் நேர்காணல் செய்தேன். மூவருமே தமிழ்ச் சூழலுக்குப் பெரும் பங்களிப்பை ஆற்றி வருபவர்கள். தாங்கள் செயற்படுவதற்கான தனித்த களத்தைக் கண்டுகொண்டு அதன் வழியே தங்களை அறிந்து கொண்டவர்கள். இந்த நேர்காணல்கள் அடுத்தாண்டு நானுமே ஒரு செயற்களத்தைத் தெரிவு செய்வதற்கான உந்துவிசையைத் தந்திருக்கிறது.

அடுத்ததாகப், புனைவு என்றவகையில் மிகக்குறைவாக ஒரே கதையை மட்டுமே எழுதினேன். மறதி எனும் சிறுகதை வல்லினம் இதழில் வெளிவந்திருந்தது. அதைத் தவிர ஒரு சீனச் சிறுகதையை மலாய் மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன். அதோடு, எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் இரண்டாவது நாவலான குருதிவழி நாவலைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி அறிமுக உரையை ஆற்றினேன். எழுத்தாளர் பெருமாள் முருகனின் கழிமுகம் நாவலின் வாசிப்பனுபவத்தைப் பற்றிய உரையை ஆற்றினேன். இவ்வாண்டு ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாகக் காலமான மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு கட்டுரைகள் எழுதினேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான நாவலாசிரியரான அ.ரெங்கசாமியை இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் ம.நவீனுடன் சந்த்திதேன்.  தான் சொல்ல நினைத்த அவர் வாழ்வனுபவத்திலிருந்து மூன்று கதைகளைச் சொன்னார். அவர் சொன்ன கதைகள் நினைவில் புதைந்திருந்தது. அவருடைய இறப்புச் செய்தி கேட்டதிலிருந்தே மெல்ல மெல்ல நினைவிலிருந்து எழுந்தது. அதனை ஒரு கதை கட்டுரையாக எழுதினேன். ஆண்டிறுதியில் சிங்கப்பூர் தேசிய நூலகத் தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில் மறைந்த எழுத்தாளருக்கான காணொளிப் பதிவில் அவரைப் பற்றிய இன்னொரு சுருக்க மதிப்பீட்டைத் தந்தேன். இடையே, பேரவைக் கதைகள் போட்டியின் மாணவர் பிரிவு நீதிபதியாகவும் பணியாற்றினேன். அத்துடன் தமிழாசியா நடத்திய சிறுகதைகள் கலந்துரையாடல்களிலும் பங்குபெற்றிருக்கிறேன். ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்துடன் தொடர்பு கொண்டே வாழ்ந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இலக்கியம் தவிர்த்து, தனிபட்ட வாழ்விலும் உடற்பயிற்சியை இடைவிடாமல் தொடர்ந்திருக்கிறேன். இடையே  சில நாட்கள் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்பது மாறி நான்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை என்பதாக இருந்தது. யோக முகாமின் இரண்டாம் கட்ட பயிற்சிக்கும் ஆயுர்வேத முகாமின் முதல் பயிற்சிக்கும் சென்றேன். யோகாவை இன்னும் நிதானமாக மூச்சுடன் செய்து பார்க்க இன்னுமே கற்றுவருகிறேன் என்றுத்தான் சொல்ல வேண்டும். தனிப்பட்ட வாழ்விலும் சில சீரான முடிவுகளை எடுத்திருக்கிறேன். முதல் வீட்டை வாங்கி இருக்கிறேன். அதற்கான முயற்சிகள் முடிந்திருக்கின்றன. 

அடுத்தாண்டு செயற்படுவதற்கான களங்களை ஓரளவு திட்டமிட்டு வைத்திருக்கிறேன். அதற்கான பணிகளையும் செய்யத் தொடங்கவேண்டும். செயல்தான் புதிய ஆண்டுக்கு அழைத்துச் செல்கிறது.

கருத்துகள்