முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரலாற்றில் பதிவாகும் அகமொழி

மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் நூலின் வாயிலாகத்தான் வரலாற்றுத் தொகுப்பாளரான மா. ஜானகிராமனை அறிந்து கொண்டேன். கல்லூரி நூலகத்தில் இருந்த அந்த நூலை ஒரிரு நாட்களிலே வாசித்து முடித்தேன். ஐந்நூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலில் ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் கள ஆய்வின் வழி கண்ட தரவுகளையும் திரட்டி மலேசிய இந்தியர்களின் நூற்றாண்டு கால வரலாற்றை ஜானகிராமன் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்திருந்தார். மலேசிய இந்தியர்கள் அதிகாரத்தரப்பால் வஞ்சிக்கப்பட்டனர் என்பது பலரும் பேச்சுவாக்கில் சொல்வதுதான். அதற்குச் சான்றாக சில ஆவணங்களையும் காட்டமுடியும். ஆனால், ஜானகிராமனின் தனித்துவமென்பது ஒரு சாமானியனின் பின்புலத்திலிருந்து அந்த ஆவணங்களையும் தரவுகளையும் அணுகியதே எனலாம்.

                                                  ஜானகிராமனின் புதிய நூல்

பின்னர், 2022 ஆம் ஆண்டு வல்லினம் விருது அவருக்கு வழங்கப்பட்டப்போது அவரை நேர்காணல் செய்யவும் ஆவணப்படத்தை இயக்குகின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஒர் ஆவணத் தொகுப்பாளராக மட்டுமே அவரை அறிந்து வைத்திருந்த எனக்கு அவரின் அகத்தை நெருங்கி பார்க்கும் அரிய வாய்ப்பு அமைந்தது. அந்தப் பணிக்காக எழுத்தாளர் ம.நவீனுடன் அவருடைய வீட்டுக்குச் சிலமுறை சென்றிருக்கிறேன். அவர் மட்டுமே வசித்து வந்த வீட்டில் சீராக வெட்டித் தொகுக்கப்பட்ட நாளிதழ் செய்திகள், முக்கிய ஆவணங்கள்தான் பொருட்களைக் காட்டிலும் நிறைந்திருந்தன. தன்னை ஒரு கள ஆய்வாளராகத்தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் வாழ்ந்த தோட்டத் தேவாலயத்தில் இறைப் பணியாற்ற வந்த போதகர் மறைதிரு காரோல்ப் அவர்களை ஆசிரியராக ஜானகிராமன் வரித்துக் கொண்டிருந்தார்.

தோட்ட மக்களுக்கு இறைப்பணியாற்றவே காரோல்ப் மலேசியவுக்கு வந்தார். ஆனால், இறைப் பணிக்கு அப்பால் தோட்ட மக்களைப் பற்றிய தகவல்களை காரோல்ப் பேரேடு ஒன்றில் சீராகத் திரட்டி வைத்திருந்தார். பொதுவாகவே, தேவாலயங்களில் இம்மாதிரியான வரலாற்று தொகுப்புப் பணிகள் பேணப்படுவதுண்டு. அந்தத் தகவல்கள்தான் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பிறந்த ஆண்டு, மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த ஆண்டு என அவர்களின் அடையாளங்கள் பலவற்றையும் தாங்கி நிற்கும் ஒரே வரலாற்று ஆவணமாக இருந்தது. புலம்பெயர்ந்த நாட்டுக்குள் தங்களை இருத்திக் கொள்ளவே உழன்றுகொண்டிருந்த ஒரு சமூகத்தில் அடையாளத்தைப் பேணும் நடைமுறையை காரோல்ப் விதைத்தார். அந்த அரும்பணியின் மகத்துவத்தைத்தான் இளம் சமூகப்பணியாளராக ஜானகிராமன் காரோல்பிடமிருந்து கற்றுக்கொண்டார். அதன் பின்னர், தமிழ் இளைஞர் மணிமன்ற ஈடுபாடு, கூட்டுறவு இயக்கம் எனச் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு நாடு முழுக்க இருந்த தோட்டங்களுக்குச் சென்று மோசமான சூழலுக்கு இடையில் வாழ்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அறிந்தார். தான் வாழ்ந்த பத்தாங் பெர்ஜுந்தாய் பகுதி தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத் துண்டாடல் காரணமாகப் பாதிக்கப்பட்டப்போது களப்போராளியாகவும் செயற்பட்டார். இங்கிருந்து அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்தான் ஜானகிராமனை ஒரு வரலாற்றைத் தொகுப்பாளராக மாற்றியிருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.


                                                   ஜானகிராமன் மாணிக்கம்

மலேசிய இந்தியர்களின் வரலாற்றைச் சொல்லும் நிறைய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ராஜேஸ்வரி அம்பலவாணர், கர்னையல் சிங் சந்து எனப் பல அறியப்பட்ட வரலாற்று ஆய்வாளர்கள் இருக்கின்றனர். அவை அனைத்தும் கல்வியியல் பின்புலத்திலிருந்து மலேசிய இந்தியர்களின் வரலாற்றைச் சீராக அணுகக்கூடியவை. அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா வாதங்களுமே சான்றாதாரத்தைக் கொண்டிருப்பவை. ஜானகிராமனின் நூல் சான்றாதாரத்தோடு ஒரு சாமானியனின் அகமொழியையும் சேர்த்துப் பேசக்கூடியது. அவருடைய மூன்றாவது நூலான MALAYSIAN INDIAN : IMPACT AND PAIN எனும் நூலும் அந்தக் குரலை முன்வைப்பதுதான். இந்நூல் மூன்று பெரும்பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி, விடுதலைக்குப் பிந்தைய 1950 முதல் 1990 வரையிலான காலக்கட்டம் வரையிலான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதித்த நிகழ்வுகளைப் பேசுகிறது. இரண்டாம் பகுதி, 1990 முதல் 2001 வரையில் தோட்டத் துண்டாடலுடன் தொடர்புடைய ஏனைய சமூக அவலங்களை விவரிக்கிறது. மூன்றாவது பகுதி, 2000 ஆம் ஆண்டு தொடங்கி தற்காலம் வரையிலான இந்தியர்களின் வாழ்க்கை நிலையைப் பேசுகிறது.

நூலின் முதல் இரண்டு பகுதிகளும் ஏறக்குறைய ஆசிரியரின் முந்தைய நூலில் உள்ள சாரத்தின் விரிவாக்கம் அல்லது மறுசொல்லல் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. ஆங்கிலேய காலனியாட்சியின் 19 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் மலாயாவில் தொடங்குகின்ற தமிழர்களின் புலம்பெயர்வைப் பற்றிய அறிமுகத்தைச் சுருக்கமாக நூல் பேசுகிறது. 1960 களில் தொடங்குகிற தோட்டத் துண்டாடல் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்குவதைப் பற்றி விவரிக்கிறது. உள்ளூர் சிறு தோட்ட முதலாளிகளை உருவாக்குகிறது என்ற எண்ணத்தால் முதலில் அரசும் தோட்டத் துண்டாடலை அனுமதிக்கவே செய்கிறது. 1963 இல் மலாயா பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் உங்கு அஜிஸ்தான் தோட்டத் துண்டாடல் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றித் தன்னுடைய ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார். தோட்டத் துண்டாடல் என்பது பெருமுதலாளிகளுக்கே சாதகமானது என்றும் வளர்ச்சிக்கு எதிரான செயற்பாடு என்றும் அரசுக்கு அறிவுறுத்துகிறார். ஆனாலும், 1969 ஆம் ஆண்டுத்தான் அரசு தோட்டத் துண்டாடல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. அதற்க்குள் ஏறக்குறைய 50000 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். 1969 மே இனக்கலவரத்துக்குப் பிறகு, மலேசிய அரசாங்கம், மக்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை நிகர் செய்ய புதியப்பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்கிறது. இந்நூலின் மற்றப் பகுதிகளிலும் அரசு கொள்கை, வரைவு போன்றவற்றை விரிவாக விளக்கும் பகுதிகளை ஆசிரியர் கடந்து போகின்றார். புதிய பொருளாதாரக் கொள்கை அரசியல் மாற்றங்களால் செயற்படுத்த முடியாமல் அல்லது எய்த எண்ணிய நோக்கத்திலிருந்து வழுவியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதிலிருந்து நூலின் பெரும்பகுதி தோட்டத் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கைச் சூழலைப் பல்வேறு நிகழ்வுகளைத் தொட்டுப் பேசுகிறது. மோசமான குடியிருப்புப் பகுதிகள், குறைவான சம்பளம், கடுமையான வேலை என சுதந்திரமடைந்தப் பின்னரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணாமல் இருந்ததை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஏற்கனவே, அவருடைய நூலில் விரிவாகப் பேசப்பட்டிருக்கும் செலாஞ்சார் அம்பாட் சம்பவம், கம்போங் மேடான் இனக்கலவரம், சயாம் ரயில்வே நட்ட ஈடு தொகை தேடல் எனப் பல நிகழ்வுகள் வழி மலேசியா அடைந்து கொண்டிருந்த பொருளாதார மேம்பாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் கைவிடப்பட்டதைக் கூறுகின்றார். அதன் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்களையும் அலசுகின்றார். தோட்டத் துண்டாடல் தீவிரமாக நிகழத் தொடங்கிய 1980 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அரசு கனத்த மெளனத்துடனே இருந்திருக்கிறது. தொழிலாளர்கள் வீடு, வேலை என எல்லாவற்றையும் இழந்து நகரங்களை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அவருடைய வாதங்கள் முழுமையாக ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. ஒரு களப்போராளியாக நேரில் கண்டதையும் சேர்த்தே தன்னுடைய நூலில் எழுதியிருக்கின்றார். தோட்டங்களில் ஆயாகொட்டகைகளில் பலகைத் தரையில் துணி விரிப்பில் படுத்துறங்கும் குழந்தைகள், கைலிகளில் ஆன தொட்டில்களில் உறங்கும் குழந்தைகள் என அவருடைய தனிப்பட்ட ஆவணச் சேகரிப்பில் இருந்த படங்களாலும் இந்தியர்களின் நிலையைக் காட்டுகிறார். அங்கிருந்து சமகாலச் சூழல் வரையில் தொடரும் இந்தியர்களின் இக்கட்டான நிலையைப் பற்றி அரசியல் சமூக சூழலுடன் நூல் பேசுகிறது. இறுதியாக, அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கான வேண்டுகோளுடன் நூல் நிறைவடைந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நூலில் ஏராளமான தரவுகளையும் ஆவணங்களையும் இணைத்திருக்கிறார். அதனை எல்லாம் வழிநடத்திச் செல்வது ஜானகிராமனின் அகமொழியாகவே இருக்கின்றது.

ஜானகிராமனின் பெரும் உழைப்பில் தயாராகியிருக்கின்ற நூலில் சில குறைகள் உறுத்தவே செய்தன. குறிப்பாக, பக்க அமைப்பு, சில தகவல் பிழைகள் காணமுடிந்தது. அத்தோடு நூலில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள், ஆவணங்கள் சிலவும் தெளிவாக இல்லை. அவை அச்சுப்பிழைகளாகவே இருந்தன. மேலும், நூலில் மேற்கோள்காட்டப்பட்டிருக்கும் சில தனிநபரின் வலைப்பதிவுகள், இடுகைகளுக்குப் பெரும் முக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை. சமூக அவலங்களுக்கு எதிர்வினையாற்றும் தேர்ந்த மொழிப்பதிவுகள் என்பதாலே அவற்றுக்கு நூலில் இடம்கொடுத்திருக்க வேண்டியதில்லை. நூலாசிரியரின் அழுத்தமான அக மொழிக்கு மத்தியில் அவற்றின் இடம் என்ன என்பது ஆராயத்தக்கதே. அடுத்த பதிப்பில் நிச்சயம் அவைக் களையப்படுவதுதான் பெரும் உழைப்பில் தயாராகியிருக்கின்ற இந்நூலுக்குச் செய்யப்படும் சிறந்த நியாயமாக இருக்கும்.

கல்வியியல் பின்புலத்திலிருந்து சமூகவரலாற்றை அணுகக்கூடிய நூல்கள் முன்னரே நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தச் சமூகச்சூழலின் நியாயங்களை அறிந்து கொண்டவரின் நேர்மையான உளப்பதிவு என்ற நிலையில் நிச்சயமாக ஜானகிராமனின் நூல் முக்கியமானது. அதோடு, சமூகம் தன்னை விமர்சனம் செய்து கொள்வதற்கான மொழியும் இந்நூலில் அமைந்திருக்கிறது. எல்லா சிக்கல்களின் பின்னணியில் இந்திய சமூகமும் அதன் தலைமைத்துவமும் அதனைக் கையாண்ட வழிமுறைகளை நூல் பேசுகிறது. ஜானகிராமன் போன்ற வரலாற்றுத் தொகுப்பாளர்கள் சமூகத்துக்கு முதன்மையாக விடுப்பது அந்தச் சுயவிமர்சனப்பார்வையைத்தான் என எண்ணுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...