நேபாளப் பயணம் 7 காலையிலெழுந்து பசியாறல் உண்டோம். அருகில் இருந்த முகாம் இன்னொருவருடையது என்று அப்போதுதான் தெரிந்தது. என்னுடன் வந்த மற்றவர்கள் அறை போதாததால் அங்குத்தான் தங்கியிருந்தனர். காலையிலே இரண்டு முட்டை, இரு சாப்பாத்திகள், சூப் எனப் பலமான பசியாறல் நடந்தது. அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். ஜெகதீசன் சார், ''அரவின் தான் எங்களுக்கு கேப்டன், அவர் சொல்படித்தான் கேப்போம்'' வகுப்பறையிலிருக்கும் சூட்டிகையான மாணவனைப் போல முன்னுக்கு நடக்கச் சொன்னார். அதற்குள் குழுவில் யாரும் பட்டயம் கட்டாமலே நானே தலைமையேற்று நடக்கத் தொடங்கியிருந்தேன். மலையேறுவதை விட இறங்குவது சிரமமாக இருந்தது. கால்களைப் பார்த்துப் பார்த்துக் கீழே அடிமேல் அடியாக எடுத்து வைத்து நடந்தேன். இந்தப் பாதையிலா நடந்து வந்தோம் என்று வியப்பாக இருந்தது. இந்த சமயத்தில் பிகாஷ் என்னுடன் நடக்கத் தொடங்கியிருந்தான். இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த பிரிஷ்டின் நிறுவனத்தின் தோற்றுநரான கணேஷின் மகன்தான் பிகாஷ் மகர். 19 வயதுதான் ஆகிறது. காட்மாண்டில் ஒரு கல்லூரியில் இளங்கலை பயில்கிறான். அவனுடன் பேசிக் கொண்டு நடந்தேன். தமிழில் வெளிவந்த...